சேலம் கதிர்வேல் என்கவுன்டர்: ஒரு அப்பட்டமான படுகொலை!

உண்மை அறியும் குழு அறிக்கை

சேலம்

மே10, 2019

சேலத்திலுள்ள குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு என்னும் இடத்தில் கதிர்வேலு எனும் 24 வயது இளைஞன் சென்ற மே 2 காலை ‘என்கவுன்டர்’’ செய்து கொல்லப்பட்ட செய்தி இன்று பரபரப்பாக பேசப்படுகிறது. பொதுவாக என்கவுன்டர் கொலைகள் என்றாலே திட்டமிட்ட படுகொலை என்கிற நிலை இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்பட்டுள்ளது. இப்போது நடந்துள்ள சேலம் என்கவுன்டரைப் பொருத்தமட்டில் போலீஸ் தரப்புச் செய்திகளில் உள்ள முரண்பாடுகள் மிக வெளிப்படையாக நாளிதழ்களிலேயே சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. இந்நிலையில் இது குறித்த உண்மைகளைக் கண்டறிய மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

பேரா. அ,மார்க்ஸ், தலைவர் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை (9444120582).

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (9894054640),

பி.சந்திரசேகரன், வழக்குரைஞர், சேலம், (9362117499),

கோ.அரிபாபு, வழக்குரைஞர், சேலம் (8870579345),

பி.தமயந்தி, வழக்குரைஞர், சேலம் (75503126669),

எம்.ஜாஹிர் அஹமத், வழக்குரைஞர், சேலம் (9943999001),

எச்.முஹமது ஹாரிஸ், சமூக ஆர்வலர், சேலம் (904343510)

இந்தக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் தங்கி சம்பவம் நடந்தாகச் சொல்லப்படும் குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு, கொல்லப்பட்ட கதிர்வேலுவின் ஊரான குள்ளம்பட்டியில் அவர் வீடு இருக்கும் பகுதி, வீராணம் காவல் நிலையம், கதிர்வேலுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சேலம் மாவட்ட மருத்துவமனை முதலான பகுதிகளுக்குச் சென்று நேரடியாக ஆய்வு செய்தது. என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடுக்கு அருகில் உள்ள செங்கற்சூளையில் பணி செய்து கொண்டிருந்த மக்கள், கதிர்வேலுவின் உறவினர்கள், கதிர்வேலுவால் கத்தியால் குத்தப்பட்டதாகச் சொல்லப்படும் காவலர்கள் இருவருக்கும் மருத்துவம் செய்த மருத்துவர், கதிர்வேலுவின் உடலைக் உடற்கூறாய்வு செய்த மருத்துவர் என எல்லோரையும் சந்தித்துப் பேசினர். வாழப்பாடி சரக உதவி காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, வீராணம் காவல் உதவி ஆய்வாளர் பூபதி ஆகியோரைக் காவல் நிலையத்தில் காண முடியாததால் தொலைபேசியில் பேசியது. இன்று காலை இந்த என்கவுன்டர் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி அண்ணாமலை, சேலம் மாநகர துணை காவல் ஆணையாளர் தங்கதுரை ஆகியோரிடமும் தொலைபேசினோம்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா கனிக்கரைச் சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றபோது அவருக்கு உடனடிப் பணி இருப்பதால் பேச இயலாது எனக் கூறப்பட்டது. நாங்கள் காத்திருந்து பேசவோ, இல்லை அவர் சொல்லும்போது வருவதற்கோ தயார் எனக் கூறியபோது, “இது குறித்து நீதித்துறை விசாரணை நடைபெறுவதால் தான் ஏதும் பேச முடியாது” எனக் கூறித் திருப்பி அனுப்பப் பட்டோம். காவல் உதவி ஆய்வாளர் பூபதி தான் ஊட்டியில் இருப்பதாகவும் தொலைபேசியில் ஏதும் பேச முடியாது எனவும் கூறினார்,

கதிர்வேல் என்கவுன்டர் குறித்து காவல்துறை கருத்துக்களின் அடிப்படையில் நாளிதழ்கள் முன்வைப்பவை:

சென்ற மாதத்தில் கொண்டலாம்பட்டி பட்டர்ஃப்ளை பாலத்தில் மோட்டார் சைகிளில் கோரிமேட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஆடவர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்த ஒரு கும்பல் அந்தப் பெண்ணை ஆபாசப் படம் எடுத்துப் பணம் பறித்தது. கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் இது தொடர்பான புகார் செய்யப்பட்டதை ஒட்டி ரவுடி வெங்கடேஷ் உட்பட அவரைச் சேர்ந்தோர் தேடப்பட்டனர். இது தொடர்பாக அக்கும்பலுடன் தொடர்புகொண்ட முறுக்கு வியாபாரி கணேசனைப் பிடித்து விசாரித்தபோது அவர் எல்லா விவரங்களையும் போலீசில் சொன்னதாகவும் இதனால் கணேசன் மீது வெங்கடேஷ் கும்பலுக்கு ஆத்திரம் வந்ததாகவும் அதனால் அக்கும்பலால் கணேசன் சென்ற ஏப்ரல் 5 அன்று கொல்லப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கதிர்வேல், முத்து, பழனிச்சாமி முதலான சிலர் தேடப்பட்டனர். காட்டூர் ஆனந்தன், முருகன், கார்த்தி, கோபி முதலானோர் பெயர்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.

இதைத் தொடந்து காவல்துறை விடுக்கும் கதை வருமாறு: மே 2 அன்று காலை குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு அருகில் கதிர்வேல் பதுங்கி இருந்ததாகச் செய்தி வந்து ஆய்வாளர் சுப்பிரமணி, எஸ்.ஐ மாரி, பெரியசாமி ஆகிய காவலர்கள் அங்கு சென்றனர். அவர்களைக் கண்டவுடன் கதிர்வேல் தப்பி ஓட முயற்சித்ததோடு போலீசைத் தாக்கவும் செய்தார். இதனால் இரண்டு போலீஸ் அதிகாரிகளின் உடலில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டன. ஆய்வாளர் சுப்பிரமணி தற்காப்புக்காகச் சுட்டபோது கதிர்வேலு இறந்தார். காயமடைந்த ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் மாரி ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டி.ஐ.ஜி. செந்தில்குமார், எஸ்.பி தீபா கனிக்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

போலீசாரின் இந்தக் கூற்றில் பத்திரிகைகள் கண்ட முரண்கள்:

மே 2 காலை தினத்தந்தியில் கதிர்வேலு முதல் நாள் போலீசில் சரணடைந்தார் எனச் செய்தி வருகிறது. மே 2 மாலை நாளிதழ்களில் கதிர்வேலு அன்று முற்பகலில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தி வருகிறது. இதன் பொருள் என்ன? காவல்துறை காவலில் இருந்தவர் அன்று காலை கொல்லப்பட்டார் என்பது தானே. அடுத்த நாள் தினத்தந்தி காவல்துறை முதல்நாள் கூறிய செய்தியை (அதாவது கதிர்வேலு முதல்நாள் கைது செய்யப்பட்டார் என்பதை) மறுத்துள்ளதாகக் கூறுகிறது.

மே 4 மாலைமலர் நாளிதழ் சுட்டிக் காட்டிய சில முரண்களை இனி பார்க்கலாம். “சேலம் ரவுடி என்கவுன்டரில் தொடரும் மர்மங்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் எழுப்பப்படும் சில கேள்விகள்: “பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது” எனச் சொல்லும் அந்த இதழ், “முந்தைய நாள் இரவில் கதிர்வேலை போலீசார் சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் கைது செய்ததாகவும், பின்னர் இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் வைத்து கதிர்வேலிடம் விசாரணை நடத்தியதாகவும், பின்னர் முறுக்கு வியாபாரி கணேசனைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை குள்ளம்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாகவும், அதனை எடுக்க போலீசார் அழைத்துச் சென்றபோது அவர் போலீசாரை தாக்கியதாகவும், அப்போது அவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. பின்னர் கதிர்வேல் குள்ளம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்ததாகவும், அவரைப் பிடிக்க சென்றபோது அவர் கத்தியால் குத்தியதால் போலீசார் தற்காப்புக்காக அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் எப்படி இந்த என்கவுன்டர் நடந்ததென பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகின்றது.”

மேலும் அந்த நாளிதழ் கணேசன் கொலையில் சரணடைந்த முத்து, பழனிசாமி இருவரும் போலி குற்றவாளிகள் என்று கூறப்படுவதாகவும், சுட்டுக் கொல்லப்படும் அளவுக்குக் கதிர்வேல் குற்றவாளி இல்லை என மக்கள் பேசிக் கொள்வதாகவும் குறிப்பிட்டது. முத்தாய்ப்பாக அந்த இதழ் “எனவே இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்” – எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

சரணடைந்த நான்கைந்து நாட்கள்வரை முத்து, பழனிச்சாமி இருவரும் கஸ்டடி எடுத்து விசாரிக்கப்படவில்லை என்பது இத்துடன் ஒத்துப்போவதும் கவனத்துக்குரியது,

மே 3 தேதிய ‘தினத்தந்தி’ நாளிதழ் சுட்டிக் காட்டிய முரண் இன்னும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. அது:

“பிரபல ரவுடி கதிர்வேல் காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் எனக் காலை 11 மணி அளவில் தகவல் வெளியானது. இது தொடர்பாக சம்பவ இடத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள், போலீசாரிடம் ‘எந்த இடம்?’ எனக் கேட்டனர். அதற்கு அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமான தகவல்களைத் தந்தனர். அதாவது மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், குள்ளம்பட்டி எனத் தெரிவித்தனர். இந்த இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் சுற்றித் திரிந்தனர். போலீசார் சம்பவம் நடந்த இடம் எனச் சொல்லப்படும் குள்ளம்பட்டியில் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் 4 பேர் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். பின்னர்தான் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்’”

நாங்கள் விசாரித்தபோதும் அருகில் செங்கற்சூளையில் பணி செய்து கொண்டிருந்த மக்களும் அப்படி எதையும் தாங்கள் காணவில்லை எனக் கூறியதை முன்பே குறிப்பிட்டோம். அதோடு கொலை செய்த ஆயுதங்களை மறைத்துவைக்க அந்த இடத்தில் எந்த வாய்ப்பும் இல்லை.

“இது கொலை! என்கவுன்டர் அல்ல” எனும் அறிக்கையில் சொல்லப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி

இந்நிலையில் முகவரி ஏதும் போடப்படாத ஒரு அறிக்கை சுற்றுக்கு வந்தது. அதில், “மே 1 அன்று மாலை 4.20 மணி அளவில் முன்கூட்டி வீராணம் உதவி ஆய்வாளர் பூபதியிடம் பேசி ஏற்பாடு செய்தபடி கதிர்வேலு அவரிடம் சரண் அடைந்தார். புதிய பேருந்து நிலையம் ‘சரவணா பேக்கரி’ மற்றும் சுற்றியுள்ள CCTV களில் இதற்கான பதிவு உண்டு. பின் அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு உயர் அதிகாரியிடம் அவரை ஆஜர்படுத்தி, அதன்பின் மாலை 6.30 தொடங்கி இரவு சுமார் 11 மணிவரை வீராணம் காவல்நிலையத்தில் வைத்திருந்து பின் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கதிர்வேலு காரிப்பட்டி காவல் நிலையப் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டார்.”

என்பதுதான் அச்செய்தி. இது பெயரும் முகவரியும் இல்லாமல் வெளியிடப்பட்ட அறிக்கை ஆனாலும் இது தினத்தந்தி மே 2 நாளிதழ்ச் செய்தியுடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.

எமது குழு இது தொடர்ப்பாக சரவணா பேகரி பகுதியில் விசாரித்தபோது அந்த CCTV பதிவு தற்போது காவல்துறையால் நீக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம்.

இது தொடர்பாக உதவி ஆய்வாளர் பூபதியிடம் பேசலாம் என வீராணம் காவல்நிலையத்திற்கு நாங்கள் சென்றபோது அவர் விடுப்பில் சென்றிருப்பது தெரிந்தது. அங்கு அதிகாரிகள் யாருமில்லை. எழுத்தரும் பெண்காவலர் இருவரும் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தமக்கு எதுவும் தெரியாது எனவும், மே1 அன்று தம் காவல் நிலையத்தில் அவ்வாறு சரணடைந்த யாரும் வைக்கப்படவில்லை எனவும் கூறினர். எனினும் அவசர அவசரமாக எங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள அவர்கள் தவறவில்லை..

காவல்துறையினரைச் சந்திக்க முயன்றபோது

உதவி ஆய்வாளர் பூபதியைத் தொடர்பு கொண்டு பேசினோம். பொறுமையுடன் பதிலளித்த அவர் நாங்கள் எவ்வளவு வற்புறுத்தியும் தொலைபேசியில் எதையும் சொல்லமுடியாது எனச் சொல்லிவிட்டார்.

வாழப்பாடி சரக டி.எஸ்.பி சூரியமூர்த்தியிடம் பேசியபோது தான் வெளியே புறப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சந்திக்க முடியாது எனவும் கூறினார். முதல் நாளே கதிர்வேலு சரணடைந்ததாகச் செய்திகள் வெளியானதை நாங்கள் குறிப்பிட்டபோது அது இல்லவே இல்லை எனத் தீவிரமாக மறுத்தார். இது தொடர்பாக இப்போது நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியிடம் பேசிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.

எஸ்.பி தீபா கனிக்கர் எங்களிடம் பேச மறுத்ததைக் குறிப்பிட்டோம். நீதித்துறை விசாரணை நடப்பது இப்படிக் கருத்துக் கூற மறுப்பதற்கு அவர்களுக்கு ஒரு சாக்காகப் போய் விட்டது.

இந்த என்கவுன்டர் கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி அண்ணாமலையிடம் நாங்கள் பேசியபோது விசாரணை நடப்பதாகவும் இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை என்றும் கூறினார். கதிர்வேலு முதல்நாளே கைதுசெய்யப்பட்டார் அல்லது சரண் அடைந்தார் எனச் செய்திகள் பத்திரிகைகளில் வந்துள்ளதை அவரிடம் குறிப்பிட்டபோது அது தன் கவனத்திற்கு வரவில்லை எனவும் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கில்லை எனவும் கூறினார். மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்கவுன்டருக்கு முதல்நாளே கதிர்வேலு சரணடைந்து அஸ்தம்பட்டி சரக உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்திருந்ததாகவும் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது அதை அவர் முற்றாக மறுத்தார்.

மருத்துவர்களைச் சந்தித்தபோது

கதிர்வேலுவின் உடலைக் கூறாய்வு செய்த மருத்துவர் டாக்டர் கோகுலரமணாவைச் சந்தித்து கதிர்வேலு உடலில் துப்பாக்கிச் சூடு தவிர வேறு காயங்கள் இருந்ததா முதலான ஐயங்களைக் கேட்டோம்.. பொறுமையாகப் பதிலளித்த அவர் கூறாய்வு முடிவுகள் எதையும் கூற இயலாது எனவும் அவற்றை கவனத்துடன் செய்து முடிவுகளை சீல் வைக்கப்பட்ட உறையில் அனுப்பி விட்டதாகவும், எல்லாமும் உரிய வகையில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கதிர்வேலுவைப் பிடிக்கச் சென்றபோது அவரால் கத்தியால் குத்தப்பட்டவர்களாகவும், அதனால் அவரைச் சுட்டுக் கொன்றவர்களாகவும் அறியப்படும் உதவி ஆய்வாளர் மாரி, ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முந்திய நாளே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றிருந்தனர், அவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவ அதிகாரி ராஜ் அசோக்கைச் சந்தித்துப் பேசியபோது மாரிக்கு இரு சிறு காயங்களும் சுப்பிரமணியத்துக்கு மூன்று சிறு காயங்களும் இருந்ததாகச் சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அதற்குச் சிகிச்சை தேவையா எனக் கேட்டபோது சிரித்தார். “அவர்களுக்கு வேறு சில ‘கம்ப்லைன்ட்ஸ்’ இருக்கும். மருத்துவமனையில் சேர்ந்தால் அதையும் கவனித்தாக வேண்டும்” என்றார்.

கதிர்வேலுவின் குடும்பத்தார் மற்றும் அருகிலுள்ளோரைச் சந்தித்தபோது

முதல்நாள் எங்கள் குழு சென்றபோது கதிர்வேலுவின் பெற்றோரைச் சந்திக்க இயலவில்லை. சுற்றியுள்ள மக்களைத்தான் சந்தித்துப் பேச முடிந்தது. இன்று (மே 10) முற்பகல் அவரது வயதான பெற்றோரையும் ஈனும் சிலரையும் சந்திக்க முடிந்தது. என்கவுன்டருக்குச் சில நாட்கள் முன் காவல்துறையினர் வந்து வீட்டில் இருந்த கதிர்வேலுவின் புகைப்படத்தைப் படம் எடுத்துச் சென்றதாகவும், தொலைக்காட்சியில் செய்தி வந்தபின்னரே தம் மகன் கொல்லப்பட்டதை அறிந்துகொண்டதாகவும் அவர்கள் கூறினர். அவரது உடலில் இருந்த காயங்கள் பற்றிக் கேட்டபோது மார்பில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது தவிர கைகளிலும் காயங்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர். கதிர்வேலுவின் உடலை முழுமையாகப் பார்ப்பதற்கும் காவல்துறையினர் விடவில்லை எனவும் அருகிலுள்ளோர் கூறினர்.

மே 03 காலை கதிர்வேலுவின் பெற்றோர், தம்பி முதலானோரை ஒரு காரில் போஸ்ட்மார்டம் நடக்கும் மருத்துவமனைக்குக் காவல்துறையினரே அழைத்துச் சென்றுள்ளனர். போஸ்ட்மார்டம் செய்யப்பட்டபின் கதிர்வேலுவின் சடலத்தை குள்ளம்பட்டிக்குக் கொண்டு செல்லும்போது அந்தக் காருக்கு முன் ஒரு போலிஸ் வேனும், பின்னே மோட்டார் சைக்கிள்களில் இரு போலீஸ்காரர்களும் சென்றுள்ளனர்.

கதிர்வேலு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறித்த ஐயம் பலருக்கும் உள்ளது. தன் கைகால்களை முறிக்கப் போவதாகத் தனக்குத் தகவல்கள் வந்ததாகவும் அந்த பயத்தின் காரணமாகவே தன் மீதாதான கொலை வழக்கு காரிப்பட்டி காவல் நிலையத்தில் இருந்தபோதும் அவர் மாநகரக் காவல் நிலையத்தில் சரணடைய வந்தார் எனவும் இங்கு பேசப்படுவது குறிப்பிடத் தக்கது. கணேசன் கொலை வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டவர்களில் சிலர் அதனுடன் தொடர்பில்லாதவர்கள் எனவும் கூறப்படுகிறது. பத்திரிகைகளும் அவ்வாறு எழுதியுள்ளன. அப்படித் தொடர்பில்லாதவர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படுதல் வேண்டும்,

எமது பார்வைகள்

1) கதிர்வேலு என்கவுன்டரில் கொல்லப்பட்டு சுமார் பத்து நாட்களுக்குப் பின் நாங்கள் ஒரு குழுவாக இந்த ஆய்வில் ஈடுபட்டபோதும் இக்குழுவில் உள்ள உள்ளூர் தோழர்கள் என்கவுன்டர் செய்யப்பட்ட முதல்நாள் தொடங்கி நடந்ததைக் கவனித்துத் தகவல்கள் திரட்டிக் கொண்டிருந்தனர். சென்ற 4ம் தேதி இங்கு வந்து ஆய்வு செய்து அறிக்கை தந்த மக்கள் கண்காணிப்பகமும் முந்தியநாளே சரணடைந்த கதிர்வேலுவை காரிப்பட்டி காவல்துறையினர் கொண்டு சென்று சுட்டுக் கொன்றதாக மக்கள் பேசிக் கொண்டதைக் குறிப்பிட்டுள்ளது. காவல்துறை முன்வைப்பதுபோல கதிர்வேலு அப்படியெல்லாம் பெரிய ரவுடி இல்லை எனச் சொல்கிறது, என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தைச் சுற்றி இருக்கும் மக்கள் அன்று அப்படி எல்லாம் எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்பதையும் குறிப்பிடுகிறது. அரசியல் மற்றும் சாதி சார்ந்து நடத்தப்பட்ட கொலை இது எனவும் அவ்வறிக்கை பதிவு செய்கிறது. இரண்டு முக்கிய சாதிகள் மற்றும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் இடையே உள்ள முரணும் பகையும் கதிர்வேலுவின் கொலையில் பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் சந்தித்த பலரும் குறிப்பிட்டனர். இதைப் பார்க்கும்போதுதான் ஒரு பகுதியில் பெரும்பான்மையாய் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களை வருவாய்த்துறை மற்றும் காவல்துறைகளில் முக்கிய அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது என்கிற கருத்து வலுப்படுகிறது.

2) எல்லா என்கவுன்டர் கொலைகளையும்போல இதுவும் ஒரு போலி என்கவுன்டர்தான் என்பதோடு கூடுதலாக இதில் பத்திரிகைகளே வெளிப்படையாகச் சுட்டிக்காட்டும் அளவிற்கு அப்பட்டமான அற மீறல்கள் நடந்துள்ளன. இரக்கமுள்ள ஒரு அதிகாரியைச் சந்தித்து சரணடைந்து தன் குற்றத்திற்கான தண்டனை அனுபவிப்பை நோக்கி நகர்ந்த ஒரு இளம் குற்றவாளி, மாவட்ட காவல்துறையின் ஒருமித்த சதியால் இன்று ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கொல்லப்பட்டவர் மணமாகாத ஒரு இளைஞர் மட்டுமல்ல ஒரு குடிசைவாசி, அவனுக்குப் பின் ஒரு தங்கையும் தம்பியும். வயதான பெற்றோர்களும் உள்ளனர். மகனை இழந்த அவர்கள் நம்மைப்போலத் துக்கம் விசாரிக்கச் செல்பவர்களிடமும் கூட மனம்திறந்து பேச இயலாத அளவுக்குக் காவல்துறை மற்றும் உளவுத்துறைகளின் கெடுபிடிகளுக்கு இடையில் இன்று நாட்களைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளகியுள்ளனர்.

3) இப்படியான என்கவுன்டர் கொலைகளின் பின்னணியில் எப்படி வெளிப் பகைகள் மற்றும் சட்ட ஒழுங்கு நிறைவேற்றலுக்கு அப்பாற்பட்ட காரணிகள் செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வுகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தைச் சேந்த காந்திராஜன் எனும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி எவ்வாறு சென்னை நகரத்தில் ‘கேங்ஸ்டர்ஸ்’ காவல்துறையினரின் துணையுடன் செயல்படுகின்றனர் என்பது குறித்து ஒரு ஆய்வையே செய்து அது ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது. அப்படியெல்லாம் இருந்தும், ஆளும்கட்சிகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் கூட இப்படியான என்கவுன்டர் படுகொலைகளைக் கண்டுகொள்ளாததும் கண்டிக்காததும் வேதனைக்குரிய ஒன்று.

4) இந்தப் படுகொலை தொடர்பாகக் காவல்துறை முன்வைக்கும் கதையாடலில் (narrative) உள்ள முரண்களை நாளிதழ்கள் சுட்டிக் காட்டியமைக்காக எம் குழு இதழியல்துறைக்குப் பாராட்டுக்களை கூறிக் கொள்கிறது. என்கவுன்டரில் ஒருவர் கொல்லப்பட்டார் என்றாலே அவரை ‘ரவுடி’ ‘அவன்’, ‘இவன்’ என்றெல்லாம் எழுதுவதையும், காவல்துறை சொல்வதை எல்லாம் கருப்பு வெளுப்பில் பதிவதையும் இதழியற்துறையினர் புறக்கணிக்க வேண்டும் எனவும் இக்குழு வேண்டிக்கொள்கிறது.

எமது கோரிக்கைகள்

1) என்கவுன்டர் கொலைகள் நடக்கும்போது அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மிக விரிவான நெறிமுறைகளை உச்சநீதிமன்றமும், மனித உரிமை ஆணையமும் வகுத்துத் தந்துள்ளன. என்கவுன்டர் செய்யும் அதிகாரிகளுக்கு வீரச் சக்கரம் வழங்குதல், பணப்பரிசளித்தல், பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றை தடை செய்துள்ளதோடு என்கவுன்டர் கொலை செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அவர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு இந்த என்வுன்டர் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது என நிறுவும்வரை அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் என்பது இந்தப் பரிந்துரைகளின் முக்கியமான அம்சம். இந்த என்கவுன்டரிலும் அது கடைபிடிக்கப்பட வேண்டும். கொலை செய்த இரு போலீஸ்காரர்கள் மட்டுமலாமல் பின்னின்று ஆணையிட்ட உயர் அதிகாரிகளும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரித்து உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கிடைத்துள்ள தகவல்களின்படி கதிர்வேலு கொல்லப்பட்டது ஒரு போலி என்கவுன்டர்தான் என எம் குழு உறுதியாக நம்புகிறது.

2) என்கவுன்டரில் கொல்லப்பட்ட கதிர்வேலு கொல்லப்படுவதற்கு முதல்நாளே சரண் அடைந்தார் அல்லது கைதுசெய்யப்பட்டார் எனக் குறைந்த பட்சம் ‘தினத்தந்தி’, ‘மாலைமுரசு’, ‘காலைக்கதிர்’ முதலான இதழ்களில் செய்தி வந்துள்ளது. ‘மக்கள் கண்காணிப்பகம்’ அறிக்கையும் மக்கள் அவ்வாறு சொல்வதைப் பதிவு செய்துள்ளது. எங்களிடமும் பலர் அவ்வாறே கூறினர். அது உண்மையாயின் காவல்துறை ஏன் அதை மறைக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.

3) இந்த என்கவுன்டர் குறித்து காவல்துறை சொல்வதும் ஊடகங்களும் மக்களும் சொல்வதும் முரணாக இருப்பதால் இந்த என்கவுன்டரை நடத்திய உள்ளூர் காவல்துறையே இவ்வழக்கை விசாரித்தால் நீதிகிடைக்காது என்பதால் கதிர்வேலு கொலை குறித்த புலன் விசாரணையை மத்திய புலனாய்வு முகமையிடம் (CBI) ஒப்படைக்க வேண்டும்.

4) என்கவுன்டர் கொலைக்குப் பலியான கதிர்வேலுவின் குடும்பநிலையை உத்தேசித்து அவர்களுக்கு உடனடியாக ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வயதான அவரது தம்பி பூபதிக்குக் அவரது கல்வித் தகுதிக்குத் தகுந்த ஒரு அரசுப்பணி வழங்கப்பட வேண்டும் எனவும் இக்குழு கோருகிறது.

கோ.அரிபாபு, வழக்குரைஞர், 228, சின்னேரி வயக்காடு, பள்ளப்பட்டி, சேலம் 636009, செல்: 9945311889

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*