பாரதியார் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி பொறுப்பு முதல்வர், 8 பேராசிரியர்கள் நியமனம்: நடவடிக்கை எடுக்காத கலைப் பண்பாட்டுத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.04.2023) விடுத்துள்ள அறிக்கை:

பாரதியார் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு முதல்வர், 8 உதவிப் பேராசிரியர்களைப் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்காத கலைப் பண்பாட்டுத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாரதியார் பல்கலைக்கூடத்தில் பொறுப்பு முதல்வராக பி.வி.போஸ் என்பவர் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி., விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டார். இவருக்கு இப்பதவி வகிக்க எவ்வித தகுதியும் இல்லை. இவர் பதவிக்கு வந்த நாள் முதல் சட்டவிரோத நடவடிக்கைளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அண்மையில் பல்கலைக்கூடத்தின் பேராசிரியர்கள், ஊழியர்களின் சம்பளப் பணம் ரூ.5 இலட்சத்தை விதிகளை மீறி எடுத்து முறைகேடு செய்துள்ளார். இவருக்குப் பணத்தை எடுத்துக் கையாளும் அதிகாரம் (Drawing officer) ரூ.9,999/- மட்டுமே வழங்கப்பட்டது. அதற்கு மேல் பணம் எடுக்கும் அதிகாரம் கலைப் பண்பாட்டுத்துறைச் செயலருக்கு மட்டுமே உள்ளது.

மேலும், ரூ.5 இலட்சம் பணம் முதுகலைப் பட்டப் படிப்பு தொடங்க புதுவைப் பல்கலைக்கழகத்திற்குக் கட்டியதாக கூறி வருகிறார். ஆனால், பல்கலைக்கழகத்தில் இருந்து தகவல் அறியும் சட்டத்தில் பெறப்பட்ட தகவலில் முதுகலைப் பட்டப் படிப்புக்குப் பணம் கட்டியதாக கூறப்படவில்லை. எனவே, இப்பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுகிறது. இது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.

பல்கலைக்கூடத்திற்கு 8 உதவிப் பேராசிரியர்கள் விதிகளை மீறி தகுதி இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், நியமனம் செய்யும் போது பி.எச்.டி., பட்டம் முடிக்காதவர், ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் அரசுப் பணியில் இருந்து சம்பளம் வாங்கியவர் என தகுதி இல்லாதவர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட்டனர். அதோடு இதற்கான தேர்வுக் குழுவும் முறையாக அமைக்கப்படவில்லை.

இவர்கள் அனைவரும் தற்காலிகமாக 5 மாதத்திற்கு மட்டுமே நியமிக்கப்பட்டு, பணியிடை முறிவு (Break-in-service) அளிக்கப்பட்டு மீண்டும் பணியில் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அரசுக் கோப்பில் பணியிடை முறிவு அளித்தும், இவர்கள் தொடர்ந்து பணியாற்ற பொறுப்பு முதல்வர் அனுமதித்துள்ளார். இது அப்பட்டமான விதி மீறலாகும்.

தற்போது இவர்களின் பணி நீட்டிப்புக் கோப்பு துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஒப்புதலுக்காக உள்ளது. தற்போது மாணவர்களுக்கு விடுமுறைக் காலம் என்பதால் இவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கத் தேவையில்லை. மேலும், பணி நீட்டிப்பு செய்து சம்பளம் வழங்கித் தேவையில்லாமல் அரசு நிதியை வீணடிக்க கூடாது. எனவே, துணைநிலை ஆளுநர் இவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது.

இதுகுறித்து ஆதாரங்களுடன் அரசுக்கும், கலைப் பண்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார்கள் அனுப்பி உள்ளோம். ஆனால், இதுவரையில் பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் மற்றும் 8 உதவிப் பேராசிரியர்களைப் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, விரைவில் ஒத்தக் கருத்துடைய கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் செயல்படாத கலைப் பண்பாட்டுத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*