பழங்குடி இருளர் 7 பேர் சட்டவிரோத காவலில் சித்தரவதை, பொய் வழக்கு: உண்மை அறியும் குழு நாளை விசாரணை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.03.2023) விடுத்துள்ள அறிக்கை:

பழங்குடி இருளர் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சட்டவிரோத காவலில் வைத்து சித்தரவதை, பொய் வழக்குப் போட்ட சம்பவம் குறித்து உண்மை அறியும் குழு நாளை விசாரணை நடத்துகிறது.

புதுச்சேரி காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் போலீசார் பழங்குடி இருளர் 2 சிறுவர்கள் உட்பட 7 பேரை சட்டவிரோத காவலில் வைத்து கடும் சித்தரவதைச் செய்து, கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குப் போட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் மயிலம், கண்டமங்கலம் காவல்நிலையங்களிலும், புதுச்சேரி மங்கலம், வில்லியனூர் காவல் நிலையங்களிலும் போலீசார் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகள் போட்டு கைது செய்து வருகின்றனர். இந்த வழக்குகள் அனைத்தும் அப்பட்டமான பொய் வழக்குகள் ஆகும்.

கடந்த 07.03.2023 அன்று புதுச்சேரியில் நடந்த அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கூட்டத்தில் காவல்துறை அத்துமீறல் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அமைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் சிவில் உரிமைக் கழகப் பொறுப்பாளர் பேராசிரியர் சே.கோச்சடை, அரசு கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் ப.சிவக்குமார், மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவர் பி.வி.இரமேஷ், பழங்குடி மக்கள் விடுதலை இயக்கச் செயலாளர் மா.ஏகாம்பரம் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு நாளை (26.03.2023) பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மக்களை நேரில் சந்தித்து விசாரிக்கிறது. மேலும், சிறையில் இருக்கும் பழங்குடி இருளர் 5 பேர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோரையும் சந்தித்து விசாரிக்க உள்ளது.

பின்னர், விரிவான உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்படும். அதனைப் புதுச்சேரி, தமிழக அரசுகளுக்கும், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் உரிய சட்ட நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*