புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் வெளிமாநில சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கூடாது!

புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (18.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வெளிமாநில சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கூடாது என நடுவண் அரசை சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மக்கள் பெரும் அச்சத்திலும் பீதியிலும் நிம்மதி இழந்து உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி ஆகஸ்ட் 1 முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும், பார்களும், சுற்றுலா இடங்களும், திரையரங்குகளும் திறக்க அனுமதி கோரி நடுவண் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து சிறிய நகரமான புதுச்சேரியில் குவிந்தால் பெரும் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளது.

இந்தியாவில் எந்த ஒரு மாநில முதலமைச்சரும் வேண்டுகோள் விடாத நிலையில், முதல்வர் நாராயணசாமி மட்டும் வருவாயைப் பெருக்கச் சுற்றுலா இடங்களைத் திறப்பதற்கு நடுவண் அரசிடம் அனுமதி கோரி இருப்பது மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மது மாபியாக்களுக்கு துணைபோகும் செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

புதுச்சேரியில் இதுவரை கொரோனா தொற்று நோயால் 25 பேர் இறந்துள்ளனர். இதில் 9 மாத குழந்தையும் அடங்கும். கொரோனா தொற்று இரண்டாயிரம் பேரைத் தொடுகின்ற அளவிற்கு அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொள்ளாமல் எல்லாவற்றையும் திறந்துவிட முதல்வர் நாராயணசாமி முயற்சிப்பது ஆபத்தை விலைக் கொடுத்து வாங்கும் செயலாகும்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அலோபதியில் மருந்து இல்லாத போது, பிற மாநிலங்களைப் பின்பற்றி மாற்று மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, மக்கள் கொரோனாவில் இருந்து மீளவும், நிம்மதியான வாழ்வுக்குத் திரும்பவும் அதுவரை வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருவதை நடுவண் அரசு அனுமதிக்கக் கூடாது என சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

இரா. மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இர.அபிமன்னன், தலைவர், இராவணன் பகுத்தறிவு இயக்கம்.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அன்பேத்கர் தொண்டர் படை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.