விழுப்புரம் ராஜா போலீஸ் காவலில் சித்தரவதையால் மரணம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

குற்றமிழைத்த தாலுக்கா காவல்நிலைய போலீசார் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்!

நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மறு உடற்கூறாய்வு மருத்துவர் குழு மூலம் செய்ய வேண்டும். வீடியோவில் பதிய வேண்டும்!

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.வி.இரமேஷ், துணைத் தலைவர் கோ.ஆதமூலம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மு.காளிதாஸ், மதிமுக நகரச் செயலாளர் ம.சம்பந்தம், தமிழநாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன், மாவட்ட செயலாளர் ஜரிசியாலம் ராவுத்தர், கைவினை முன்னேற்றக் கட்சி மாவட்ட தலைவர் ச.முருகேசன், மனித உரிமை ஆர்வலர் கு.கலைப்புலி சங்கர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 29.04.2024 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு அளித்தனர். இம்மனு தமிழக முதலமைச்சர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐயா, வணக்கம்.

பொருள்: விழுப்புரம், ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த ராஜா (வயது 43) என்பவர் போலீஸ் காவலில் சித்தரவதையால் மரணம் அடைந்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – காவல் மரணம் என்பதால் நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – மருத்துவர் குழு மூலம் மறு உடற்கூறாய்வு செய்து, முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் – பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம், பாதுகாப்பு வழங்கக் கோருதல் – தொடர்பாக.

பார்வை: குற்ற எண்.232/2024, பிரிவு 174 குவிநச, விழுப்புரம் மேற்குக் காவல்நிலையம், விழுப்புரம்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகளின் சார்பில் இம்மனுவைத் தங்களின் மேலான பார்வைக்கும் உரிய நடவடிக்கைக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், ஜி.ஆர்.பி. தெரு, எண்.23/7-ல் குடியிருந்த ராஜா (வயது 43) என்பவர் திருப்பாச்சாவடியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை கேண்டீனில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்குத் துணையாக அவரது மகன் குபேந்திரன் உடன் வேலைப் பார்த்து வந்தான். அவருக்கு மனைவி அஞ்சு (வயது 36), மகன்கள் குபேந்திரன் (வயது 19), சஞ்சய் காந்தி (வயது 17), மகள் மகாலட்சுமி (வயது 16) ஆகியோர் உள்ளனர்.

கடந்த 09.04.2024 அன்று காலை வீட்டிலிருந்து டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வேலைக்குச் சென்ற ராஜா எப்போதும் போல் இரவு வீடு திரும்பவில்லை. ராஜா தன் மகனிடம் ரூபாய் 450 கொடுத்து, அம்மாவிடம் கொடுக்க சொல்லியதாக மகன் கொடுத்துள்ளார்.

மறுநாள் (10.04.2024) தன் கணவர் வீடு திரும்பவில்லை என்பது அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அஞ்சு விசாரித்த போது விழுப்புரம் தாலுக்கா காவல்நிலைய போலீசார் பிடித்துச் சென்றதாக தெரிய வந்துள்ளது. காலையில் மேற்சொன்ன அஞ்சு, அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி ஆகியோர் தாலுக்கா காவல்நிலையம் சென்று விசாரித்த போது, அங்கிருந்த போலீசார் “உன் கணவர் வீட்டுக்கு வந்துவிடுவார், காவல் நிலையத்தை விட்டு போய்விடுங்கள், இல்லையென்றால் உங்கள் மீது பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவேன்” என்று மிரட்டியுள்ளனர். பின்னர் இருவரும் வீடு திரும்பிவிட்டனர்.

பின்னர் கடந்த 10.04.2024 மதியம் சுமார் 12.00 மணியளவில் மேற்சொன்ன ராஜாவை ஒருவர் அழைத்து வந்து, அவரது வீட்டில் விட்டுள்ளார். அப்போது அவரது மனைவி அஞ்சு பார்த்த போது மிகவும் சோர்வடைந்து காணப்பட்டதோடு, அவர் “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னை விசாரிக்க வேண்டுமென்று சொல்லி தாலுக்கா காவல்நிலைய போலீசார் பிடித்துச் சென்று கொடூரமாக தாக்கினார்கள்” என்று கூறியுள்ளார். அவரது உடம்பில் முகம், முதுகு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் வீங்கி ரத்தக் காயம் இருந்துள்ளது. இவ்வாறு கூறிய போதே ராஜா மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை விழுப்புரம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர். அவரைப் பரிசோதித்த பணியில் இருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் (Brought dead) என்று கூறியுள்ளனர்.

பின்னர், விழுப்புரம் மேற்குக் காவல்நிலைய போலீசார் சந்தேக மரணம் (Section 174 Cr.P.C.) எனப் பார்வையில் கண்ட முதல் தகவல் அறிக்கைப் பதிந்துள்ளனர். தனது கணவர் தாலுக்கா காவல்நிலைய போலீசார் அடித்ததால்தான் இறந்துபோனார் என்று மருத்துவர்களிடம் அவரது மனைவி கூறியுள்ளார். உடனே மருத்துவர்கள் தாலுக்கா காவல்நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே மருத்துவமனைக்கு சுமார் 10 போலீசார், இறந்துபோன ராஜாவின் உடலைத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது மாலை சுமார் 4.30 மணி இருக்கும். மேற்சொன்ன மருத்துவமனையில் மருத்துவர்கள் ராஜாவின் உடலை சுமார் 20 நிமிடங்களில் உடற்கூறாய்வு செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.போலீசார் குடும்பத்தினரிடம் உடலை எரித்துவிடுங்கள் என்று பலமுறை அழுத்தம் கொடுத்துள்ளனர்.

கடந்த 11.04.2024 அன்று உடலை விழுப்புரம் அண்ணா நகர் இடுகாட்டில் புதைத்துள்ளனர். அன்றைய தினம் மாலை அவரது வீட்டிற்கு வந்த போலீசார் அவரது மனைவியிடம் “ஏன் உடலைப் புதைத்தீர்கள்” என்று கேட்டுள்ளனர். போலீசார் உடலை எரிக்க வைக்க வேண்டும் என்பதில் குறியாகவே இருந்துள்ளனர்.

இதன்மூலம், கடந்த 09.04.2024 அன்று இரவே தாலுக்கா காவல்நிலைய போலீசார் மேற்சொன்ன ராஜாவை பிடித்துச் சென்று, காவலில் வைத்து அடித்து உதைத்துத் துன்புறுத்தியுள்ளது தெரிகிறது. ராஜாவின் உடம்பில் முகம், முதுகு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் வீங்கி ரத்தக் காயம் இருந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், போலீசார் ராஜாவை கடந்த 10.04.2024 அன்று காலைதான் பிடித்துச் சென்றதாகக் கூறுகின்றனர். மேலும், மேற்சொன்ன ராஜா மீது தாலுக்கா காவல்நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்து, அவரை காலை சுமார் 11.00 மணிக்கு எல்லாம் பிணையில் விடுவித்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

ஆனால், விழுப்புரம் மேற்குக் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பார்வையில் கண்ட முதல் தகவல் அறிக்கையில் (நகல் இணைக்கப்பட்டுள்ளது) “10.04.2024 அன்று காலை 8.30 மணிக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், நண்பர்கள் உதவியுடன் விழுப்புரம் மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்து வீடு திரும்பியதாகவும், பின்னர் அவர் நெஞ்சில் வலி இருப்பதாக கூறியதால் விழுப்புரம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகவும் கூறினர்” என்று ராஜாவின் மனைவி அஞ்சுவிடம் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் புகார் பெற்று வழக்குப் பதிந்துள்ளனர். ஆனால், மேற்சொன்ன புகாரைப் போலீசாரே எழுதி, படித்துக்கூட காண்பிக்காமல் ராஜாவின் மனைவி அஞ்சுவிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

விழுப்புரம் தாலுக்கா காவல்நிலைய போலீசார் கடந்த 10.04.2024 காலை சுமார் 9.30 மணிக்கு பிடித்து வந்து, விசாரித்து வழக்குப் பதிவு செய்து, பிணையில் அனுப்பியதாக கூறுவதற்கு முற்றிலும் முரணாக மேற்குக் காவல்நிலையத்தில் பதியப்பட்ட பார்வையில் கண்ட முதல் தகவல் அறிக்கைத் தகவல்கள் உள்ளன. போலீசார் காவலில் நடந்த சித்திரவதையை மூடி மறைக்கவே ஆரம்பம் முதலே இவ்வாறு செயல்பட்டுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. எனவேதான், காவல்நிலைய மரணம் என்று வழக்குப் பதிவு செய்து (Section 176(1(A) Cr.P.C.) நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடாமல், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர் (Section 174 Cr.P.C.).

எனவே, தாங்கள் இதில் தலையிட்டு, கீழக்காணும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

1) விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய காவலில் ராஜா சித்திரவதைச் செய்ததால் நடந்த காவல் மரண வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றமிழைத்த தாலுக்கா காவல்நிலைய போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

2) ராஜா போலீஸ் காவலில் இறந்து போனதால், இச்சம்பவம் குறித்து பதியப்பட்ட பார்வையில் கண்ட முதல் தகவல் அறிக்கையின் சட்டப் பிரிவைக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176(1)(A)-இன்படி மாற்றி, நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

3) ராஜாவின் உடல் கூறாய்வில் சந்தேகம் இருப்பதால், அவரது உடலைத் தோண்டி எடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டல்படி மருத்துவர்கள் குழு (Panel of Doctors) மூலம் மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும். உடற்கூறாய்வு முழுவதையும் விடீயோவில் பதிவு செய்ய வேண்டும்.

4) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*