வீரப்பன் வழக்கில் 4 பேர் உட்பட 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: வழக்கு விவரங்கள் – கோ.சுகுமாரன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ கிரிதி சிங் ஆகியோர் இன்று (21.01.2014) வீரப்பன் வழக்கில் சைமன், பிளவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் உள்ளிட்ட இந்திய அளவில் 9 வழக்குகளில் பல்வேறு சிறைகளில் வாடும் 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் வழங்கப்பட்ட கருணை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படுவதற்கு ஏற்பட்ட காலதாமதத்தைக் கணக்கில் கொண்டு 15 பேரின் மரண தண்டனைகள் ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

இத்தீர்ப்பு 154 பக்கங்கள் கொண்டவை. மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட 15 பேரின் வழக்கு விவரம், அவர்களது நிலைமை, சிறையில் இருந்த காலம், மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த காலம் ஆகியவை குறித்துக் காண்போம்.

1) 1993ம் ஆண்டு தமிழக – கர்நாடக மாநில எல்லையில் பாலாறு அருகில் நடந்த வெடிகுண்டு வெடித்து போலீசார் உடப்ட 22 பேர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கு உள்ளிட்ட நான்கு வழக்குகளில் தடா சட்டத்தின்கீழ் 12 பெண்கள் உட்பட 124 பேர் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் சென்ற 2001ல் 109 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. மேலும், சைமன், பிளவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து (Sou moto proceedings) மேற்சொன்ன நான்கு தமிழர்களுக்கும் 29.01.2004ல் தூக்குத் தண்டனை விதித்தது. இந்நால்வரும் 14.07.1993 முதல் இன்று வரையில் 20 ஆண்டுகள் 6 மாதங்களாக கர்நாடக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். 9 ஆண்டுகள் 11 மாதங்களாக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை 9 ஆண்டுகள் கழித்துக் காலதாமதமமாக நிராகரித்துள்ளார்.

2) உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் (60), ராம்ஜி (45) ஆகியோர் சொத்துத் தகறாரில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 2 பெரியவர்கள், 3 குழந்தைகள் உட்பட 5 பேரை கொலை செய்த வழக்கில் இருவருக்கும் 1997ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நன்னடத்தை சான்று அளித்தும் மாநில ஆளுநரிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்கள் இவ்வழக்கு ஆவணங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் இருந்ததால் விசாரணை நீதிமன்ற தீர்ப்பு நகல் தாக்கல் செய்யப்படாதால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 06.10.1996 முதல் இன்று வரையில் 17 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறையில் உள்ளனர். 16 ஆண்டுகள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். இவர்களது கருணை மனுக்கள் 11 ஆண்டுகள் கழித்துக் காலதாமதமாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

3) கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமார் (55) ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக 2002ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் இன்று வரையில் 15 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறையில் உள்ளார். இவர் 14 ஆண்டுகள் 10 மாதங்களாக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளார். இவரது கருணை மனு எட்டரை ஆண்டுகள் கழித்துக் காலதாமதமாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

4) உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த குருமீத் சிங் (56) தன் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக 1992ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் விசாரணைக் கைதியாக இருந்த போது ஒரு ஆண்டு பிணையில் வெளியே இருந்த காலம் போக 16.10.1986 முதல் இன்று வரையில் 26 ஆண்டுகள் 3 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 21 ஆண்டுகள் 5 மாதங்களாக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளார். குடியரசுத் தலைவர் இவரது கருணை மனுவை 6 ஆண்டுகள் 11 மாதங்கள் கழித்துக் காலதாமதமமாக நிராகரித்தார். இந்த செய்தி இவருக்கு மூன்றரை ஆண்டுகள் கழித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் பரிந்துரை செய்தும், அப்போதைய உள்துறை அமைச்சர் எற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5) அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சோனியா (30), அவரது கணவர் சஞ்சீவ் குமார் (38) ஆகியோர் சொத்துத் தகராறு காரணமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட தன் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரைக் கொலை செய்த வழக்கில் 2002ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் 12 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 ஆண்டுகள் 5 மாதங்கள் கழித்து தாக்கல் செய்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் 5 ஆண்டுகள் 10 மாதங்கள் கழித்துக் காலதாமதமாக நிராகரித்துள்ளார். இதில் சோனியா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

6) உத்தரகாண்டைச் சேர்ந்த சுந்தர் சிங் (40) மனநிலைப் பாதிக்கப்பட்டு தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளையும் கொன்ற வழக்கில் 2004ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தனக்கு மனநிலைப் பாதிக்கப்பட்டதால் இக்கொலைகளை செய்ததாக கூறியதை யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இவரை பரிசோதித்த டேராடூன் மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று மனநல மருத்துவ நிபுணர்கள் இவருக்கு வகைப்படுத்த முடியாத மனச்சிதைவு நோய் (Undifferentiated Schizophrenia) உள்ளது எனவும், தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமெனவும் சான்று அளித்துள்ளனர். மேலும், இவர் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மன ரீதியில் தகுதியற்றவர் எனவும் சான்று அளித்துள்ளனர். தற்போதைய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இவருக்குச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இவரது கருணை மனு இரண்டரை ஆண்டுகள் கழித்துக் காலதாமதமாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. மனநிலைப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதும், இந்திலிருந்து மீள நடந்த சட்டப் போராட்டமும் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்குக் குறித்துப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

7) உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஜாபர் அலி (48) தனது மனைவி மற்றும் 5 மகள்களைக் கொன்ற குற்றத்திற்காக 2003ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர் 27.07.2002 முதல் இன்று வரையில் 11 ஆண்டுகள் 6 மாதங்கள் தனிமைச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். இவரது கருணை மனு குடியரசுத் தலைவாரால் 7 ஆண்டுகள் 5 மாதங்கள் கழித்துக் காலதாமதமாக நிராகரிக்கப்பட்டது. இவரது கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது 3 மாதங்கள் கழித்தே இவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8) மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவரான மங்கள்லால் பரேலா (40) தனது 5 மகள்களையும் கொலை செய்த குற்றத்திற்காக 2011ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மனநிலை சரியில்லாதவர் என போபால் மனநல மருத்துவமனை நிபுணர் சான்று அளித்துள்ளார். தனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி அனுப்பிய கருணை மனு ஒரு ஆண்டுக் காலம் கழித்துக் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவரது கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி சிறை அதிகாரிகளால் வாய்மொழியாக கூறப்பட்டுள்ளது. அதற்கான எழுத்துமூலம் ஆணை எதுவும் அளிக்கப்படவில்லை.. இவரது மனநிலையைக் கணக்கில் கொண்டு உச்சநீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.

9) கர்நாடகாவைச் சேர்ந்த சிவா (31), ஜடேசாமி (25) ஆகியோர் 18 வயதுடைய பெண்ணைப் பாலியல் வன்புணர்வுச் செய்த குற்றத்திற்காக 2005ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களது கருணை மனுக்கள் 13.08.2013 அன்று குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு, பெல்காம் சிறையில் 22.08.2013 அன்று காலை 6 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது சிறை விதிகளுக்கு முரணானது. அதாவது கருணை மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்கள் கழித்துத்தான் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது சிறை விதி. இவர் 15.10.2001 முதல் இன்று வரையில் 12 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 8 ஆண்டுகள் 5 மாதங்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருந்துள்ளார். இவரது கருணை மனு 6 ஆண்டுகள் கழித்துக் காலதாமதமாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*