துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!


10.09.2019 அன்று, காலை 11 மணியளவில், செகா கலைக்கூடத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தொடர்ந்த வழக்கில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய தேங்காய்த்திட்டு மக்கள், சமூக அமைப்புத் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு புதுச்சேரி அரசு துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இதற்காக தேங்காய்த்திட்டு நிலங்களைக் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்தது. இதனால், தேங்காய்த்திட்டு மக்கள் ஆத்திரமடைந்து இத்திட்டத்திற்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தினர்.

மேலும், இத்திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கும், கடல்வளம் சீர்குலையும் என அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் போராட்டம் நடத்தின. இதனால், இத்திட்டத்தைப் புதுச்சேரி அரசு கைவிட்டது.

கடந்த 13.04.2007 அன்று, தேங்காய்த்திட்டு மக்களும், சமூக இயக்கங்களும் போராட்டம் நடத்திய போது போலீசாருக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் உள்ளிட்ட சமூக இயக்கத் தலைவர்கள், தேங்காய்த்திட்டு ஊர்ப் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் மீது முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் இரண்டு வழக்குகளை நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததால் புதுச்சேரி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனால், போலீசார் மீதான கொலை முயற்சி வழக்கு மட்டும் நிலுவையில் இருந்தது. இவ்வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென புதுச்சேரி அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் மேற்சொன்ன வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் (Crl.O.P. No. 25934 of 2018). இவ்வழக்கில் கடந்த 09.11.2018 அன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்து வெங்கடேஷ் உத்தரவுப் பிறப்பித்தார். அதில் உத்தரவு நகல் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது வழக்கை ரத்து செய்ய வேண்டுமென முதலியார்பேட்டை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்ற மேற்சொன்ன உத்தரவின்மீது முதலியார்பேட்டை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை லோகு. அய்யப்பன் தொடர்ந்தார் (Cont.P. No. 128 of 2019). இவ்வழக்கில் கடந்த 22.08.2019 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்து வெங்கடேஷ் உத்தரவுப் பிறப்பித்தார்.

நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:-

‘12 ஆண்டு காலத்திற்குப் பிறகுப் புதிதாக இவ்வழக்கை விசாரணை செய்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களைச் சரியாக அடையாளம் கண்டறிய சாட்சிகளின் தகவல்களைச் சார்ந்து இருக்க வேண்டும். இந்த நீண்ட காலத்தில் சாட்சிகள் இல்லாமல் போய் இருப்பார்கள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களை, அடையாளம் காணுவதில் நினைவு இல்லாமல் இருப்பார்கள். மீண்டும் புதிதாக புலன் விசாரணையைத் தொடங்குவது பயனற்றது என்பதோடு நேரமும் வீரயமாகும். இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை நிலுவையில் வைத்திருப்பதாலும், போலீசாரை புதிதாக புலன்விசாராணையை நடந்த உத்தரவிடுவதாலும் எவ்வித பயனும் இல்லை. ஆகையால், இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துக் கொள்ளப்படுகிறது’ என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கில், லோகு. அய்யப்பன் தரப்பில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் ஆஜரானார்கள்.

கடந்த 12 ஆண்டுகள் தேங்காய்த்திட்டு மக்கள், சமூக அமைப்புத் தலைவர்கள் 92 பேர் மீது நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

உடன் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், தேங்காய்த்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுத் தலைவர் காளியப்பன், முன்னாள் கவுன்சிலர் ஜா.பாஸ்கரன், ஆடிட்டர் பூவராகவன், ஆர்.கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*