சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என முதலமைச்சர் உறுதி: போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது!

ஜுன் 1 கல்வித்துறை முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.05.2023) விடுத்துள்ள அறிக்கை:

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என முதல்வர் ந.ரங்கசாமி உறுதி அளித்ததால் சமூக நல அமைப்புகள் சார்பில் நடத்த இருந்த கல்வித்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் வழக்கறிஞர் பரகத்துல்லா, புதுச்சேரி தன்னுரிமை இயக்கத் தலைவர் தூ.சடகோபன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், செயலாளர் இராஜா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பலுலுல்லா, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் சத்தியவேல், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத் தலைவர் இரா.சுகுமாரன், சிந்தனையாளர் பேரவைச் செயலாளர் கலியபெருமாள், சுற்றுச்சூழல் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்குளின் பிரான்சுவா, இந்திய மக்கள் சக்தி இயக்கத் தலைவர் அரிகிருஷ்ணன், காந்தி மக்கள் இயக்கத்தின் நிறுவுநர் வேணு.ஞானமூர்த்தி ஆகியோர் நேற்று (30.05.2023) முதல்வர் ந.ரங்கசாமி, கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அம்மனுவில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்க வேண்டும். அவசரகதியில் இந்தாண்டு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைச் செயல்படுத்த கூடாது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தினோம். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என சமூக நல அமைப்புகளின் தலைவர்களிடம் உறுதியளித்தார். மேலும், பிற கோரிக்கைகள் குறித்தும் பரிசீலிக்கிறோம் என்று கூறினார்.

சமூக நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் ந.ரங்கசாமி மற்றும் கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 1 அன்று நடத்த இருந்த கல்வித்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. முதலமைச்சர் உறுதி அளித்தபடி சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்கி உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

அவசரகதியில் இந்தாண்டு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைச் செயல்படுத்த கூடாது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜுன் 4 அன்று ‘கல்வி உரிமை மாநாடு’ நடத்த உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*