மரண தண்டனை என்றொரு குற்றம் – ஆல்பெர் காம்யு

பழிக்குப் பழி வாங்கும் சட்டம் பொருத்தமற்றது என்ற உண்மை ஒருபக்கம் இருக்கட்டும். திருடனிடம் அவன் திருடிய பணத்திற்குச் சமமான தொகையை அவனுடைய வங்கிக் கணக்கிலிருந்து கழித்துக் கொள்வது போதுமான தண்டனையாக இல்லாமலிருக்கலாம். அதே போன்று தீயிட்டுக் கொளுத்துபவனைத் தண்டிப்பதற்காக அவனது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்துவது அளவுக்கு அதிகமானதாகவே தோன்றும். கொலை செய்தவரின் மரணத்தின் மூலமே பலியானவரின் கொலை ஈடு செய்யப்பட வைத்துக் கொள்வோம், ஆனால் தலை துண்டிக்கப்படுவது வெறுமனே சாவு அல்ல. சித்தரவதை முகாம் என்பது சிறையிலிருந்து எப்படி முற்றிலும் மாறுபட்டதோ அதேபோல, சாரம்சத்தில் மரண தண்டனை என்பதும் வாழ்க்கையைப் பறிப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மரண தண்டனை என்பது நிச்சயமாக ஒரு கொலை தான். அது, செய்யப்பட்ட கொலைக்குச் செலுத்தப்பட வேண்டிய சரியான விலையாகவும் இருக்கிறது. அது சாவோடு ஒரு விதியையும் சேர்க்கிறது. அதாவது எதிர்காலத்த்தில் பலியாகப் போகிறவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய எச்சரிக்கையை, ஓர் அமைப்பை, சுருக்கமாகச் சொல்வதெனில் சாவைவிடப் பயங்கரமான அறவியல் துன்பங்களின் மூல ஊற்றாக விளங்குகின்ற ஒன்றை – அது சாவுடன் சேர்த்து விடுகிறது. ஆகவே இவை சரிசமமானவையாக இருக்க முடியாது, முற்றிலும் வன்முறை சார்ந்த ஒரு குற்றத்தைவிட திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு குற்றம் மிகவும் கொடியது என்று பல சட்டங்களும் கருதுகின்றன. முன்கூட்டியே திட்டமிட்ட கொலைகளிலேயே உச்சபட்சமானதாக விளங்கும் மரண தண்டனையுடன் ஒரு குற்றவாளியின் செயலை – அது எவ்வளவுதான் திட்டமிடப்பட்டதாக இருப்பினும் – ஒப்பிட முடியுமா? குற்றத்திற்குச் சமமான தண்டனை என்று மரண தண்டனையை நாம் நியாயப்படுத்தினால், கீழ்க்கண்ட ஒரு காட்சியை நாம் கற்பனை செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஒரு நாளில் நீங்கள் கொடுரமாகக் கொலை செய்யப்படுவீர்கள் என்று ஒருவரிடம் முன்பே கூறுதல், அந்த நாள்வரை அவரைக் கருணையுடன் ஒரிடத்தில் அடைத்தும் வைத்திருத்தல். இப்படிப்பட்ட ராட்சசத்தனமான, பயங்கரமான சித்திரவதையை நாம் சாதாரணமான, இயல்பான வாழ்க்கையில் எதிர்கொள்வதே இல்லை.

துன்பப்படாமல் சாவது குறித்து நமது சட்டபூர்வமான சான்றாயர்கள் பேசும்போது, அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுக்குக் கற்பனை வளமும் கிடையாது. மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் மீது மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் சுமத்தப்படும் இழிவுப்படுத்தக்கூடிய, நிலைகுலையைச் செய்யக்கூடிய அச்சமானது மரணத்தைவிட மிகக் கொடுரமான ஒரு தண்டனையாகும். இது பலியானவரின் மீது சுமத்தப்படாத ஒரு தண்டனையாகும். பலியானவர், அவருக்கு இழைக்கப்பட்ட கொலை பாதக வன்முறையின் காரணமாக எழுந்த அச்சத்திலும்கூட, தனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலே சாவை நோக்கி விரைந்து செலுத்தப்படுகிறார். அந்தப் பேரச்சத்தின் கால அளவு அவர் உயிரோடிருக்கும் காலத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. அவரது வழ்க்கையைத் தாக்கிய அந்த அபத்த நிலையிலிருந்து தப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை ஒருபோதும் அவரைவிட்டு நீங்குவதேயில்லை. அதே நேரத்தில், ம்ரண தண்டனை விதிக்கப்பட்டவர் மீது பேரச்சம் திணிக்கப்படுகிறது. அவருக்கு நம்பிக்கையினூடாகச் சித்ரவதையும், மிருகத்தனமான துயரத்தினால் எழும் வேதனையும் மாறி மாறி நிகழ்கின்றன. வெறும் மனிதாபிமானத்தால் வழக்கறிஞரும் மதகுருவும், தண்டனைக் கைதி அமைதியடைய வேண்டும் என்பதற்காகச் சிறையதிகாரிகளும், அக்கைதியின் தண்டனைக் குறைக்கப்படும் என்று ஒருமனதாக உறுதியளிக்கிறார்கள். அதை முழு மனதோடு அவர் நம்புகிறார். பிறகு அவர் நம்பிக்கை

(*பிரான்ஸின் விடுதலையின்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட ரோமென் (Roemen) தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் எழு நூறு நாட்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறையில் இருந்தார். இது மிகவும் அருவருப்பானதாகும். பொதுச் சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சாகப்போகும் அந்தக் காலை நேரத்திற்காக வழக்கமாக மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்கிறார்கள். தண்டனை நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திரு்க்கும் காலத்தைக் குறைக்க விரும்பினால், தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்புகளைப் பேணிக்காக்க விரும்பினால் அது சிரமமானதாக இருக்கும். மேலும், பிரான்ஸில் கருணை மனுக்களின் மீதான ஆய்வு என்பது, சட்டமும் மரபும் எந்த அளவு அனுமதிக்கிறதோ அந்த அளவுக்கு மன்னிப்பது குறித்தான வெளிப்படையான விருப்பத்தை விலக்கி வைக்காத விதத்தில் ஒரு தீவிரத் தன்மையோடு மேற்கொள்ளப்படுகிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

**ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றும் நாளாக இருப்பதில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறைப் பகுதிகளில் சனிக்கிழமை என்பது எப்போதும் நல்லதொரு பொழுதாகவே இருக்கும்.)

வைக்க முடியாத நிலையை எட்டுகிறார். அவர் பகலில் நம்பிக்கையோடு இருக்கிறார். இரவில் நம்பிக்கையிழந்து விடுகிறார்.வாரங்கள் செல்லச் செல்ல நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் அதிகரிக்கின்றன. அவை தாங்கிக் கொள்ள முடியாதவையாகவும் மாறுகின்றன. அனைத்து விவரணைகளின்படி, தோலின் நிறம் மாறுகிறது. அச்சம் ஒரு அமிலத்தைப்போல் வேலை செய்கிறது.’ நீங்கள் சாகப் போகிறீர்கள் என்பதை அறிந்திருப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை’, என்று பிரஸ்நே (Fresnes)வைச் சேர்ந்த மரண தண்டனையைப் பற்றி கார்தூஸ் (Cartouche) சொன்னார்: ‘ஏன்? ஒருசில நிமிடங்கள் மட்டும்தானே அதனை அனுபவிக்க வேண்டியிருக்கும்?’ ஆனால் அது நிமிடங்களில் முடிவதல்ல, பல மாதங்கள் நீடிக்கக்கூடியது. நீண்ட காலத்திற்கு முன்னதாகவே மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதருக்கு தான் கொல்லப்படப் போகிறோம் என்பது தெரியும். மரண தண்டனையைக் குறைப்பது மட்டும்தான் அவரைக் காப்பாற்றக் கூடிய ஒரே விசயம். அவரைப் பொறுத்தவரையில் அது சொர்க்கத்திலிருந்து வரும் கட்டளையைப் போன்றது. எந்த விதத்திலும் அவரால் அதில் தலையிட முடியாது. எல்லாமே அவரைச் சார்ந்திராமல் நடக்கின்றன. இனியும் அவர் ஒரு மனிதராக இல்லை. மாறாக, மரண தண்டனை நிறைவேற்றுபவர்களால் கையாளப்படக் காத்திருக்கும் ஒரு பொருளாக இருக்கிறார். ஒரு ஜடப் பொருளைப் போல் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் இன்னும் உணர்வோடு இருக்கிறார் அது தான் அவரது முக்கிய எதிரி.

நன்றி: மரண தண்டனை என்றொரு குற்றம் என்ற நூலிலிருந்து..

வெளியீடு: பரிசல்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*