அரசு நிதி முறைகேடு: பாரதியார் பல்கலைக்கூட முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.04.2023) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசின் நிதியை முறைகேடு செய்த பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

பாரதியார் பல்கலைக்கூடத்தின் பொறுப்பு முதல்வராக இருக்கும் பி.வி.போஸ் ஏஐசிடிஇ, யுஜிசி விதிகளுக்குப் புறம்பாக முதல்வர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர். இவர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்ட பின் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

பல்கலைக்கூடத்திற்கு 8 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் பெரும் ஊழல், முறைகேடு, விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. பி.எச்.டி. பட்டம் பெறாதவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தொடர்புடைய துறையில் போதிய அனுபவம் இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போதும்கூட இந்த உதவிப் பேராசிரியர்கள் உரிய பணி நீட்டிப்பு ஆணை இல்லாமல் பணியில் உள்ளனர்.

முதுகலைப் படிப்பு தொடங்குதாக கூறி 5 இலட்சம் ரூபாயைப் பல்கலைக்கூட வங்கிக் கணக்கில் இருந்து பொறுப்பு முதல்வர் எடுத்துள்ளார். காசாளர் விடுமுறையில் இருக்கும்போது, அவருக்குத் தெரியாமல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பணத்தை எடுத்துள்ளார். இப்பணம் என்ன ஆனது என்று இன்றுவரை தெரியவில்லை.

இதுகுறித்து கடந்த 14.03.2023 அன்று துணைநிலை ஆளுநர், கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுக்கு மேற்சொன்ன பொறுப்பு முதல்வர் மீது உரிய குற்ற நடவடிக்கைக் கோரி மனு அனுப்பி இருந்தோம். கடந்த 20.03.2023 அன்று துணைநிலை ஆளுநர் அலுவலத்தில் இருந்து இம்மனுவை தலைமைச் செயலர் தலைமையில் இயங்கும் விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கடிதம் வந்துள்ளது.

பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரின் விதிமீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து அரசுக்கும், உயரதிகாரிகளுக்கும் ஆதாரங்களுடன் பல மனுக்கள் அனுப்பி உள்ளோம். ஆனால், அம்மனுக்கள் மீது இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், துறைச் செயலர் இதில் தலையிட்டு, அரசு நிதியை முறைகேடு செய்த பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சரை அனைத்து சமூக அமைப்புகள் சார்பில் நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*