இனப்பாகுபாடு ஒழிப்புப் பிரகடனம்.

அனைத்து வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை 1965 ஆம் ஆண்டு ஐ,நா சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இது நடைமுறைக்கு வந்தது. ஏறத்தாழ 155 நாடுகள் இவ்வுடன் படிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.

ஆனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிலவும் சாதீயப் பாகுபாட்டை இந்த உடன்படிக்கை கட்டுப்படுத்தவில்லை. எனவே இவ்வுடன்படிக்கையில் சாதியப் பாகுபாட்டையும் சேர்க்க வேண்டும் என்று பல நாடுகளும் குரல் எழுப்பி வந்தன. இந்நிலையில். 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த இன ஒழிப்புக்குழு கூட்டத்தில் அதன் 61-வது அமர்வில் சாதியை உள்ளடக்கி பிறப்பு பற்றிய கருத்து விவாதம் நடந்தது. தலித் உரிமைக்கான அகில இந்தியக்குழு மேற்படி கூட்ட அமர்விற்கு எழுத்துபூர்வமான கோரிக்கைகளைச் சமர்ப்பித்தது அதோடு தலித் சமூகத்தின் பிரதிநிதிகள் பலரது நேரடி வாக்குமூலங்களையும் மேற்படி குழு கேட்டறிந்தது. இதன் விளைவாக அக்குழு செய்த பலவேறு பொதுப் பரிந்துரைகளையும். இன ஒழிப்புக்குழு ஆரம்பத்திலிருந்து எடுத்த பொதுப் பரிந்துரைகள் பற்றிய பட்டியலையும் அடியிற்காணலாம்.

பிறப்பு ரீதியிலான பாகுபாடுகள் பற்றிய பொதுப் பரிந்துரைகள்

எல்லா மனிதர்களும். பிறப்பளவில் சுதந்திரமாகவும். சம மனித மாண்புடையவர்களாகவும் பிறக்கிறார்கள் என்றும். எனவே இனம். நிறம். பாலினம். மொழி. மதம். சமூகத் தோற்றம். பிறப்பு அல்லது அந்தஸ்து முதலியவற்றின் அடிப்படையிலான எவ்விதப் பாகுபாடுமின்றி அவர்களுக்குரிய உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற அவர்களுக்கு உரிமையுள்ளது என்றும் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் வலியுறுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு.

ஒவ்வொரு நாடும். அதில் நிலவும் அரசியல். பொருளாதார மற்றும் கலாச்சார கட்டுமான அமைப்பு முறைகளுக்கு அப்பாற்பட்டு. அனைத்து மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் காத்து ஊக்குவிக்கக் கடமைப்பட்டுள்ளது என்று மனித உரிமைகள் பற்றிய சர்வதேச மாநாடு கொண்டு வந்த வியன்னா பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு.

டர்பன் நகரில் நடந்த இனவெறி. இனப்பாகுபாடு. அந்நிய நாட்டினர் மீதான வெறுப்பு. இது போன்ற இன்னபிற சகிப்பற்ற தன்மைகள் ஆகியவற்றிற்கெதிரான மாநாட்டில் கொண்டு வரப்பட்ட பிரகடனம் மற்றும் செயல்திட்டத்திற்கு முழு ஆதரவு தரும் குழுவின் 27 பொதுப்பரிந்துரைகளையும் மீண்டும் வலியுறுத்தி.

அதே டர்பன் பிரகடனத்திலும். செயல்திட்டத்திலும். ஆசிய மற்றும் ஆப்ரிக்க வம்சாவழியினர் மற்றும் சுதேசிகள் முதலியோருக்கெதிரான அனைத்து பிறப்பு ரீதியிலான பாகுபாடுகளும் கண்டனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளதையும் மீண்டும் வலியுறுத்தி.

இனம். நிறம். பிறப்பு. சமூகம் மற்றும் வம்சாவழி ரீதியிலான பாகுபாடுகளை ஒழிக்க. இனப் பாகுபாட்டின் எல்லா வடிவங்களையும் ஒழிக்கும் சர்வதேச ஒப்பந்தத்தைத் தனது செயல்பாடுகளுக்கு ஓர் அடித்தளமாகக் கொண்டு.

இன ஒழிப்பு ஒப்பந்தத்தின் பிரிவு-1 பாரா-1ல் இடம் பெறும் இனம் என்னும் சொல் இனம் என்பதை மட்டுமே குறிக்காமல். இதர பாகுபாட்டுக் குறியீடுகளையும் உள்ளடக்கும் வகையில் அர்த்தம் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்ற இன ஒழிப்புக்குழுவின் கருத்தையும் தொடர்ந்த நிலைப்பாட்டையும் வற்புறுத்தி உறுதி செய்து.

பிறப்பு ரீதியிலான பாகுபாடு என்பது வழிவழியாக தொன்றுதொட்டு வரும் சமூக இறுக்கங்களால் கட்டமைக்கப்பட்டு மனித உரிமைகளைச் சரி சமமாக அனுபவிப்பதற்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய சாதி மற்றும் அதனையொத்த மரபு வழி பெறப்பட்ட அந்தஸ்து ரீதியிலான பாகுபாடு ஆகியவற்றையும் உள்ளடக்கும் என்பதை மிகமிக வன்மையாக வலியுறுத்தி.

இனஒழிப்பு ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகள் பலவற்றின் அறிக்கைகளிலிருந்து பெறப்பட்ட தகவல் அறிக்கைகளை இன ஒழிப்புக்குழு ஆய்வு செய்ததில். மேற்படி பாகுபாடுகள் நிலவுவது தெளிவாகப் புலப்டுகிறது என்பதையும் கவனத்தில் கொண்டு.

பிறப்பு அடிப்படையிலான பாகுபாடுகள் பற்றி கருத்து ரீதியிலான விவாதத்திற்கு ஏற்பாடு செய்து. குழு உறுப்பினர்களிடமிருந்தும். ஒரு சில நாடுகளின் அரசுகளிடமிருந்தும். ஐ.நா சபையின் இதர அமைப்புகளிடமிருந்தும் சிறப்பாக மனித உரிமைப் பாதுகாப்பு மற்றும் ஊக்குவித்தலுக்கான ஆணையத்திடமிருந்தும் தகவல்கள் பெற்று.

மேலும். சம்மந்தப்பட்ட பல தன்னார்வ குழுக்களிடமிருந்தும். தனி நபர்களிடமிருந்தும் எழுத்து பூர்வமாகவும். வாய்மொழியாகவும். உலகின் பல பாகங்களில் தொடர்ந்து நிலவிவரும் பிறப்பு ரீதியிலான பாகுபாடு மற்றும் அதன் வீச்சு ஆகியன பற்றிய ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இன்னும் அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மனதில் கொண்டு.

அனைத்து வகை பிறப்பினடிப்படையிலான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்குத் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளுக்கு மிக அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுத்து.

சாதி மற்றும் அதனையொத்த மரபு வழி அந்தஸ்து முதலிய பிறப்பினடிப்படையிலான பாகுபாடுகள் இன ஒழிப்பு ஒப்பந்தத்தை மீறும் செயல்கள் என வன்மையாகக் கண்டித்து.

தத்தம் சூழ்நிலைகளுக்கேற்ப கீழ்க்காணும் செயல்பாடுகளை முழுமையாகவோ அல்லது சிலவற்றை மட்டுமோ நடைமுறைப்படுத்துமாறு இன ஒழிப்புக்குழு இன ஒழிப்பு ஒப்பந்த உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரை செய்கிறது.

பொதுவான செயல்பாடுகள்

1 அடியிற்காணும் எல்லா அல்லது அவற்றில் ஒரு சில கூறுகளைக் கொண்டுள்ள தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகள் குறிப்பாக சாதி மற்றும் அதனையொத்த மரபு வழி அந்தஸ்து முதலிய பாகுபாடுகள் நிலவும் சமூகங்களைக் கண்டறிய ஆவன செய்தல்:

மரபு வழி வந்த தங்களுடைய அந்தஸ்தை மாற்ற முழுதும் அல்லது ஓரளவுக்கு இயலாமை.

தம்முடைய சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்ய சமூகக் கட்டுப்பாடுகள். தடைகள்.

குடியிருப்பு. கல்வி. பொது இடங்களையும் வழிபாட்டுத் தலங்களையும். உபயோகிக்கும் உரிமை. உணவு மற்றும் குடிநீர் போன்ற பொது வளங்களை அனுபவிக்கும் உரிமை முதலியவற்றை உள்ளடக்கிய தனிப்பட்ட அல்லது சமூகத்தில் ஒதுக்கி வைத்தல். மரபு வழி சுமத்தப்பட்ட அல்லது கீழ்த்தரமான மற்றும் அபாயகரமான வேலைகளைச் செய்ய மறுப்பதற்கான சுதந்திரமின்மை.

கடன்தொல்லைக்கு அடிமைப்பட்டுக்கிடத்தல். தீட்டு மற்றும் தீண்டாமை சார்ந்த மனிதனைக் கேவலப்படுத்தும் வாழ்க்கை முறையில் சிக்குண்டிருத்தல்.

பொதுவாக அவர்களது மனித மாண்பிற்கும் சமத்துவத்திற்கும் மரியாதையின்மை.

2 அரசியலமைப்புச் சட்டத்தில் பிறப்பினடிப்படையிலான பாகுபாட்டுக்கு வெளிப்படையாகவே தடை கொண்டு வருவது பற்றி யோசித்தல்.

3 இன ஒழிப்பு ஒப்பந்தத்திற்கு ஏற்ப. பிறப்பினடிப்படையிலான அனைத்து பாகுபாடுகளையும் சட்ட விரோதமாக்கும் சட்டங்களையோ. சட்ட திருத்தங்களையோ கொண்டு வருதல் அல்லது சட்டச் சீராய்வுகளை மேற்கொள்ளுதல்.

4 இது தொடர்பாக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்துதல்.

5 பிறப்பினடிப்படையிலான பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குழுக்களின் உறுப்பினர்களுக்கெதிரான அத்தகைய பாதிப்புகளை ஒழிக்கும் பொருட்டு. இன ஒழிப்பு ஒப்பந்தத்தின் பிரிவு-1 மற்றும் பிரிவு 2-ஐ ஒட்டி. பாதிக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினர்களின் பங்கேற்போடு தேசிய அளவில் பரந்துபட்ட ஒரு உத்தியை உருவாக்கி செயல்படுத்துதல்.

6 பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றல். வேலை. கல்வி ஆகியவற்றை அடையும் சாத்தியக் கூற்றினை உள்ளடக்கிய மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அனுபவித்தலை உறுதி செய்யும் பொருட்டு. பிறப்பினடிப்படையிலான பாகுபாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள சமுதாயங்களுக்கு ஆதரவாக சிறப்புத் திட்டங்களைக் கைகொள்ளுதல்.

7 பிறப்பினடிப்படையிலான குழுக்களின் உறுப்பினர்களுடைய சமத்துவ மனித மாண்புக்கும் மனித உரிமைகளுக்கும் உரிய மதிப்பையும் மரியாதையையும் ஊக்குவிக்கும் பொருட்டு சட்டரீதியிலான அமைப்புகளை அல்லது சிறப்பு அமைப்புகளை உருவாக்குதல் ஏற்படுத்துதல் அல்லது ஏற்கனவே இருக்கும் அமைப்புகளுக்கு வலுசேர்த்தல்.

8 பிறப்பினடிப்படையிலான பாகுபாடுகளினால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுவதின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு அளித்தல்.

9 பிறப்பினடிப்படையிலான குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் இதர சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல்களை ஊக்குவித்தல்.

10 பிறப்பினடிப்படையிலான பாகுபாடுகள் நிலவுவது பற்றி அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளுதல், அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வறிக்கைகளில் பிறப்பினடிப்படையிலான சமுதாயக் குழுக்களில் பூகோளரீதியில் நிலவும் பாலியல் கண்ணோட்டத்தை உள்ளடக்கிய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றி இன ஒழிப்புக் குழுவிற்குத் தெளிவான தகவல்களைத் தருதல்.

பிறப்பினடிப்படையிலான குழுக்களின் பெண்கள் மீதான பல்முனைப் பாகுபாடு

11 பாலியல் சுரண்டல். கட்டாய விபச்சாரம். பல்முனைப் பாகுபாடு முதலியவற்றிற்கு உள்ளாக்கப்படும் பிறப்பினடிப்படையிலான குழுக்களின் பெண்கள் நிலை. வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எல்லா திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

12 தனி மனித பாதுகாப்பு. வேலை வாய்ப்பு. கல்வி ஆகிய துறைகளை உள்ளடக்கி பிறப்பினடிப்படையிலான குழுக்களின் பெண்களுக்கெதிரான பல்முனைப் பாகுபாடுகள் அனைத்தையும் ஒழிக்க எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ளுதல்.

13 பிறப்பினடிப்படையிலான பாகுபாடுகளினால் பாதிக்கப்படும் பெண்களின் நிலை பற்றிய துல்லியமான. தெளிவான தகவல்கள் தருதல்.

ஒதுக்கப்படுதல்

14 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்கள் ஒதுக்கப்படுவது தொடர்பான போக்குகளைக் கண்காணித்துத் தகவல் தருதல் மற்றும் அவ்வாறு ஒதுக்கப்படுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை அறவே நீக்குவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.

15 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களின் உறுப்பினர்களுக்கு எதிரான குடியிருப்பு. கல்வி. வேலைவாய்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும் ஒதுக்கி வைத்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடைசெய்தல்.

16 சமத்துவத்தின் அடிப்படையில். எவ்விதப்பாகுபாடுமின்றி. பொதுமக்கள் அனுபவிக்கக்கூடிய இடம் அல்லது சேவைகளை அனைவருக்கும் உறுதி செய்தல்.

17 பாதிக்கப்பட்ட சமுதாயக்குழுக்கள் ஏனைய சமுதாயக் குழுக்களோடு இரண்டறக் கலந்து வாழும் சமுதாயங்களை ஊக்குவித்து எல்லோருக்கும் கிடைக்கும் சேவைகள் அவர்களுக்கும் கிடைக்குமாறு உறுதி செய்தல்.

இன்டெர்நெட் மற்றம் இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக பகைமை உணர்வு பரப்பப்படுதலைத் தடுத்தல்.

18 உயர்சாதி. கீழ்சாதி போன்ற கருத்துக்களை பரப்பும். பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களுக்கெதிரான வன்முறை. பகைமை மற்றும் பாகுபாடு முதலியவற்றை நியாயப்படுத்தும் போக்குகளுக்கெதிராக நடவடிக்கை எடுத்தல்.

19 மக்கள் சமுதாயங்களுக்கிடையே. அது இன்டெர்நெட் வழியாக இருந்தாலும். வன்முறை அல்லது பாகுபாடுகளைத் தூண்டிவிடும் போக்குகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

20 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களின் தன்மை மற்றும் பரவல் பற்றிய விழிப்புணர்வைத் தகவல் தொடர்பு. ஊடக வல்லுனர்களிடையே ஏற்படுத்த ஆவன செய்தல்.

நீதி பரிபாலனம்

21 சட்ட உதவி அளித்தல். குழுரீதியிலான உரிமைக் கோரல்களை நிறைவேற்ற உதவி செய்தல். மக்களின் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும்படி தன்னார்வக் குழுக்களை ஊக்குவித்தல் முதலியவற்றை உள்ளடக்கி பிறப்பினடிப்படைப்பிலான சமுதாயங்களின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நீதி பரிபாலன முறையில் சம வாய்ப்பைப் பெறும் நிலையை உறுதி செய்ய ஆவன செய்தல்.

22 எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் நீதிமன்றத் தீர்ப்புகளும். அதிகார பூர்வமான செயல்பாடுகளும் பிறப்பினடிப்படையிலான பாகுபாடுகள் அனைத்தின் மீதான தடையை முழுவதுமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளுதல்.

23 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களின் உறுப்பினர்களுக்கு எதிரான குற்றம் புரிபவர்களைத் தண்டிக்கவும். அத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க இழப்பீடு வழங்கப்படவும் உறுதி செய்தல்.

24 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களின் உறுப்பினர்களை காவல்துறை போன்ற சட்ட அமலாக்கத்துறைகளில் சேர்த்துக் கொள்ளுதலை ஊக்குவித்தல்.

25 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களுக்கெதிரான அரசு அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவினரிடையே நிலவும் ஒருதலைபட்சமான கருத்துக்களையும். எண்ணங்களையும் நீக்கும் பொருட்டு பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தல்.

26 காவல்துறை மற்றும் இதர சட்ட அமலாக்கப் பிரிவினர்களுக்கும். பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களுக்குமிடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை ஊக்குவித்து அவை சார்ந்த ஏற்பாடுகளுக்கு உதவி செய்தல்.

குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள்

27 அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள். பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களைப் பற்றித் தாங்கள் மேற்கொள்ளும் எல்லா முடிவுகளிலும். மேற்படி சமுதாயத்தினரை இணைத்துக் கொண்டு செயல்படுதலை உறுதி செய்தல்.

28 சமத்துவத்தை நிலைநாட்டும் பொது ஓட்டுரிமையின் அடிப்படையில் பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களின் உறுப்பினர்களுக்குத் தேர்தல்களில் பங்கு கொண்டு. வாக்களித்து. தேர்தல்களில் போட்டியிடும் உரிமையையும். சட்ட மன்றம் போன்ற இதர அரசியல் அமைப்புகளில் போதுமான பிரதிநிதித்துவம் பெறும் உரிமையையும் உறுதி செய்யும் பொருட்டு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

29 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களில் உறுப்பினர்கள். பொதுவாழ்விலும் அரசியலிலும் பங்கேற்பதின் முக்கியத்துவத்தை உணரும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து இந்நிலைக்கு எதிரான எல்லாத் தடைகளையும் அகற்றுதல்.

30 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களைச் சார்ந்த அதிகாரிகளுக்கும். அரசியல் பிரதிநிதிகளுக்கும் அரசின் கொள்ளையாக்கம் மற்றும் நிர்வாகம் சார்ந்த திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தல்.

31 பிறப்பினடிப்படையிலான பாகுபாடுகள் சார்ந்த வன்முறைகளுக்கு எளிதில் இலக்காகக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அப்படிப்பட்ட வன்முறை மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தல்.

32 தங்களுடைய சமுதாயங்களுக்கு வெளியே திருமணம் செய்து கொள்ள விரும்பும் இம்மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

சமூக மற்றும் பொருளாதார உரிமைகள்

33 சமத்துவத்தையும் பாகுபாடற்ற தன்மையையும் நிலைநாட்டும் வகையில் பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான திட்டங்களை விரிவுபடுத்தி. புதிதாக உருவாக்கி அமல்படுத்துதல்,

34 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களுக்கிடையே நிலவும் வறுமையைப் போக்கவும். பிறரால் ஒதுக்கப்படுவதையும். ஓரங்கட்டப்படுவதையும் தடுக்க. பலம் வாய்ந்த. தவறாது பயனளிக்கும் வழிமுறைகளைக் கையாளுதல்.

35 வெளிநாட்டு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளும். நிதி நிறுவனங்களும் பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களைச் சார்ந்த மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு உதவி செய்தல்,

36 பொதுத்துறையிலும். தனியார் துறையிலும் பாதிக்கப்பட்ட சமுதாயங்களின் உறுப்பினர்களை ஈடுபடுத்துவதை ஊக்குவிக்க தனிப்பட்ட முயற்சிகளை எடுத்தல்.

37 பிறப்பு. தொழில் மற்றும் உழைப்புச் சந்தை முதலியவற்றின் அடிப்படையிலான எல்óலாப் பாகுபாடுகளையும் முக்கியமாகத் தடுக்க சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளை உருவாக்குதல் அல்லது ஏற்கனவே வழக்கில் இருப்பனவற்றை சீராக்கி மேம்படுத்துதல்.

38 வேலைவாய்ப்பு கோரும் விண்ணப்பங்களில் பிறப்புப் பின்னணியை ஆராயும் பொது அமைப்புகள். தனியார் நிறுவனங்கள் முதலியவற்றிற்கெதிரான நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

39 பாதிக்கப்பட்ட சமுதாயங்களின் உறுப்பினர்களுக்குப் போதுமான குடியிருப்பு மற்றும் வீட்டுவசதி அளிப்பதில் உள்ளூர் அதிகாரிகளும் தனியார் நிறுவன முதலாளிகளும் காட்டும் பாகுபாட்டு நடைமுறைகளுக்கெதிராக நடவடிக்கை எடுத்தல்.

40 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களின் உறுப்பினர்களுக்கு சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு சார்ந்த சேவைகள் பிறருக்குச் சமமாகக் கிடைக்கும் வகையில் உறுதி செய்வது.

41 சுகாதார திட்டங்களைத் தீட்டுவதிலும் அமல் படுத்துவதிலும் பாதிக்கப்பட்ட சமுதாயங்களின் மக்களை இணைத்துக் கொள்ளுதல்.

42 பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களில் உள்ள குழந்தைகள். குழந்தைத்தொழில் முறையிலான சுரண்டலுக்கு மிக எளிதாக ஆளாக்கப்படும் நிலையை மாற்ற முயற்சிகள் எடுத்தல்.

கல்வி சார்ந்த உரிமை

43 பொது மற்றும் தனியார் கல்வி முறைகள் அனைத்து சமுதாயங்களின் குழந்தைகளையும் உள்ளடக்கி இயங்குதலையும் பிறப்பினடிப்படையில் எவரையும் ஒதுக்காமல் இருத்தலையும் உறுதி செய்தல்.

44 பள்ளிக் கல்வியை இடையில் விட்டு விடுவோரின் எண்ணிக்கை விகிதம் எல்லாச் சமுதாயங்களிலும். குறிப்பாக பாதிக்கப்பட்ட சமுதாயங்களில் அதிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் பெருமளவு குறைக்கப்பட சிறப்பான கவனம் செலுத்துதல்.

45 பொது அல்லது தனியார் அமைப்புகள் பாகுபாட்டு நடைமுறைகளைக் கடைபிடித்தல். பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களின் மாணவர்களை இம்சித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கெதிராகப் போராடுதல்.

46 சமூகக் கட்டமைப்பில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்போடு. பாகுபாடுகள் இல்லாத சமூக இணக்கத்தைப் பேணி வளர்க்கவும் பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களை மதிக்கவும் பொதுமக்களுக்குக் கல்வியூட்டவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல்.

47 எல்லா மொழிப் பாடப் புத்தகங்களிலும் பிறப்பினடிப்படையிலான சமுதாயங்களினைப்பற்றி வழக்கமான பாணியில் கீழ்த்தரமாக விமரிசித்து வரும் பிம்பங்கள். மொழிப் பிரயோகங்கள். பெயர் குறியீடுகள். அனுமானங்கள் முதலியவற்றை மதிப்பீடு செய்து. இயல்பாகவே மனித மாண்பும். மனித உரிமைகளும் அனைவருக்கும் பொது என்ற கருத்தை வலியுறுத்தும் மாற்று பிம்பங்கள். மொழிப்பிரயோகங்கள். பெயர்குறியீடுகள். அனுமானங்கள் முதலியவற்றை வழக்கில் கொண்டுவர முயற்சி எடுத்தல்.

இனப்பாகுபாடு ஒழிப்புக் கண்காணிப்புக் குழு

இவ்வுடன்படிக்கை இனப்பாகுபாடு ஒழிப்பு கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது. இது உலகிலேயே முதன்முறையாக மனித உரிமைக் கண்காணிப்பிற்கென்றே ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்,

இனப்பாகுபாடு ஒழிப்பு கண்காணிப்புக் குழு இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளிடமிருந்து இனப்பாகுபாடு தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள் பெற்று சீராய்வு செய்வதன் மூலம் தன் பணியைச் செய்கிறது. தலைசிறந்த ஒழுக்க சீலர்களாவும் ஒப்பற்ற நடுநிலையாளர்களாகவும் திகழும் 18 திறனாளர்களை இக்குழு உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் இக்குழுவில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இக்குழுவின் பாதி எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்கு இரண்டாண்டுகால இடைவெளியில் தேர்தல் நடத்தப்படுகிறது. பூகோள அமைப்பு. பல்வேறு சமூகங்கள். மேலோங்கும் நீதி பரிபாலன முறை ஆகியவற்றின் அடிப்படையில் இக்குழுவில் பிரதிநிதித்துவம் அமைகிறது. ஆரம்பகாலத்தில் அகில உலக இன ஒழிப்புப் பிரகடனம் என்பது ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை சார்ந்த ஒன்று என்ற புரிதல் மேலோங்கி நிலவியதால். வெளியுறவுக் கொள்கை சார்ந்த விஷயங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களே இன ஒழிப்புக் குழுவிற்கு இதுவரை பரிந்துரைக்கபட்டும். தேர்ந்தெடுக்கப்பட்டும் வந்துள்ளனர். ஆனால் தற்போது இந்த நிலை சிறிது சிறிதாக மாறிக் கொண்டு வருகிறது. ஐ.நா. சபையுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பினும் இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். வருடத்திற்கு இருமுறை மார்ச் மாதத்திலும். ஆகஸ்ட் மாதத்திலும் இக்குழு ஜெனிவாவில் உள்ள ஐ,நா சபை அலுவலகத்தில் கூடுகிறது. ஐ.நா. சபையின் பொது அமர்விற்கு அதன் பொதுச் செயலாளர் வழியாக இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*