புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.06.2024) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி மின்துறையின் வரவு செலவுக் கணக்குகள் கோவாவில் உள்ள மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி 2023-2024 நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்துறை விண்ணப்பித்தது.

இந்நிலையில் மின்துறை விண்ணப்பத்தில் திருத்திய கட்டணத்துக்கு இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி மின்துறை அறிவித்துள்ளது.

மின்துறை வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்த இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கவில்லை. அதனால் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

மின் கட்டண உயர்வுக் குறித்து இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்தும் கருத்துக் கணிப்புக் கூட்டத்தில் பொதுமக்கள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுபற்றி ஆணையம் கவலைப்படாமல் மின் கட்டணத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

பொதுமக்கள், ஊழியர்களின் நலனுக்கு எதிராக 25 ஆயிரம் கோடி சொத்துடைய மின்துறையை தனியாரிடம் விற்கும் நோக்கிலேயே அரசு செயல்படுகிறது. இதற்காகவே மின் மீட்டர் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து பலகட்டப் போராட்டங்கள் நடத்தின. ஆனால், அரசு மின்துறையை தனியாருக்குத் தாரை வார்ப்பதிலும், மின் மீட்டர் கொண்டு வருவதிலும் குறியாகவே உள்ளது.

கொரோனா காலம் முதல் மக்களிடையே பணப் புழக்கம் பெருமளவில் குறைந்துள்ளது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் நிதிச் சுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டவே சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த மின் கட்டண உயர்வு மக்களை மேலும் வாட்டி வதைக்கும்.

மேலும், பல கோடி ரூபாய் மின் கட்டணப் பாக்கி வைத்துள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களிடம் இருந்து அத்தொகையை வசூலிக்க உறுதியான நடவடிக்கை எடுத்தாலே மின்துறைக் காப்பாற்றப்படும்.

எனவே, விடுகளுக்கான மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.      மேலும், சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.நேரு (எ) குப்புசாமி அவர்கள் தலைமையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரி, காரைக்காலில் நடைபெறும் போராட்டத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ பங்கேற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*