காரைக்காலில் 20 இலட்சம் ரூபாய் திருட்டு: வழக்குப் பதிவு செய்யாத டி.ஆர்.பட்டினம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.05.2024) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காரைக்காலில் 20 இலட்சம் ரூபாய் பணம் திருடு போன சம்பவம் நடந்து 9 மாதங்கள் மேலாகியும் வழக்குப் பதிவு செய்யாத டி.ஆர்.பட்டினம் காவல்நிலையப் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசையும், காவல்துறையையும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 25.06.2023 அன்று காரைக்கால் சிங்காரவேலு பிள்ளை நகரைச் சேர்ந்த தொழில்முனைவர் புவனேஸ்வரி என்பவர் வெளியூர் செல்வதால் தனது நண்பர் ஹசனுல் பாரி என்பரிடம் ஒரு நீல நிற சூட்கேசில் ரூபாய் 20 இலட்சம் பணம், 25 சவரன் தங்க நகைகள், பத்திரங்களை வைத்து தான் ஊர் திரும்பும் வரையில் பத்திரமாக வைத்திருக்கும்படி கூறி ஒப்படைத்துள்ளார்.

கடந்த 20.08.2023 அன்று புவனேஸ்வரி ஊர் திரும்பியவுடன் ஹசனுல் பாரி அந்த சூட்கேசைக் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார். அதைத் திறந்துப் பார்த்த போது ரூ. 20 இலட்சம் பணம் தவிர 25 சவரன் தங்க நகைகள், பத்திரங்கள் மட்டும் இருந்துள்ளன. ரூபாய் 20 இலட்சம் பணம் எங்கே என்று கேட்டதற்கு அவர் நீங்கள் கொடுத்தபடியே கொண்டு வந்து ஒப்படைத்துள்ளேன் என்று பதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து புவனேஸ்வரி உடனடியாக டி.ஆர்.பட்டினம் காவல்நிலையத்தில் எழுத்து மூலம் புகார் கொடுத்து திருடிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டும், பணத்தைப் பறிமுதல் செய்யவும் கோரி இருந்தார். ஆனால், டி.ஆர்.பட்டினம் காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. கடந்த 13.02.2024 அன்று காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். அதன்பின்னரும் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து கடந்த 18.03.2024 அன்று ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP), காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர், டி.ஆர்.பட்டினம் காவல்நிலையப் பொறுப்பு அதிகாரி ஆகியோருக்கு ஒரு மனு அனுப்பி இருந்தோம். அம்மனுவில் ரூபாய் 20 இலட்சம் பணம் திருடு போனது குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்யவேண்டும். குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும். திருடு போன ரூபாய் 20 இலட்சத்தைக் கைப்பற்ற வேண்டுமென கோரி இருந்தோம். ஆனால், இதுநாள் வரையில் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. போலீசார் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, புதுச்சேரி அரசும், காவல்துறைத் தலைமையும் இதில் தலையிட்டு புவனேஸ்வரி அளித்த புகார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்ய வேண்டும். திருடு போன ரூபாய் 20 இலட்சம் பணத்தைக் கைப்பற்ற வேண்டும். மேலும், வழக்குப் பதியாமல் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வரும் டி.ஆர்.பட்டினம் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*