11ஆம் வகுப்புச் செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மறுதேர்வு வைக்காததால் மாணவர்களுக்குப் பாதிப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.03.2023) விடுத்துள்ள அறிக்கை:

தற்போது 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதாவது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்களுக்கு மறுதேர்வு வைக்காததால் மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்விற்கான செய்முறைத் தேர்வுகள் 01.03.2023 முதல் 09.03.2023 வரை நடத்துமாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவுறித்தியது. இதனைப் பின்பற்றி புதுச்சேரியில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்களுக்கு அரியர் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கல்வித்துறை அலட்சியத்தால் மாணவர்களுக்கு அரியர் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.

ஆனால், கடந்த 16.03.2023 அன்று கல்வித்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 11ஆம் வகுப்பு அரியர் செய்முறைத் தேர்வு நடத்தியது போலவும், அதில் ஏற்கனவே தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்கள் அனைவரும் வரவில்லை (absent) என்று குறிப்பிட்டு செய்முறைத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர் (Practical Chief Superintendent) மற்றும் உள் ஆய்வாளர் (Internal Examiner) ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

இதனால் தற்போது நடக்கும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றாலும் 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவர். இதனால் 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு எழுதாத அல்லது வராத ஏறக்குறைய 344 மாணவர்கள் உயர் படிப்புக்குச் செல்ல முடியாமல் ஓராண்டு காலம் படிப்பு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறை இணை இயக்குநரின் அலட்சியத்தாலும், நிர்வாக தவறினாலும் இப்போது ஏறக்குறைய 344 மாணவர்களின் எதிர்க்காலம் கேள்விக்குரியாகி உள்ளது. மேலும், செய்த தவறை மூடி மறைத்து மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது தவறுக்கு மேல் தவறு செய்வதாகும்.

எனவே, புதுச்சேரி அரசு, கல்வித்துறை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆகியவை 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத அல்லது வராத மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்திட நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் உயர் படிப்புக்கு வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறை செயலர், கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*