உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.08.2021) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் போலியான பயனாளிகளைக் கண்டறிந்து நீக்கி உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசு உதவித் தொகை வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் முதியோர், விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சமூக நலத்துறை மூலம் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. புதுச்சேரி முழுவதும் ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேர் மேற்கண்ட திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

புதுச்சேரியில் ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித் தொகையில் ரூ. 500 உயர்த்தப்பட்டு 18 வயது முதல் 54 வயது வரை உள்ள விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2000, 55 வயது முதல் 59 வயது வரை உள்ள முதியோருக்கு ரூ.2000, 60 வயது முதல் 79 வயது வரை உள்ள முதியோருக்கு ரூ.2500, 80 வயதுக்கு மேலுள்ள முதியோருக்கு ரூ.3500 என உயர்த்தப்பட்ட உதவித் தொகை வழங்க தற்போதைய அரசு அரசாணை வெளியிட்டது. தற்போது உயர்த்தப்பட்ட உதவித் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், புதுச்சேரியில் முதியோர் உதவித் தொகைப் பெறும் பயனாளிகளில் சுமார் 40 சதவீதம் பேர் 55 வயது முழுமையடையாத நிலையில், வயதைத் திருத்திப் போலியான ஆதார் அட்டைகளைத் தயாரித்து சட்ட விதிகளுக்கு முரணாக உதவித் தொகைப் பெற்று வருகின்றனர். அதே போன்று தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் இதுபோன்று போலியான பயனாளிகளுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டு அரசுப் பணம் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது.

கடந்த கால ஆட்சிகளில் நடந்த இந்த முறைகேடுகளைத் தடுக்க முதியோர் உதவித் தொகை பெறும் அனைத்து பயனாளிகளின் வயதுச் சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். போலியான ஆதார் அட்டைகள் வழங்கியவர்களைக் கண்டறிந்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியான பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகைப் பெறும் பயனாளிகளின் ஆதார் அட்டை எண்களை இணைத்து போலியான பயனாளிகள் உதவித் தொகைப் பெறுவதைத் தடுக்க வேண்டும்.

அதேபோல், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைப் பெறும் பயனாளிகளையும் ஆய்வு செய்து உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சமூக நலத்துறைச் செயலர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*