இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் மனு!


புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இரா.பாவாணன், (விடுதலைச் சிறுத்தைகள்), இரா.மங்கையர்செல்வன், (மீனவர் விடுதலை வேங்கைகள்), லோகு. அய்யப்பன், (பெரியார் திராவிடர் கழகம்), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), இரா.அழகிரி, (தமிழர் தேசிய இயக்கம்), பா.சக்திவேல், (மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்), சி.மூர்த்தி, (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), தி.சஞ்சீவி, இராஷ்ட்ரிய ஜனதா தளம்), ந.மு.தமிழ்மணி, (செந்தமிழர் இயக்கம்), பாவல், (வெள்ளையணுக்கள் இயக்கம்), பெ.சந்திரசேகரன், (கிராமப்புற அடிப்படை உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல்வர் வி.வைத்திலிங்கத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் நோகத்தோடு சிங்கள அரசு இராணுவ நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சிங்கள அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கண்டித்துள்ளனர்.

இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட இராணுவ உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் இந்த இராணுவ உதவிகள் தமிழர்களைக் கொன்று குவிக்கவே பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டித்துள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் 14-10-2008 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் ‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரை இரண்டு வாரத்திற்குள் நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.களும் பதவி விலக நேரிடும்’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.வி.தங்கபாலு அவர்கள் ‘இந்த தீர்மானங்களை முழு மனதோடு ஆதரிக்கின்றோம், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவோம்‘ எனக் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் தங்கள் தலைமையிலான காங்கிரஸ் அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக கட்சிகள் நிறைவேறியுள்ள தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், வரும் 20-ஆம் தேதியன்று கூடவிருக்கிற புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ‘இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவிகள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு ஏவிவரும் அடக்குமுறை புதுச்சேரி தமிழர்கள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி தமிழர்களின் உணர்வுகளைப் எதிரொலிக்கும் விதமாக இந்த மனுவை தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம். ஈழத் தமிழர்களைக் காக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*