மருத்துவர் இராமதாஸ் அவர்களின் அறிக்கைக்கு எங்களின் பதிலுரை – அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

நேற்று (டிசம்பர் 23, 2013) மருத்துவர் இராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில பத்திகள்:

“தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக செய்தி வெளியிட்டுள்ளன. கலாச்சார பெருமைக்கு பெயர் போன இந்தியா ‘கூட்டுக் கற்பழிப்பின்’ தலைநகராக மாறி வருவதாக உலக ஊடகங்கள் காறி உமிழ்கின்றன. ஆனால், தமிழகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர். ஏன் இந்த கள்ள மவுனம்?

மது அருந்திவிட்டு ரயிலில் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்ட போதும், ஆதிக்க சாதி வன்னியர்கள் தான் இதற்கு காரணம் என்று கொதித்து எழுந்து குற்றஞ்சாற்றியோரும், உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி பொய் அறிக்கை தாக்கல் செய்தோரும் இப்போது எங்கு போனார்கள்?

வன்னியர்கள் தவறு செய்யாதபோதும் அவர்களை சிலுவையில் அறைந்தவர்கள் இப்போது இஸ்லாமிய மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தவறு செய்தது உறுதிசெய்யப்பட்ட பிறகும் வாய் திறக்க மறுப்பது ஏன்? தலித்துகள் பாதிக்கப்படாத போதே அவர்களுக்காக குரல் கொடுக்கும் போலி முற்போக்குவாதிகள் இப்போது முதலியார் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கு பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கும் நிலையில் அமைதிகாப்பது ஏன்? இது எந்த வகையான முற்போக்கு வாதம்?

காதல் நாடகமாடி இளம் பெண்களை கடத்திச் செல்வதும் தொடர்கிறது. இதையெல்லாம் ஒரு தொழிலாகவே செய்துவருவது தலித் மக்களை காப்பதாக கூறி ஏமாற்றிவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்திய போதெல்லாம் சாதி உணர்வுடன் பேசுவதாக கூறி என்னை விமர்சித்த போலி முற்போக்குவாதிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்கவில்லை. அதன்விளைவு தான் ஒரு இளம்பெண்ணை இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகும்.

எனவே, முற்போக்கு வாதம் பேசுபவர்கள் தங்களின் வேடங்களை கலைத்து விட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை கண்டிக்க முன்வர வேண்டும்.”

எங்களின் பதிலுரை:

பா.ம.க நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் பா.ம.க தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே எங்களை அறிவார். ‘நிறப்பிரிகை’ இதழில் நாங்கள் எடுத்து வெளியிட்ட அவரது நேர்காணல் பெரிய அளவு தமிழக அறிவுஜீவிகளின் கவனத்தை ஈர்த்தது. குடிதாங்கி பிரச்சினையின்பால் அவரது கவனத்தை ஈர்த்ததோடு, அதில் அவர் தலித்களின் பக்கம் நின்றதையும் வெகுவாகப் பாராட்டி எழுதினோம். அதேபோல நாளிதழ் ஒன்று எங்களை ஒரு வெடிகுண்டுத் தாக்குதலுடன் தொடர்பு செய்து எழுதியதை மருத்துவர் இராமதாஸ் அவர்கள் கண்டித்ததையும் எங்கள் கண்டனக் கூட்டத்தில் அவர் பங்கு பெற்றதையும் நாங்கள் என்றும் மறவோம். பா.ம.க நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு முதலியவற்றிலும் நாங்கள் பங்கு கொண்டுள்ளோம். எங்களது சமூக நீதி அரங்குகள் பலவற்றிலும் மருத்துவர் அவர்களும் பங்கேற்றுள்ளார்.

அதேபோல பா.ம.கவின் தடம் மாறுவதாக உணர்ந்தபோது அதை நாங்கள் கண்டிக்கவும் தயங்கியதில்லை. அந்த வகையில்தான் இன்று மருத்துவர் அவர்கள் தலித்களை விலக்கிய அனைத்துசாதி மாநாடுகளைக் கூட்டுவதையும், தலித்கள் மீதான வன்முறைகளில் பா.ம.கவினர் பங்கேற்கிற நிலையையும் விமர்சிக்கிறோம், கண்டிக்கவும் செய்கிறோம்.

பெண்கள் மட்டுமின்றி தலித்கள், இருளர்கள், குறவர்கள், முஸ்லிம்கள், அருந்ததியர்கள்,. இயக்கப் போராளிகள் என ஒடுக்கப்பட்ட பிரிவினர் யார் பாதிக்கப்பட்டாலும் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். தேவை எனில் உண்மை அறியும் குழுக்களை அமைத்து உண்மைகளை வெளிக் கொணரவும் செய்கிறோம்.

காரைக்காலில் நடைபெற்றுள்ள கூட்டு வன்புணர்வுச் சம்பவத்தைப் பொருத்தமட்டில் “முற்போக்குச் சிந்தனையாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வோரும், உண்மை அறியும் குழுக்களை அமைத்துப் பொய் அறிக்கை தாக்கல் செய்வோரும்” ஒன்றும் செய்யாமல் வாளாவிருப்பதாக இன்று தாங்கள் அறிக்கையில் கூறியுள்ளதைப் பொருத்தமட்டில், இது குறித்த முழு உண்மைகளையும் தங்கள் உதவியாளர்களும், கட்சிக்காரர்களும் தங்களின் கனத்திற்குக் கொண்டு வராததன் விளைவாகவே தாங்கள் இவ்வாறு கூற நேர்ந்துள்ளது இந்தச் சம்பவத்தை எஸ்.எஸ்.பி மோனிகா பாரத்வாஜ் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதற்குக் காரணமே நாங்கள்தான். டிசம்பர் 25 அன்று அதிகாலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக சுமார் பத்துபேர் வரை காவல்நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை, ஏதோ பேரம் நடப்பதாகத் தெரிகிறததென்கிற தகவல் எங்களுக்குக் கிடைத்தவுடன் நாங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் எஸ்.எஸ்.பி அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். காவல்துறையினரிடம் அவ்வப்போது விசாரித்து புலன் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டுள்ளதையும் உறுதி செய்து கொண்டோம். நேற்று ஒரு முழு நாளை காரைக்காலில் செலவிட்டு, நிலைமைகளை அறிந்து மாலை எஸ்.எஸ்.பியைச் சந்தித்து பாராட்டுதல்களையும் தெரிவித்தோம். அவரும் நாங்கள் இதை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு எங்களுக்கு நன்றி கூறினார். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் காவல்நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டபின்னும் வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த காவல்துறையினர் மீது துறைவாரி விசாரணையோடு நிறுத்திக் கொள்ளாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரிக்கபட வெண்டும் எனவும் வற்புறுத்தினோம். இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட உள்ளோம். தொடர்ந்து இவ்வழக்கைக் கண்காணிக்கவும் செய்வோம்.

எங்கள் அறிக்கைகளில் அய்யத்திற்கு இடமின்றி உண்மை எனத் தெரிந்தவற்றை மட்டுமே நாங்கள் உறுதிப்படுத்திச் சொல்கிறோம். அப்படி உறுதியாகத் தெரியாதவற்றை ஐயங்களாகவும், அது விசாரிக்கப்பட வேண்டும் என்றும்தான் கூறுகிறோம். என்கவுன்டர் சாவுகளில் கூட கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஏதும் ஐயங்களை முன் வைத்தால் அது தீர விசாரிக்கப்பட வேண்டும் என்றுதான் தேசிய மனித உரிமை ஆணை நெறிமுறை கூறுகிறது. அது எங்கும் பொருந்தும்.

இளவரசனின் மரணம் இயற்கையானதல்ல, அது திட்டமிட்ட கொலை என இளவரசனின் பெற்றோர்கள் கூறினால், அந்தக் குர்றச்சாட்டைக் கவனத்துடன் பரிசீலிப்பது அவசியம். இதன் பொருள் அந்தக் குற்றச்சாட்டை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல. அந்த வகையில் யாரேனும் இளவரசனின் மரணம் கொலைதான் எனச் சொல்லியிருந்தால், அந்த ஐயத்தை அவர்கள் வெளியிட்டதைத் தவறு எனச் சொல்ல இயலாது.

இந்தப் பிரச்சினையைப் பொருத்தமட்டில் மருத்துவர் அவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாங்கள் இளவரசனின் மரணத்தைக் கொலை என எங்கும் வாதிடவில்லை. அதே நேரத்தில் இது தொடர்பான ஐயங்கள் முன்வைக்கப்படபோது காவல்துறையும், நீதித்துறையும் மறு ஆய்வுகளுக்கு ஆணையிட்டுச் சரியாகச் செயல்பட்டதாகவே உணர்ந்தோம். எனவே நாங்கள் இது குறித்து ஏதும் பேசவில்லை என்பதை மருத்துவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

அதேபோல மரக்காணம் கலவரத்தில் வன்னியர் தரப்பில் இருவர் மரணமடைந்தபோது, இரு மரணங்களுமே விபத்துக்கள்தான் எனச் சிலர் கூறியபோதும் எங்கள் அறிக்கையில் ஒரு மரணம் விபத்து எனவும் மற்றது விசாரிக்கப்பட வேண்டும் என்றுதான் கூறியுள்ளோம்.

தருமபுரி திவ்யாவின் தந்தையின் மரணத்தையும் கூட கொலை என்பதாகப் பலரும் கூறியபோது, அப்படியான குற்றச்ச்சாட்டை நாங்கள் எங்கள் அறிக்கையில் உறுதிப்படுத்தவில்லை.

தலித் மற்றும் இஸ்லாமியர் பாதிக்கப்பட்டால் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்கிற குற்ற்ச்சாட்டும் தவறானது. எங்கள் அறிக்கைகளில் சுமார் 20 சதம் மட்டுமே இஸ்லாமியர்கள் தொடர்பானது. ஆய்வாளர் ஆல்வின் சுதனைக் கொன்றதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் இருவரை எந்த அடிப்படையும் இன்றித் தேர்வு செய்து கொண்டு சென்று வெள்ளத்துரை என்கவுன்டர் செய்து சுட்டுக் கொன்றபோது நாங்கள் மட்டும்தான் அதைக் கண்டித்து அறிக்கை அளித்தோம். கொல்லப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினர் என நாங்கள் விட்டுவிடவில்லை. வீரப்பன் கொல்லப்பட்டபோதும் அது ஒரு போலி மோதலாக இருக்கலாம் என்பது குறித்த அறிக்கை அளித்ததோடு மட்டுமின்றி அதைச் சிறு வெளியீடாகவும் கொணர்ந்தோம்.

அதேபோலத்தான் இன்று பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராயினும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் தலித் மற்றும் இஸ்லாமியர் இருந்தபோதிலும் அதை உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.

மரியாதைக்குரிய மருத்துவர் அவர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

காரைக்கால் வன்முறையில் பங்குபெற்றோர் தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்கிற குறிபிட்ட அடையாளத்திற்குரியவர்கள் ஆயினும் தருமபுரி மற்றும் மரக்காணம் கலவரத்திற்கும் இதற்கும் வேறுபாடுகள் உண்டு. இதைச் செய்தவர்கள் கிரிமினல்கள், இவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இதில் அரசியல் நோக்கமோ, இல்லை வெறுப்புப் பேச்சுக்களோ பின்புலமாக இல்லை. இது முற்றிலும் ஒரு குற்றச் செயல். தவிரவும் இதில் conspiracy யும் கிடையாது. டெல்லி வன்முறையைப் போல இது நம் கவலைக்குரிய ஒரு சமூகப் பிரச்சினை. ஒரு ஆணாதிக்கச் சமூகப் பிரச்சினை. பெண்கள் குறித்த சமூக மதிப்பீடுகளை மேம்படுத்துதல், நகர்ப்புறங்களிலும், திருவிழாக் காலங்களிலும் காவல் கண்காணிப்புகளை அதிகப்படுத்துதல், மக்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் என்கிற ரீதியில் அணுக வேண்டிய பிரச்சினை.

ஆனால் தருமபுரி அல்லது குஜராத்தில் நடைபெற்ற கலவரங்கள் என்பன ஒரு வெறுப்பு அரசியலின் விளைபொருளாக நடந்தேறியவை. எனவே இவற்றில் குற்றச் செயல்கள் என்பதையும் தாண்டி அரசியலையும் பேச வேண்டியுள்ளது. அந்தவகையில் இரண்டையும் நாங்கள் நுணுக்கமாக வேறுபடுத்தி அணுகியுள்ளது நூறு சதம் சரியானது என்றே உறுதிபட நம்புகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*