போலீஸ் சித்திரவதையால் இறந்த விழுப்புரம் ராஜா உடலைத் திரும்பத் தர மறுப்பு: ஆட்சியர் மீது சட்ட நடவடிக்கை!

செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பு!!

கடந்த ஏப்ரல் 10 அன்று, விழுப்புரம் டி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரை தாலுக்கா காவல்நிலையப் போலீசார் பிடித்துச் சென்று சித்திரவதைச் செய்ததால் மரணமடைந்தார். போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிந்து 20 – 30 நிமிடத்தில் உடற்கூறாய்வு முடிக்கப்பட்டது. மேலும், உடலை எரிக்கும்படி போலீசார் மிரட்டினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற்கூறாய்வு நடத்த வேண்டி இறந்துபோன ராஜாவின் மனைவி அஞ்சு வழக்குத் தொடர்ந்தார். கடந்த 17.05.2024 அன்று, நீதிநாயகம் திரு. ஆர். சக்திவேல் அவர்கள் ‘8 நாட்களுக்குள் மறு உடற்கூறாய்வு நடத்த வேண்டும், விடியோவில் பதிவு செய்ய வேண்டும், உடற்கூறாய்வு அறிக்கை, வீடியோ பதிவுகளை உடனே அஞ்சுவிடம் தர வேண்டும், காவல்நிலைய சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

கடந்த 22.05.2024 அன்று, ராஜாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சதாசிவம், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர் ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய தடய அறிவியல் வல்லுநர் குழுவினர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 மணி நேரம் மறு உடற்கூறாய்வு செய்தனர். பின்னர், மறு அடக்கம் செய்ய ராஜாவின் உடலைத் தராமல் பிணவறையில் வைக்கும்படி ஆட்சியர் கூறியுள்ளார். தற்போது உடல் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் உள்ளது.

நேற்று (23.05.2024) மதியம் 12.30 மணிக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரமா தேவி 26 பக்கங்கள் கொண்ட உடற்கூறாய்வு அறிக்கை, வீடியோ பதிவுகளை அஞ்சுவிடம் ஒப்படைத்தார். தற்போது, இவை மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் வசம் ஒப்படைக்கப்பட்டு, தடய அறிவியல் துறை வல்லுநர்களிடம் கருத்து அறியும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 4.00 மணியளவில், ஆட்சியர் கடிதம் ஒன்றைப் பாதிக்கப்பட்ட அஞ்சுவிடம் கிராம நிர்வாக அலுவலர் மூலம் அளித்துள்ளார். அதில், ‘சந்தோஷ் எதிர் மதுரை மாவட்ட ஆட்சியர்’ என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினைக் குறிப்பிட்டு ‘இரண்டாவது உற்கூறாய்வு முடிந்த நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உத்தேசித்துள்ளீகளா என்பது குறித்து எழுதுத் தர வேண்டும்’ என்று கேட்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அதுவரையில் உடலைத் தராமல் பிணவறையில் வைக்க முடிவு செய்துள்ளார்.

ஆட்சியரின் இந்தச் செயல் அப்பட்டமாக பாதிக்கப்பட்ட அஞ்சுவின் சட்ட உரிமையை மறுப்பத்தோடு, உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். இதுகுறித்து அஞ்சு மாவட்ட ஆட்சியருக்கு 5 பக்கங்கள் கொண்ட பதில் கடிதம் அளித்துள்ளார். அதில், அவ்வாறு எழுதிக் கொடுக்கத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (24.05.2024), காலை 11 மணிக்கு, விழுப்புரம் சாந்தி நிலையத்தில் செய்தியாளர் கூட்டம் நடந்தது. மக்கள் கண்காணிப்பகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐ.ஆசிர்வாதம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவர் பி.வி.இரமேஷ், கலப்புத் திருமணத் தம்பதிகள் சங்கத் தலைவர் ஆ.பாலமுருகன் ஆகியோர் பேசினர். பாதிக்கப்பட்ட அஞ்சு உடனிருந்தார்.

மறு கூறாய்வு நடந்து முடிந்த ராஜாவின் உடனே குடும்பத்தினரிடம் அளிக்க வேண்டும். இல்லையேல், உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து, அதன் மூலம் உடலைப் பெற்று அடக்கம் செய்வோம். விழுப்புரம் ஆட்சியர் டாக்டர் சி.பழனி மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என அறிவிக்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*