அப்சல் வழக்கு: மரண தண்டனையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 15-11-2006 அன்று காலை 10 மணியளவில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில், மரண தண்டனை ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன் தொடக்கவுரை ஆற்றினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, செம்படுகை நன்னீரகம் அமைப்பின் தலைவர் கு.இராம்மூர்த்தி, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கச் செயலாளர் ம.சந்திரகுமார், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.ஜோதிபிரகாசம், அ.மஞ்சினி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மரண தண்டனை ஒழிப்பை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டன. நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளும் ஊடகங்களும் உரிய முக்கியத்துவம் கொடுத்து ஆர்ப்பாட்ட செய்தியை வெளிப்படுத்தியுள்ளன.

• பாராளுமன்ற தாக்குதல் வழக்கில், முறையற்ற விசாரணையின் முடிவில், காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்சல் குருவிற்கு வழங்கப்பட்ள்ள மரண தண்டனையைக் குறைக்க, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• அமெரிக்க வல்லரசின் “பொம்மை நீதிமன்றம்“ ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு வழங்கியுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
• இந்திய சிறைகளில் மரண தண்டனையை எதிர்நோக்கி வாடும் 300-க்கும் மேற்பட்டவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• உலக அளவில் இதுவரையில் 128 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. இதனைப் பின்பற்றி இந்திய அரசும் மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டுமெனப் போராட்டம் நடத்தி வரும் இந்துத்துவ அமைப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டம் விளங்கியது. காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15-இல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தற்செயலான ஒன்று.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*