மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.06.2024) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கிளைச் சிறையில் ஆயுள் தண்டனைச் சிறைவாசி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி அருகேயுள்ள பொறையூரை சேர்ந்தவர் பிரதிஷ் (வயது 23). கடந்த 2021ஆம் ஆண்டு சந்தைப் புதுக்குப்பத்தைச் சேர்ந்த ராஜஸ்ரீ என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். ராஜஸ்ரீ போக்கில் மாற்றம் ஏற்பட்டவுடன் பிரதிஷ் அப்பெண்ணைக் கொலை செய்துவிட்டார்.
இதுதொடர்பாக பிரதீஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருக்குப் புதுச்சேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அவர் தண்டனைச் சிறைவாசியாகக் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
காலாப்பட்டு சிறையில் பிரதிஷ்க்கும் உசேன் என்ற ஆயுள் தண்டனைச் சிறைவாசிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது உசேன் பிரதிஷை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதன்பின்னர், பிரதிஷ் காரைக்கால் கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காரைக்கால் கிளைச் சிறையில் சிறைவாசி ஆறுமுகம் என்பவருக்கும் பிரதிஷ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிரதிஷ் ஆறுமுகத்தைக் கத்தியால் வெட்டியுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். இதுகுறித்து பிரதிஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதிஷ் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 08.06.2024 அன்று இரவு பிரதிஷ் தனது கைலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சிறைவாசி பிரதிஷ் இறப்புக்குச் சிறைத்துறையும், அரசும்தான் முழுப் பொறுப்பு (Vicariously liable) ஆகும்.
காரைக்கால் நகர காவல்நிலையப் போலீசார் இவ்வழக்கைக் காவல் மரணம் எனப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரைக்கால் போலீசார் இச்சம்பவத்திற்கு வேறு காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
மேலும், பிரதிஷ் தற்கொலைச் சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிறைவாசி இறப்புக்குச் சிறைத்துறையும் அரசும்தான் முழுப் பொறுப்பு என்பதால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பி உள்ளோம்.
Leave a Reply