பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.05.2023) விடுத்துள்ள அறிக்கை:

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சென்ற ஆண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 3.45 சதவீதம் குறைந்துள்ளது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6682 மாணவர்கள், 7542 மாணவிகள் என மொத்தம் 14224 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவுகளின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6000 மாணவர்கள், 7182 மாணவிகள் என மொத்தம் 13182 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இதன்படி அரசுப் பள்ளிகள் 85.38 சதவீதம், தனியார் பள்ளிகள் 98.81 சதவீதம் என தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.68 ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.13 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 3.45 சதவீதம் குறைந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 6.56 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் சுல்தான்பேட்டை காயிதேமில்லத் அரசு மேல்நிலைப் பள்ளி, மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி என இரண்டு பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்கள் போதிய அளவிலும் உள்ளனர். ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகளைவிட பலமடங்கு கூடுதலாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவது ஏன்?

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இதுபற்றி கவனம் செலுத்தாமல் இருப்பதன் பின்னணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக தற்போதைய பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் பொறுப்பேற்றதில் இருந்து பள்ளிக்கல்வி சீரழிந்து வருகிறது.

இந்நிலையில், அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கு மாறப் போவதாக அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலக் கல்வி வாரியப் பாடத் திட்டங்களைவிட சிபிஎஸ்இ முறையில் பாடத்திட்டங்கள் அதிகம் என்பதோடு கடினமானதாகும். ஆசிரியர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தைக் கற்பிக்க போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. அவசரகதியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறுவதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்படும்.

ஏற்கனவே அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற முடியாமல் அவர்களின் மருத்துவராகும் கனவு தகர்ந்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி வருகிறது.

எனவே, இந்தாண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகமாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*