மொழிப் பாடநூல்களின் அரசியல் – மு.சிவகுருநாதன்

(தமிழகப் பள்ளிக் கல்வியின் புதிய தமிழ்ப் பாடநூல்கள் குறித்த பார்வை.)

ஒரு முன் குறிப்பு:

இந்தக் கல்வியாண்டில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் 6, 9, 11 தமிழ் மற்றும் 11 சிறப்புத்தமிழ் ஆகிய பாடநூல்கள் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை. நான் இந்தப்பாடங்களில் புலமை பெற்றவன் அல்லன். ஒரு இலக்கியப் பிரதி அல்லது திரைப்படத்தை வாசித்து, பார்த்து, விமர்சிப்பதைப் போன்று இதையும் பலர் விமர்சிக்க வேண்டும் என்று கருதுகிறேன். அந்தப்பணியை நானும் செய்ய முயல்கிறேன்.

தமிழ்ப்பாடநூலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பல புதியன சேர்க்கப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. சில குறிப்பிடத்தகுந்த அம்சங்களைத் தொகுத்துக் கொள்வோம்.

தமிழ்ப்பாடநூலில் வழக்கமான கடவுள் வாழ்த்து இடம் பெறாத புதிய அணுகுமுறை வரவேற்கத்தக்கது.

எர்னஸ்ட் ஹெமிங்வே யின் கடலும் கிழவனும் (6 -ம் வகுப்பு) படக்கதையாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

கந்தர்வன் சிறுகதை (6 -ம் வகுப்பு) இடம் பெறுகிறது.

ஆமினா – முகிலன் – மெர்சி, ஆனந்தி – மும்தாஜ் – டேவிட், பாத்திமா – செல்வன் – அன்புமேரி (9 -ம் வகுப்பு) என்று பன்மைத்தன்மையை வலியுறுத்தும் பெயர்கள் உரையாடல்களில் இடம் பெறுகின்றன.

பாடத்திற்கு வெளியேயாவது ‘மொழியை ஆள்வோம்’ என்ற தலைப்பில் யூமா.வாசுகியின் கவிதை, நாட்டுப்புறப்பாட்டு (9 -ம் வகுப்பு) இடம் பெறுவது நன்று.

இருமொழிக் கலைச் சொற்கள் பட்டியல் உண்டு.

சில பாடங்களில் ‘அறிவை விரிவு செய்’ நூல் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் என்னும் இலக்கிய வடிவம் அறிமுகமாகிறது. (9 –ம் வகுப்பு, பக். 107)

உயிருக்கு வேர் என்னும் தண்ணீர் பற்றிய பாடம் சிறப்பானது. மறைநீர் என்னும் அறிவியல் – சூழலியல் கருத்து இடம்பெறுகிறது. (9 –ம் வகுப்பு, பக். 62)
வழமையான பழமொழிகள் மொழிபெயர்ப்புகளுக்குப் பதிலாக பொன்மொழிகள் சில மொழிபெயர்க்கப்பட்ட்டுள்ளன.
இலக்கணம் மாணவர்களுக்கு இனிப்பாக ‘கற்கண்டு’ என்ற பெயரில். ஆனால் இலக்கணத்தை இனிப்பாக்க எந்த புதிய உத்திகளும் இல்லை.

மொழிப்பாடத்திறன்களை விட அவற்றில் உள் அரசியல் முதன்மையானது என்று நான் கருதுகிறேன். மொழித்திறன்கள் குழந்தையின் தொடக்கக் காலத்திலிருந்தே வளர்ந்து வரும் ஒன்று. அவற்றை மேம்படுத்துவது, மொழியாளுமையை ஏற்படுத்துவது ஆகியன நாம் கூடுதல் கவனம் கொள்ளும் புள்ளிகள். எத்தகைய அரசியலை நோக்கி பாடம் பயணிக்கிறது என்பது முக்கியமானது. நம்மிடம் எல்லாம் உண்டு என்னும் ‘மந்த வாயு’ (Noble Gas) மனப்பான்மை மொழியியலுக்கு ஊறு செய்வது. இவற்றை ஒழித்துக்கட்டுவது சாதாரண வேலையல்ல. தன்னிலை அழிந்து, விலகி நின்று, அறிவியல் மனப்பான்மையுடன் கூர்ந்தாராயும் மனநிலை அவசியம்.

முந்தைய தமிழ்ப்பாடநூல்களிலிருந்து பல்வேறு அம்சங்களில் புதியன சேர்க்கப்பட்டுள்ள புதிய பாடநூல்களை வரவேற்போம்; பாராட்டுவோம். +1 தமிழ் மற்றும் சிறப்புத்தமிழ் கல்லூரிப் பாடநூல்களை விட சிறப்பாக உள்ளது. இருப்பினும் இன்னும் அதிக எதிர்பார்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. இதை ஆசிரியர்கள் தனக்கு ஒவ்வாததாக பார்க்கும் சூழல் இருக்கிறது. அவற்றைக் களைந்து ஆசிரியர்களிடம் கொண்டு சென்ற பிறகே மாணவர்களிடம் சென்றடையும். தமிழ்ப் பாடநூலில் உள்ள ஒன்றிரண்டு சிக்கல்களைப் பார்க்கலாம்.

செய்யுள்களைக் குறைத்து ஓசை நயமுள்ள பாடல்களைப் பாடத்தில் இணைக்கலாம். தயவுசெய்து இவற்றைக் கவிதைகள் என அறிமுகம் செய்யாதீர்கள்! பாடத்திற்கு வெளியே இணைப்பதிலும் உள்ளே இணைப்பதிலும் வேறுபாடு உண்டு. கவிதை, கதை போன்றவற்றை எழுதிய எழுத்தாளர்கள் உயிரோடு இருக்கக்கூடாது என்பது எழுதப்படாத விதியாகக் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிகிறது. கந்தர்வன் கதை பாடத்திலும் யூமா.வாசுகி கவிதை வெளியேயும் இருக்க இதுவே காரணம். வைரமுத்து போன்ற ‘பென்னம்பெரிய’ ஆட்களுக்கெல்லாம் இது பொருந்தாது. மேனிலைப் பாடநூலில் இம்முறை கடைபிடிக்காதது மகிழ்ச்சி.

சுஜாதா, வைரமுத்து, இறையன்பு போன்ற வணிக எழுத்தாளர்களுக்குப் பதிலாக காத்திரமான இலக்கியங்கள், படைப்பாளிகளை அறிமுகம் செய்வது அவசியம். அதேசமயம் சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம் போன்ற வகைமாதிரிகளையும் தாண்டி தமிழ் இலக்கியப் பரப்பு இருப்பதை மாணவர்கள் உணர வேண்டுமல்லவா!

புலம் பெயர் இலக்கியத்தில் அ.முத்துலிங்கம் தவிர்த்து எவ்வளவோ ஆளுமைகள் இருக்கின்றனர். இதில் ஏதோ சார்புத்தன்மை வெளிப்படுவதாகத் தெரிகிறது. உலகத்தமிழ் இதழ் என்று சொல்லிக்கொள்ளும் ‘காலச்சுவடு’ முன்னிலைப்படுத்துவது மட்டுமே நல்ல இலக்கியம் ஆகாது.

இஸ்ரோ (ஏவூர்தி, செயற்கைக்கோள்), அணுசக்தித் துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் மட்டுமே இங்கு அறிவியல் அறிஞர்கள் என்ற பழங்கதையில் எவ்வித மாற்றமும் இல்லாதது வருத்தமளிப்பது. ‘அறிவியல் தொழில்நுட்பம்’ என்னும் ஆறாம் வகுப்பில் இயல் மூன்றும், ஒன்பதாம் வகுப்பில் இயல் நான்கும் இதை அடியொற்றி ஒரே மாதிரியாகவே உள்ளது. இன்னும் பிற வகுப்புகளில் திரும்பத் திரும்ப என்ன பாடங்கள் வரப்போகின்றனவோ!

தமிழில் பயின்ற அறிஞர்கள் பட்டியலில்கூட அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் (பக். 17, 6 –ம் வகுப்பு) ஆகிய இஸ்ரோ ஆட்களைத்தவிர வேறு அறிஞர்கள் இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. இதன்மூலம் தமிழ்வழிக் கல்வியைப் பரப்புரை செய்யமுடியாது என்பது தெளிவு.

6 ஆம் வகுப்பு ‘அறிவியல் தொழில்நுட்ப’த்தில் நெல்லை சு.முத்துவின் அறிவியல் ஆத்திச்சூடி உள்ளது. இதன் ஆசிரியர் குறிப்பிலும் (நூல் வெளி) அப்துல்கலாம் கதைதான்! ‘அறிவியலால் ஆள்வோம்’ என்னும் பாடநூல் குழு எழுதிய பாடலிலும் விண்வெளி, செயற்கைக்கோள் மயமே! விரிவானம் பகுதியில் ‘ஒளி பிறந்தது’ என்னும் அப்துல்கலாம் நேர்காணல் உள்ளது.

9 ஆம் வகுப்பில் ‘ஓ, என் சமகாலத்தோழர்களே!’ என்னும் வைரமுத்துவின் பாடல் உள்ளது. இதிலும் செயற்கைக்கோள், ஏவூர்தி படமே இருக்கிறது. இதை கவிதைப்பேழை என்று வகையில் சேர்த்துள்ளனர். கவிதைக்கும் பாடலுக்கும் வேறுபாடுகள் உண்டன்றோ! ‘விரிவானம்’ பகுதியில் ‘விண்ணைச் சாடுவோம்’ பகுதியில் இஸ்ரோ தலைவர் சிவனின் நேர்காணல் இடம்பெறுகிறது. இங்கு விக்ரம் சாராபாய், அப்துல்கலாம், வளர்மதி, அருணன் சுப்பையா, மயில்சாமி அண்ணாதுரை போன்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் பெட்டிச்செய்திகளில் அறிமுகம் ஆகின்றனர். இப்பாடத்தின் இறுதியில் வேதகாலத்தில் விமானம், பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் இருந்தது என்பதற்கு நிகரான பாவலர் கருமலைத்தமிழாழன் பாட்டு ஒன்றும் உள்ளது.

விண்வெளி, அணுசக்தி ஆகிய இரு துறைகளும் இந்தியாவில் பூடகமாக இயங்கக்கூடியவை. இவற்றில் அறிவியல் உண்மைகள் எந்தளவிற்குச் செயல்படுகின்றன என்பது அய்யத்திற்குரியது. சந்திராயன் 1 இல் ஏற்பட்ட தவறுகள், தோல்விகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, அணுசக்திக் குளறுபடிகளை மூடிமறைப்பது போன்றவற்றால் இவர்கள் உண்மையில் அறிவியலாளர்களா என்ற அய்யம் உண்டாகும். இவர்கள் தொழிற்நுட்ப வல்லுநர்கள் (Technocrats) மட்டுமே! இவர்களை சர் சி.வி.ராமன், ராமானுஜம் அளவிற்கு இங்கு கற்பிதம் செய்து, திருவுருக்களாகக் கட்டமைக்கப்படுவது இங்கு மோசமான அரசியல். பாடநூல்களும் தொடர்ந்து அதைச் செய்வது சரியல்ல. அறிவியலும் பன்மைத்துவம் காக்கப்படவேண்டும்.

‘ஒளி பிறந்தது’ நேர்காணலில் அப்துல்கலாம் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படியிருக்கும் ? மூன்று அபத்தமான பதில்கள் கிடைக்கிறது. (“இந்தியா ஒளிர்கிறது” என்னும் வெற்று முழக்கமே நினைவுக்கு வருகிறது.) கற்பனை உரையாடலானாலும் உண்மையில் அவர் இப்படித்தான் சொல்லியிருப்பார் என்பதில் அய்யமில்லை. நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற வலுவான கல்விமுறைக்கு அவர் குடியரசுத்தலைவராக இருக்கும்போதே குழி தோண்டியாயிற்றே! அது போகட்டும். இயற்கைவளங்கள் எல்லாம் தீர்ந்துபோனபிறகு இங்கு இருக்கும் எவருக்கு செய்ற்கைக்கோள்கள் சூரிய சக்தியை அளிக்கும்? அப்துல்கலாம் போன்ற ‘சூப்பர்மேன்கள்’ இங்கு வசிப்பதாகக் கொண்டாலும் சூரியசக்தி தீர்ந்தே போகாதா?

சூரிய வெப்பத்தைத் தாங்கும் கருவிகள் கண்டறியப்பட்டால் சூரியனைச் சென்றடையலாமாம்! இங்கு எல்லாவற்றிற்கும் ‘சூப்பர்மேன்கள்’ தேவைப்படுகின்றனர்! சூரியனின் ஒளிரும் தன்மை முடிந்தபிறகு அங்கு செல்லலாம் என்று வேண்டுமானால் சொல்லி வைக்கலாம். சூரியனின் அருகிலுள்ள புதனுக்கே செல்ல முடியாதபோது, இம்மாதிரி அபத்தங்களை குழந்தைகளிடம் விதைக்கலாமா? சுஜாதா போன்ற அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் தோற்றார், போங்கள்! 100 ஆண்டுகளில் செவ்வாயில் குடியேறுதல் என்று சொல்வதெல்லாம் பூமியை எப்படி வேண்டுமானாலும் சீரழியுங்கள் என்பதன் மறு வடிவமே. கேள்வி கேட்பதுதான் அறிவியலில் அடிப்படை என்றால் ஏன் இங்கு வினாக்கள் எழவில்லை. இங்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரிடம் கூட கேள்வி கேட்க வழியில்லை. இதில் அப்துல்கலாமிடம் எப்படி? 2020 க்கு இன்னும் 18 மாதங்களே உள்ளன. அவரின் கனவுகள் நனவாகிவிட்டனவா, என்று யாரேனும் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

‘சூழலியல் மொழி’ என்று தமிழைப் பெருமையோடு பலர் குறிப்பிடும் நிலையில் ராணுவ வலிமையைப் பெருக்குவதும் செயற்கைக்கோள், ஏவூர்தித் தொழிற்நுட்பங்களை விரிவாக்குவதும் மட்டுமே அறிவியலாகப் பார்க்கப்படுவது சமூகத்திற்கு நல்லதல்ல. தேவையின்றி அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள், அதன் மூலம் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள், விண்ணில் சேரும் குப்பைகள் பற்றியெல்லாம் “கடலில் வீணாகக் கலக்கும் நீர்”, என்று பேசும் ‘அறிஞர்கள்’ கண்டுகொள்வதில்லை.

அடுத்தடுத்த வகுப்புகளில் நாராயணமூர்த்தி, நாதெள்ளா, சுந்தர் பிச்சை, சந்திரசேகரன், போன்றோர் இடம்பெறலாம். இம்மாதிரியான நபர்கள் மூலம் எத்தகைய மதிப்பீடுகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கப் போகிறோம் என்பதே நமது கேள்வி.

ஆறாம்வகுப்பு தமிழ் இணையச் செயல்பாடுகளில் தமிழ் விசைப்பலகைகள் (தமிழ் 99, செல்லினம்) இணைத்திருப்பது பாராட்டிற்குரியது. கணினியில் எழுத இ-கலப்பை போன்றவற்றின் அறிமுகம் மாணவர்களை விட ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் ஆசிரியர் தமிழ் அல்லது ஆங்கிலத்தைப் பயன்படுத்தாமல் தமிழ் ஒலியை ஆங்கிலத்தில் எழுதும் அவலம் அரங்கேறுகிறது. நவீன வசதிகள் எவ்வளவோ உருவாகிவிட்ட நிலையில் ஆசிரியர் சமூகம் புதியன கற்காமல் இருப்பது கல்விக்கு அழகல்ல. எனவே மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் இத்தகைய பயிற்சிகள் இன்றியமையாதது.

பட்டிமன்றம் (பட்டி மண்டபம்) என்பது ஒருகாலத்தில் சிறப்பான வடிவமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது மிகவும் சீரழிந்த வடிவம். நகைச்சுவை என்கிற பெயரில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சகமனிதர்கள் அனைவரையும் இழிவாகவும் கேலிக்கு உட்படுத்தும் இந்த வடிவம் உகந்தது அல்ல. இன்று பொதுவெளியில் உள்ள மாதிரிகளையே ஆசிரியர்களும் மாணவர்களும் பின்பற்றுவர். உள்ளூர் திருவிழா மற்றும் காட்சியூடகங்களில் இதுதான் இலக்கிய நிகழ்வு. திரைப்படப் பாடலுக்கும் நடனமாடுவதைவிட இது மோசமான விளைவைத் தரும். பெரும்பாலானோர் திரைப்பாடல்களில் வரிகளை கவனிப்பதில்லை. ஆனால் உரை அப்படியல்ல; இது எதிர்மறைத் தாக்கத்தை உண்டாக்கும்.

‘Sea Turtles’ ‘When the trees walked’ ‘A Visitor from Different Lands’ போன்ற ஆங்கிலப் பாடங்களுக்கு இணையான தமிழ்மொழிப் பாடங்களை எழுத முடியாததைத் தோல்வி என்றே கருதவேண்டும். இருப்பினும் 9 ஆம் வகுப்பில் ‘Goal Setting’ என்னும் ஸ்ரீகாந்தின் பாடம் உள்ளது. கிரிக்கெட் போன்றவற்றைக் கொண்டு சிறந்த மதிப்பீடுகளை உண்டாக்க முடியுமா என்பது கேள்விக்குறி. கிரிக்கெட்டைப் பற்றிப் பாடமில்லாத ஆங்கிலப்பாடநூல் இருக்கக்கூடாதா என்ன? பிற விளையாட்டுக்கள் பற்றி எப்போது பேசுவீர்கள்? இதைப் பதிலீடு செய்யும் விதமாக கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பறையாட்டம், பொம்மலாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து போன்ற தொல்கலைகளைப் பற்றிப் படத்துடன் விளக்கியிருப்பது நன்று. ஆனால் இவற்றையெல்லாம் பாடத்திற்கு வெளியே தள்ளும் அரசியல் எது?

(அடுத்தபகுதியில் 11 தமிழ் மற்றும் சிறப்புத்தமிழ்.)

(தொடரும்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*