ராஜகிரியில் மின்வெட்டை எதிர்த்துச் சாலை மறியல் – தடியடி பொய் வழக்குகள் – உண்மை அறியும் குழு அறிக்கை!

தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் தஞ்சையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ராஜகிரி கிராமம். இச்சாலையோர கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோனார் (சுமார் 85 சதவீதம்) முஸ்லிம்கள். சுமார் 10 சதவீதம் தலித்கள். கடைதெருவிலுள்ள கடைகளிலும் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையவை.

இன்று தமிழகம் முழுவதிலும் கடும் மின்வெட்டு உள்ளதை அறிவோம். நகரங்களில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு சுமார் இரண்டு முதல் மூன்று மணிநேரமும், அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களும் செயல்படுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் மேலும் அதிக அளவில் மின் வெட்டுக்கள் உள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் எந்த நேரத்தில்; மின் வெட்டு மேற்கொள்ளப்படும் எனத் தெரியாத அளவிற்கு நிலைமைகள் உள்ளன.

ராஜகிரி கிராமத்தில் சென்ற மாத இறுதி வாரத்தில் நாள்தோறும் கிட்டத்தட்ட 10மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பகல் முழுவதும், பல நேரங்களில், இரவுகளிங்கூட மின்வெட்டு இருந்துள்ளது. அருகிலுள்ள வங்காரம்பேட்டை முதலான கிராமங்களில் மின்சாரம் இருந்தபோதிலும்கூட ராஜகிரியில் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்ட நிலை அங்குள்ள மக்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது பலமுறை அவர்கள் மின்வாரிய அதிகாரிகளை உள்ளுர் அளவிலும் வட்ட, மாவட்ட அளவிலும் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசிய போது யாரும் பொறுப்பாக பதில் சொல்லவில்லை. கிராமப்புறம் என்றால் அப்படித்தான் இருக்கும் “மேலதிகாரியிடம் வேண்டுமானால் சொல்லிப்பாருங்கள்” முதலான பதில்களையே தஞ்சையிலுள்ள உயர் அதிகாரி (ளுஊநு)வரை கூறியுள்ளார்கள். அருகிலுள்ள மற்ற கிராமங்களைக் காட்டிலும் தமது கிராமம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என ராஜகிரி மக்கள் கருதுவது குறித்து அவர்கள் யாரும் விளக்கம் அளிக்கவோ, அல்லது அது குறித்து கரிசனம் காட்டவோ, குறைகளை களையவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் சென்ற ஜுன் 2, புதன்கிழமை அன்று ராஜகிரி மக்கள் தன்னெழுச்சியாகச் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரியம், வருவாய்துறை, மற்றும் காவல்துறையினர் எந்த உறுதிமொழியும் அளிக்காமல் தடியடி மேற்கொண்டு கூட்டத்தைக் கலைத்துள்ளதோடு கிராமத்தில் பலர் மீது பொய் வழக்குகளையும் போட்டுள்ளனர்.

இது இக்கிராமம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, மனித உரிமை அமைப்புகளை அம்மக்கள் தொடர்பு கொண்டனர். உண்மைகளை அறிந்து வெளிப்படுத்தும் நோக்கில் கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

பேரா.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR).

கோ.சுகுமாரன், மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

யு.சையத் அலி, தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), நாகரகோயில்.

மு.சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.

சரவணன், வழக்குரைஞர், சோழபுரம், குடந்தை.

யு.சையது அப்துல் காதர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை.

சு.காளிதாஸ் மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR),புதுச்சேரி.

இக்குழுவினர் நேற்றும் (ஜூன் 14), இன்றும் (ஜுன் 15) பாதிக்கப்பட்ட மக்கள், ஊர் தலைவர்கள், ஜமாத் தலைவர் யூசுப் அலி, சட்டமன்ற உறுப்பினர் துரைக்கண்ணு, வருவாய் கோட்ட அலுவலர் எஸ்.அசோக்குமார், பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அ.அண்ணாதுரை ஆகியோரை சந்தித்து பேசினர்.

இக்குழுவினர் தமது ஆய்வில் கண்டறிந்த உண்மைகளாவன.

ராஜகிரி கிராமத்தி;ல் சென்ற மாத இறுதி வாரத்தில் தினம்தோறும் சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு இருந்துள்ளதும், இது குறித்த புகார்கள் அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளதும் உண்மை. சம்பவ நாளுக்கு முதல் நாள் (ஜுன் 1) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இல்லை. மாலை 6 மணி அளவிலும் சிறிது நேரம் மின்சாரம் இல்லை. மீண்டும் இரவு சுமார் 10 மணி முதல் 11.30 வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவ நாளன்று காலை 5.45 மணிக்கே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளித் தொடங்கும் நாளில் இப்படியானதை ஒட்டி கசப்புற்ற மக்கள் ஆங்காங்கு கூடி நின்று பேசியுள்ளனர். தஞ்சையில் உள்ள உயர் மின்வாரிய அதிகாரிக்கு (SE) மின்வாரிய அதிகாரிக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, “ரூரல் – ன்னா அப்படித்தான் இருக்கும். வேண்டுமானால் இன்னும் பெரிய அதிகாரிகளிடம் சொல்லிக்கொள்ளுங்கள்” என அலட்சியமாக சொல்லி எந்த பெரிய அதிகாரியுடன் பேசுவது என்றெல்லாம் சொல்லாமல் தொடர்பை முறித்துக் கொண்டுள்ளார்.

இதனால் கோபமுற்ற மக்கள் ஆங்காங்கு கூடி பேசியுள்ளனர். முச்சந்திகளில் திரண்டுள்ளனர். சாலை மறியல் செய்யலாம் என்கிற கருத்து தன்னிச்சையாக உருவாகியுள்ளது. சலசலப்பை அறிந்த பாபநாசம் காவல்நிலைய ஏட்டு அங்கு வந்து “சாலை மறியல் செய்ய அனுமதியில்லை, கலையுங்கள்” என்றுள்ளார். எனினும் மக்கள் காலை சுமார் 10.30 மணியளவில் சாலையில் கூடி போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். சுமார் 1000 ஆண்களும், 300 பெண்களும் இருந்துள்ளனர். உயர் அதிகாரி வந்து தம்முடன் பேசி எழுத்துமூலம் வாக்குறுதி அளிக்கவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

இதனால் தஞ்சை – கும்பகோணம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த அரை மணிநேரத்தில் அய்யம்பேட்டை –கணபதி அக்ரஹாரம் – கபிஸ்தலம் – பாநாசம் என்கிற வழியில் பஸ் போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தாசில்தாரும் கிராம நிர்வாக அதிகாரி முருகையனும் அதன் பின்னர் கோட்டாட்சியர் எஸ்.அசோக்குமாரும் வந்து பேசிய பின்னும் எந்த முடிவும் ஏற்படவில்லை. லைலா புயலை ஒட்டி மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எழுத்து மூலம் எந்த உறுதியும் தர இயலாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அருகில் உள்ள வங்காரம்பேட்டை முதலான ஊர்களில் மின்சாரம் உள்ளபோது எங்களுக்கு மட்டும் ஏன் இல்லை என்று மக்கள் கேட்டுள்ளனர். அதிகாரிகள் எந்த முடிவும் சொல்லாமல் அருகில் உள்ள காசிமியா மேல்நிலைப்பள்ளியில் சென்று அமர்ந்துள்ளனர்.

சாலை மறியல் தொடங்கி மூன்று மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் சுமுகமாக பேசாததால் மக்கள் சேர்வுற்றுள்ளனர். சுமார் 2 மணியளவி;ல் சில அம்பாசிடர் கார்களில் கும்பகோணத்திலிந்து போலீஸார் வந்து இறங்கியுள்ளனர். பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அ.அண்ணாதுரை தலைமையில் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. சற்று நேரத்திற்கு பின் தஞ்சையிலிருந்து காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் செந்தில் வேலன் வந்துள்ளார். மாலை 3½ மணிக்கெல்லாம் போக்குவரத்து சீராகியுள்ளது.

தடியடி அறிந்து ராஜகிரி ஜமாத் தலைவரும் தி.மு.க. ஒன்றிய செயற்குழு உறுப்பினருமான யூசுப்அலி, அருகில் உள்ள பண்டாரவாடை ஜமாத் தலைவர் இப்ரஹிம், ‘பாப்புலர் ஃப்ரண்ட்’ என்கிற அமைப்பின் மாவட்ட தலைவர் அய்யம்பேட்டை அப்துல் இஷாக் முதலானோர் சம்பவ இடத்திற்கு விரைந்து கண்காணிப்பாளரிடம்; பேச முயன்றபோது அவர்களிடம் எஸ்.பி. சுமூகமாக பேச மறுத்துள்ளார். கை குலுக்க வந்தவர்களிடம் கை குலுக்கவும் அவர் தயாராக இல்லை. பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.துரைக்கண்ணு (அ.இ.அ.தி.மு.க) அவர்கள் பேச முயன்றபோது அவரும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளார்.

சலிப்புற்ற மக்கள் சாலைக்கு இடையூறு இல்லாமல் அமைதியாக உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம் என முடிவுக்கு வந்துள்ளனர். “உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லை கலையுங்கள”; என காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். அதே நேரத்தில் கண்காணிப்பாளர் போலீஸ் படையுடன் ஊருக்குள் நுழையவே மக்கள் கலைந்துள்ளனர். இதற்கிடையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் உள்ளுர் செயலர் ஜக்கரியா, தி.மு.க வைச் சேர்ந்த ரிக்ஷா ஷாஜகான் ஆகியோரை ரவுடி என்றெல்லாம் கடுமையாக பேசி அவமானப்படுத்தியுள்ளார். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் முருகையனிடமிருந்து இரு புகார்களையும் மின்வாரிய இளநிலை பொறியாளர் செந்தில்வேல் என்பவரிடம் ஒரு புகாரைப் பெற்று 26 பேர்கள் மீது பெயர் குறிப்பிட்டும் மற்றும் 250 பேர்கள் மீது பெயர் குறிப்பிடாமலும் புகார் பெறப்பட்டு குற்றப்பிரிவுகள் 147, 294(டி), 188, 341, 342, 353, 506(i), பொதுச் சொத்து அழிப்பு குற்றப்பிரிவு பி.பி.டி.எல் 3(1) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்கில் 26 பேர்கள், 2-வதில் 8 பேர்கள், 3-வதில் 9 பேர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன் எல்லாவற்றிலும் முகமது ஜக்கரியா, அப்துல் இஷாக், முகமது பாரூக் ஆகியோர் முதல் மூன்று எதிரிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருமே பாப்புலர் ஃபிரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள்.

ஜமாத்தினர் அமைச்சர் உபயதுல்லா அவர்களை தொலைபேசியிலும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரிலும் (ஜுன் 4) சந்தித்து முறையிட்டுள்ளனர். மேல்நடவடிக்கை ஏதும் இராது என அவர்கள் சொன்னதாக தெரிகிறது.

சென்ற 11ந்தேதியன்று குடந்தையில் இதைக் கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினர் திட்டமிட்டு குடந்தை மேற்கு காவல்நிலையத்தில் அனுமதி விண்ணப்பம் ஒன்றை 8ந் தேதியன்று அளித்துள்ளனர் ஆய்வாளர் குமரன் அதை ஏற்க மறுத்துள்ளார். பின்னர் விண்ணப்பத்தை பதிவு தபாலில் அமைத்துள்ளனர். 11ந் தேதி மாலை வரை அனுமதி மறுப்புக் கடிதம் ஏதும் வராததால் அன்று மாலை அமைதியாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் குடந்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அங்கு வந்து அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக மிரட்டியுள்ளார். பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் மீது இதற்கென மேலும் ஒரு வழக்கு தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜுன் 3 அன்று இரவு 3 மணியளவில் அய்யம்பேட்டையில் அப்துல் இஷாக் வீட்டிற்கு சென்று அவர் இல்லாத நேரத்தில் பெண்களை காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். மொத்தத்தில் ராஜகிரி பகுதி மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவுகிறது.

இது குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரைக்கண்ணு அவர்கள் மிக்க நடுநிலையுடன் பேசினார். ஒரே ஒரு கல் வேன் ஒன்றின் மீது வீசப்பட்டது தவிர வேறு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக சாலை மறியல் நடைபெற்றது எனவும், அதிகாரிகள் பேச தயாராக இருந்தபோதும் வாக்குறுதி ஏதும் அளிக்காததால் போராட்டம் தொடர்ந்தது எனவும், இப்பகுதியில் உள்ள மின்வெட்டுப்பற்றி தாம் சட்டமன்றத்தில் பேசியுள்ளதையும் குறிப்பிட்டார்.

கோட்டாட்சியர் எஸ்.அசோக்குமார் தடியடி ஏதும் நடக்கவி;ல்லை என்று மறுத்தார். அமைதியாகவும் பொதுச் சொத்திற்கு சேதமி;ல்லாமலும் போராட்டம் நடந்ததை ஏற்றுக் கொண்ட அவர், லைலா புயலால் மின்சார உற்பத்தி குறைந்துள்ள நேரத்தில் மக்கள் அதை புரிந்துக் கொள்ளாமல் பிடிவாதமாக போராட்டம் நடத்தியதை கண்டித்தார். பொது சொத்திற்கு சேதமில்லாத போது ஏன் அந்த பிரிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது எனவும், சம்பவத்தன்று ஊரில் இல்லாதவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்தும் நாங்கள் கேட்டபோது தமக்கு தெரியாது என்றார்.

பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அ.அண்ணாதுரை அவர்களிடம் இது குறித்து கேட்டபோது மக்களுக்;கு கஷ்டம் ஏற்படுத்துவதே பொது சொத்திற்கு சேதம் இழைப்பதுதான் என்றார். பொதுவாக இது போன்ற போராட்டங்களில் 151 பிரிவின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யும் வழக்கம் உள்ள நிலையில் இத்தனை கடுமையான வழக்குகள் ஏன் என்று கேட்டபோது இனி இப்படி அவர்கள் போராடக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்றார். அவரும் தடியடி நடக்கவில்லை என்றார். வீடியோவில் இல்லாதவர்கள் யார் மீதும் நடவடிக்கை இராது மேலதிகாரிகளிடம் பேசுங்கள் என்றார். காவல்துறை கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் இருந்ததால் அவரை இன்று சந்திக்க இயலவில்லை.

பலரிடமும் நாங்கள் பேசியதில் இருந்து ஒரு சிலர் மட்டும் குறிப்பாக பழிவாங்கப்படக்கூடிய சூழல் நிலவுவது புரிந்தது.

எமது பார்வைகளும் கோரிக்கைகளும்

1. மின் உற்பத்தியை போதிய அளவிற்கு அதிகரிக்காமலேயே பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்;கு ஏராளமாக மின்சாரம் அளிப்பது முதலான அரசின் தவறான கொள்கைகளின் விளைவாக தமிழகம் எங்கும் பெரும் மின்வெட்டு உள்ளது. நகர்புறங்களில் குறைவாகவும் (சென்னையில் மின்வெட்டே கிடையாது), கிராமப்புறங்களில் அதிக அளவிலும் மின்வெட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற விவசாயம், வணிகம், சிறு தொழில்கள் முதலியன பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இது குறித்து அரசு பொறுப்பாக நடந்துக் கொள்வதில்லை. தஞ்சை பகுதியில் நிலைமை மோசமாக உள்ளது. கிராமப்புறங்களுக்கு மின்சாரம் இல்லாமல் செய்வதை அரசு ஒரு கொள்கையாகவே அறிவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

2. அமைதியான வழியில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தீர்வுகள் கிடைக்காதபோது மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இது தமிழகம் எங்கும் உள்ள ஒரு வழக்கம். இது அடித்தள மக்களின் ஒரு போராட்ட வடிவமாக உள்ளது. இப்படியான சந்தர்ப்பங்களில் உரிய அதிகாரிகள் மக்களை சந்தித்து பேசி அமைதி;க்குழு முதலியானவற்றை அமைத்து உடனடியாக போக்குவரத்தை சீர் செய்வதே வழக்கம். ராஜகிரியிலும் கூட சென்ற ஆண்டு இப்படி ஒரு போராட்டம் தீர்க்கப்பட்டுள்ளது. எனினும் இம்முறை எந்த உறுதிமொழியும் தரமுடியாது கலைந்து செல்லுங்கள் என மிரட்டியுள்ளனர். மக்கள் மறுத்த போது எந்த எச்சரிக்கையும் இன்றி தடியடி நடத்தப்பட்டுள்ளது. பொய் வழக்குகளும் போடப்பட்டுள்ளது.

திருவையாறு அருகே அம்மன்பேட்டையில் சென்ற ஜுன் 8 அன்று மின்வெட்டை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியல் செய்த போதும் 500 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதை ஊடகங்கள் கண்டித்துள்ளன. பொதுவாக இத்தகைய போராட்டங்களில் 151 பிரிவின் கீழ் கைது செய்து விடுதலை செய்வதே வழக்கம் இப்போது இது மீறப்படுகிறது. மின்வெட்டு தொடரும் இது எங்களால் சரிசெய்ய முடியாது. போராடினால் கடும் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என ஒரு செயல்பாட்டை அரசு மேற்கொண்டுள்ளது வருந்தத்தக்கது.

3. ராஜகிரியில் சென்ற 2ந் தேதி நடைபெற்ற சாலை மறியல் முற்றுலும் தன்னிச்சையானது. இதன்பின் எந்த அரசியல் கட்சி, ஜமாத்தார், தனிநபர்கள் ஆகியோரின் தூண்டுதல் கிடையாது என்பதை எமது குழு உறுதி செய்துக் கொண்டது.

4. தாசில்தார், ஆர்.டி.ஓ, காவல்துறை அதிகாரிகள் மக்களிடம் சுமூகமாக பேசியிருந்தால் அந்த பிரச்சனை தீர்ந்திருக்கும். பிரச்சனையை தீர்க்க முயலாமல் தடியடி, பொய் வழக்குகள் என்கிற நிலை ஏற்பட்டதற்கு அதிகாரிகளே பொறுப்பு.

5. பொதுச் சொத்து எதற்கும் தீங்குகள் விளைவிக்கப்படவில்லை என்பதையும், வன்முறை ஏதும் இல்லை என்பதையும் எமது குழு உறுதிப்படுத்திக்கொண்டது. சட்டமன்ற உறுப்பினரும், கோட்டாட்சியாளரும் இதனை ஏற்றுக் கொண்டனர். எனினும் பொதுச் சொத்திற்கு அழிவு ஏற்படுத்தியது தொடர்பான பிரிவிலும் இதர கடுமையான பிரிவுகளிலும் வழக்குகள் போடப்பட்டுள்ளதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் அமர்ந்திருந்த பள்ளிக்கூடத்தை வெளியில் இருந்து பூட்டியதாக வழக்கு தொடரப்பட்டிருப்பதும் பொய்யானது. பள்ளி நிர்வாகிகளே பாதுகாப்பு கருதி வாயிலை மூடியுள்ளனர்.

6. சம்பவ இடத்தில் இல்லாத பலரும் வேண்டுமென்றே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக மூன்று முதல் தகவல் அறிக்கைகளிலும் 3-வது எதிரியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள (SDPI பொறுப்பாளர்) முகமது பாரூக் அன்று ஊரிலேயே இல்லை. அவர் மதுரையில் இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அதே போல் ஜமாத் தலைவரும் தி.மு.க. ஒன்றிய செயற்குழு உறுப்பினரான ய+சுப் அலி ஆளுங்கட்சியை சேரந்தவர் என்பதால் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தடியடிக்கு பிறகே ஜமாத் தலைவர் என்ற முறையில் அதிகாரிகளை சந்தித்துள்ளார். அவரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

7. சென்ற ஆண்டு சுதந்திர நாளன்று பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு குடந்தையில் நடத்தி விடுதலை பேரணிக்கு காவல்துறை முதலில் அனுமதி மறுத்தது. எனினும் அவ்வமைப்பினர் விடாமல் போராடி பேரணியை நடத்தினர். இதனால் காவல்துறையினருக்கு, குறிப்பாக காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.செந்தில்வேலனுக்கு இவ்வமைப்பினர் மீது கடும்கோபம் இருந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவ்வமைப்பில் முன்னணியில் இருந்து செயல்படுகிற ஜக்கரியா, இஷாக், பாரூக் முதலானவர்களை வழக்கில் சிக்கவைக்க காவல்துறை முயல்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

8. எந்த முன்னறிவிப்புமின்றி தடியடி நடத்தியது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்.

9. மூன்று முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ள எல்லா வழக்குகளும் உடனடியாக திரும்ப பெறப்பட்டு ராஜகிரி பகுதியில் சூழ்ந்துள்ள அச்சம் நீக்கப்படவேண்டும்;. அம்மன்பேட்டை சாலைமறியலில் கலந்துக் கொண்டவர்கள் மீதான வழக்குகளும் திரும்ப பெறவேண்டும்.

10. ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் முதலியவற்றிற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிப்பது குடிமக்களின் அடிப்படை உரிமை. விண்ணப்பத்தை வாங்க மறுத்த செயல் சட்டவிரோதமானது. மறுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பதிவு தபாலில் அனுப்பிய பின்பு அனுமதி அளித்தோ, மறுத்தோ காவல்துறையினர் பதிலளித்திருக்க வேண்டும். கடைசிவரை எந்த பதிலையும் அளிக்காமல் இருந்துவிட்டு இன்று அவர்களை மிரட்டுவது, வழக்குகள் தொடர முயற்சிப்பது முதலியன கண்டனத்திற்கு உரியவை. காவல்துறையினர் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும்.

11. மின்வெட்டு தொடர்பாக மக்கள் புகார் செய்யும்போது பொறுப்பாக பதிலளிப்பது மின்வாரிய அதிகாரிகளின் கடமை. இதை அவர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

12. இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மின்வெட்டை குறைத்து நிலைமையை சீரமைக்க அரசு உடனடி முயற்சிகள் மேற்க்கொள்ளவேண்டும். கிராமப்புறங்களில் மின்வெட்டு மேற்கொள்வதை ஒரு கொள்கையாகவே அரசு மேற்கொண்டுள்ளது வருந்தத்தக்கது. தமிழக அரசு இதை மாற்றி கொள்ள வேண்டும்.

15.06.2010.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*