உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்: கருத்தரங்கில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 20.01.2019 ஞாயிறு, மாலை 6 மணியளவில் புதுச்சேரி செகா கலைக்கூடத்தில் உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.  

கருத்தரங்கத்திற்கு முனைவர் நா.இளங்கோ தலைமைத் தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் நோக்கவுரை ஆற்றினார். இராதே அறக்கட்டளைத் தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு தொடக்கவுரை ஆற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலர் ப.அமுதவன், இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத் தலைவர் இராஜா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:-

மத்திய அரசு உயர்சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியல் சட்டத்தில் 124வது சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்திய அரசியல் சட்டப்படியும், இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்ற 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பின்படியும் சமூக, கல்வி ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும். தற்போது மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்திற்கும், மேற்சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது.

மத்திய அரசு இந்த இடஒதுக்கீட்டு மசோதாவை அடுத்த அடுத்த நாட்களில் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மக்களை முன்னேற்ற ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். வறுமை ஒழிப்புத் திட்டமும், சமூக ரீதியான இடஒதுக்கீடும் வெவ்வேறானவை. பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ள மத்திய அரசுதான் பொது விநியோக முறையை (Public Distribution System) முற்றிலும் சிதைத்துள்ளது.

எனவே, மத்திய அரசு உயர்சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் கொண்டு வந்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை உடனே திரும்பப் பெற வேண்டும். அதேபோல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜவடேகர் அறிவித்துள்ள உயர்கல்வியில் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீட்டையும் திரும்பப் பெற வேண்டும்.


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*