வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர் மாணவர்களின் வெளியேற்றம் குறித்து சிவில் சமூக அறிக்கை!

அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டாக 21.08.2012 அன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை: 

கீழே கையொப்பமிட்டுள்ள குடிமக்களாகிய நாங்கள், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்துகொண்டும் படித்துக் கொண்டும் இருக்கக்கூடிய தொழிலாளிகளும் மாணவர்களும் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என அஞ்சி தமது சொந்த மாநிலங்களுக்கு ஓடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது குறித்து மிகவும் கவலையுறுகிறோம். இந்தியக் குடிமக்கள் யாருக்கும் இந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் சென்று படிக்கவும் வேலை செய்யவும் உரிமை உண்டு. அரசியல் சட்டம் அளித்துள்ள இந்தக் காப்புறுதி மீறப்படுவதாக ஒரு அய்யமும் அச்சமும் இன்று ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது.

சொந்த மாநிலங்களில் இன்று ஏற்பட்டுள்ள வரட்சி, வேலையின்மை, அரசின் தவறான கொள்கைகள், தரமான கல்வி வாய்ப்பின்மை ஆகியவற்றின் விளைவாக இன்று தொழிலாளிகளும் மணவர்களும் இவ்வாறு இடம்பெயர வேண்டிய ஆவசியம் ஏற்பட்டுள்ளது. அப்படி இடம்பெயர நேர்ந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.

எந்தவிதமான தொழில் பாதுகாப்புகளும், தொழிற் சங்க உரிமைகளும் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் இங்கு வேலை செய்ய நேர்ந்துள்ள பிற மாநிலத் தொழிலாளிகளுக்கும், இங்குள்ளவர்களால் நடத்தப்படுகிற கல்வி நிறுவனங்களில் உரிய கல்வித் தொகைகளைச் செலுத்திப் பயில்கிற பிற மாநில மாணவர்களுக்கும் எதிராக சிலர் வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்வதும், அவர்களின் பாதுகாப்புக்குச் சமூகத்தின் ஒரு தரப்பினரால் ஆபத்து ஏற்படப் போவதாக வதந்திகளைப் பரப்புவதும் வருந்தத் தக்கது; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

தமிழகக் காவல்துறை சில மாதங்களுக்கு முன் வட மற்றும் வடகிழக்கு மாநிலத் தொழிலாளிகள் மற்றும் மாணவர்களைப் பதிவு செய்யும் ஒரு முயற்சி மேற்கொண்டதும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போவதற்கு இவர்களே காரணம் என்பதுபோல ஒரு கருத்து உருவாகும் வகையில் செயல்பட்டதும்கூட பிற மாநிலத்தவர் மத்தியில் ஒரு அச்சம் இன்று உருவாவதற்குக் காரணமாகியுள்ளது என்பதையும் நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்கிற மரபை உடையவர்கள் நாம். இங்கு பிழைக்கவும் பயிலவும் வந்தவர்கள் நம்மைக் கண்டு அஞ்சி ஓடக்கூடிய நிலையை அநுமதிக்கலாகாது.  அவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பை அளிப்போம் என்கிற உத்தரவாதத்தை நாம் அளிக்க வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்கள். மனித உரிமை அமைப்புகள் முதலானவையும், அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் குடிமக்கள் அமைப்பினரும் பிற மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளிகளுக்கும் மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பொய் வதந்திகளைப் பரப்புவோரை அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

வட மற்றும் வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்போம். பாதுகாப்பு இல்லை என  அஞ்சி சொந்த மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளிகளும் மாணவர்களும் மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் திரும்ப வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

இவண்,

பிரபஞ்சன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் எழுத்தாளர், சென்னை

பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், ச.ம.உ, மனிதநேய மக்கள் கட்சி, சென்னை

பேரா. மார்க்கண்டன், முன்னாள் காந்தி கிராமப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், கோவை

பேரா. எஸ்.சாதிக், முன்னாள் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர், சென்னை

பேரா. பா. கல்யாணி, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், திண்டிவனம்

பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்,சென்னை

பேரா. கே.ஏ.குணசேகரன், புலத் தலைவர், நிகழ் கலைப் பள்ளி, மத்திய பல்கலைக் கழகம், புதுச்சேரி

மதுமிதா தத்தா, அமைதி மற்றும் நீதிக்கான பிரச்சார இயக்கம், சென்னை

வ.கீதா, எழுத்தாளர் மற்றும் சமூகப் பணியாளர், சென்னை

கவிக்கோ அப்துல் ரஹ்மான், கவிஞர், சென்னை

கோவை ஞானி, எழுத்தாளர், கோவை

பேரா. முத்துமோகன், தலைவர், மதம் மற்றும் மெய்யியல் பள்ளி, மதுரைப் பல்கலைக் கழகம், மதுரை

வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை

ஞாநி, எழுத்தாளர், சென்னை

எஸ்.எம்.பாக்கர், இந்தியன் தவ்ஹீத் ஜமாத், சென்னை

ஷோபாசக்தி, எழுத்தாளர், இலங்கை

வெளி ரங்கராஜன், எழுத்தாளர், சென்னை

குமரேசன்,பத்திரிக்கையாளர், தீக்கதிர், சென்னை

பேரா. ப.சிவக்குமார், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை

பேரா. அ.கருணாநந்தன், முன்னாள் பல்கலைக் கழக ஆசிரியர் மன்றத் தலைவர், சென்னை

கேரன் கோயல், பேராசிரியர் செனனைஆராய்ச்சி வளர்ச்சி நிலையம், சென்னை

நித்தியானந்த் ஜெயராமன், எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர், சென்னை

சந்திரிகா, சமூக பணியாளர், சென்னை

கருணா, ஆய்வாளர், சென்னை

பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*