நெய்வேலி காவல் மரணம்: காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2020) விடுத்துள்ள அறிக்கை:

நெய்வேலி நகரக் காவல்துறையினரின் சித்தரவதையால் செல்வமுருகன் இறந்துபோன சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

கடலூர் மாவட்டம், காடாம்புலியூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் (வயது 35) என்பவரை கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி நகரக் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் அவரை காவல்நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை ஒத்துக் கொள்ள சொல்லி கடுமையாக அடித்து துன்புறுத்தி சித்தரவதைச் செய்துள்ளனர்.

இந்நிலையில், செல்வமுருகன் காணாமல் போனது குறித்து வடலூர், நெய்வேலி காவல்நிலையங்களில் அவரது மனைவி பிரேமா அளித்த புகாரை காவல்துறையினர் பெற்றுக் கொள்ளாமல் மிரட்டி அனுப்பியுள்ளனர். செல்வமுருகனை நெய்வேலி நகரக் காவல் நிலையத்திலும், அங்குள்ள தனியார் விடுதி ஒன்றிலும் வைத்து கடும் சித்தரவதைச் செய்துள்ளனர்.

மேலும், செல்வமுருகனை தேடி நெய்வேலி நகரக் காவல்நிலையத்திற்குச் சென்ற பிரேமாவிடம் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தனியார் தங்கும் விடுதி ஒன்றுக்கு வரச் சொல்லி 10 பவுன் நகைக் கொண்டுவந்து தருமாறு கேட்டுள்ளார். இல்லையேல், அவரது கணவர் மீது வழக்குப் போட்டுச் சிறையில் தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், பின்னர் அவரிடம் ரூபாய் 5000 தருமாறு கேட்டு மிரட்டிப் பெற்றுள்ளார்.

இதனிடையே, காவல்துறையினர் செல்வமுருகன் மீது பொய்யாக திருட்டு வழக்குப் பதிவு செய்து, கடந்த 31.10.2020 அன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 04.11.2020 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறையிலிருந்த செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது இறந்து போனார்.

நெய்வேலி காவல் நிலையத்திலும், விருத்தாசலம் கிளைச் சிறையிலும் செல்வமுருகனை அவரது மனைவி பிரேமா சென்று பார்த்த போது அவரது உடல்நிலைக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது திருட்டு வழக்குகளை ஒப்புக் கொள்ள சொல்லி தன்னைக் கடுமையாக அடித்து உதைத்து சித்தரவதைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.

நெய்வேலி நகரக் காவல்நிலைய காவல்துறையினர் 28.10.2020 முதல் 31.10.2020 வரையில் 3 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்தரவதைச் செய்ததே செல்வமுருகன் இறப்புக்குக் காரணமாகும். சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பின்னரும் தமிழகக் காவல்துறையினர் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.

தற்போது இச்சம்பவம் குறித்து நெய்வேலி நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ரவி என்பவரை காவல்துறையினர் அடித்துக் கொன்றனர். இவ்வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் புலன்விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இறுதியில் இது காவல்நிலைய மரணம் அல்ல என நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்து இவ்வழக்கை முடித்துவிட்டனர். இதுபோல் நடக்காமல் இவ்வழக்கில் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரின் விசாரணை நடைபெறுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, செல்வமுருகன் காவலில் இறந்த சம்பவத்தில் தொடர்புடைய நெய்வேலி நகரக் காவல்நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிந்து உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடும், இறந்துபோன செல்வமுருகனின் மனைவிக்குத் தகுதிகேற்ப அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*