புதுச்சேரியின் 4 பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து ஆணைப் பிறப்பிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2022) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் வசிக்கும் நான்குப் பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினர் என அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் பிறப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் பழங்குடியின சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் வழங்க வேண்டுமென கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்றது. இதில் 2016ஆம் ஆண்டு இருளர் சமூகத்தை மட்டும் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் பிறப்பித்தார்.

ஆனால், காட்டுநாயக்கன், குருமன்ஸ், மலைக்குறவன், எருகுலா ஆகிய நான்கு பழங்குடி சமூகங்கள் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து ஆணைப் பிறப்பிக்கப்படவில்லை. இதனால், இந்த நான்கு பழங்குடியினர் சமூகங்கள் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பட்டியலினப் பழங்குடியினர் சமூகங்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் முழுமையாகக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரி அரசு குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் நலத்துறை கடந்த 24.01.2017 அன்று மேற்சொன்ன நான்கு பழங்குடி சமூகங்களையும் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீரிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளது.

இதனிடையே, கடந்த 27.03.2017 சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மேற்சொன்ன புதுச்சேரி அரசின் பரிந்துரையை மத்திய அரசு 6 மாதங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பு வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் மத்திய உள்துறை அமைச்சகம், பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் இத்தீர்ப்பின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மேற்சொன்ன நான்கு பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் பிறப்பிக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*