காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில் சோதனை: ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (24.01.2023) விடுத்துள்ள அறிக்கை:

காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி மாணவிகளை செல்போன் வைத்திருக்கிறார்களா என ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில் சோதனை செய்த ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 07.12.2022 அன்று காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 6 பேரிடம் செல்போன் வைத்திருக்கிறார்களா என ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில் இரண்டு ஆசிரியைகள் சோதனை செய்துள்ளனர். மாணவிகள் தங்களை மறைவான இடத்தில் சோதனை செய்யுங்கள் எனக் கெஞ்சியும் ஆசிரியைகள் செவிசாய்க்கவில்லை. இது போக்சோ சட்டப்படி குற்றமாகும்.

இதனால், மனமுடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு, உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவரின் பையில் தற்கொலைக் குறிப்பு ஒன்றை வைத்துவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்கப்பட்டுள்ளார்.

மேலும், அந்த ஆசிரியை தற்கொலைக் குறிப்பை அன்றைய தினமே பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியும் அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவிகள் அன்றைய தினமே குழந்தைகள் நலக் குழுவிற்கு 1098 என்ற குழந்தைகள் உதவி கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்குப் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து கடந்த 03.01.2023 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு விரிவான புகார் அனுப்பினோம். அதன் பின்னர் முதுநிலைக் கண்காணிப்பாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நலக் குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரித்துள்ளனர். இக்குழுவினர் மாணவிகளிடம் முறையாக விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யவில்லை. குற்றமிழைத்த ஆசிரியர்களைக் காப்பாற்றும் நோக்கில் புகாரில் உண்மைத்தன்மை இல்லையென நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக தெரிகிறது.

குழந்தைகள் நலக் குழுவினர் குழந்தைகள் பாதிப்பு குறித்த புகார்களை அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்தும், ஊழல் முறைகேட்டாலும் முறையாக விசாரிக்காமல் குற்றவாளிகளைக் காப்பாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால், தற்போதுள்ள குழந்தைகள் நலக் குழுவைக் கலைத்துவிட்டு, நேர்மையான, நம்பகத்தன்மை உடையவர்களைக் கொண்டு புதிதாக அமைக்க வேண்டும். அதேபோல், பல்வேறு புகார்களுக்கு உள்ளான குழந்தைகள் நலக் குழுவிற்கு உதவியாக செயல்படும் தொண்டு நிறுவனத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.

எனவே, புதுச்சேரி அரசு, காவல்துறை, கல்வித்துறை ஆகியவை மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குற்றமிழைத்த காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையேல், அனைத்து சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*