டிசம்பர் 10: உலக மனித உரிமைகள் நாள்: காவல் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்!

அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை சிற்றூரைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் காவலர்கள் அடித்ததினால் இறந்துபோனார். இதுகுறித்து அக்குடும்பத்தினரும், பாமகவினர் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் உடலைப் பெற மாட்டோம் என்று போராடி வருகின்றனர். இந்நிலையில், அரியலூர் மாவட்ட காவல்துறை இச்சம்பவம் குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுப்போம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குற்றமிழைத்த போலீசார் 8 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி விவசாயி ஒருவரின் உயிர் காவலர்களின் வன்முறையால் பறிபோயுள்ளது. இதுவரையில், குறைந்தப்பட்சம் அக்காவலர்கள் பணியிடை நீக்கம்கூட செய்யப்படவில்லை. வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போதுமான நடவடிக்கை அல்ல.

அது காவல் மரணம் (Custodial Death) என குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 176(1)(A)-ன்கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். காவலர் எந்தவொரு ஒரு நபரையும் தொட்டுப் பிடித்துவிட்டாலே அந்த நபர் காவலர்களின் பிடியில் (Police Custody) உள்ளவர் எனக் கருத வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்புக்களில் கூறியுள்ளது.

காவலர்கள் அந்த விவசாயி வீட்டுக்குச் சென்று அவரைக் கடுமையாகக் கம்பு, லத்தி மூலம் தாக்கியுள்ளனர். அவரை உடனையாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து உள்ளனர். மேலும், அவரைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிக்கிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார். இது ‘Injury leading to death’ என்ற அடிப்படையில் சட்டப் பிரிவு இ.த.ச. 300-இன்படி அப்பட்டமான கொலை ஆகும்.

தமிழகத்தில் பரவலாகக் காவல் மரணங்கள், வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்திய அளவில் நடைபெற்ற காவல் மரணங்கள் குறித்து பாராளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இத்தகவலின்படி தமிழகத்தில் 01.04.2020 முதல் 31.03.2022 வரையில், அதாவது 2020 – 2021-இல் 63, 2021 – 2022-இல் 109 காவல் மரணங்கள் நடந்துள்ளன.

இதுபோன்ற காவல் மரண வழக்குகளில் அரசு உடனடியாக குற்றமிழைத்தக் காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்வது, நிவாரணம் அறிவிப்பது எனத் தன் கடமையை முடித்துக் கொள்கிறது. வழக்கு முறையாக நடத்தப்பட்டுக் குற்றமிழைத்தக் காவலர்களுக்குத் தண்டனைப் பெற்றுத் தர முனைப்புடன் செயல்படுவதில்லை. பல வழக்குகளில் குற்றமிழைத்த காவல்துறையினர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுகின்றனர்.

2011-இல் திருக்கோயிலூர் அருகேயுள்ள தி.மண்டபத்தைச் சேர்ந்த நான்கு இருளர் இளம் பெண்கள் காவலர்களால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்னர்தான் குற்ற அறிக்கை விழுப்பம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்பின்னர்தான் இவ்வழக்கில் முதல் குற்றம்சாட்டப்பட்டவரான காவல் ஆய்வாளர் சீனிவாசன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்ட இரண்டு மாதங்களில் குற்ற அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், இதுபற்றி அரசும், காவல்துறையும் கவலைப்படுவதில்லை. இன்னமும் இவ்வழக்கு விசாரணைத் தொடங்கபடவில்லை.

2015-இல் நெய்வேலி நகரிய காவல்நிலையத்தில் பட்டாம்பாக்கம் அருகேயுள்ள பி.என்.பாளையம் தலித் சமூகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் 6 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு அடித்துத் துன்புறுத்திச் சித்தரவதைச் செயது கொல்லப்பட்டார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் இராஜா உள்ளிட்ட மூன்று காவலர்கள் இதுவரையில் பணியிடை நீக்கம்கூட செய்யப்படவில்லை, கைதும் செய்யப்படவில்லை. குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு, கடலூர் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைத் தொடங்கப்படவில்லை.

தமிழகத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் முறையாகக் காவலர் புகார் ஆணையம் (Police Complaints Authoriry) அமைக்கப்படவில்லை. மாநில அளவில் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி தலைமையிலும், மாவட்ட அளவில் மாவட்ட நீதிமன்ற மேனாள் நீதிபதி தலைமையிலும் அமைக்கப்பட வேண்டுமென மேற்சொன்ன தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் மாநில அளவிலான ஆணையம் அமைத்தது. இதனை எதிர்த்து உயத்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆகையால், தமிழகத்தில் காவலர் புகார் ஆணையம் மேற்சொன்ன உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி முறையாக அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.

காவல் சீர்திருத்தம் (Police Reformation) என்பது வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. காவலர்களுக்குப் பணியின்போது ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. நீதிபதி முல்லா ஆணையம் உள்ளிட்ட பல ஆணையங்களின் பரிந்துரைகள் செயல்படித்தப்படவில்லை. பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவல் சீர்திருத்தம் குறித்து கூறப்பட்டதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அண்மையில் வேலியே பயிரை மேய்வதைக் கதைக் களமாகக் கொண்ட ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் பார்த்தேன். கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் நீதிக்காகப் போராடுவதை அழகாகச் சித்தரித்துள்ளனர். நேற்று இரவு ‘விட்னஸ்’ திரைப்படம் பார்த்தேன். மலக்குழிகளைத் தூய்மைப்படுத்துவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது திணிக்கப்படுவது, அதனால் ஏற்படும் இறப்புகள் கவனிக்கப்படாமல் போவது பற்றிய சிறப்பான திரைப்படம் அது.

உலக மனித உரிமைகள் நாளில் மனித உரிமைகள் காத்திட தொடர்ந்து தொய்வின்றிச் செயல்பட உறுதியேற்போம்.

கோ.சுகுமாரன்
செயலாளர்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*