பேரறிவாளன் உள்ளிட்டோர் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கட்சி, சமூக அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் உலக மனித உரிமை நாளான இன்று (10.12.2013), காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

கூட்டத்தில் இரா.அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், கோ.அ.ஜெகன்நாதன், தலைவர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்., வேதா வேணுகோபால், தலைமைச் செயற்குழு உறுபினர் ம.திமுக, உ.முத்து, பொதுச்செயலாளர், அகில இந்திய பார்வட் பிளாக், கு.லெனின், மாநிலச் செயலர், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, ஜெ.சம்சூதீன், பொறுப்பாளர், மனிதநேய மக்கள் கட்சி, ரெ.ராசு, தலைவர், திராவிடர் கழகம், கோ.பிரகாசு, தலைவர், தமிழர் களம், சீ.சு.சாமிநாதன், அமைப்பாளர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு, க.அபுபக்கர், செய்தித் தொடர்பாளர், இந்திய தவ்ஹீத் ஜமாத், கோகுல்காந்திநாத், தலைவர், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், தீனா, தலைவர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், தாமரைக்கோ, செம்படுகை நன்னீரகம், சீனு.தமிழ்மணி, தலைவர், பூவுலகின் நண்பர்கள், பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், புதுவை தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், இரா.சுகுமாரன், தலைவர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம். சூ.சின்னப்பா, தலைவர், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இனவெறிக்கு எதிராகப் போராடிய தென்னாப்பிரிக்க முன்னள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவிற்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை விசாரித்த சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல், அதை திருத்தி எழுதியதாக கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.

2. தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக திருத்தி எழுதப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய நீதி வழங்கும் முறையையே கேள்விக்குள்ளாக்குகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு 22 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை மத்திய ஆரசு உடனே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வீரப்பன் வழக்கில் கர்நாடகா சிறையில் வாடும் சைமன், ஞானப்பிரகாசம், பிளவேந்திரன், மாதய்யன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் இந்தியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி பல்வேறு சிறைகளில் வாடும் அனைவரின் மரண தண்டனையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

4. உலக அளவில் 140 நாடுகள் முற்றிலுமாகவும், 58 நாடுகள் நடைமுறையிலும் மரண தண்டனையை ஒழித்துள்ளன. உலக நாடுகளைப் பின்பற்றி இந்திய அரசு மனித உரிமைகளுக்கு எதிரான மரண தண்டனையை சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்.

5. மரண தண்டனை ஒழிப்பை வலியுறுத்தி வரும் 17.12.2013 செவ்வாயன்று, காலை 10 மணிக்கு, தலைமை அஞ்சலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. பின்னர் தமிழகத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்துவது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*