கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. பகுதி (4)

நீதித்துறையில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அந்த மசோதா இன்னும் நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும், நீதிபதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் இடர்பாடுகள் இல்லாமலும் இருக்க வேண்டுமென சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள அபரிதமான நம்பிக்கை குறையாமல் இருக்க இந்த மசோதாவில் சட்ட வல்லுநர்கள் கூறும் அம்சங்களை உள்ளடக்கி நிறைவேற்ற மத்திய அரசு திறந்த மனதோடு செயலாற்ற வேண்டும்.

‘நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968’ போதிய அளவில் பயன் அளிக்கவில்லை என்ற காரணத்தால் தான் தற்போது மத்திய அரசு ‘நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா 2010’ என்ற புதிய சட்ட முன்வரைவை அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த சட்டப்படி நீதிபதிகள் தங்களின் சொத்துக் கணக்கினைப் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். மேலும் ஆண்டு தோறும் தங்கள் சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். இவை அனைத்தும் நீதித்துறையின் அதிகாரபூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும். மேலும், நீதிபதிகள் எந்தவொரு வழக்கறிஞரோடும் நெருக்கமான உறவு வைத்துக் கொள்ள கூடாது. குறிப்பாக தான் பணியாற்றும் நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞரோடு உறவு வைத்துக் கொள்ள கூடாது.

நீதிபதிகளின் ஊழல் பற்றி விசாரிக்க ஓய்வுப் பெற்ற இந்திய தலைமை நீதிபதி ஒருவர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். இக்குழுவில், அட்டர்னி ஜெனரல், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர் நியமிக்கும் ஒரு முக்கிய பிரமுகர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். நீதிபதிகள் மீது இந்த குழுவிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக இந்திய தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீதும் புகார் கூறலாம்.

இவ்வாறு அளிக்கப்படும் புகாரை விசாரிப்பதற்காக நீதிபதிகள் அடங்கிய தனிக் குழு ஒன்று அமைக்கப்படும். உச்சநீதிமன்ற நீதிபதி மீது புகார் என்றால் ஓய்வுப் பெற்ற இந்திய தலைமை நீதிபதி மற்றும் பணியிலிருக்கும் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும். உயர்நீதிமன்ற நீதிபதி மீதான புகாரை ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பணியிலிருக்கும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும். இந்த விசாரணை குழு உறுப்பினர்களை அதாவது உச்சநீதிமன்ற நீதிபதிகளை இந்திய தலைமை நீதிபதியும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் நியமிப்பார்கள். தமைமை நீதிபதிகள் மீதான புகாரை உயர்மட்ட குழுவே விசாரிக்கும்.

இந்த குழுக்களுக்கு ஒரு சிவில் நீதிமன்ற அதிகாரம் இருக்கும். இக்குழு எந்தவொரு ஆவணத்தையும், சான்றுகளையும் சம்மன் அனுப்பி பெற முடியும். மேலும், புகாரின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்படும் நீதிபதி மீது குறிப்பான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முடியும். குற்றச்சாட்டு மென்மையானதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அறிவுரையோ அல்லது எச்சரிக்கையோ விடுக்கலாம். குற்றச்சாட்டு கடுமையானதாக இருந்தால் அவரை பணியிலிருந்து விலக அறிவுறுத்தலாம். இதற்கு நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை என்றால் குடியரசுத் தலைவர் மூலம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

முந்தைய சட்டத்தில் மாற்றங்கள் செய்தும், சட்ட ஆணையம் கூறிய பல கருத்துக்களை உள்ளடக்கியும் கொண்டு வரப்பட்ட இந்த புதிய சட்டத்தின்படி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பல தடைகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பாராளுமன்றத்தின் மூலம் குற்றசாட்டுகள் (Impeachment) பதிவு செய்து நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற பழைய முறையே இச்சட்டத்தில் இறுதி நடவடிகையாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது கடந்த காலங்களில் தோல்வி அடைந்துள்ளதையும், இதுவரையில் ஒரு நீதிபதிகூட இவ்வாறு பணிநிக்கம் செய்யப் படவில்லை என்பதையும் முன்னர் பார்த்தோம்.

பணியிலிருக்கும் நீதிபதிகளை இதுபோன்ற விசாரணைக் குழுவில் நியமிப்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே அதிகப்படியான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் கூடுதலாக அவர்களுக்குப் பணிச் சுமை அளிப்பது நீதிபதிகளின் வேலைத் திரனைக் குறைக்கும். விசாரணகளில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். மார்ச் 31, 2010 கணக்குப்படி உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 717 வழக்குகள், இந்தியாவிலுள்ள 21 உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 4 கோடிக்கு மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏதாவது ஒரு மனித உரிமை மீறல் நடக்குமானால் உடனடியாக பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை கோருவது வழக்கம். ஆனால், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் மேற்கூறிய காரணங்களைக் காட்டி அரசுகள் தட்டிக் கழிப்பது உண்டு. ஒரு சம்பவம் குறித்து விசாரிக்கவே இந்த நிலை என்றால், நீதிபதிகள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை நுட்பமாகவும், ஆழமாகவும், பல்வேறு கோணங்களில் ஆராயவும் கவனம் செலுத்த முடியாத நிலையே உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், தன்னோடு பணியாற்றும் ஒரு நீதிபதி மீது புகார் கூறப்படுமானால் அதனை விசாரிப்பதில் உடன் பணியாற்றும் நீதிபதிக்கு நெருடல் இருக்கும். மேலும், பல சந்தர்ப்பங்களில் உடன் பணியாற்றும் நீதிபதியை விசாரணை நீதிபதிகள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நீதிபதி பி.டி.தினகரன் ஊழல் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில் அவரோடு பணியாற்றிய நீதிபதி சிர்புர்கர் இடம்பெற்றதற்கு எதிர்ப்புப் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அக்குழுவில் இருந்து விலகியதும் இதற்கு வலுசேர்க்கிறது.

‘ஒரு நீதிபதி செய்யும் குற்றத்தை ஒரு நீதிபதி கொண்டே விசாரிக்கலாம் என்றால் ஏன் ஒரு டக்டர் செய்யும் குற்றத்தை ஒரு டாக்டரைக் கொண்டே, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் செய்யும் குற்றத்தை ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டே, ஒரு திருடன் செய்யும் குற்றத்தை ஒரு திருடனைக் கொண்டே விசாரிக்க கூடாது’ என்று மிகக் கோபமாக கேள்வி எழுப்பியதோடு, ‘இந்த புதிய சட்டம் மக்களிடத்தில் ஒரு பாதுகாப்பு வழிமுறை உள்ளது என்ற பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி’ என்கிறார் சாந்தி பூஷன்.

புலன் விசாரணை அதிகாரம் கொண்ட சுயேட்சையான அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டுமென நீதித்துறையில் ஊழலுக்கு எதிராகப் போராடி வருபவர்கள் கோருவதில் நியாயம் உள்ளது. நீதித்துறைக்கு அப்பாற்பட்டவர்கள் நீதிபதிகளின் ஊழல்களை விசாரிக்க ஒப்புக் கொண்டால் அது நீதித்துறையின் சுயேட்சைத் தன்மையையும், சுதந்தரத்தையும் கேள்விக்குள்ளாக்கிவிடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீதித்துறையில் மட்டுமல்ல இன்று அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. எளிதாக வேலையை முடிக்க லஞ்சம் கொடுப்பதுதான் வழிமுறை என்பதை மக்கள் பெரிதும் நம்புகின்றனர். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று நாம் யாராவது கூறினால் இன்றைய சூழலில் அது மிகப் பெரிய நகைச்சுவை ஆகிவிடும். சட்டத்தின் ஆட்சியை விரும்புகிறவர்கள் ஊழலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. ஊழல்களினால் பாதிக்கப்படுவது அடித்தட்டில் இருக்கும் ஏழை எளிய மக்கள்தான். அதுவும் கடைசிப் புகலிடமாக உள்ள நீதித்துறையில் ஊழல் அளவிட முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

அண்மையில் வருமான வரித் துறை அதிகாரி ஒருவரின் ஊழல் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் ‘அரசு ஏன் ஊழலை சட்டபூர்மானதாக ஆக்கக் கூடாது’ என்று கிண்டலாக கேள்வி எழுபியுள்ளனர். அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை ஒழிக்க நீதிபதிகள் அக்கறை காட்டும் அதே வேளையில், நீதித்துறையில் நிலவும் ஊழலையும் களைய உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் இதுபோன்ற ஒரு கேள்வியை நீதித்துறையினர் மீது மக்கள் எழுப்பும் காலம் விரைவில் வரக்கூடும்.

(நிறைவுப் பெற்றது)

நன்றி: மக்கள் உரிமை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*