Archive for the ‘அறிக்கைகள்’

கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்: உண்மை அறியும் குழு அறிக்கை

No Comments →

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். கடந்த ஜூன் 30 முதல் இந்த ஊர் மக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருகிற ‘எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனத்தையும்” (Oil and Natural Gas Corporation – ONGC) அரசையும் எதிர்த்துப் போராடிக் கொண்டுள்ள செய்தி தற்போது தமிழக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. முப்பதாண்டு காலமாகக் காவிரியின் கடைமடைப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து எரிபொருளை உறிஞ்சி எடுத்து, விவசாய நிலங்களுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வதால் தம் நில வளம் மட்டுமின்றி, குடிநீர் உட்பட சுற்றுச் சூழல் பெரிய அளவில் மாசுபடுவதால் ONGC யின் செயல்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இன்று எழுந்துள்ளது. எரிபொருள் கசிவு ஒன்றை ஒட்டி நடந்த பிரச்சினையில் இன்று பத்து பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு மக்கள் தொடர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இது குறித்த உண்மைகளை ஆராய்ந்து மக்கள் முன் வைக்க கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள்

பேரா. அ. மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
இரா. பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,
மு. சிவகுருநாதன், கல்வியாளர், திருவாரூர்,
வி. பி. இளங்கோவன், எழுத்தாளர், அம்மாசத்திரம், குடந்தை,
அகமட் ரிஸ்வான், பத்திரிகையாளர், நாகூர்

இக்குழுவினர் ஜூலை 13, 14 தேதிகளில் கதிராமங்கலம், குற்றாலம், திருவாரூர் மாவட்டத்திலுள்ள விளமல், அடியக்கமங்கலம் முதலான பகுதிகளுக்குச் சென்று போராடும் மக்களைச் சந்தித்தோம். திருவாரூரை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட சிலரைச் சந்தித்தோம். எரிவாயுக் குழாய் வெடித்த பகுதிகளுக்கும் சென்றோம். பாதிக்கப்பட்டு உயிர் வாழும் மக்கள் சிலரது துயரக் கதைகளையும் பதிவு செய்து கொண்டோம். குத்தாலத்தில் அமைந்துள்ள ONGC அலுவலகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் ஜோசப், கார்பொரேட் செய்தித் தொடர்பாளர் ராஜசேகர் ஆகியோருடன் விரிவாகப் பேசினோம். ஜூன் 30 அன்று நெல் வயலொன்றின் வழியே சென்று கொண்டுள்ள எரிவாயுக் குழாய் வெடித்த இடத்திற்கு நாங்கள் சென்று பார்க்க முனைந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் எங்களை அருகே நெருங்க விடாமல் தடுத்தனர். நாட்கள் 15 ஆகியும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் இன்னும் வீசிக் கொண்டுள்ளது. அருகே நெருங்க அனுமதிக்காவிட்டாலும் சுமார் 20 அடி தொலைவில் நின்று குழாய் வெடித்த இடத்தைப் பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம்.

கதிராமங்கலம் மக்கள் சொன்னவை

ஊர் மத்தியில் உள்ள அய்யனார் கோவில் முன்னுள்ள திடலில் இப்போது அந்த ஊர் மக்கள் தினந்தோறும் கூடி நாள் முழுக்கத் தம் கோரிக்கைகளை முழங்கிக் கொண்டும், பார்க்க வருபவர்களிடம் தம் பிரச்சினைகளை விளக்கிக்கொண்டும் அமர்ந்துள்ளனர். நாங்கள் சென்ற அன்று (ஜூலை 13) அப்படி அவர்கள் அமர்வது மூன்றாம் நாள். தினந்தோறும் அந்த ஊரில் ஒரு வார்டைச் சேர்ந்தவர்கள் உணவு சமைத்து மதியம் போராடுபவர்களுக்கு வழங்குகின்றனர். பெரிய அளவில் பெண்கள் பங்குபெறுவது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்த கலையரசி (கபெ) முருகன், ராஜு, கவிஞர் கதிரை முருகானந்தம், அப்போது அங்கு வந்திருந்த திமுக ஒன்றியச் செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சமீபத்தில் நிகழ்ந்தவை குறித்துக் கூறியவை

“கதிராமங்கலம் மிக்க வளம் கொழித்த பூமி, நெல் தவிர நாட்டு வாழை, பச்சை வாழை, மஞ்சள் முதலியன பெரிய அளவில் சாகுபடியான நிலம் அது. எல்லாம் 2010 க்கு முன். அதன் பின் எல்லாம் பழங்கதை ஆயின. பாதி நிலம் இப்போது தரிசாகிவிட்டது. நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் ‘போர்’ மூலம் விவசாயத்திற்காக நீர் எடுக்க 80 அடி துளையிட்டால் போதும். இப்போது 200 அடி துளைத்தாலும் நீர் வருவதில்லை. குடி நீரும் பெரிய அளவில் மாசுபட்டு உள்ளது. குடி நீரில் எண்ணை மிதப்பதைக் காணலாம். தூய நீர் போலத் தோற்றமளிப்பது சிறிது நேரத்தில் மஞ்சளாகி விடுகிறது. ஒரு சிறுவனுக்கு குடி நீராலேயே இருதய நோய் வந்துள்ளது இன்னொரு சிறுவனுக்குச் சதைச் சிதைவு நோய் வந்துள்ளது. எல்லாவற்றிற்கும் காரணம் ONGC ஆழ் துளைக் கிணறுகள் தோண்டி எண்ணை உறிஞ்சுவதோடு அதை வயல்களுக்குக் கீழ் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் 2 கிமீ தொலைவு கொண்டு சென்று பின் விக்ரமன் ஆறு ஊடாக குத்தாலம் கொண்டு சென்று தேக்குவதுதான். இது குறித்த விழிப்புணர்வை பேராசிரியர் ஜெயராமன் அய்யா போன்றவர்கள் எங்களுக்கு ஏற்படுத்தினர்.

“இது குறித்து நாங்கள் பலமுறை அரசு அதிகாரிகளையும் ONGC நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசியும் எந்தப் பயனுமில்லாத நிலையில் சென்ற மே 19 அன்று ONGC நிறுவனம் ஊருக்குள் கொண்டு வந்து ஏராளமான கருவிகளை இறக்கியது. இது ONGC தன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கான முயற்சி என்பதை உணர்ந்த நாங்கள் கூடிச் சென்று தடுத்தபோது அங்கு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. சாலை மறியல் செய்தபோது மாலை 5 மணிக்குள் எல்லாவற்றையும் அகற்றி விடுவதாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால் கண்துடைப்பாகச் சில லாரிகள் அளவு கருவிகள் மட்ட்டுமே திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன.

“தொடர்ந்து ‘சமாதானக் கூட்டம்’ என்கிற பெயரில் மக்கல் பிரதிநிதிகள் அடிக்கடி அழைக்கப்பட்டனர். எங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்துக் கேட்பது என்பதற்குப் பதிலாக அவர்களின் கருத்துக்களை எங்கள் மீது திணிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஊர் மக்களைக் கலந்தாலோசித்து வந்து பேசுவத்ற்கும் உரிய அவகாசம் எங்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படவில்லை.

“இதற்கிடையில் ஜூன் 2 அன்று ஊரில் திருவிழா. காளியாட்டம் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் பெரிய அளவில் போலீஸ் படை கொண்டு வந்து குவிக்கப்பட்டது. திருவிழா நடந்து கொண்டுள்ளதையும் பொருட்படுத்தாமல் கைது செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. திரண்டிருந்த மக்களும் சுமார் 400 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டோம். இரவில்தான் 10 பேர் தவிர இதரர் விடுதலை செய்யப்பட்டோம். சமாதானக் கூட்டத்தில் மக்கள் கருத்துக்களை உறுதியாகப் பேசியதாக அடையாளம் காணப்பட்ட அந்த 10 பேர்களும் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊர் முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டு எங்கும் அச்சம் நிலவியது. நாங்கள் ஊரைப் புறக்கணித்துச் செல்வது என முடிவு செய்து அகன்று ஓட்டைக்கால் திடலுக்குச் சென்று தங்கினோம். கம்பர் வாழ்ந்த பகுதி என இதைச் சொல்வார்கள். சப் கலெக்டர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். உலகத் தரமான குழாய்கள் வழியேதான் இந்த எண்ணை, எரிவாயு எல்லாம் கொண்டு செல்லப்படுகிரது. அது உடையாது, தெறிக்காது, எந்தப் பயனும் இல்லை என்றெல்லாம் அந்த சப் கலெக்டர் உறுதி அளித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இறக்கப்பட்ட கருவிகள் முழுமையாக திருப்பி எடுத்துச் செல்லப்படும் எனவும், நல்ல குடிதண்ணீர் வழங்கப்படும் எனவும் உறுதி வழங்கப்பட்டது.

“இதை ஒட்டி கண்டனக் கூட்டம் ஒன்று குடந்தையில் நடத்தப்பட்டது. இரு முறை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மாசுபட்ட தண்ணீரை எல்லாம் காட்டி நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினோம்..

“இந்நிலையில்தான் ஜூன் 30 காலை வயல் பக்கம் சென்ற பெண்கள் கடும் துர்நாற்றத்துடன் வயலொன்றின் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு கடும் எரி சக்தியுடன் கூடிய வாயுவும் திரவமும் வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்து வந்து ஊருக்குள் கூறினர். அங்கு திரண்ட மக்கள் கூட்டம் சம்பவ இடத்தில் திரண்டது. யாரும் எளிதில் நுழைய இயலாமல் அங்கு கிடந்த முள், புதர் எல்லாவற்றையும் போட்டுத் தடுப்பு அமைத்து மக்கள் அங்கு கூடி நின்றனர். செய்தி அறிந்து அங்கு பெரிய அளவில் போலீஸ் படை கொண்டு வந்து குவிக்கப்பட்டது. “உலகத்தரமான குழாய்” என உத்தரவாதம் அளித்த அதே சப் கலெக்டர் மறுபடியும் மக்களுடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பப்பட்டார். அவருடன் பேச முடியாது என மறுத்தோம். மாவட்ட ஆட்சியர் வந்து பேசி அதன் பின் கசிவை அடைக்கட்டும் என்றோம். மாவட்ட ஆட்சியர் கடைசி வரை வரவில்லை. ஆனால் கடுமையாக அடித்து எங்களை விரட்ட அவர் ஆணையிட்டார். இடையில் தடுப்புக்காக நாங்கள் வெட்டிப்போட்ட அந்த முட்புதர் நெருப்புப் பிடித்தது. இதைச் சாக்காக வைத்துக்கொண்டு கடுமையாக எங்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தி நாங்கள் அங்கிருந்து விரட்டப்பட்டோம். போலீஸ்காரர்கள் கடுமையாக அடித்ததோடு பெண்களை ஆபாசமாகத் திட்டவும் செய்தார்கள். ஜெயராமன் ஐயா உட்பட 10 பேர் கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர். வைக்கோல் போர் ஒன்றை நாங்கள் கொளுத்தியதாக முதலமைச்சர் சொல்வதெல்லாம் முழுப் பொய்.

“அந்த 10 பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்படனும். அவங்க மேல போட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். ONGC யை இங்கிருந்து விரட்டி அடித்து காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஆக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.”

வழக்குகள்

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

1.Cr No. 1262017 us 147, 506(11), 307, 3(1), 148, 294 b, 324,336, IPC 353,436 dt 01-07-2017
2.Cr No 1272017 us 147,341,294 b, 353, 506(1), 505 (1) (b),rw 31 PPd act dt 30-06-2017

இரண்டிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் பேரா. ஜெயராமன், விடுதலைச்சுடர், தருமராஜன், செந்தில்குமார், முருகன், ரமேஷ், சிலம்பரசன், வெங்கட்ராமன், சந்தோஷ், சாமிநாதன்.

ONGC யினால் ஏற்படும்சுற்றுச் சூழல் கேடால் பாதிக்கப்பட்டோர்

1. ஜெயலட்சுமி (க.பெ) பழனிவேல். வயது 60. கதிராமங்லத்திற்குள் உள்ள நறுவெளியைச் சேர்ந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் இரவு 10 மணி வாக்கில் கொல்லைப் பக்கம் சென்றுள்ளார். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலும் கழிப்பறைகள் கிடையாது. வெளியில்தான் செல்ல வேண்டும். அப்படிச் சென்று அவர் உட்கார்ந்த போது ONGC குழாய்கள் இரண்டின் இணைப்பு ஒன்று வெடித்து தீப்பற்றியது. முகத்தில் கடும் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயலட்சுமி கும்பகோணத்தில் உள்ள அன்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சுமார் 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்து உயிர் பிழைத்த அவருக்கு 75,000 ரூ இழப்பீடு அளிக்கப்பட்டது.

2. முத்துசரண் (த.பெ) நாராயணன். வயது 8. மூன்றாம் வகுப்பு படிக்கும் இச்சிறுவன் கூலி வேலை செய்யும் ஒருவரின் மகன். சென்ற ஜனவரியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு பல நாட்களுக்குப்பின் உடனடி உயிர் ஆபத்திலிருந்து தப்பியுள்ளான். இரத்தத்தில் கிருமி கலந்து இதயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இப்படி ஆனதற்குக் குடிநீரே காரணம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்பகுதியில் உள்ள நீர் விஷமானதன் விளைவுதான் இந்தப் பாதிப்பு என அக்குடும்பத்தினர் உறுதியாகக் கூறுகின்றனர்.
எமது குழுவைச் சேர்ந்த சிவகுருநாதன் இவ்வாறு ONGC குழாய்க் கசிவின் விளைவாக அருகில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள சில மரணங்கள் மற்றும் விபத்துகளைக் கடந்த சுமார் எட்டு ஆண்டுகளாகக் கவனத்தில் எடுத்து, நேரில் சென்று விசாரித்துப் பதிவுகள் செய்து வந்துள்ளார். அவரது ஆய்வில் வெளிக் கொணர்ந்துள்ள மேலும் சில உண்மைகள் வருமாறு.

3. ஜூலை 30, 2011 சனி இரவு திருவாரூர் விளமல் – தியானபுரம் சாலையில் குறிஞ்சி நகருக்கு அருகில் ONGC எண்ணெய் எரிவாயுக் குழாயில் லாரி ஏறி தீப்பற்றி எரிந்ததில் லாரி டிரைவரும் கிளீனரும் தீயில் கருகி இறந்தனர். செந்தாமரைச்செல்வி (12) என்ற சிறுமி காயமடைந்தார். அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த அந்த லாரி, அருகில் நின்றிருந்த மினி லாரி, கடை, வீடு, மரங்கள் என அவ்விடத்திலுள்ள அனைத்தும் எரிந்து சாம்பலானது. எரிவாயுக் குழாய் மண்ணுக்குள் புதைக்கப்படாமல் மக்கள் நடமாடும், வாகனங்கள் செல்லக்கூடிய பகுதிகளில் தரை மீது போடப்படும் அளவிற்கு மக்கள் பாதுகாப்பு குறித்து எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் ONGC நடந்துகொண்ட நிலை இதன் மூலம் அம்பலமானது. அதன் பின்புதான் இனி குழாய்களை எல்லா இடங்களிலும் மண்ணுக்குள் புதைப்பது என்கிற நிலையை எடுத்ததாக நாங்கள் சந்தித்த அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.

4. நவம்பர் 18, 2009 அன்று திருவாரூர் கமலாபுரம் அருகே தேவர்கண்ட நல்லூர் – உச்சிமேடு கிராமத்தின் ஆற்றங்கரைத் தோப்பில் காலைக்கடன் கழிக்கச் சென்ற கலியபெருமாள் (35) என்பவர் சிகரெட் பற்ற வைக்க, தீக்குச்சியை உரசியபோது ONGC எரிவாயுக் குழாயில் ஏற்பட்டிருந்த கசிவால் மூங்கில் காடுகள் நிறைந்த அவ்விடமே பற்றியெரிந்தது. கலியபெருமாள் தவிர அங்கு ஏற்கனவே ஒதுங்கியிருந்த குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆனந்தராஜ் (14), சேதுபதி (14) உள்ளிட்ட மூவர் பலத்த காயமடைந்து பின்னர் இவர்களில் ஆனந்தராஜ் இறந்தார்.. கலியபெருமாளும் சேதுபதியும் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினர். சேதுபதி அவரது தந்தை சேகர் ஆகியோரை சிவகுருநாதன் சந்தித்து உரையாடினார்.. சேதுபதி 9ம் வகுப்பு படிக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளது. அவரை சென்னை குளோபல் மருத்துவமனையில் ONGC. நிர்வாகம் அனுமதித்து உயிரைக் காப்பாற்றியது. கோரமான முகத்தைச் சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி இன்னும் செய்யவில்லை. +2க்குப் பிறகு தனியார் ஐ.டி.ஐ.யில் ஃபிட்டர் படிப்பு முடித்த அவருக்கு ஓராண்டிற்கு முன்னர் வெள்ளக்குடி ONGC யில் மெக்கானிக் வேலை தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. அப்போதைய மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கும் கலியபெருமாளுக்கும் இறந்த சக மாணவன் ஆனந்தராஜ் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்துதர ONGC.யை வலியுறுத்தவில்லை என்பதையும் சேதுபதியின் தந்தை பகிர்ந்து கொண்டார்.

ONGC க்கு எதிரான போராட்டங்களில் பங்குபெற்ற சமூக ஆர்வலரும் திருவாரூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான ஜி.வரதராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலான பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. எண்ணெய்க் கசிவால் விவாசாய நிலங்கள் பாழ்படுவது ஒருபுறம், விபத்துகளால் உயிரிழப்புகள் மறுபுறம். மாவட்ட நிர்வாகமும் ONGCயும் இரு வழிகளில் இதனைக் கையாள்கின்றன. ஒன்று போராட்டக்காரர்களை பணம் போன்ற காரணிகளைக் கொண்டு கட்டுக்குள் கொண்டுவருவது, மற்றொன்று, இவர்களைப் பிளவுபடுத்துவது. இங்குள்ள சமூக விரோத சக்திகள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன” என்றார்.

“மரணம், விபத்து, எரிவாயுக் குழாய் வெடிப்பு, கசிவு, விளைநிலம் பாழ், மூங்கில் மற்றும் மரத்தோட்டங்கள் தீயால் கருகுதல், தொடர்ந்து எரிய விடப்படும் எரிவாயுவால் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு, மழைக்குறைவு என ஏதோ ஒரு பாதிப்பு இங்குள்ள பல கிராமங்களில் உண்டு.” என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் என்கிறார் சிவகுருநாதன்.

ONGC சார்பில் சொல்லப்பட்டவை

குத்தாலத்தில் உள்ள ONGC சேகரிப்பு நிலையத்திற்கு நாங்கள் சென்றபோது அங்கு ஏதோ ஒரு ‘மீட்டிங்’ நடக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றுபவராக அறியப்படுகிற நெல் ஜெயராமன் மற்றும் கதிராமங்கலம் கிராமத்தில் 62 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்யும் ஸ்ரீராம் அய்யர் ஆகியோர் அந்த ‘மீட்டிங்கிற்காக’ வந்து சேர்ந்தனர். எங்களை முதலில் சந்திக்க மறுத்த நிர்வாகம் இறுதியில் அவர்களின் ‘மீட்டிங்கிற்கு’ முன் சில நிமிடங்கள் பேசச் சம்மதித்தனர்.

ONGC யின் இப்பகுதித் தலைமையகமான காரைக்காலில் பணியாற்றும் கார்பொரேட் தொடர்பாளர் ஏ.பி.ராஜசேகர் எங்களிடன் சொன்னவற்றின் சுருக்கம்

“ONGC என்பது ஒரு மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனம் (public sector unit). இதை ஒழித்துக் கட்டுவதில் பல்வேறு சக்திகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி இப்பகுதியில் செயல்பட்டு வந்த ONGC மீது இபோது அபாண்டமாக இப்படித் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் உண்மையான பிரச்சினை 2010 முதல் காவிரி நீர் வரத்து பெருமளவில் இல்லாமற் போனதுதான். மழையும் இல்லை. எனவே நீர்மட்டம் இங்கு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் கீழ்இறங்குவது மட்டுமின்றி அதன் உப்புத் தனமையும் அதிகரித்து வருகிறது. ஆந்திரப் பகுதிகளில் கோதாவரி பேசினிலும் நாங்கள் பலகாலமாக இதே முறையில் எரிவாயு மற்றும் திரவ எரிபொருள் எடுத்து வருகிறோம். இங்குள்ளதை விடச் சுமார் 14 மடங்கு அதிகம் எரிபொருள் அங்கு உறிஞ்சி எடுக்கப்படுகிறது. ஆனால் அங்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை புகார்கள் எழும்பவில்லை.

இப்பகுதியிலும் கூட எந்தப் புகாரும் இதுவரை எழுந்ததில்லை. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் செயல்பட்டு வரும் நெல் ஜெயராமன் மற்றும் இப்பகுதியில் 62 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்து வரும் ஶ்ரீராம் அய்யர் ஆகியோர் ONGC பணிகளால் எந்த பாதிப்புகளும் இல்லை என்று கூறுகின்றனர்.”

இப்படிச் சொன்ன அந்த அதிகாரி இது தொடர்பாக ஒரு அறிக்கை ஒன்றை அவர்கள் வெளியிடப் போவதாக எங்களிடம் அதைக் காட்டினார். அதை வாசிக்கக் கேட்டபோது கையெழுத்தான பின் தருவதாகச் சொன்னார். அன்று குத்தாலம் ONGC அலுவலகத்தில் நடைபெற உள்ள ‘மீட்டிங்’ இது தொடர்பானதுதான் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். தொடர்ந்து அந்த அதிகாரி கூறியது

“நாங்கள் பயன்படுத்துவது துளைக் கிணறு முறை பலகாலமாக எல்லா நாடுகளிலும் பயன்படுவதுதான் (conventional drilling). 1984 முதல் நாங்கள் செய்து வருவதுதான். மீத்தேன் எடுக்கும் திட்டத்தில்தான் பக்கவாட்டில் நிலத்தடியில் துளையிடப்படும். அது மரபுவழிப்பட்ட முறை அல்ல (non conventional drilling). இதில் ஆபத்துகள் நேர வாய்ப்புண்டு. ஆனால் தற்போது ONGC இதை முழுமையாகக் கைவிட்டு விட்டது. தவிரவும் செங்குத்தாக ஆழ்துளை இட நாங்கள் பயன்படுத்தும் திரவம் முற்றிலும் விஷமற்றது. எந்த ஆபத்தும் இல்லாதது. CSIR முதலான நிறுவனங்களால் எந்த ஆபத்தும் இல்லாதது என உறுதி வழங்கப்பட்டது.

‘தண்ணீர் மாசுபடுகிறது என்றால் அதற்கும் எங்கள் செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவிரவும் அப்பகுதி மக்களுக்கு ‘டாய்லெட்’ முதலான வசதிகளையும் நாங்கள் செய்துதருகிறோம். அவர்கள் வெளியில் சென்று இப்படிப் பாதிப்படையத் தேவையில்லை.

“ஏதேனும் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாகச் சரி செய்து விடலாம். இந்தப் பிரச்சினையில் கூட ஜூன் 30 அன்று கசிவு ஏற்பட்ட போது அது காலை 8.30 மணிக்கு எங்களுக்குத் தெரிய வந்தது. 8.45 க்கு நாங்கள் அங்கிருந்தோம். 9 மணிக்கெல்லாம் எல்லாம் தயார் நிலையுல் இருந்தது. அன்று மக்கள் அனுமதித்து இருந்தால் அப்போதே எல்லாவற்ரையும் சரி செய்திருப்போம்.”

ஆக தங்களின் நடவடிக்கைகளால் எந்த பாதிப்பும் இல்லை என்ற அந்த அதிகாரிக்கு நாங்கள் 2011ல் விளமலில் ஏற்பட்ட விபத்தில் இருவர் இறந்தது தெரிந்திருக்கவில்லை. அருகில் இருந்த இன்னொரு அதிகாரி அதை ஒத்துக் கொண்டார். தலைமைப் பொறியாளர் ஜோசப், “இங்குள்ள மின்சாரக் கம்பிகளில் ஏற்படும் நெருப்புப் பொறிகள் தெறிப்பதை எல்லாமும் கூட எங்களால் ஏற்பட்டது எனக் கூறுகின்றார்கள்” எனக் கூறி அப்படி ஏதோ ஒரு சம்பவத்தையும் விளக்கினார்.

எமது பார்வைகள்

1. இப்பகுதி மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்கள் வாழ்வாதாரம் அழிந்து வருவதற்கு ONGC இப்பகுதியில் செய்து வரும் பணிகளே காரணம் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். கதிராமங்கலத்தைச் சேர்ந்த பட்டு நெசவாளி வைத்தீஸ்வரன் – கவிதா ஆகியோரின் மகன் வருண் குமார் (17) கடந்த சில ஆண்டுகளாக சதைச் சிதைவு நோய்க்கு ஆட்பட்டுள்ளார். இது மரபணு தொடர்பான வியாயதியாயினும் தங்கள் மரபில் யாருக்கும் இதுவரை இப்படியான நோய்கள் வந்ததில்லை எனச் சொல்லும் பெற்றோர், தங்கள் மகனின் இந்த நோய்க்கு ONGC செயல்பாடுகளே காரணம் என உறுதியாக நம்புகின்றனர்.

2. இப்படியான ஒரு நிலையில் அரசு தலையிட்டு உண்மை நிலையை வெளிக் கொணரவும், உரிய பாதுகாப்புகளை மேற்கோள்ளவும், பாதுகாப்புகள் சாத்தியமே இல்லை எனும் பட்சத்தில் திட்டத்தை விரிவுபடுத்துவதை நிறுத்துவதும், தேவையானால் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளவற்றையும் நிறுத்தி வைப்பதையும் செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு இதைக் கண்டுகொள்ளவே இல்லை. மக்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளையும், அச்சங்களையும் முன்வைத்துப் போராடும்போது காவல்துறையை அனுப்பித் தடியடி நடத்துவது, கைதுகள் செய்வது என்பது மட்டுமே தனது பணி என நினைத்துச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

3. ONGC ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனம். பொதுத்துறை நிறுவனங்களிலேயே இரண்டாவது பெரிய ஒன்று. 68 சத ‘ஈக்விடி ஸ்டேக்’ உள்ள ஒரு லாபம் ஈட்டக்கூடிய துறை. 1958 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவில் 26 பகுதிகளில் தன் பணிகளைச் செய்து வருகிறது. 11,000 கி.மீ நீளமுள்ள வாயுக் குழாய்களை அது பயன்படுத்தி எரிபொருளைக் கொண்டு செல்கிறது. இப்படியான ஒரு நிறுவனம் மக்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ளாமையும், மக்கள் பிரச்சினைகளில் அக்கறையற்றும் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. மக்கள் எதிர்ப்பால் இப்போது மீதேன் எடுப்பது கைவிடப்பட்ட பின்னர் அப்படி எடுப்பது ஆபத்தானது என இன்று ஏற்றுக் கொள்ளும் ONGC அதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது இதை வெளிப்படையாகக் கூறவில்லை. பத்திரிகைச் செய்திகளை விரிவாக ஆய்வு செய்தோமானால் மிகப் பெரிய விரிவாக்கத் திட்டங்களுடன் அது செயல்படுவதும் தேவையானால் சுற்றுச் சூழல் கலந்தாய்வுகளுக்கு விலக்களிக்க அது கோருவதும் விளங்குகிறது. ஆனால் அது குறித்து பகுதி சார்ந்த மக்களிடம் அது உரையாடுவதோ கருத்துக்கள் கேட்பதோ இல்லை. விபத்துக்கள் ஏற்பட்டு மூவர் இறந்தது வரை இந்த ஆபத்தான எரி பொருள் குழாய்களை குடியிருப்புப் பகுதிகள் வழியாகத் தரை மீது கிடத்தப்பட்டிருந்ததி இருந்ததை என்னவென்று புரிந்துகொள்வது. இன்று ONGC செயல்பாடுகளை ஆதரித்து மக்கள் மத்தியில் பேசுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒரு அதிகாரிக்கு அந்தச் சம்பவமே தெரிந்திருக்கவில்லை என்பது ONGC யின் அலட்சியப் போக்கை விளக்கும். இப்படியான விபத்துக்களில் மக்கள் உயிர்கள் பலியாக்கப்பட்ட பின்தான் உரிய பாதுகாப்புகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படும் என்றால் இதன் பொருள் என்ன மக்கள்தான் ONGC யின் சோதனை எலிகளா

4. சுற்றுச் சூழல் ஆய்வு, அது தொடர்பான விதிமுறை கடைபிடிப்பு ஆகியவற்றை மீறுவதில் மிகவும் இகழ் வாய்ந்த வரலாற்றை உடையது ONGC. உரிய விதிமுறைகளைப் பின்பற்றுவது பற்றி அது கவலைப்படுவதே இல்லை. விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனச் சொல்லி காவிரிப் படுகையில் செயல்படும் இதன் எரிவாயுத் தளங்களில் 23-ஐ அனுமதிப்பட்டியலிலிருந்து மத்திய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் (Union Ministry of Environment, Forests and Climate Change) சென்ற மே 17, 2017ல் நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியை மேலோட்டமாக வாசிக்கும்போது சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றில் ONGC பொறுப்பில்லாமல் நடந்துகொண்டாலும், மத்திய அரசு அக்கறையுடனும் பொறுப்புடன் நடந்து கொள்கிறது என்பது போலவும் தோன்றும். நுணுக்கமாகக் கவனித்தால்தான் இரண்டுமே மாநில மக்களைப் பற்றி இம்மியும் அக்கறையற்றுச் செயல்படுவது விளங்கும்.

இன்னொரு செய்தியைக் கவனித்தால் இந்த உண்மை விளங்கும். சுற்றுச் சூழலைப் பாதிக்கவல்ல எந்த ஒரு திட்டமானாலும் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதப்படும் மக்களைக் கூட்டி பொதுக் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்பது விதி. மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தக் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பரிந்துரை செய்வது அவசியம். ஒப்பீட்டளவில் மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசு மக்களுக்கு நெருக்கமாக இருப்பதால் மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அது தயங்கும். சென்ற 2015ல் காவிரிப் படுகையில் மேலும் 35 சோதனைக் கிணறுகளைத் தோண்ட ONGC திட்டமிட்டது. இவற்றில் 14 கடலூர் மாவட்டத்திலும் 9 நாகை மாவட்டத்திலும், 6 அரியலூரிலும், 5 தஞ்சாவூரிலும் அமைந்தன. இவற்றில் கடலூர் தவிர பிற மாவட்டங்களில் கருத்துத்துக் கணிப்புகள் நடந்தன. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துறை வழங்கத் தயங்கியது. சில காலம் பொறுத்திருந்த ONGC சென்ற 2015 மே 19 அன்று மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியது. பொதுக் கருத்துக் கணிப்புக் கேட்பது கால விரயத்தை ஏற்படுத்துகிறது எனவும், இது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதில் தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துகிறது எனவும் ONGC அதனிடம் புகார் கூறியது. அதை அப்படியே ஏற்ற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு உரிய அனுமதியை அளிக்குமாறு சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்தது. அதை ஏற்ற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் சென்ற ஜூன் 9, 2015 அன்று அந்த 35 திட்டங்களுக்கும் மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அனுமதி வழங்கியது.

சென்ற பிப் 15 (2017) அன்று மோடி தலைமையில் கூடிய ‘பொருளாதார விடயங்களுக்கான அமைச்சரவைக் குழு’ (Cabinet Committee on Economic Affairs) 31 பகுதிகளில் இயற்கை வாயு மற்றும் எண்ணை முதலான ஹைட்ரோ கார்பன் வளங்களைத் தோண்டி எடுப்பதற்கான அனுமதியை அளித்தது. 2016ல் உருவாக்கப்பட்ட மோடி அரசின் “கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வயல்கள்” (Discovered Small Fields) திட்டத்தின் கீழ் இந்த அனுமதி அளிக்கப்பட்டது.

சென்ற ஜூன் 28 (2017)ல் அந்த செய்தியின்படி காவிரி டெல்டா பகுதியில் மேலும் 110 சோதனைக் கிணறுகளைத் தோண்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் ONGC அனுமதி கோரியுள்ளது. ஒவ்வொரு கிணறு தோண்டவும் 2 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் எனவும் ‘நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்’ மூலம் உரிய நிலங்கள் குத்தகை அடிப்படையில் கைப்பற்றப்படும் எனவும், உற்பத்தி தொடங்கியவுடன் அந்த நிலங்கள் அவரவர் வசம் திருப்பித் தரப்படும் எனவும் கூறப்படுகிறது.

தவிரவும் இப்போது மத்திய அரசு எல்லாவிதமான ஹைட்ரோ கார்பன்களை எடுக்கவும் ஒரே உரிமத்தை (sigle license) வழங்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் எந்த அனுமதியும் பெறாமலேயே இப்படி ஹைட்ரோ கார்பன்களை உறிஞ்சி எடுக்கத் தொடங்கியுள்ளன. மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியைப் பெறாமலேயே இத்திட்டப்பணிகள் தொடங்கிவிட்டன என மாநில அமைச்சர் கருப்பண்ணன் இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. .

1991லேயே காவேரிப் படுகையிலிருந்து பெரிய அளவில் ஹைட்ரோ கார்பன் வளங்களை உறிஞ்சி எடுப்பதென ONGC திட்டமிட்டது. அப்போது அதனிடம் ஒன்பது “ரிக்”களும் 12 கிணறுகளுமே இருந்தன. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 10 மடங்கு உற்பத்தியை அதிகரிப்பது என அப்போது முடிவு செய்யப்பட்டது. மக்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் அந்தத் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.

5. 2010க்குப் பின் ஏற்பட்ட வறட்சியின் விளைவாகத்தான் எல்லாப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன., அதற்கு முன் மக்களுக்கும் ONGC க்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது போலச் சொல்வதையும் ஏற்க இயலாது. மீத்தேன் எதிர்ப்பிற்கு முன்பே பல இடங்களில் ONGC.யை எதிர்த்துப் போராட்டங்கள் பல நடத்துள்ளன. தொடக்கத்தில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஆகியன டேங்கரில் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது தொடங்கி அவற்றை மறித்து போராட்டங்களும் நடைபெற்றன. தற்போது விளைநிலங்கள் வழியே குழாய் பதித்து எடுத்துச் செல்லும்போதும் உடைப்பு, விபத்து ஏற்படும் காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. .அடியக்கமங்கலம் பகுதியில் விளைநிலங்களில் பெட்ரோலியக் கசிவு மற்றும் எண்ணெய்ப் படலத்தால் பெருமளவு நிலங்கள் பாதிப்படைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கும் கடந்த பத்தாண்டுகளில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. இப்போது டேங்கர்களில் ஆயில் எடுத்துச் செல்லப்படுவதில்லை எனினும் இரவு நேரங்களில் ரகசியமாக இயக்கப்படும் டேங்கர்கள் வழியே எண்ணைய்க் கழிவுகள் வெள்ளக்குடி, கமலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்த உண்மைகலை விளக்கி மக்களின் அச்சத்தைப் போக்க இதுவரை ONGC முயற்சித்ததில்லை. ‘வாட்ஸ் அப்பில்’ பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்றார் எங்களிடம் பேசிய அதிகாரி. அப்படிப் பொறுப்பில்லாமல் சில வாட்ஸ் அப் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன என்பதில் உண்மை இருக்கலாம். அது ONGC தரப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவு என்பதையும், அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அதற்கு உள்ளது என்பதையும் அது ஏற்கவில்லை. இவ்வளவு காலங்களையும் விட இப்போது திடீரென போராட்டங்கள் மேலுக்கு வருகின்றன என்றால் இப்போது அதிக அளவில் போராட்டங்கள் ஊடக வெளிச்சத்திற்கு வருகின்றன. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்திற்குப் பிறகு மக்களின் போர்க்குணமும் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளன என்பதை நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

6. வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களிடம் நேரடியாக்கப் பேசி அவர்களின் ஐயங்களைப் போக்குவது என்பதற்குப் பதிலாக ஒரு சிலரைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கையூட்டு அளித்துத் தமக்கு ஆதரவாக முன் நிறுத்தும் வேலையை ONGC செய்வதாக ஒரு கருத்து மிகப் பரவலாக நிலவுவதை எங்களால் அறிய முடிந்தது.

7. ஜூன் 30 சம்பவங்களைப் பொறுத்தமட்டில் அன்று காலை முதல் மக்கள் அங்கு கூடி நின்று மாவட்ட ஆட்சியர் அங்கு நேரடியாக வர வேண்டும் எனக் கோரியுள்ளனர். ஆபத்தான நிலையில் எரிவாயு கசிந்து கொண்டுள்ள சூழலில் தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் இறுதிவரை அங்கு வந்து மக்களைச் சந்திக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சப் கலெக்டர் ஏற்கனவே கொடுத்த உறுதி மொழிகள் பொய்த்துப் போனபின் மாவட்ட ஆட்சியரின் வாக்குறுதியை மட்டுமே நம்ப முடியும் என்கிற மக்களின் கருத்திற்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பளித்திருக்க வேண்டும். அன்று மட்டும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வந்திருந்தால் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்திருக்கும். தேவை இல்லாமல் தடி அடி நடத்தி, பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து, இன்று அம்மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதை எல்லாம் தவிர்த்திருக்கும் வாய்ப்பை மாவட்ட நிர்வாகமும் ஆட்சியரும் தவற விட்டதும், அன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட தடியடியும் கண்டிக்கத்தக்க ஒன்று.

எமது பரிந்துரைகள்

1. சிறைவைக்கப்பட்டுள்ள பத்து பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் எந்த நிபந்தனைகளும் இன்றி நீக்கப்பட வேண்டும்.

2. காவிரிப் படுகையில் எரிபொருள் தோண்டிவரும் ONGC யின் செயல்பாடுகளின் ஊடாகக் கடந்த காலத்தில் நடைபெற்ற விபத்துகள் மட்டுமின்றி மக்களின் நியாயமான ஐயங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு உரிய விசாரணை செய்ய பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணையத்தில் உரிய ஆலோசனைகள் வழங்க துறை சார்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மனித உரிமைச் செயலாளிகள் ஆகியோர் இணைக்கப்பட வேண்டும். தற்போது ஜூன் 30 அன்று நடைபெற்ற எரிவாயு மற்றும் திரவக் கசிவு தொடர்பாக ONGC அளவில் ஆய்வு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்க இயலாது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல அவர்களின் முடிவு நம்பகத்தன்மை உடையதல்ல.

3. தற்போது கதிராமங்கலம் பகுதியில் ONGC யின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. முழுமையாக இந்த ஆய்வுகள் எல்லாம் செய்யப்பட்டு மக்களின் ஐயங்கள் எல்லாம் தெளிவாக்கப்பட்டு அது ஏற்கப்படும்வரை ONGC யின் பணிகள் இப்பகுதியில் நிறுத்தப்பட வேண்டும்.

4. ONGC இப்பகுதியில் செய்துவருகிற, செய்யத் திட்டமிட்டுள்ள பணிகள், விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவை குறித்து பல செய்திகள் பத்திரிக்கைகளில் அவ்வப்போது வெளி வருகின்றன. பெரிய அளவில் விரிவாக்கப் பணிகள் திட்டமிடப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறது. இவை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை ஒன்றை உடனடியாக ONGC வெளியிட வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்காக அது பலமுறை மத்திய – மாநில அரசு நிறுவனங்களாலும். இது குறித்த ஆர்வலர்களாலும் அது கண்டிக்கப்பட்டுள்ளது. அது குறித்தும் அந்த வெள்ளை அறிக்கை பேச வேண்டும்.

5. எதிர்காலச் செயல்பாடுகள் அனைத்திலும் ஊர் மக்கள் ஏற்றூக் கொள்ளக் கூடிய உள்ளூர்த் தலைவர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து ONGC வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.

6. அமைதியான முறையில், ஆனால் அதே நேரத்தில் உறுதியாகப் போராடி வரும் கதிராமங்கலம் மக்களை இக்குழு பாராட்டுகிறது.

7. போராடுபவர்கள் வாட்ஸ் அப் முதலான நவீன சாதனங்களைப் பயன்படுத்தும்போது அதன் உண்மைத் தன்மைக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேறெங்கோ நடந்த ஒரு விபத்தைக் கதிராமங்கலத்தில் நடந்ததாக ஒரு பொய்யான செய்தி பரப்பப்பட்டதை எங்களிடம் பேசிய அதிகாரி சுட்டிக் காட்டினார். இது போன்ற செய்திப்பரப்பல்களில் நம்பகத் தன்மை மிக மிக முக்கியம் என்பதையும் நாங்கள் நினைவூட்டுகிறோம்.

15.07.2017 அன்று குடந்தையில் பாரதி புத்தகாலயத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். குருசாமி காலமானார் – வீரவணக்கம்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (1.7.2017) விடுத்துள்ள அறிக்கை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மத்திய அரசின் தாமிர பட்டய விருதுப் பெற்ற புதுச்சேரி சுதந்திரப் போராட்ட தியாகி என்.குருசாமி மறைவுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம்.

1922ம் ஆண்டு பிறந்த என்.குருசாமி 1959ம் ஆண்டு முதல் மக்கள் பிரதிநிதிச் சபையிலும், சட்டசபையிலும் உறுப்பினராக இருந்தவர். 1963 முதல் 1968ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் கொறடாவாகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

1960 முதல் 1985ம் ஆண்டு வரையில் 25 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலராக இருந்து திறம்பட செயல்பட்டவர். மேலும் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினராகவும் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராகவும் இருந்தவர். புதுச்சேரியின் அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அரசியலில் அப்பழுக்கற்ற தலைவரான இவர் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்பவர். இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கட்சித் தோழர்கள் என அனைவருக்கும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மயிலாடுதுறை கோட்டம் திருநாள்கொண்ட சேரியில் பொதுச் சாலை வழியே தலித் பிணங்களை எடுத்துச் செல்ல எதிர்ப்பு – அறிக்கை

No Comments →

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள வழுவூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த திருநாள்கொண்ட சேரி எனும் சிற்றூரில் கடந்த இரு மாதங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்தபோது அவர்களின் உடல்களை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டு தமிழகம் அளவில் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு நிகழ்வாக இன்று இது ஆகியுள்ளது. இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

1 பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisationas – NCHRO), சென்னை,

2. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for Peoples Rights – FPR), புதுச்சேரி,

3. இரா. முருகப்பன், (இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் -SASY), திண்டிவனம்,

4.புரட்சிமணி, தலைவர், நீலப்புலிகள் இயக்கம், கும்பகோணம்,

5. இரா. பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,

6. சு.அப்துல் ரஹ்மான், மாவட்டச் செயலாளர், வெல்ஃபேர் பார்டி ஆஃப் இன்டியா, கும்பகோணம்,

7. எஸ்.வீரச்செல்வன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ), மயிலாடுதுறை,

8. இல.திருமேனி, வழக்குரைஞர், விடுதலைச் சிறுத்தைகள், கடலூர்,

9. ஏ.கங்காதரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மயிலாடுதுறை,

10. ராஜவேலு, பகுஜன் சமாஜ் கட்சி, கும்பகோணம்,

11. முகமது யூனுஸ், ஜமாதே இஸ்லாமி, கும்பகோணம்,

12. பி.ப.பாலு, நீலப்புலிகள் இயக்கம், கும்பகோணம்.

13. சுந்தர்ராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ), மயிலாடுதுறை

14.அ.சஃபிக்குர் ரஹ்மான், மாவட்டத் தலைவர், வெல்ஃபேர் பார்டிஆஃப் இன்டியா, நாச்சியார்கோவில்

இக்குழுவினர் ஜனவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை, திருநாள்கொண்ட சேரி, வழுவூர் முதலான பகுதிகளுக்குச் சென்று இருதரப்பு மக்களையும் சந்தித்தனர். வழுவூர் பஞ்சாயத்துத் தலைவர் செந்தில்நாதனிடம் தொலைபேசியில் விரிவாகப் பேசினர். நாகை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அபிநவ்குமார், சீர்காழி துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன், பெரம்பூர் ஆய்வாளர் குலோத்துங்கன் முதலியோருடன் தொலைபேசியில் பேசினர். இந்தப் பிரச்சினையை நான்கு மாதங்களாகக் கையாண்டு வரும் கோட்டாட்சியர் (RDO) கிருஷ்ணம்மாள் அவர்களை நேரில் சந்தித்து மிக விரிவாகப் பேசினர்.

சம்பவங்களும் பின்னணியும்

வழுவூர் பஞ்சாயத்தில் ஒரு பகுதியாக உள்ள திருநாள்கொண்ட சேரியில் மொத்தம் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் தலித் குடும்பங்கள் சுமார் 150 வரை உள்ளன. தலித் அல்லாதோரில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தலித்கள் திருநாள்கொண்ட சேரி, வடக்குத் தெரு, மேலத் தெரு எனப் பிரிந்துள்ளனர். திருநாள் கொண்ட சேரியில் மட்டும் சுமார் 28 தலித் குடும்பங்கள் உள்ளன. தலித்களுக்குத் தனியாகவும், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குத் தனியாகவும் சுடுகாடுகள் உள்ளன. சுடுகாடுகள் தனியாக இருப்பது மட்டுமல்ல சுடுகாடு செல்லும் பாதைகளும் தனித்தனியாக உள்ளன. இன்னும் சரியாகச் சொல்வதானால் தலித்களுக்கான சுடுகாட்டுக்குச் செல்ல பாதையே இல்லை எனலாம். யாரேனும் இறந்து போனால் மேற்கே உள்ள வடக்குத் தெரு எனும் தலித் பகுதிவரை சுமார் ஒரு கி.மீ தூரம் வயல் வரப்புகள் மேல் உள்ள ஒற்றையடிப் பாதையில்தான் இறந்தவர்களை பாடையில் வைத்துத் தூக்கிச் செல்ல வேண்டும். மழைக்காலம் என்றால் மேலும் சிக்கல். இப்படி ஒரு கி.மீ கடந்தபின் வடக்குத்தெருவின் சுடுகாட்டுப்பாதை தொடங்குகிறது. சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் அந்தப் பாதையும் முடிந்து தலித்களின் சுடுகாடு அமைந்துள்ள கடலாழி ஆற்றங்கறைக்கு மறுபடியும் சுமார் அரை கி.மீ தூரம் ஒற்றையடிப் பாதையில்தான் செல்ல வேண்டும்.

வடக்குத் தெருவரை உள்ள இந்த ஒரு கி.மீ வரப்புப் பாதையில் பிணங்களைத் தூக்கிச் செல்கிற கொடுமையைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி திருநாள்கொண்ட சேரியின் பொதுப் பாதை வழியே சுற்றிச் சென்று வடக்குத் தெருச் சாலையை அடைவதுதான். இதனால் பாதையின் தூரம் சுமார் ஒரு.கி.மீ அதிகமானாலும் கூட அதுதான் ஒரே சாத்தியமான வழி.

எனினும் தலித்கள் தம் வீடுகள் இருக்கும் இந்த வீதி வழியே பிணம் தூக்கிச் செல்வதற்குப் பிற சாதியினர் அனுமதிப்பதில்லை. இதுகாறும் தலித்களும் அதைச் சகித்து வந்துள்ளனர்.

அதேபோல ஊர் நடுவே நடுநாயகமாக வீரட்டேசுவரர் கோவில் உள்ளது. தலித்களின் பகுதிகளில் தனித்தனியே காளியம்மாள் மற்றும் மாரியம்மாள் கொவில்கள் உள்ளன. திருநாள்கொண்ட சேரிக் கிராமத்தைச் சுற்றிப் பிற்படுத்தப்பட்டோர் அதிக அளவில் வசிக்கும் பல கிராமங்களில் உள்ள இதுபோன்ற சிறு கோவில்களில் ஆண்டுதோறும் ஒரு வழக்கமுண்டு. வீரட்டேசுவரர் கோவில் குளத்தில் நீரெடுத்து வீரட்டேசுவரர் ஆலயத்தில் வைத்து வழிபட்டு அதைக் கரகமாகச் சுமந்து ஊர்வலமாகக் கொண்டு சென்று தம் ஆலயங்களில் அபிஷேகம் செய்வர். ஆனால் திருநாள்கொண்ட சேரியின் காளியம்மாள் கோவிலுக்கு இந்தக் கரக ஊர்வலம் அனுமதிக்கப்படுவதில்லை.
காலமாற்றம் தலித் மக்கள் மத்தியில் அரசியல் உணர்வையும் சமத்துவ வேட்கையையும் பெருக்கி வருகிறது. இதுபோன்ற ஒதுக்கங்களை இனிமேலும் பொறுக்க இயலாது எனும் உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருநாள்கொண்ட சேரி தலித் மக்கள் தாங்களும் வீரட்டேசுவரர் கோவிலிலிருந்து கரகம் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தபோது அதைப் பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஏற்கவில்லை. பிரச்சினை உருவாகியபோது இது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு அறநிலையத் துறையிடம் விடப்பட்டது. வீரட்டேசுவரர் கோவில் அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள ஒரு ஆலயம். அப்படியான வழக்கம் இல்லை என அறைநிலையத் துறையும் கைவிரித்தது. இறுதியில் எந்தச் சுற்று வட்டார ஆலயத்திற்கும் வீரட்டேசுவரர் கோவிலில் இருந்து கரகம் எடுக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது. ஆக, காலங் காலமாக இருந்து வந்த வழமையை ஒழித்துக்கட்டக்கூட நாங்கள் தயார், ஆனால் தலித் மக்களுக்குச் சம உரிமை அளிக்க இயலாது என்பதுதான் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலைபாடாக இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் சென்ற நவம்பர் 26 (2015) அன்று திருநாள்கொண்டான் சேரி தலித் பகுதியை சேர்ந்த செல்லமுத்துவின் மனைவி எழுபது வயதுக்கும் மேற்பட்ட குஞ்சம்மாள் இறந்தார். அது கடுமையான மழைக் காலம். அதுவும் இந்த ஆண்டு பெய்த பேய் மழையை நாம் அறிவோம். வரப்புப் பாதையின் வழியே குஞ்சம்மாளின் உடலை அந்த மழை வெள்ளத்தின் ஊடாகத் தூக்கிச் செல்ல இயலாத நிலையில் தலித்கள் பொதுச்சாலை வழியே தூக்கிச் செல்லக் கோரிக்கை விடுத்தபோது அதை பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுமதிக்கவில்லை. ‘பிற்படுத்தப்பட்டோர்’ எனில் அதில் வன்னியர், தேவர், கோனார் எனப் பல சாதியினர் உள்ளபோதும் வன்னியர்களே இங்கு எண்ணிக்கையில் மிக அதிகமானோர். பிணம் தூக்கிச் செல்லும் பிரச்சினையில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடிக்கும் நிலையில் அரசு தலையிட்டது. கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள் வந்து உடன்பாடு ஏற்படுத்த முனைந்தார். தலித்களுக்கான அந்த வரப்புச் சாலையை விரைவில் நிரந்தரமாகத் திருத்தி அமைத்துத் தருவதாகவும் தற்போது தற்காலிகமாக அந்த வரப்புப் பாதையைத் திருத்தித் தருவதாகவும் அதன் மீது பிணத்தைத் தூக்கிச் செல்லுமாறும் தலித்கள் வற்புறுத்தப்பட்டனர். ஆக ஆதிக்க சாதியினர் என்ன சொன்னார்களோ அதையே அரசும் வழிமொழிந்தது. தலித்கள் அதை ஏற்கவில்லை. நான்கு நாட்கள் குஞ்சம்மாளின் உடல் அழுகிக் கிடந்தது. 30ம் தேதியன்று களத்தில் இறங்கிய காவல்துறை உடலை வன்முறையாகக் கைப்பற்றி, தடுக்க முயன்ற மக்களை மிரட்டி, பிணத்தைத் தூக்கிச் சென்றது. “பிணத்தை எரிச்சாங்களா, புதைச்சாங்களா எங்கேயாவது தூக்கி எறிஞ்சாங்களா எங்களுக்கு ஒண்ணும் தெரியாது செத்தவுங்களுக்குச் செய்யிற எந்தச் சடங்கையும் நாங்க செய்யல” என குஞ்சம்மாளின் பேரன் நெடுமாறன் எங்களிடம் கூறினார்.

அடுத்த ஐந்தாவது வாரம், ஜனவரி 3 (2016) அன்று குஞ்சம்மாளின் கணவரும் எண்பது வயதுப் பெரியவருமான செல்லமுத்து இறந்தார். மீண்டும் அதே பிரச்சினை. இம்முறை திருநாள்கொண்டான் சேரி தலித்கள் நீதிமன்றத்தை நாடினர். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்த வழக்குரைஞர் ரஜினிகாந்த் அடுத்த நாள் (ஜன 4), “சர்வே எண் 103 (1பி) எண்ணில் உள்ள பொதுச் சாலை வழியே செல்லமுத்துவின் உடலை எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்ய உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என நீதிமன்ற ஆணை ஒன்றைப் பெற்றார் (ரிட் மனு எண் 99, 2016 சென்னை உயர் நீதிமன்றம்).

இதற்கிடையில் தலித்களுக்கான தனிச் சுடுகாட்டுப்பாதை மூன்று மாதத்திற்குள் முழுமையாகச் சீர்திருத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள உறுதி அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் அடுத்த நாள் (ஜன 5) முன்வைக்கப்பட்டது. தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை சீர்திருத்தபடாமல் உள்ளது என்பதற்கு ஆட்சியரின் இந்தத் தகவலே சான்று; எனவே பொதுப்பாதையில் உடலைச் சுமந்து செல்ல நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என தலித்கள் தரப்பில் கோரப்பட்டது. அந்த அடிப்படையில் நீதிமன்றம் ஜன 5 அன்று கீழ்க்கண்ட மூன்று அம்சங்களுடன் கூடிய ஆணையை இட்டது. அவை: 1. செல்லமுத்துவின் உடலை உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்ய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 2. ஆட்சியர் வாக்குறுதிப்படி மூன்று மாதத்திற்குள் தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையை அரசு சீர்திருத்தம் செய்ய வேண்டும். 3. பொதுப்பாதையைப் பயன்படுத்தி மனுதாரர் இறுதிச்சடங்குகள் செய்ய அரசு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

பொதுப்பாதையைப் பயன்படுத்தி தலித்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இத்தனை தெளிவாக நீதிமன்ற ஆணை இருந்தபோதும் அங்கு இருந்த டிஐஜி செந்தில்குமார், நாகை மாவட்டக் கண்காணிப்பாளர் அபினவ் குமார், திருவாரூர் மாவட்டக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள் முதலான அதிகாரிகள் நீதிமன்ற ஆணையை நிறைவேற்றத் தயாராக இல்லை. ஜன 6 காலை சுமார் 300 காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜும் வந்திருந்தார். ஆதிக்க சாதியினர் ஆத்திரத்துடன் திரண்டிருந்தனர். நிலைமை தங்களுக்கு எதிராகப் போவதை உணர்ந்த தலித்கள் வீட்டுக்குள் நுழைந்து தாங்கள் கூண்டோடு தீக்குளிக்கப்போவதாக அறிவித்து மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றிக் கொண்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு எஞ்சின்கள் முதலியன வரவழைக்கப்பட்டன. மின்சாரம் நிறுத்தப்பட்டது. மக்கள் ஒடுங்கியிருந்த வீட்டுக்குள் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது. தலித்கள் அப்படியும் பணியாததைக் கண்ட அரசு அதிகாரிகள் மிகக் கேவலமான முறையில் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கினர்.

நீதிமன்ற ஆணையை நிறைவேற்றுவதாகவும் பொதுப்பாதை வழியே உடலைத் தூக்கிச் செல்வதாகவும் அறிவித்தனர். இதை நம்பி தலித் மக்ககள் வெளியே வந்தனர். செல்லமுத்துவின் உடலை இப்படித் த்ந்திரமாகக் கைப்பற்றிய காவல்துறையினர் சுமார் நூறு மீட்டர் தொலைவு தாண்டியவுடன் கைவரிசையத் தொடங்கினர். பிணத்தைப் பொதுப்பாதை வழியாக அல்லாமல் பழைய வரப்புப் பாதையிலேயே கொண்டு சென்றனர். இன்னொரு பக்கம் தலித் மக்கள் மீது கடுமையாக தடியடித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஓடி ஒளிந்த ஒரு சில பெண்கள் தவிர சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நாகைக்குக் கொண்டு சென்று ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இரவில் பெண்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். அடுத்த நாள் 35 பேர்கள் மீது வழக்கு (எண் 5/16, இ.த.ச 294 (பி), 363, 506 P (1)) பதிவு செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் வீடுகளுக்குக் கொண்டு வந்து விடப்பட்டனர். அதில் 31 பேர் சிகிச்சை கோரி அடுத்த நாள் மருத்துவமனைகளில் சேர்ந்தனர். நான்கு பேர்களுக்கு லத்தி தாக்குதலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன எனவும் இருவர் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் எங்களிடம் கூறினர்.

35 தலித்கள் மீது வழக்குப்போட்டதற்கு ஈடாக நாங்கள் ஆதிக்க சாதியினர் மீதும் வழக்குத் தொடர்ந்தோம் எனச் சொல்வதுபோல அவர்களில் 15 பேர்கள் மீது மட்டும் வழக்கு (எண் 4/16 பெரம்பூர் காவல் நிலையம் இ.த.ச 143 188, 253 56 பி (1)) தொடரப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வன்முறைக்குக் காரணமான ஆதிக்க சாதியினரைக் காட்டிலும், வன்முறையால்பாதிக்கப்பட்ட தலித் மக்கள் இரு மடங்கு அதிகம் வழக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.
கைது செய்து கொண்டுபோகப்பட்டவர்கள் தவிர ஊரிலேயே வீடுகளில் ஒளிந்திருந்தவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர் எனவும் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டதாகவும் எங்கள் குழுவிடம் பலர் புகார் கூறினர். இதனால் மல்லிகா, ஜெகதாம்பாள் எனும் இருவர் திருவாரூர் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர நேரிட்டது
மனைவி குஞ்சம்மாளைப் போலவே கணவர் செல்லமுத்துவும் காவல்துறையால் எவ்விதச் சடங்குகளும் இன்றி அடக்கவோ எரிக்கவோ செய்யப்பட்டார். எண்பதாண்டு வாழ்ந்த அந்தப் பெரியவருக்கு தமிழ்ச் சமூகம் இப்படி விடை அளித்தது.

இன்று தலித்கள் தமது ஊர் ஆதிக்கசாதியினரால் மட்டுமல்ல அரசாலும் தாம் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கின்றனர். “இது மட்டுமல்ல நாங்கள் என்றைக்கு எங்களின் உரிமைகளைக் கேட்க முனைந்தோமோ அன்று முதல் புறக்கணிக்கப்படுகிறோம். நாங்கள் வேலைகளுக்கு அவர்களைத்தான் நம்பி இருக்கிறோம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. எங்களிடம் உள்ள கொஞ்ச நஞ்ச நிலத்தில் விவசாயம் செய்வதற்குத் தண்ணீரும் கொடுப்பதில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ளதும் அவர்கள்தான். எங்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுப்பதில்லை. எங்கள் பக்கத்தில் உள்ள சாலைகளைப் பாருங்கள். அவர்கள் பக்கம் உள்ள சாலைகளையும் பாருங்கள்” என்றனர் தலித்கள். சாலைகளைப் பற்றி அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை என்பதை நாங்கள் கண்டோம். அது மட்டுமல்ல தலித்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் எந்தப் பராமரிப்பும் இன்றி சிதைந்து கிடக்கின்றன. தலித்கள் பகுதியில் உரிய முன்னேற்றங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டதோடு தான் பொறுப்பேற்ற பின் சில நலத் திட்டங்களை அப்பகுதியில் நிறைவேற்ற முனைந்துள்ளதாகவும் கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாளும் கூறினார். தங்களுக்கு ‘தாட்கோ’ கடன் கொடுப்பதிலும் சிக்கல்கள் ஏற்படுத்துவதாக ஒரு தலித் இளைஞர் குறிப்பிட்டார்.

ஆனால் இவற்றை அதிக்க சாதியினர் மறுத்தனர். ஆதிக்க சாதியினர் என நான் குறிப்பிடாலும் அதில் பெரும்பான்மையாக இருந்து ஆதிக்கம் செய்வது வன்னியர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. 20 ஆண்டுகளாக ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவரும் அ.தி.மு.க நகரச் செயலருமான வி.ஜி.கே.செந்தில்நாதனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் எங்களிடம் கனிவாகப் பேசினார். வழக்கமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் மேல்தட்டில் இருப்போர் பேசுவது போலவே அவரும், “இங்கு தீண்டாமை இல்லை. எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். சில தலித் இளைஞர்கள் சொந்த லாபத்துக்காக அந்த மக்களைத் தூண்டி விடுகிறார்கள். பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை வைத்துக் கொண்டு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்துள்ளோம்…” என்றார். அவரது தம்பி வி.ஜி.க மணிகண்டன் பா.ம.கவில் ஒரு முக்கிய தலைவர்.

“இருக்கட்டும் அய்யா, காலம் மாறுகிறது. சம உரிமைகளை எல்லோரும் கேட்கக்கூடிய காலம் இது. நகரங்களில் உள்ள மாதிரி பொதுப்பாதை, பொதுச் சுடுகாடு இதை எல்லாம் இனிமே மறுக்க முடியாது. உங்கள் ஊரிலும் இந்தக் கோரிக்கைகளை தலித் இளைஞர்கள் எழுப்புவதை நீங்கள் இந்தக் கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள தனிச் சுடுகாடு, தனிப்பாதை இதை எல்லாம் மாற்றி அமைத்தால் என்ன?” என நாங்கள் கேட்டபோது. “மாத்தலாம் ஆனா ஜனங்க ஒத்துக்கணுமே..” என்றார் ஊராட்சித் தலைவர்.

வன்னியர் தரப்பில் நாங்கள் பேசியபோது பாலகிருஷ்ணன் எனும் பெரியவர், “ஆமா, நகரங்கள்ல எல்லாம் நடக்குதுதான். மாற்றங்கள் வருந்தான்” என்றார். “அப்ப, சுடுகாடு, பாதை எல்லாத்தையும் பொதுவாக்கலாம் என்கிறதுதான் உங்க தரப்பு கருத்துன்னு எடுத்துக்கலாமா?” என நாங்கள் கேட்ட போது, “என் கருத்து அது. ஆனால் எல்லாருக்கும் சேர்த்து நான் கருத்து சொல்ல முடியாது” என்றார். அங்கிருந்த சில இளைஞர்கள் இங்கு தீண்டாமையே இல்லை என்றனர். தங்கள் பக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து தலித்களின் சாமியை எடுத்துச் சென்றுதான் தலித்களின் பக்கத்தில் உள்ள கோவிலில் வைத்ததற்கு வீடியோ ஆதாரம் உள்ளது எனவும், தலித் மக்களின் கோவிலைச் சீர்திருத்த தாங்களும் நிதி உதவியதாகவும் ஒரு இளைஞர் கூறினார். “பிணங்களைத் தூக்கிச் செல்ல அரசாங்கம் நல்ல சாலை அமைத்துத் தருகிறது. அதை விட்டுவிட்டு ஒரு கிமீ அதிகம் சுத்திவந்து எங்க தெரு வழியாத்தான் பிணத்தைக் கொண்டு போகிறோம் எனச் சொல்றது வீண் விதண்டாவாதம்” என இன்னொரு இளைஞர் கூறினார். எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கடைசியாகச் சொன்னார் : “இந்த ஊர்ல பெரிய அநியாயம் நடக்கிற மாதிரி இல்லாததை எல்லாம் டிவியிலையும், ஃபேஸ் புக் மாதிரி ஊடகங்கள்ளையும் எழுதுறாங்க. நீதிமன்றத்தில போய் ஆணையெல்லாம் வாங்கலாம் சார். ஆனா நீதிமன்றம் வந்து இங்கே உயிருக்குப் பாதுகாப்புக் கொடுக்க முடியாது. நடக்கிறதை எல்லாம் பார்த்தா மிகப் பெரிய விபரீதம்தான் நடக்கப்போகுது..” என எச்சரிக்கும் குரலில் கூறியதைக் கேட்கக் கவலையாக இருந்தது.

அதிகாரிகளின் கருத்து

எஸ்.பி. அபினவ்குமாரிடம் தொலைபேசியில்தான் பேச முடிந்தது. ஏதாவது அமைதிக் கூட்டம் நடத்த உத்தேசம் உண்டா எனக் கேடபோது “ஏற்கனவே நிறைய நடத்தியாகிவிட்டது இப்போது அப்படி ஏதும் திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார். நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாமல் நேர் எதிராக அன்று நடந்து கொண்டது ஏன் எனக் கேட்டபோது, “இது நீதிமன்ற ஆணையை வைத்துக்கொண்டு விவாதிக்க வேண்டிய ஒன்று” என்றார். அப்படி என்றால் நீதிமண்ற ஆணையின்படிதான் அன்று எல்லாம் நடந்ததா எனக் கேட்டபோது நான் இப்படியெல்லாம் கருத்துக் கூற விரும்பவில்லை. நேரில் விவாதிக்க வேண்டிய ஒன்று இது” என்றார். நேரம் ஒதுக்கினால் வந்து சந்திக்கிறோம் எனக் கேட்டபோது இன்று சாத்தியமில்லை என்றார். நாங்கள் அடுத்த நாள் பத்திரிகையாளர் சந்திப்பை அறிவித்துவிட்டதால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாளைச் சந்தித்தபோது அவர் இது குறித்து விரிவாக விளக்கினார். பொதுப்பாதையில் உடலைக் கொண்டு செல்ல ஆணை கோரியபோது, ”தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட சர்வே எண் 103 (1பி) யில் உள்ள சாலை” என்பதற்குப் பதிலாக “Common pathway in SR No 103 (1B)” எனத் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளதை தங்களுக்குச் சாதகமாக அரசு அதிகாரிகள் எடுத்துக் கொண்டுள்ளனர். நீதிமன்றம் ஜன 4 அன்று அளித்த தற்காலிக ஆணையில்தான்ந்து போலக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அடுத்த நாள் நிரந்தர ஆணை அளித்தபோது, மேற்குறிப்பிட்ட இந்தப் பாதை திருத்தப்பட வேண்டும் என ஆட்சியரே ஒத்துக்கொண்டதை வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்ட, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்டு, பிணத்தைப் “பொதுச்சாலை வழியாக” எடுத்துச் செல்ல வேண்டும் எனத் தெளிவாக “using the public road” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதிகார வர்க்கம் இதைத் திரித்து தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட தீண்டாமைப் பாதையைத்தான் நீதிமன்றம் “public road” எனக் குறிப்பிடுவதாக விளக்கம் அளிப்பது படு கேவலமான தந்திரம். நீதிமன்ற ஆணை ஒன்றை இதைவிடக் கேவலமாக யாரும் அவமதித்துவிட இயலாது.

கோரிக்கைகள்

1. நீதிமன்ற ஆணை புறக்கணிக்கப்பட்டதோடு, அது குறித்த திரிக்கப்பட்ட விளக்கத்தைச் சொல்லி வரும் காவல்துறை உயர் அதிகாரிகளான டி.ஐ.ஜி மற்றும் நாகை, திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நீதிமன்றம் இதை suo moto வாகக் கவனத்தில் எடுத்து நீதிமன்ற ஆணையில் குறிப்பிடப்படும் ஐந்து அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

3. தலித்கள் இறந்தோரைப் பொதுப்பாதையில் தூக்கிச் செல்வதைத் தடுத்தவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். குற்ற நடைமுறைச் சட்டம் 109 பிரிவின் கீழ் அழைக்கப்பட்டபோது சிலர் வருவதில்லை என தலித் தரப்பில் எங்களிடம் சொல்லப்பட்டது. அது உண்மையாயின் வராதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் உரிய பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும்.

4. தலித்களுக்கான தனிச் சுடுகாட்டுப் பாதை அமைக்கும் அரசுத் திட்டம் கைவிடப்பட வேண்டும். அப்படி அந்தப் பாதை அமைக்கப்பட்ட போதிலும் அதில்தான் தலித்கள் பிணங்களைத் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்தக்கூடாது. பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான பொதுச் சுடுகாட்டிலேயே தலித்களும் இறந்தோருக்கு இறுதிச்சடங்குகள் செய்யவும் இதற்கெனப் பொதுப் பாதையைப் பயன்படுத்தவும் உடன் வழி வகுக்க வேண்டும். இதற்குத் தடையாக இருப்பவர்கள் யாராயினும் அவர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.

5. இந்தப் பகுதியில் பல ஊர்களில் இந்தச் சுடுகாட்டுப் பிரச்சினை உள்ளது. குடவாசல் அருகில் உள்ள சிறுகளத்தூர் எனும் ஊரிலும் இவ்வாறு தலித்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என விடுதலை தலித் புலிகள் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன் எங்களிடம் கூறினார். இது குறித்து ஆய்வு செய்து இந்நிலையை ஒழிக்க அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.

6. திருநாள்கொண்டான் சேரி கிராமத் தலித்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் தாக்கப்பட்டும் உள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். இவர்கள் 35 பேர்களுக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளவாறு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். இந்த 35 பேர்கள் தவிரவும் மல்லிகா, ஜெகதாம்பாள் முதலான தலித் பெண்கள் காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

7. உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆதிக்க சாதியினரின் ஆளுகையில் தலித்கள் பாதிக்கப்படுவதற்கு திருநாள்கொண்டான் சேரி கிராமம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அரசியல் சட்ட அவையில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த நாட்டிற்கு பஞ்சாயத்து ராஜ் என்பது பொருத்தமற்றது என வாதிட்டதன் பொருளை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. தலித் மக்கள் அனைவரும் தாம் வசிக்கும் இடங்களுக்கு வீட்டு மனைப் பட்டா இல்லாமல் உள்ளனர். அதனால் அவர்கள் கல்விக் கடன் உட்பட உதவிகள் பெற இயலாதவர்களாகவும் உள்ளனர். இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை உடனடியாக வழங்க வேண்டும்.

8. அச்சம் தரும் சூழல் நிலவுவதால் தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.

9. மாறிவரும் சூழலில் தலித் மக்களின் நியாயமான சம உரிமைக் கோரிக்கைகளை பிற்படுத்தப்பட்ட சாதியினர் மதிக்க வேண்டும் என்கிற கருத்தை இவர்கள் மத்தியில் செல்வாக்கு வகிக்கும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மாறாக இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சாதியினரும், தலித்களும் பிளவுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு லாபமாக அமையும் என்கிற கோணத்தில் சில அரசியல் கட்சிகள் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

10. தேர்தலை ஒட்டி இவ்வாறு இப்பகுதியில் ஆங்காங்கு கலவரங்கள் ஏற்படுவது கவலை அளிக்கிறது. திருவாவடுதுறை திருவாலங்காடு பகுதியில் சென்ற மாட்டுப் பொங்கல் அன்றும் அடுத்த நாளும் இப்படி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மோதல்கள் நடந்துள்ளன. போலீஸ் தடியடித் தாக்குதல் நடத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கவிதா என ஒரு பெண்ணுக்கும் தலித் இளைஞர்கள் ஆறு பேர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அப்பகுதிக்கும் எங்கள் குழு சென்று வந்தது. குத்தாலம் காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவன் மற்றும் பிரச்சினைக்குரிய இடத்தில் காவல் பொறுப்பில் இருந்த ஆய்வாளர் சுகுணா ஆகியோரிடம் விரிவாகப் பேசினோம். தலித்கள் மீது இரு வழக்குகளும், பிற்படுத்தப்பட்டோர் மீது இரு வழக்குகளும் போடப்பட்டுள்ளன. தலித்களில் 19 பேர்களும், பிற்படுத்தப்பட்டோரில் 21 பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் மீது போடப்பட்ட வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் படன்படுத்தப்பட்டபோதிலும் 3 (1) (X) பிரிவு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சாதிப் பெயர் சொல்லி இழிவு செய்ததை மட்டுமே குறிக்கும் பிரிவு. ஆனால் அதிக அளவில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சரியான பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அதே போல பலர் இரு தரப்பிலும் கைது செய்யப்பட்ட போதும் கலவரத்திற்கு உண்மையிலேயே காரணமான முக்கியமானவர்கள் கைது செய்யப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எங்களிடம் கூறப்பட்டது. தேர்தல் நேரத்தில் இப்படியான சாதிக் கலவரச் சூழல் இப்பகுதியில் உருவாகியிருப்பது கவலை அளிக்கிறது. காவல்துறையும் ரெவின்யூ நிர்வாகமும் இதைக் கணக்கில் கொண்டு இப்பகுதியில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5. முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20.சென்னை. செல்: 094441 20582

திருநெல்வேலி கான்சாபுரம் கிட்டப்பா என்கவுன்டர் கொலை உண்மை அறியும் குழு அறிக்கை!

No Comments →

11536471_876795522393173_3150145832311848529_oதிருநெல்வேலிக்கு அருகில் உள்ள பத்தமடை முன்னீர்ப்பள்ளத்திற்கு அடுத்துள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த சுப்புக்குட்டித் தேவர் – அம்பிகாவதி ஆகியோரின் மகன் கிட்டப்பா (34). இவர் திருநெல்வேலி சுத்தமல்லிக்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிர்புறம் உள்ள தற்போது கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் நாசர் என்பவரின் வீட்டில் வைத்து என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டார் என்கிற செய்தி மிக விரிவாக அனைத்து நாளிதழ்களிலும், புலனாய்வு இதழ்களிலும் வெளி வந்தது.

தேடப்பட்டு வந்த குற்றவாளியான கிட்டப்பாவைப் பிடிக்க அமைக்கப்பட்டிருந்த காவல்துறை சிறப்புக் குழுவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், காவலர்கள் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் முதலானோருக்கு மேலே குறிப்பிட்டுள்ள வீட்டில் கிட்டப்பாவும் அவரது சகாக்கள் நரசிங்கநல்லூர் லெஃப்ட் முருகன், ராமையன்பட்டி மணிகண்டன் ஆகியோருடன் பதுங்கி இருப்பதாகச் செய்தி கிடைத்து அவர்களைப் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அது மோதலில் நடந்த கொலை அல்ல என கிட்டப்பாவின் உறவினர்கள் கூறி,

கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை உடலை வாங்க மறுத்ததோடு பேருந்துகள் மீது கல்வீசிப் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

இது தொடர்பான உண்மைகளை அறிய மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பின்’ (National, Confederation of Human Rights Organisation -NCHRO) சார்பாகக் கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:

  1. அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பு (NCHRO),
  2. கோ.சுகுமாரன்,  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (Federation for People’s Rights- FPR), புதுச்சேரி,
  3. கு.பழனிச்சாமி, மனித உரிமை ஆர்வலர், மதுரை,
  4. எம்.ஆரிஃப் பாட்சா, வழக்குரைஞர், திருநெல்வேலி,
  5. என்.இலியாஸ், மாவட்டச் செயலர், PFI, திருநெல்வேலி,
  6. 6. கே.அப்துல் பாரிக், சட்டக் கல்லூரி மாணவர், மதுரை,
  7. அ.பீட்டர், இனப் படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு, திருநெல்வேலி,
  8. பக்கீர் முகமது, PFI, திருநெல்வேலி.

இக்குழுவினர் நேற்றும் இன்றும் கான்சாபுரத்தில் உள்ள கிட்டப்பாவின் மனைவி இசக்கியம்மாள் (23), தம்பி கருணாநிதி (30), அம்மா அம்பிகாவதி (60), மாமியார் துரைச்சி (45) ஆகியோரையும், திருநெல்வேலி ராஜீவ்காந்தி இரத்ததான சங்கத்தைச் சேர்ந்தவரும் தகவல் உரிமைச் சட்டப் போராளியுமான வழக்குரைஞர் பிரம்மநாயகம், வழக்குரைஞர் காந்திமதி நாதன் ஆகியோரையும், ‘மோதல்’ நடந்தபோது கிட்டப்பா குழுவினரின் தாக்குதலால் காயமடைந்ததாகக் கூறி இன்னும் ஹைகிரவுன்ட் மருத்துவமனையில் உள்ள  உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், காவலர்கள் சரவணசுந்தர், கிருஷ்ணசாமி ஆகியோரையும் சந்தித்தனர். அப்போது பணியில் இருந்த செவிலியர்களிடம் மூவரின் உடல் நிலை குறித்தும் அறிந்து கொண்டனர். சித்தமல்லி காவல் நிலையத்திற்குச் சென்று முதல் தகவல் அறிக்கை விவரங்களைத் தெரிந்து கொண்டதோடு, கிட்டப்பா தரப்பினரால் பேட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வாகனத்தையும் பார்வையிட்டனர். பின் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் வீட்டுக்குச் சென்று கிட்டப்பா சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தைப் பார்வையிட்டதோடு அவ்வீட்டைக் கட்டிக் கொண்டுள்ள நாசர் (த/பெ ஷேக் பாசல், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், அச்சன்புதூர்) மற்றும் அப்பகுதியில் அந்த மோதல்’ நடந்தபோது இருந்த மக்கள் சிலர் ஆகியோரையும் சந்தித்தனர். டி.ஐ.ஜி முருகன் அவர்கள் விரிவாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்குத் தொலைபேசியில் விளக்கமளித்தார்.

காவல்துறை கூறுவது

சென்ற ஜூன் 13 அன்று மாலை,  சுத்தமல்லி காவல்நிலையத்திற்கு அருகிலுள்ள  K.M.A நகரில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த  கதவில்லாத வீடொன்றில் தேடப்பட்ட கிட்டப்பா தன் சகாக்களுடன் மறைந்திருப்பதாகக் காவல் துறைக்குச் செய்தி கிடைத்தது. உடன் சிவராமகிருஷ்ணன் தலைமையில் ஷண்முகவேல் (SSI), தலைமைக் காவலர் தங்கம், முருகன் (ARPC), மற்றும் காவலர்கள் கருப்புசாமி, முருகேசன், ஆல்வின் பாபு, ஓட்டுநர் சரவணசுந்தர் ஆகியோர் வாகனமொன்றில் அங்கு விரைந்து சென்றனர். வீட்டினுள் நுழைந்த காவலர்கள் சரவணசுந்தர் மற்றும் கிருஷ்ணசாமி இருவரையும்  கிட்டப்பா அரிவாளால் வெட்டியவுடன் அவர்கள் ரத்தக் காயங்களுடன் வெளியே வந்தனர். உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்னன் உள்ளே நுழைந்தபோது அவரையும் கிட்டப்பா வெட்டினார். உயிரைக்காத்துக் கொள்ள சிவராமகிருஷ்ணன் கிட்டப்பாவைச் சுட நேர்ந்தது. தலையில் குண்டடிபட்டு அவர் செத்தார். பக்கத்து அறையில் பதுங்கியிருந்த முருகன், மணிகண்டன் மற்றும் ஒருவர் பெட்ரோல் குண்டு ஒன்றைப் போலீஸ் வாகனத்தில் வீசித் தப்பி ஓட முயற்சித்தபோது முருகன் மணிகண்டன் ஆகிய இருவர் மட்டும் அகப்பட்டுக் கொண்டனர்.. இப்போது அவர்கள் இருவரும் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர்.

[சித்தமல்லி காவல்நிலயம் மு.த.அ. 119/2015, 13- 06- 2015, குற்றப் பிரிவுகள் இ.த.ச 332,176, 307, TN PD DL Act 4, வெடிமருந்துப் பொருள் சட்டம் 415, குற்ற நடைமுறைச் சட்டம் 176, (1 A) (c)]

கிட்டப்பாவின் உறவினர்கள் சொல்வது

பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் சிறையிலிருந்து விடுதலை ஆன கிட்டப்பா வீட்டில்தான் இருந்தார். திருந்தி வாழும் நோக்குடன் விவசாய வேலைகளையும் செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் கோடகநல்லூரில் உள்ள தன் மாமியாரின் வீட்டில் மனைவி குழந்தைகளுடன் இருந்துள்ளார். ஒரு இரு சக்கர வாகனத்தில் சாதாரண உடையில் வந்த இருவர் விசாரணை ஒன்றுக்காக ஒரு அரை மணி நேரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அதே இரு சக்கர வாகனத்தில் கிட்டப்பாவையும் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். நஞ்ஞாரஞ்சேரல் என்னும் இடம் வந்தவுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் அவர் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.. அதன் பின் இரவு 7 மணி அளவில் தொலைகாட்சிச் செய்திகள் மூலமே கிட்டப்பா கொல்லப்பட்டதை மனைவி, மாமியார், அம்மா ஆகியோர் அறிந்துள்ளனர். அதற்குச் சற்று முன்னதாக ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் என்பவர் சொன்னதாக கிட்டப்பாவின் தம்பி கருணாநிதியிடம் அவரது மாமா உறவுள்ள ஆதிசுப்பிரமணியன் என்பவர் கிட்டப்பா கொல்லப்பட்ட தகவலைக்  கூறியுள்ளார். போலீஸ் அழைத்துச் செல்லுமுன் மாலை 4 மணி வாக்கில் கிட்டப்பா கருணாநிதியிடம் செல்போனில் பேசியுள்ளார்.

‘மோதல்’ நடந்த இடத்தில் உள்ளோர் சொல்வது:

மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாசரின் வீட்டில் அன்று பூச்சு வேலை நடந்துகொண்டிருந்தது. அருகில் வசிக்கும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்று ஊரில் இல்லை. கிட்டப்பா யார் என்று அவர்களுக்குத் தெரியாது. இதற்கு முன் அவர் இங்கு வந்ததோ ஒளிந்திருந்ததோ கிடையாது, 13 அன்று மாலை சுமார் 6 மணி அளவில் டெம்போ டிராவலரில் வந்து நாசரின் வீட்டில் இறங்கிய சாதாரண உடையில் இருந்த சுமார் 10 அல்லது 12 காவலர்கள்  கத்திக்கொண்டே திபு திபுவென கும்பலாகச் சிலருடன் நாசரின் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அஞ்சி ஓடியுள்ளனர். வாகனத்தில் வந்து இறங்கியவர்களில் இரண்டு மூன்று பேர் சாரம் (கைலி) அணிந்திருந்தனர். சில நிமிடங்களில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் இருவர் கைகளைக் கட்டி இழுத்து வரப்பட்டனர், வாகனத்தில் வந்து இறங்கிய காவலர்களில் ஒருவர் பெட்ரோலை எடுத்து வாகனத்தில் ஊற்றிப் பின் தீ வைத்துள்ளார். தீ பரவு முன் அவர்களே அதை அணைத்துவிட்டு கிட்டுவின் உடலையும், கைகள் கட்டப்பட்ட இருவரையும் வாகனத்தில் ஏற்றி மற்ற காவலர்களும் சென்றனர்.

திருநெல்வேலியில் ஆர்.டி.ஐ போராளியாக அனைவரும் அறிந்துள்ள வழக்குரைஞர் பிரம்மநாயகம் இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது மோதல் சாவு அல்ல. திட்டமிட்ட படுகொலை என்கிறார் அவர். முன்னதாக கிட்டப்பாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து ஆய்வாளர் சாகுல் தலைமையில் சென்ற சிறப்புக் காவல்குழு கைது செய்ததாகவும் அப்போது சுமார் 450 பவுன் நகைகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், அதை காவல்துறை கைப்பற்றிய கணக்கில் காட்டவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு நகைகள் கைப்பற்றப்பட்டது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரம்மநாயகம் விவரங்களைக் கேட்டபோது ஆய்வாளர் சாகுல் சிறிதுகாலம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுப் பின் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்..

எங்கள் பார்வையில்

1.சுட்டுக்கொல்லப்பட்ட கிட்டப்பா கொலைக் குற்றங்கள் உட்படப் பல கிரிமினல் வழக்குகளில் உள்ளவர். தனது தந்தையின் மரணத்திற்குப் பின் சென்ற பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மதுரை சிறையிலிருந்து விடுதலையான அவர் காவல்துறைக்குப் பயந்து திரிந்தபோதும் அப்படி ஒன்றும் அவர் தலைமறைவாக இல்லை. வெளிப்படையாக விவசாய வேலைகளைச் செய்து கொண்டு இருந்துள்ளார். கொலை வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் சென்ற ஆண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணையை அப்போது பத்தமடை சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த நங்கையார் என்பவர் சென்ற மாதம் கோடகநல்லூரில் கிட்டப்பா இருந்தபோது சந்தித்து வழங்கியுள்ளார்.

2. சுத்தமல்லி K.M.A நகர் என்பது. காவல் நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் உள்ள  ஒரு குடியிருப்புப் பகுதி. அங்கு கட்டப்பட்டுக் கொண்டுள்ள ஒரு கதவு இல்லாத வீட்டில், கொத்தனார்கள் செய்து கொண்டிருந்த கட்டுமானப் பணிகளுக்கு மத்தியில் கிட்டப்பா தன் சகாக்கள் மூவரோடு போலீசுக்குப் பயந்து. ஒளிந்துகொண்டிருந்தார் என்பது முற்றிலும் நம்ப முடியாத ஒன்று. அப்படி அவர் அங்கு வந்து போனதாக வீட்டுக்காரரோ இல்லை யாருமோ சொல்லவில்லை. கிட்டப்பாவையும் இதர இருவரையும் சிவராமகிருஷ்ணன் தலைமையில் வந்த காவல் படையினர் அவர்களது டெம்போ டிராவெலர் வாகனத்திலேயே கொண்டு வந்திருக்க வேண்டும்.

3. தாம் வந்திறங்கிய  டெம்போ டிராவலரில் போலீஸ்காரர்களே பெட்ரோல் ஊற்றி எரித்துப் பின் அணைத்ததை நேரடியாகப் பார்த்தவர்கள் எங்களிடம் சாட்சியங்கள் பகர்ந்துள்ளனர். அந்த வாகனத்தை (TN 72 G 0855) நாங்கள் பரிசீலித்தபோது குண்டு வீசப்பட்டுத் தாக்கப்பட்டதற்கான எந்தத் தடயங்களும் அதில் இல்லை. குண்டு வீசித் தாக்கி இருந்தால் கண்ணாடிக் கதவுகள் உடைதிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் உடையவில்லை.

4. மருத்துவமனையில் தற்போது உள்ள சிவராமகிருஷ்ணன் மற்றும் இரு காவலர்களையும் சந்தித்து அவர்களின் காயங்களைப் பரிசீலித்தபோது அவை மிகச் சிறிய காயங்கள் என்பதும், பெரிய அரிவாளால் வெட்டப்பட்டவை அல்ல என்பதும் தெரிகிறது. மிகவும் கவனமாக அவர்களே அதிகம் ஆழமில்லாமல் வெட்டிக் கொண்ட காயங்களாகவே அவை உள்ளன. இது தொடர்பான நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்தால் இவை தாக்குதல் நோக்குடன் கூடிய அரிவாள் வெட்டுக் காயங்கள் இல்லை என்பது வெளிப்படும். இப்போது அந்தச் சிறிய காயங்களும் குணமாகி உரிந்து தழும்புகளாகி விட்டன. அவர்கள் பூரண நலத்துடன் உள்ளனர் எனவும் வேறு யாராக இருந்தாலும் அப்போதே அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்து அனுப்பப் பட்டிருப்பார்கள் எனவும் இவர்களை 21 நாட்கள் வரை வைத்திருக்குமாறு காவல்துறை கூறியுள்ளதால் அவர்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் சொல்லப்பட்டது.

5. கிட்டப்பாவுடன் இருந்த மூவரில் ஒருவர் தப்பி ஓடி விட்டதாகக் காவல்துறைத் தரப்பில் சொல்லப்படுவதும் உண்மையாகத் தெரியவில்லை. ஒன்று அப்படி யாரும் இல்லாமலிருக்க வேண்டும் அல்லது அந்த நபரைக் காவல்துறையினர் ஏதோ காரணங்களுக்காகச் சட்ட விரோதக் காவலில் வைத்திருக்க வேண்டும்.

6. எங்கள் அய்யங்களை நாங்கள் டி.ஐ.ஜி முருகன் அவர்களிடம் தெரிவித்தபோது அவர் இப்போது மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடந்துகொண்டிருப்பதால் எதுவும் பேச இயலாது என்றார். என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் கொடுத்துள்ள நெறிமுறைகள் முழுமையாகக் கடைபிடிக்கப் படுவதாகவும், இந்த வழக்கு விசாரணையைத் தாங்கள் மேற்கொள்ளாமல் சி.பி.சி.ஐ.டி யிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், விசாரணையில் கிட்டப்பா வீட்டார் கொடுத்துள்ள புகார்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கூறினார்.

எமது கோரிக்கைகள் 

1. இது மோதல் கொலை அல்ல. மேலிருந்து திட்டமிட்ட படுகொலை. கிட்டப்பா மாமியார் வீட்டிலிருந்து அழைத்து, வரப்பட்டு கதவில்லாமல் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலையில் பங்குபெற்ற உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். 13ந் தேதி காலை முதல் கிட்டப்பா தன் தொலைபேசியில் யார் யாருடன் பேசியுள்ளார், அதேபோல என்கவுன்டர் செயத உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் யார் யாரிடம் பேசியுள்ளார் என்கிற விவரங்களை தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும்.

2. இந்தக் கொலை விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும். கிட்டப்பாவின் மனைவி, அம்மா ஆகியோர் கொடுத்த புகாரைக் கணக்கில் எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும்.

3. கிட்டப்பாவுக்கு இளம் மனைவியும், ஒன்றரைவயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. கிட்டப்பாவின் கொலையில் ஐயம் கொண்டு அவரது உறவினர்கள் அடுத்த ஒரு வாரம் உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்தபோது மாவட்ட நிர்வாகம் கிட்டப்பாவின் மனைவிக்கு இழப்பீடும், அரசுப்பணியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.  அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.. குடும்பத்திற்கு 25 இலட்ச ரூ இழப்பீடும் மனைவிக்குத் தகுதிக்கேற்ற அரசுப் பணியும் அளிக்க வேண்டும்.

4. முற்றிலும் குணமான இந்த மூன்று காவலர்களையும் மருத்துவமனையில் வைத்திருப்பது மருத்துவ அறப்படி குற்றம். அரசுப் பணம் வீணாவது தவிர இதர மூன்று ஏழை எளிய மக்களின் மருத்துவ வாய்ப்பும் இதனால் பறிபோகிறது. ஒரு வெளி நோயாளியாக வைத்து சிகிச்சை செய்து அனுப்பப்பட்டிருக்க வேண்டிய இவர்களை போலீசின் வற்புறுத்தலை ஏற்று இவ்வாறு மருத்துவமனையில் தொடர்ந்து தங்க அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை

No Comments →

1908090_864675300271862_469034868825786330_nநெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை 10.06.2015 அன்று கடலூர் செய்தியாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது. 

கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில்உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். இந்த ஊரில் ரயில்வே கேட் அருகில் ரயில்பாதையை ஒட்டி அமைந்துள்ள தலித் குடியிருப்பு ஒன்றில் வசித்தவர் சுப்பிரமணியன் (35)த/பெ. ஏகாம்பரம். ஐ.டி.ஐயில் ஃபிட்டர் பயிற்சிப் பெற்ற இவர் நிரந்தர வேலையின்றி பல்வேறுகூலி வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். கடந்த ஒரு மாதமாக நெய்வேலியில் ஒப்பந்த ஊழியராகபணி செய்துக் கொண்டிருந்தார். இவரது மனைவி ரேவதி (28). இவர்களுக்கு சுபாஷினி (8), நிவாஷினி(5), சோனா (3), வர்ஷித் (1) என்கிற நான்கு குழந்தைகள். நிரந்தர வருமானம் இல்லாத வாழ்க்கை.

நெய்வேலிக்கு வேலைக்குச் செல்லும் போது அங்குள்ள அவரது தூரத்து உறவினர் சபா அம்மா எனப்படும் எலிசபத்  என்பவரின் வீட்டிற்கு அவர் செல்வது வழக்கம் எலிசபத்தின் வீட்டிற்குப் பக்கத்தில் (3வது பிளாக்) குடியிருந்த முகமது யூசுப்பின் மனைவி மும்தாஜ் (47) என்பவரை சென்ற மே 23 அன்று யாரோ கொலை செய்து நகைகளைப் பறித்துக் கொண்டு உடலை எரியூட்டிவிட்டு ஓடிவிட்டனர். இது தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று (குற்ற எண். 179/15) இதச 302, 380 ஆகிய பிரிவுகளின்கீழ் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா விசாரித்து வருகிறார். சென்ற மே 28 அன்று இதுதொடர்பாக சுப்பிரமணியனை அவரும் அவருடன் வந்த காவலர்களும் அழைத்துச் சென்று சுமார் ஒரு வாரம் சட்டவிரோத காவலில் வைத்துக் கடுமையாக சித்திரவதை செய்ததாகவும், அதன் விளைவாக அவர் சாகும் நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சென்ற ஜூன் 6 அன்று அதிகாலை 4 மணிக்கு மரணமடைந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.

இதுகுறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா. அ. மார்க்ஸ், தலைவர்,  மனித உரிமைகளுக்கான  தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisationas- NCHRO), சென்னை.

2. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for Peoples Rights – FPR), புதுச்சேரி.

3. இரா. முருகப்பன், (இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் -SASY), திண்டிவனம்.

4. இரா. பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்.

5. வழக்குரைஞர்  விஜயசங்கர், சென்னை.

6. மேத்யூ, HR Foundation, சென்னை.

7. வழக்குரைஞர் இல.திருமேனி, கடலூர்.

இக்குழுவினர் ஜூன் 9, 2015 நேற்று முழுவதும் பி.என். பாளையத்தில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி ரேவதி மற்றும் குழந்தைகள், சுப்பிரமணியனை காவல்துறையினர் அழைத்துச் சென்றதற்கு நேரடி சாட்சியாக உள்ள அருகில் வசிக்கும் கருணாகரன், சத்தியசீலன், அன்பழகன் முதலானவரை சந்தித்து நடந்த சம்பவங்களை விரிவாகப் பதிவு செய்துக் கொண்டனர். பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த உதவி ஆய்வாளர் சு.அன்பரசனை சந்தித்து இதுதொடர்பாகப் பேசினர். சுப்பிரமணியத்தின் மரணம் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டுள்ள நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ உதயகுமாரை சந்தித்து சுப்பிரமணியனின் மரணம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் சுப்பிரமணியனை அழைத்துச் சென்று காவலில் வைத்து விசாரித்த நெய்வேலி டவுன்ஷிப் ஆய்வாளர் ராஜா, துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினர். ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலச்சந்தர், மருத்துவ துணைக் கண்காணிப்பாளர் அம்புரோஸ், சுப்பிரமணியனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஜெகதீசன் ஆகியோரிடம் விரிவாகப் பேசினர். ஜிப்மர் மருத்துவமனையின் புறக்காவல் நிலையத்தில் பொறுப்பாக இருந்த அதிகாரியிடமும் பேசினர்.

நடந்த சம்பவம்

 தொடர்புள்ள அனைவரையும் விசாரித்த வகையில் நடந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிந்தது:

மே 23 அன்று நெய்வேலி டவுன்ஷிப் 3ம் பிளாக்கில் குடியிருந்தமும்தாஜ் என்கிற பெண்மணியை நகைக்காக யாரோ கொலை செய்கின்றனர். இவரது பக்கத்து வீட்டில் இருந்த எலிசபத் வீட்டாருடன் இவருக்குப் பகை இருந்துள்ளது. எலிசபத் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சுப்பிரமணியனை சந்தேகித்த நெய்வேலி டவுன்ஷிப் ஆய்வாளர் ராஜா ஒரு பெண் போலீஸ் உட்பட சாதாரண உடையில் இருந்த சுமார் 10, 12 காவலர்களுடன் மே 28 அன்று இரவு சுமார் 2 மணி அளவில் சுப்பிரமணியனின் வீட்டிற்கு வந்துள்ளார். கூட எலிசபத்தையும் அழைத்து வந்துள்ளார். எலிசெபத்தை அழைக்கச் சொல்லி, கதவைத் திறந்த சுப்பிரமணியனைப் பிடித்து அங்கேயே அடித்துள்ளனர். பயந்துக் கதறிய ரேவதி மற்றும் குழந்தைகளையும் மிரட்டியுள்ளனர். ‘கொலை செய்ததை ஒத்துக்கடா, கொலை செய்ததை ஒத்துக்குங்கடி’ என இருவரையும் மிரட்டியுள்ளனர். பிள்ளைகள் பயந்துக் கத்தியுள்ளன. அந்த நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்த அருகில் வசிக்கும் டிரைவர் சத்தியசீலனை மிரட்டி அகன்று போகச் சொல்லியுள்ளனர். பின்னர் சுப்பிரமணியனை மட்டும் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அருகில் வசிக்கும் சத்தியசீலன், ஆறுமுகம், அன்பழகன், கருணாகரன், அழகேசன் முதலியோர் இதற்கு நேரடி சாட்சிகள்

சுப்பிரமணியனின் உடலில் பலகாயங்கள் இருந்தன என்பதையும் அவரது கால், கை நகங்கள் பிய்க்கப்பட்டு இருந்ததையும் நாங்கள் பலரிடமும் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

அடுத்த நாள் காலை 9 மணியளவில் 4 காவலர்கள் வந்து ரேவதியையும் 4 குழந்தைகளையும் டவுன்ஷிப் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று மிரட்டியுள்ளனர். சின்னஞ்சிறு குழந்தைகளையும் தனியே பிரித்து மிரட்டியுள்ளனர். மாலையில் ரேவதியையும் அவரது பிள்ளைகளையும் ஒரு வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அடுத்த ஒரு வாரம் இப்படி நடந்துள்ளது. சுப்பிரமணியனை வீட்டுக்கு அனுப்பாததோடு மனைவி மக்கள் கண்ணிலும் காட்டவில்லை.

இடையில் மே 31ம் தேதியன்று ரேவதி தன் கணவர் இவ்வாறு சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டது குறித்து எழுத்துமூலம் புகார் ஒன்றை கடலூர் காவல் கண்காணிப்பாளரிடம் கொடுக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். காவல் கண்காணிப்பாளர் அன்று விடுப்பில் இருந்ததால் புகார் கடித்தத்தை அங்கிருந்த யாரோ ஒரு அதிகாரி பெற்றுக் கொண்டுள்ளார். சற்று நேரத்தில், அந்த அதிகாரி எங்கோ வெளியில் சென்றுவிட்டார். நீண்ட நேரம் காத்திருந்தபின் ரேவதி வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

சுமார் ஒரு வாரத்திற்குப் பின் ஜூன் 4ம் தேதி வியாழக்கிழமை அன்று ரேவதியை அவசரமாக நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் சுப்பிரமணியனுக்கு உடல் நலமில்லை என்றும், அழைத்துச் சென்று வைத்தியம் செய்யுமாறும் கூறியுள்ளனர். சுப்பிரமணியனின் உடல் எல்லாம் அடிபட்டு வீங்கி இருந்தது எனவும் கை, கால்விரல் நகங்கள் பிடுங்கப்பட்டிருந்தன எனவும் ரேவதி எங்களிடம் கூறி அழுதார்.

வைத்தியம் செய்ய வசதியில்லை என ரேவதி அழுதவுடன் ஒரு டாடா சுமோவில்அவரையும் சுப்பிரமணியனையும் ஏற்றிக் கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அட்மிஷன் போடும் போது எப்படி அடிபட்டது என்ற கேள்விக்கு சுப்பிரமணியன் பதிலளிக்க முனைந்த போது போலீசார் அவரை நோக்கி முறைத்துள்ளனர். சுப்பிரமணியன் பயந்துக் கொண்டே ஏதோ முணு முணுத்துள்ளார். மருத்துவமனையில் வழக்கமாக பதிவு செய்வதைப் போல் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளனர்.

உடனடியாக ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் உரிய சிகிச்சையை தொடங்கியுள்ளனர். எனினும் அடுத்த நாள் உடலில் மூத்திரம் தேங்கி வயிறு உப்பி சுப்பிரமணியன் கதறத் துவங்கியுள்ளார். தன்னை லாடம் கட்டித் தொடர்ந்து அடித்ததாகவும், முந்திரி மரத்தில் தலைக்கீழாக கட்டிவைத்து அடித்துச் சித்திரவதை செய்ததாகவும் சுப்பிரமணியன் ரேவதியிடம் கதறியுள்ளார். டாக்டர்களின் தீவிர சிகிச்சைப் பலனளிக்காமல் ஜூன் 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவர் உயிர் பிரிந்துள்ளது. அன்று மாலை 6 மணியளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சுப்பிரமணியனின் உடல் அவரது வீட்டில் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 7ம்தேதி மாலை அவரது உடல் பெட்டியில் வைத்துப் புதைக்கப்பட்டது.

இடையில் அப்பகுதியில் உள்ள மக்கள் நீதி வேண்டி கடலூர் பண்ரூட்டி சாலையில் மறியல் செய்தனர். அப்போது பண்ரூட்டி மற்றும் கடலூர் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆர்.டி.ஓ. ஆகியோர் நேரில் வந்திருந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ரேவதிக்கு ஒரு அரசு வேலை, குழந்தைகளின் படிப்பிற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, சுப்பிரணியனின் மரணத்திற்குக் காரணமான ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தல் ஆகிய உறுதிமொழி அளிக்கப்பட்ட பின் சாலை மறியல் போராட்டத்தை அப்பகுதி மக்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

சுப்பிரமணியனின் வீடு நெல்லிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளதால் சுப்பிரமணியன் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்துள்ளதாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் 174 (1) பிரிவின் கீழ் வழக்கு (மு.த.எ. 269/15) பதியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் சொல்லப்படுவது:

மும்தாஜ் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியும் சுப்பிரமணியனை ஒரு வார காலம் சட்ட விரோதக் காவலில் வைத்துக் கடும் சித்திரவதைகளைச் செய்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவருமான ஆய்வாளர் ராஜாவிடம் நாங்கள் இது குறித்துக் கேட்ட போது தான் அவரை விசாரித்தது உண்மைதான் எனவும், ஆனால் ஒவ்வொரு நாளும் அவரை மாலையில் வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும், அவரைச் சித்திரவதை செய்ததாகச் சொல்லப்படுவது பொய் எனவும் கூறினார். ஜிப்மர் மருத்துவமனையில் அவரைத் தாங்கள் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை எனவும், சுப்பிரமணியன் தானாகவே போய் சேர்ந்து கொண்டார் எனவும் கூறினார்.

நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்குப் பொறுப்பான துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் நாங்கள் கேட்டபோது அவரும் இவ்வாறு சுப்ப்பிரமணியனைத் தாங்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து விசாரிக்கவில்லை என்றார். சுப்பிரமணியனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாகவும் அதன் விளைவாகவே அவர் செத்தார் என்றும் கூறினார். உங்கள் போலீஸ்காரர்கள்தானே சுப்பிரமணியனை ஜிப்மர் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர் எனக் கேட்டபோது அது தனக்குத் தெரியாது என்றார்.

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் பணியில் இருந்த துணை ஆய்வாளர் அன்பரசனைக் கேட்டபோது சுப்பிரமணியனை விசாரித்தது உண்மைதான் எனவும், ஆனால் அப்போது மூன்று நாட்கள் தான் சி.சி.டி.வி பயிற்சிக்காகச் சென்றுவிட்டதாகவும், சுப்பிரமணியனுக்கும் மும்தாஜ் கொலைக்கும் தொடர்பில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது என்றும் கூறினார்.

இன்று காலை கடலூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.ராதிகா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது பிரேத பரிசோதனை அறிக்கை வரும்வரை அது காவல் நிலையச் சித்திரவதையினால் ஏற்பட்ட மரணம் எனவும் அந்த அடிப்படையில் கொலை எனவும் கருத இயலாது எனக் கூறினார்

சுப்பிரமணியனுக்குச் சிகிச்சை அளித்த ஜிப்மர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் திடீரென சிறுநீரகம் செயலிழந்ததால் சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்து போனார் எனவும் தாக்குதலின் விளைவாகத்தான் அப்படி நேர்ந்ததா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என்றார்.

எமது பார்வைகள்

1. சுப்பிரமணியம் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருந்தவர், அவருக்கு மஞ்சள் காமாலை நோய் அல்லது சிறுநீரகம் பழுதுபட்டிருந்தது என்பதெல்லாம் முழுப் பொய். திடீரெனச் சிறுநீரகம் பாதிக்கப்படுகிற அளவிற்கு அவர் வயதானவரோ இல்லை சக்கரை நோய் முதலானவற்றால் பாதிக்கப்பட்டவரோ இல்லை. மும்தாஜ் கொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மே23 முதல் 25 வரை அவர் குடும்பத்துடன் வேளாங்கன்னி கோவிலுக்குச் சென்றுள்ளார். 28 நள்ளிரவில்அவரை ஆய்வாளர் ராஜா தலைமையில் வந்த காவலர்கள் அடித்து இழுத்துச் சென்றதற்கு நேரடி சாட்சிகளாக பி.என்.பாளையம் சத்தியசீலன், கருணாகரன், நெய்வேலி எலிசபத், சுப்பிரமணியனின் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மே 28 இரவு அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணியன் மீண்டும் ஜூன் 6 மாலைதான் பிணமாகக் கொண்டு வரப்பட்டார் என்பதற்கு பி.என்.பாளையத்தில் சுப்பிரமணியனின் வீட்டைச் சுற்றி வாழும் மக்கள் அனைவரும் சாட்சிகளாக உள்ளனர். சுப்பிரமணியனை ஒரு வார காலம் ஆய்வாளர் ராஜாவும் அவரது காவலர்களும் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்ததும் அதன் விளைவாகவே அவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பதும் உண்மை.

2. தன்னுடைய கணவர் சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்யப்படுவது குறித்துப் புகாரளிக்க கடலூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குமே 31 அன்று ரேவதி சென்றுள்ளார். கண்காணிப்பாளர் விடுப்பில் இருந்ததால் அவரது மனுவை அங்குள்ள அதிகாரி ஒருவர் பெற்றிருக்கிறார். காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ரேவதியின் மனு மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கண்காணிப்பாளர் விடுப்பு முடிந்து திரும்பிய பின்னும் எந்த நடவடிக்கையும் இல்லை இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்தமனுவின் மீது கண்காணிப்பாளர் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று சுப்பிரமணியன் இறந்திருக்க மாட்டார். அவரது மனைவியும் நான்கு பச்சிளங் குழந்தைகளுக்கு இப்படி அனாதைகளாகி இருக்க மாட்டார்கள். கடலூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராதிகா அவர்கள் இது போன்ற விடயங்களில் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்பவர் என்பதைப் பலரும் கூறினர்.

3. தமிழகமெங்கும் தொடர்ந்து காவல் நிலையச் சாவுகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைக்கு அழைத்து வந்தவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, 12 வயதுச் சிறுவனை வாய்க்குள் பிஸ்டலை வைத்துச் சுடுவது என்பதெல்லாம் கடந்த சில ஆண்டுகளில் இங்கு நடந்தவை. திருக்கோவிலூரில் நான்கு இருளர் பெண்களைக் காவலர்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்தனர் இத்தகைய குற்றங்களில் குற்றவாளிகளான காவலர்களைக் காப்பாற்றுவதைத் தமிழக அரசு ஒரு கொள்கையாகவே வைத்துச் செயல்படுகிறது. கைது செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு வழக்கில் அளித்துள்ள நெறிமுறைகளை எந்தக் காவல் நிலையமும் அதிகாரிகளும் கடைபிடிப்பதில்லை. இந்நிலை தொடரும் வரை அப்பாவிக் குடிமக்கள் கொல்லப்படுவது குறையப் போவதில்லை.

கோரிக்கைகள்

1.   சுப்பிரமணியனைச் சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து அவரது மரணத்திற்குக் காரணமான நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுஅவர்கள் மீது சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது, மரணம் நேரும் வகையில் சித்திரவதை செய்தது ஆகிய குற்றங்களுக்காக கொலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட வேண்டும்.

2.   இந்த வழக்கை தமிழகக் காவல்துறை விசாரித்தால் எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை சி.பிஅய்யிடம் ஒப்படைக்க வேண்டும்.

3.   சுப்பிரமணியனின் மனைவியும் நான்கு பச்சிளம் குழந்தைகளும் இன்று அனாதைகளாகி உள்ளனர். கடந்த இரு வாரங்களாக அவர்கள் கடும் மனச் சிதைவுகளுக்கும் ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக நடந்த சாலை மறியலின்போது அரசு அதிகாரிகள் வாக்களித்தபடி சுப்பிரமணியனின் மனைவி ரேவதிக்கு அவரது தகுதிக்கு ஏற்ற அரசுப் பணியும் 25 இலட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். நான்கு குழந்தைகளின் கல்விச் செலவிற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்.

9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்!

No Comments →

10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா?

அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை

சென்னை, 26, மே, 2015.

இந்த ஆண்டு +2 மற்றும் 10 ம் வகுப்புத் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதோடு அதிக அளவில் 200 க்கு 200; 100 க்கு 100 என மதிப்பெண்களைக் குவித்தும் உள்ளனர். +2 தேர்வில் கணிதத்தில் 9,710 பேர்களும் கணக்குப் பதிவியலில் 5,167 பேர்களும் வேதியலில் 1,049 பேர்களும் 200 க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதே போல 10ம் வகுப்பிலும் நூற்றுக்கு நூறு வாங்கியோர் எண்ணிக்கை ஏராளம். முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் மாத்திரம் 773 பேர்கள். கணக்கில் 27,134 பேர்களும், அறிவியலில் 1,15,853 பேர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி எனவும் இப்படி ‘ரேங்க்’ வாங்கியவர்கள் இவ்வளவு பேர்கள் எனவும் தனியார் பள்ளி விளம்பரங்கள் நாளிதழ்களை நிரப்புகின்றன.

கடினமாக உழைத்து இப்படிச் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லும் அதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் கல்வியில் அக்கறையுள்ள அனைவர் முன்னும் சில கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது.

இப்படிக் கடினமாக உழைத்து ஏராளமான மதிப்பெண்களை அள்ளிச் செல்லும் மாணவர்களில் பலர் மேற்படிப்புகளில் முதலாம் ஆண்டில் தோல்வியுறுவது ஏன்?

IIT படிப்பிற்கான JEE நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்கள் பின் தங்குவதேன்? 2014ம் ஆண்டு JEE தேர்வில் தமிழ்நாடு 14 வது இடத்தைத்தான் பெற முடிந்தது. முதல் 10 இடங்களை ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், உ.பி, மஹாராஷ்டிரா, டெல்லி, ம.பி, பிஹார், ஹரியானா, ஜார்கன்ட், மே.வங்கம் ஆகிய மாநிலங்கள் தட்டிச் சென்றன. சென்ற ஆண்டு JEE தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1,58, 981. இதில் 21,818 (14.7%) இடங்களை ஒன்றாக இருந்த ஆந்திரப் பிரதேச மாணவர்கள் வென்றெடுத்தனர். தமிழக மாணவர்களால் பெற முடிந்ததோ வெறும் 3974 (2.5%) இடங்களைத்தான்.

இதற்கான காரணங்களில் ஒன்றாக நாங்கள் கருதுவது நமது மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அறிதல் சார்ந்த (Knowledge Based / Objective Type) கேள்விகளுக்குப் பதில் எழுதுவதில் போதிய திறன் பெற்றிருக்கவில்லை என்பதுதான். அதற்குக் காரணம் நம் மாணவர்கள் அடிப்படைகளில் பலவீனமாக உள்ளனர் என்பதுதான்.

90 சதத்திற்கும் மேல் மதிப்பெண்களை எளிதாகப் பெறும் நம் மாணவர்கள் எவ்வாறு அடிப்படைகளில் பலவீனமாக நேர்ந்தது?

நமது பள்ளிகளில், குறிப்பாக ஏராளமாக ‘ரிசல்ட்’ காட்டுகிற தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைக் கற்றுத் தருவதில்லை என்பது நமது மாணவர்கள் அடிப்படைகளில் பலவீனமாக இருப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது. எட்டாம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பிற்குச் சென்ற உடன், அவர்களுக்கு 9ம் வகுப்புப் பாடங்களைச் சொல்லித்தராமல் 10ம் வகுப்புப் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. அதே போல 11ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 11ம் வகுப்புப் பாடங்களைச் சொல்லித் தராமல் இரண்டாண்டுகளும் 12ம் வகுப்புப் பாடங்களே சொல்லித் தரப்படுகின்றன. இரண்டாண்டுகளும் ஒரே பாடங்களைப் படித்து, மனப்பாடம் செய்து, பல முறை மாதிரித் தேர்வுகளை எழுதி, நமது மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் மதிப்பெண்களைக் குவிக்கும் எந்திரங்களாக மாற்றப்படுகின்றனர்.

நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வெண்டும். Higher Secondary என்பது +1 மற்றும் +2 ஆகிய இரு வகுப்புகளும் சேர்ந்த ஒரு ஒருங்கிணைந்த படிப்பு (Integrated Course). +1, +2 என்பன தனித்தனி வகுப்புகள் அல்ல. இயற்பியல் (Physics) என்றொரு பாடத்தை எடுத்துக் கொண்டால் அதில் Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics, Electricity and Magnetism, Atomic Physics, Electronics எனப் பல உட்பிரிவுகளும் இணைந்ததுதான் இயற்பியல். இவற்றில் Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics ஆகிய பாடங்கள் 11ம் வகுப்பிலும் Electricity and Magnetism, Atomic Physics, Nuclear Physics, Electronics முதலானவை 12ம் வகுப்பிலும் பிரிந்துள்ளன. 11ம் வகுப்புப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படாதபோது Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics முதலானவற்றில் அம்மாணவர் அடிப்படைகளை அறியாதவராகி விடுகிறார். இந்த அடிப்படைகள் இல்லாமல் ஒருவர் இயற்பியலின் மற்ற இயல்களை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.

இது மற்ற பாடங்களுக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக 9ம் வகுப்புப் புவியியலில் தமிழகப் புவியியல் குறித்த பாடம் உள்ளது. 10ம் வகுப்பில் இந்தியப் புவி இயல் பாடம் உள்ளது. 10வது பாடங்களை மட்டும் படித்து, 9வது பாடங்களைப் படிக்காத ஒரு மாணவர் தமிழகப் புவி இயல் குறித்த அடிப்படைகளை அறியாதவராக ஆகிவிடுகிறார். இப்படி ஒவ்வொரு பாடம் குறித்தும் எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும்.

இவ்வாறு அடிப்படைகளில் வலுவில்லாமல் வெறும் மதிப்பெண்களைச் சுமந்து கொண்டு மேலே செல்லும் மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற இயலாதது கூடப் பெரிதில்லை. அவர்கள் அந்தந்தத் துறைகளில் சாதனை படைக்கும் அறிவியலாளர்களாகவும் உருப்பெற இயலாது என்பதுதான் வேதனை. Classical Mechanics ல் வலுவில்லாமல் ஒருவர் எப்படி Quantum Mechanics ஐப் புரிந்து கொள்ள இயலும்? Thermodynamics ன் அடிப்படைகளை அறியாத ஒருவர் எப்படி ஒரு இயற்பியலாளராக இயலும்?

இந்த ஆண்டு +2 தேர்வில் இயற்பியலில் வெறும் 124 பேர்கள்தான் 200 க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 198 மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தும் அவர்கள் இந்த இரண்டு மதிப்பெண்களைக் கோட்டை விட்டதற்குக் காரணம் இரண்டு objective type கேள்விகள் 11 ம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படும் அடிப்படைகளைப் புரிந்து கொள்பவர்களால் மட்டுமே பதில் அளிக்கக் கூடியதாக இருந்ததுதான்.

தனியார் பள்ளிகளின் வணிக நோக்கமே இதன் பின்னணி

நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க வைக்கிறோம் என விளம்பரப் படுத்திக் கல்வி வணிகம் நடத்திக் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளி ‘லாபி’ யே இதற்குக் காரணமாக உள்ளது.

இரண்டு வகைகளில் அவர்கள் இதைச் செய்தனர்.

1. உலகெங்கிலும் இருப்பது போல தமிழகத்திலும் ‘ட்ரைமெஸ்டர்’ முறை கொண்டு வந்தபோது அதை 9ம் வகுப்புக்கு மேல் கொண்டு வரக் கூடாது என அவர்கள் தடுத்து நிறுத்தினர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் 10ம் வகுப்பில் பொதுத் தேர்வு உள்ளது என்பதுதான். கல்லூரிகளில் பொதுத் தேர்வுகளிலும் செமஸ்டர் முறை கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பள்ளிக் கல்வியிலும் 10,11,12 வகுப்புகளில் ட்ரைமெஸ்டர் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் செமஸ்டர் முறையாவது தொடர்ந்திருக்க வேண்டும். Higher Secondary படிப்பை +1, +2 இரண்டாண்டுகளையும் 4 செமெஸ்டர்களாக்கிப் பொதுத் தேர்வுகளை நடத்தி அந்த அடிப்படையில் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிலை இருந்திருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. 11 ம் வகுப்புப் பாடங்களை ஒழுங்காகச் சொல்லிக் கொடுப்பது தவிர்க்க இயலாததாக ஆகி இருக்கும்.

2. +2 கேள்வித்தாள்கள் உருவாக்கம் பற்றிய வல்லுனர் குழு 20 சத மதிப்பெண்கள் Knowledge Based கேள்விகளுக்கு இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தும் அப்படிக் கேள்விகள் அமைந்தால் அது மாணவர்களுக்குக் கடினமாக இருக்கும் எனச் சொல்லித் தடுத்ததும் இந்தத் தனியார் பள்ளி ‘லாபி’ தான். உண்மையில் அது மாணவர்களுக்குக் கடினம் என்பதல்ல. “100 மார்க்” ஆசையை ஊட்டி வணிகம் செய்பவர்களுக்குத்தான் அது கடினம். கேள்வித் தாள்கள் என்பன ஒரு சராசரி மாணவர் எளிதில் வெற்றி பெறக் கூடியதாகவும், அதே நேரத்தில் ஒரு திறமையான மாணவரை அடையாளம் காட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளையும் தொற்றும் இந்த ஆபத்து

ஒப்பீட்டளவில் அரசுப் பள்ளிகளில் ‘ரிசல்ட்’ குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அடித்தள மற்றும் கிராமப் புற மாணவர்கள் அதிகம் படிப்பவையாக அரசுப் பள்ளிகளே உள்ளன. தவிரவும் தனியார் பள்ளிகள் தம் ‘வெற்றி வீதத்தை உயர்த்திக் காட்டுவதற்காகப் பல தில்லு முல்லுகளைச் செய்கின்றன. தோல்வியடையக் கூடிய, அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுக்கக் கூடிய மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களை வெளியேற்றுவது, தனிப் பயிற்சி மூலம் படித்தவர்கள் என்பதாக அவர்களைத் தேர்வு எழுத வைப்பது, முறையான ஊதியம் அளிக்காமல் ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவது எனப் பல மோசடிகளைச் செய்துதான் அவை நூறு சத வெற்றியை எட்டுகின்றன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வெற்றி வீதம் குறைவாக உள்ளது புரிந்து கொள்ளக் கூடியதே. அரசுப் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளைக் களைவது என்கிற நிலையை எடுக்காமல் அரசும் கல்வித்துறையும் இன்று “தனியார் பள்ளிகளைப் போலச் செய்து” அதிக வெற்றி வீதத்தைக் காட்ட வேண்டும் என அரசுப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் இன்று அரசுப் பள்ளிகளிலும் 9. 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

நமது பள்ளிக் கல்வியில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. தமிழ்வழிக் கல்விக்கு உரிய முக்கியத்துவம் இல்லை. தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வந்த அரசுப் பள்ளிகளிலும் இப்போது ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படுகிறது, சமச்சீர்க் கல்வியில் உள்ள குறைபாடுகளைக் களைந்து அதை மேம்படுத்தவில்லை. Higher Secondary சேர்க்கையில் இட ஒதுக்கீடு கடை பிடிக்கப்படுவதில்லை. அரசுப் பள்ளிகளில் அகக்கட்டுமானங்கள் போதுமானதாக இல்லை. காலியான ஆசிரியப் பணி இடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை. ஆசிரியர் அமைப்புகள் அதை வற்புறுத்துவதுமில்லை. +1. +2 பாடத் திட்டம் சமச்சீர்க் கல்விக்குத் தக சீரமைக்கப்படவில்லை. கிராமப் புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் மருத்துவம், பொறியியல் முதலிய படிப்புகள் இன்னும் கிராமப் புற அடித்தள மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருப்பது….

இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் முக்கியமானவை என்ற போதும் தமிழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அக்கறையுள்ள நாங்கள் உடனடியாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளைக் கோருகிறோம்.

1. 11ம் வகுப்பிலும் அரசுத் தேர்வை நடத்தி இரண்டு வகுப்புகளிலும் பெற்ற மதிப்பெண்களை வைத்தே Higher Secondary படிப்பிற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

2. 10, 11, 12 வகுப்புகளில் டிரைமெஸ்டர் அல்லது செமெஸ்டர் முறை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

3. ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த வகுப்புகளுக்குரிய பாடங்கள் சொல்லித் தரப்படுகிறதா என்பதைக் கல்வித்துறை கண்காணிக்க வேண்டும். மீறுகிற பள்ளிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

4. அரசுத் தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களில் 20 சத மதிப்பெண்கள் அறிதல் சார்ந்ததாகவும் (knowledge based), மீதி 80 சத மதிப்பெண்கள் பாடம் சார்ந்ததாகவும் (Text based) கேள்விகள் குறிக்கப்பட வேண்டும்.

இவற்றோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய இதர உடனடி நடவடிக்கைகள்:

4. மாநில அளவில் மருத்துவ, பொறியியல் படிப்புகளிலும், இந்திய அளவில் IIT, NIT முதலான படிப்புகளிலும் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

5. JEE தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும்.

6.அரசுப் பள்ளிகளில் கட்டாய ஆங்கில வழிப் பாடம் கொண்டு வரும் நடவடிக்கை கைவிடப்படல் வேண்டும்.

7.தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை இவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்ற ஆசிரியரே சொலித் தருவது என்பதற்குப் பதிலாக அந்தந்தத் துறைகளில் பட்டம் பெற்றவர்களை அந்தந்தப் பாடங்களைச் சொல்லிதர நியமிக்க வேண்டும்

பெற்றோர்கள் எப்படியாவது தங்கள் பிள்ளைகளும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என நினைக்காமல் அடிப்படைகளில் வலுவுடன் முழுமையாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை உணர்ந்து இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இங்ஙனம்,

அக்கறையுள்ள கவியாளர்கள் குழு,

பேரா. பிரபா. கல்விமணி (மக்கள் கல்வி இயக்கம்), முனைவர் ப.சிவகுமார் (முன்னாள் கல்லூரி முதல்வர்), முனைவர் சற்குணம் ஸ்டீபன் (முன்னாள் கேள்வித்தாள் உருவாக்கக் குழு உறுப்பினர்), கோ. சுகுமாரன், பேரா. அ.மார்க்ஸ், பேரா. மு..திருமாவளவன் (முன்னாள் கல்லூரி முதல்வர்), வீ.சீனிவாசன் (சுற்றுச் சூழல் ஆர்வலர்), ஆசிரியர் மு.சிவகுருநாதன், ஆசிரியர் முனைவர் ஜெ. கங்காதரன், ஆசிரியர் த. மகேந்திரன், ஆசிரியர் அ.செந்தில்வேலன்.

 

சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி மே 5ல் ஆர்ப்பாட்டம்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்குக் குறித்து 24.04.2015 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில், கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி,  மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர்செல்வன், மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ. அ. ஜெகன்நாதன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு  தலைவர் சீ.சு.சாமிநாதன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் தலைவர் வீரமோகன், தமிழர் களம் தலைவர் கோ. அழகர், ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர் பன்னீர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ. பாவாடைராயன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் சமது,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஶ்ரீதர், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாநில அமைப்பாளர் எம்.ஏ. அஷ்ரப், தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் பெ. பராங்குசம், தலித் சேனா தலைவர் சுந்தர், பீ போல்ட் அமைப்பு தலைவர் பஷீர், மக்கள் நற்பணி மன்றம் தலைவர் மாறன். பாரத மக்கள் சாசன இயக்கத் தலைவர் ஜெயகாந்தன், மக்கள் நல்வாழ்வு இயக்கத் தலைவர் ராஜா, இன்னிசை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் ஆனந்து, புதுச்சேரி போராளிகள் குழுவைச் சேர்ந்த ஜெபின், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் இதுவரையில் 5 போலீசார் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை புலன் விசாரணை செய்யும் சிஐடி போலீசார் இவ்வழக்கைப் போலீசாரை கைது செய்வதுடன் முடித்துக் கொள்ளும் திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றனர். தற்போது இவ்வழக்கில் சிக்கியுள்ள போலீசாரில் சிலர் இப்பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்பில்லாதவர்கள். இதுகுறித்து புதுச்சேரி அரசும், சிஐடி போலீசும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2) சிஐடி எஸ்.பி., வேங்கடசாமி விபச்சார கும்பலுடன் செல்பேசியில் பேசிய பட்டியலின் அடிப்படையில் 300 பேரைக் கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் இதுவரையில் ஒருவரையும் கைது செய்யவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் கொடுத்த வாக்குமூலத்தில் கூறிய பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 கறுப்பின இளைஞர்கள், 1 வெள்ளை வேட்டி, சட்டை அணிந்தவர், 1 போலீஸ்காரர், 1 மாணவர் உட்பட 7 பேரில் ஒருவரைக்கூட இதுவரையில் கண்டுபிடித்துக் கைது செய்யவில்லை. சிறுமிகள் பாலியல் பலாத்காரத்தில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பலருக்கும் தொடர்பு இருப்பதால், இவ்வழக்கை சிஐடி போலீசார் அவசரம் அவசரமாக முடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். மேலும், செல்வாக்கு மிக்கவர்கள் இவ்வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ள புதுச்சேரி அரசுக்கும், சிஐடி போலீசுக்கும் அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிகிறது. எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

3) விபச்சார கும்பலுடன் செல்பேசியில் பேசியவர்களின் பட்டியலை சிஐடி போலீசார் உடனடியாக வெளியிட வேண்டும்.

4) பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனைத்து நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும்.

5) சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

6) சிறுமிகள் பாலியல் பலாத்கார சமபவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுப்பது.

7) மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 05.05.2015 செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு, தலைமை அஞ்சலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

 

ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை

No Comments →

சென்னை செய்தியாளர் மன்றத்தில் 21.04.2015 அன்று, மதியம் 3 மணியளவில், வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை:

சென்ற ஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலை தேடிச் சென்ற 20 தொழிலாளிகள் ஆந்திர சிறப்புக் காவல்படையால் (APRSASTF – Andhra Pradesh Red Sanders Anti Smuggling Task Force) சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக மக்களை மட்டுமின்றி, மனிதாபிமானம் மிக்க அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொல்லப்பட்ட அனைவரும் வேலை தேடிப் போனவர்கள், கைகளில் ஆயுதங்களோடோ, நெஞ்சில் குறிப்பான அரசியல் நோக்கங்களோடோ பயணம் செய்தவர்களல்ல என்பது எல்லாத் தரப்பினர் மத்தியிலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக அனுதாபத்தையும், இதற்குக் காரணமான ஆந்திர காவல்துறையின் மீது கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் பெரிய அளவில் தமிழர்களாகவே இருப்பது தமிழகத்தில் கூடுதலான ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் மீதான குண்டுக் காயங்கள் பெரும்பாலும் மார்புக்கு மேலாகவும், தலையிலும் உள்ளதும், அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டிருப்பதும் இது போலி என்கவுன்டர் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது  எனத் தமிழ் மற்றும் ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்கள் மட்டுமின்றி, சிந்தா மோகன் போன்ற ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர்களாலும் கூடக் கண்டிப்பிற்கு உள்ளாகியது.

பேருந்துகளில் சென்று கொண்டிருந்த தமிழ்த் தொழிலாளிகள் இடையில் இறக்கப்பட்டுக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி, சம்பவம்  நடந்த அடுத்தடுத்த நாட்களில் வெளியான போது ஆந்திரக் காவல்துறை முழுமையாக அம்பலப்பட்டது.

ஆந்திரக் காவல்துறையும், அமைச்சரவையும் தமது கொடுஞ் செயலை நியாயப்படுத்தி இன்று பேசிக் கொண்டுள்ளன. அம் மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி ஜே.வி.ராமுடு நடுநிலையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், “போலீசுக்குத் தெரியாதது உங்களுக்குத் தெரியுமோ” என்றெல்லாம் பத்திரிகையாளர்களை நோக்கி ஆத்திரப்பட்டுக் கத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

எனினும் APCLC போன்ற ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்களின் செயல்பாடுகளின் விளைவாக இன்று கொலை செய்த காவல்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த “மோதல்” கொலைகள் தொடர்பான உண்மைகளையும், இதற்குப் பின்னணியாக உள்ள அரசியலையும், தமிழகத் தொழிலாளிகள் இப்படி உயிரையும் பணயம் வைத்து இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானதின் பின்னணியையும் ஆய்வு செய்ய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:

உண்மை அறியும் குழு

அ. மார்க்ஸ் – தேசிய மனித உரிமைகளுக்கான மக்கள் கூட்டியக்கம் (National Confederation of Human Rights Organisations – NCHRO). சென்னை.- 09444120582

கோ. சுகுமாரன் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for Peoples Rights), புதுச்சேரி. –  9894054640

பேரா.பிரபா. கல்விமணி –   பழங்குடி இருளர் பாதுகாப்பு இயக்கம், திண்டிவனம். – 09442622970

சீனிவாசன் –  சுற்றுச்சூழல் ஆய்வாளர், சென்னை.- 9840081114

ரமணி- ஜனநாயகத் தொழிற்சங்க மையம்.சென்னை.- 9566087526

முகம்மது தன்வீர் –  தேசிய மனித உரிமைகளுக்கான மக்கள்கூட்டியக்கம் (NCHRO), சென்னை.- 7299924030

தை.கந்தசாமி- தலித் மக்கள் பண்பாட்டுக் கழகம், திருத்துரைபூண்டி – 9486912869

பரிமளா- இளந்தமிழகம் இயக்கம், சென்னை.- 9840713315

சே.கோச்சடை –  மக்கள் கல்வி இயக்கம். – 9443883117

தமயந்தி – வழக்கறிஞர், விடியல் பெண்கள் மையம்,சேலம்.- 9943216762

அப்துல் சமது- மனிதநேய மக்கள் கட்சி,  வேலூர். – 8940184100

விநாயகம்  – மக்கள் விடுதலை இதழ் – 9994094700

சேகர்-  மக்கள் வழக்குரைஞர்  கழகம், திருவண்ணாமலை. – 9789558283

வேடியப்பன் – சமூக செயற்பாட்டாளர், அரூர்- 9443510238

மணியரசன் –  வழக்குரைஞர், செங்கம் – 9442810463

பாரதிதாசன் – இளந்தமிழகம் இயக்கம், சென்னை.

எங்கள் ஆய்வு முறை

என்கவுன்டர் கொலைகள் நடந்த இடங்களுக்கு இப்போது யாரும் செல்ல இயலாது. ஆந்திர அரசின் 144 தடை உத்தரவு கடுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. தவிரவும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டயாரிடமும் தொடர்புடைய அதிகாரிகள் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனத் தடையும் உள்ளது. இது ஒரு “உண்மையான” மோதல் தான் எனவும், மரம் வெட்டிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே தாங்கள் இந்த என்கவுன்டரைச் செய்தோம் எனவும் தலைமைக் காவல் அதிகாரி ராமுடு ‘டெக்கான்கிரானிகல்’ இதழுக்கு அளித்துள்ள நேர்காணல் இந்திய ஊடகங்கள் பலவற்றிலும் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் எங்கள் குழு ஏப்ரல் 17, 18 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்திலுள்ல படவேடுக்கு அருகில் உள்ல மலையடிவாரக் கிராமங்கள்; திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலுள்ள ஜமுனாமருதூர் ஒன்றியதிலுள்ள நம்மியம்பாடியை ஒட்டியுள்ள மலைக் கிராமங்கள்; தருமபுரி மாவட்டம் சித்தேரி மலையிலுள்ள அரம்பட்டு மற்ரும் அதை ஒட்டியுள்ள கிராமங்கள் ஆகியவற்றிற்குக்  சென்று பல தரப்பினரையும் சந்தித்தது. கொலையுண்ட 20 பேர்களில் மெலக்கணவாயூர் பன்னீர்செல்வம், கல்லுக்காடு சசிகுமார் தவிர அனைவரது குடும்பத்தினரையும் சந்தித்து விரிவாகப் பேசியது. அவர்களின் குடும்ப நிலை, அவர்களது வாழ்நிலை, அவர்களின் கிராமங்களின் நிலை ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தது.  முன்னதாக எம் குழு உறுப்பினர்களில் விநாயகம், வேடியப்பன் முதலானோர் பலமுறை இப்பகுதிகளுக்குச் சென்று கொலையுண்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து வந்தனர்.

இந்தச் சம்பவம் மற்றும் இதன் பின்னணி தொடர்பான  ஊடகக் கட்டுரைகள், இணையப் பதிவுகள், வன உரிமைச் சட்டங்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம். பழங்குடியினர் பகுதிகள்  பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் செயல்படும் விதங்களையும் ஆய்வு செய்தோம்.

செம்மரக் கடத்தலின் பின்னணி, அரசியல் குறித்தும், இது தொடர்பாக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் முன்னதாக வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகளில் கண்டுள்ள தகவல்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.

ஏப்ரல் 7 சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும்

காலை 10 மணி வாக்கில் திருப்பதியை ஒட்டிய சேஷாசலம் காடுகளில் “செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்த” 20 பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி காட்சி ஊடகங்களில் வெளிவந்து அதிர்ச்சியை விளைவித்தது. கைது செய்ய முயன்றபோது இவர்கள் தாக்கியதாகவும் அதனால் டி.ஐ.ஜி காந்தாராவ் தலைமையில் வந்த சிறப்புக் காவற்படையினர் (APRSASTF) மரம் வெட்டிக் கொண்டிருந்த ‘கடத்தல்காரர்களைத் தற்காப்பிற்காக”த் சுட்டுக் கொன்றதாக ஆந்திரத் தரப்பில் சொல்லப்பட்டது. எனினும் இது தற்காப்புக்காகக் கொல்லப்பட்டதல்ல, குண்டுக் காயங்கள் இடுப்புக்கு மேலாகவே உள்ளன என்கிற தகவல்களை விரிவான ஆதாரங்களுடன் மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன.

அடுத்தடுத்த நாட்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மூட்டைகளாகக் கட்டப்பட்டுத் தமிழகக் காவல்துறையின் உதவியுடன், கொல்லப்பட்டவர்களின்  உறவினர்களிடம் சேர்ப்பிக்கப்படன. உடல்களோடு இறப்புச் சான்றிதழ் ஒன்றும், அத்துமீறி நுழைந்தது,  தடைசெய்யப்பட்ட இயற்கை வளங்களைக் கொள்ளை கொண்டது, தடுக்க வந்த அரசுப் படையினரைக் கொலை செய்ய முயன்றது முதலான குற்றங்களைக் கொலையுண்டவர்களின் மீது சுமத்திய முதல் தகவல் அறிக்கைப் பிரதி ஒன்றும் உறவினர்களிடம் அளிக்கப்பட்டன.

கொல்லப்பட்டவர்களின் விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டம்  படவேடு (7 பேர்)

காந்தி நகர் எஸ்.மகேந்திரன் (22), முருகப்பாடி ஜி.மூர்த்தி (38), ஜி.முனுசாமி (35),  நுளம்பை கே.பெருமாள் (37),வேட்டகிரிபாளையம் கே.சசிகுமார் (34),  முருகன் (38), கலசமுத்திரம் வி.பழனி (35). (போயர் வகுப்பைச் சேர்ந்த கலசமுத்திரம் பழனியின் உடல் வந்த அன்றே எரிக்கப்பட்டது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களின் உடல்கள் மறு பிரேத பரிசோதனைக்குப் பின் புதைக்கப்பட்டன).

திருவண்ணாமலைமாவட்டம் ஜமுனமரத்தூர் (5 பேர்)

மேலக்கணவாயூர் ஆர்.பன்னீர்செல்வம் (22), மேல்குப்சானூர் (நம்மியம்பட்டு) எஸ். கோவிந்தசாமி (42), கோ.ராஜேந்திரன் (30), சி.சின்னசாமி (48) ,வி.வள்ளிமுத்து(18), (இந்த ஐந்து மலையாளிப் பழங்குடியினரின் உடல்களும் புதைக்கப்பட்டன) தருமபுரி மாவட்டம், சித்தேரி மலை (7 பேர்) அரசநத்தம் வி.ஹரிகிருஷ்ணன் (52), எம்.வெங்கடேசன் (23), எஸ்.சிவகுமார் (25), டி.லட்சுமணன் (23), எல். லட்சுமணன் (46), ஆலமரத்து வளவு ஏ.வேலாயுதம் (25). கருக்கன்பட்டி பி.சிவலிங்கம்(42). ( இந்த அய்ந்து மலையாளிப் பழங்குடியினரின் உடல்களும் அன்றே எரிக்கப்பட்டன எரிக்க வேண்டும் என ரெவின்யூ மற்றும் காவல்துறை அதிகாரிகள் தம்மை வற்புறுத்தியதாக கொல்லப்பட்ட வேலாயுதத்தின் தம்பி ராமமூர்த்தி கூறினார்). சேலம் மாவட்டம்,வாழப்பாடி வட்டம், கல்வராயன் மலை (ஒருவர்), கல்லுக்காடு ச.சசிகுமார், (பழங்குடியினரான இவரது உடலும் அன்றே எரிக்கப்பட்டது).

கொல்லப்பட்ட நிகழ்வு குறித்துகொல்லப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டி ஆந்திர காவல்துறை பதிந்துள்ள முதல் தகவல்அறிக்கையின் விவரம்: 

திருப்பதி மாவட்டம், சந்திரகிரி காவல் நிலையம், மு.த.எண்: 42/2015, தேதி: ஏப்ரல் 7, 2015 ;

குற்றப் பிரிவுகள்: 147,148,307,332 r/w 149 இ.த.ச மற்றும் ஆந்திர மாநிலவனச் சட்டப் பிரிவுகள் 20(1), (2), (3), (4), 44 மற்றும் Biological Diversity Act பிரிவுகள் 7, 24(1), 55.

சம்பவம் நிகழ்ந்த நேரம்: ஏப்ரல் 7, செவ்வாய்க்கிழமை காலை 5.30 முதல் 6.00 மணிக்குள்.

தொடர்ந்த நிகழ்வுகள்:

20 பேர்களும் சேஷாசலம் காட்டில் இரு இடங்களில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டதாக ஆந்திர காவல்துறை கூறியது. ஒரு இடத்தில் 9 பேரின் உடல்களும் இன்னொரு இடத்தில் 11 பேர்களின் உடல்களும் கிடத்தப்பட்டு ஊடகங்களுக்குக் காட்டப்பட்டன. உடல்களுக்கு இடையில் அவர்களால் ‘வெட்டப்பட்ட’  செம்மரத் துண்டுகள் எனச் சிலவற்றையும் ஆங்காங்கு போட்டிருந்தனர். அப்படிக் கிடந்தவற்றில் பொறிக்கப்பட்டிருந்த எண்கள் அவை முன்னதாகவே வெட்டப்பட்டவை என்பதைக் காட்டுவதை ஊடகங்கள் சுட்டிக் காட்டின.

மேலே குறிப்பிட்டவாறு உறவினர்களிடம் சேர்க்கப்பட்ட பழங்குடியினரின்  உடல்களில் எட்டு எரிக்கப்பட்டன. ஐந்து உடல்கள் புதைக்கப்பட்டன. அடிவாரத்தில் வாழ்ந்தவர்களில் பழனியின் உடல் மட்டும் எரிக்கப்பட்டது. வன்னியர்கள் நீதி வேண்டும் எனச் சாலை மறியல் செய்தனர். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பா.ம.க நீதிமன்றத்தை அணுகி மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக அடிவாரத்தைச் சேர்ந்த பிற ஆறு பேர்களின் உடல்கள் இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவிலிருந்து வந்த மருத்துவர்களால் மறு பரிசோதனை செய்யப்பட்டபின் புதைக்கப்பட்டன. மறு பரிசோதனை அறிக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம்ஆந்திர காவல்துறையின் ‘என்கவுன்டர்’ கதை குறித்த வேறு சில கூடுதல் தகவல்கள் வெளிவர வாய்ய்ப்புள்ளது.

இதற்கிடையில் மோதலின்போது தற்காப்புக்காகத்தான் சுட வேண்டியதாயிற்று என ஆந்திரக் காவல்துறை சொல்வதற்கு எதிரான ஒரு மிக முக்கிய ஆதாரம் மேலுக்கு வந்தது. கொல்லப்பட்டவர்களில் சித்தேரிமலை மற்றும் சேலத்தைச் சேர்ந்த ஏழு பேர்களும் திருப்பதி செல்லும் வழியிலேயே ஆந்திரப் போலீசால் கடத்திச் செல்லப்பட்ட செய்திதான் அது. ஆந்திர எல்லையில் உள்ள நகரி புதூர் என்னும் இடத்தில் பேருந்தை நிறுத்தி அவர்கள் இறக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதை நேரடி சாட்சியங்கள் இன்று நிறுவுகின்றன.

நடந்தது இதுதான். எங்களது விசாரணையும் இதை உறுதிப்படுத்தியது. மரக் கடத்தல் மாஃபியாவின் உள்ளூர் ஏஜன்டான புதூர் வெங்கடேசன் என்பவர் மூலம் மரம் வெட்டுவதற்கென அழைத்துச் செல்லப்பட்ட ஒரு குழுவில் ஒன்பது பேர்கள் இருந்துள்ளனர். தற்போது கொல்லப்பட்டுள்ள படவேடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் பழனி ஆகியோர் மூலமாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில், சித்தேரிமலையிலிருந்து சனிக்கிழமை (ஏப் 4) மாலையே புறப்பட்டு வந்த குழு அது. ஜவ்வாதுமலையில் வந்து தங்கிப்பின் ஞாயிறு மதியம் அவர்களைக் கண்ணமங்கலம் கொண்டு வந்து அங்கிருந்து பேருந்தில் திருத்தணி வழியாக ரேணிகுண்டா கொண்டு செல்வது ஏஜன்டுகளின்  திட்டம். இக்குழுவில் தற்போது உயிர் பிழைத்துள்ள படவேட்டைச் சேர்ந் சேகர் (45), சித்தேரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோரும் இருந்துள்ளனர்.

இவர்களில்பாலச்சந்திரன் தன் நண்பர் ஒருவருடன் கண்ணமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றதால் மற்றவர்களோடு பஸ் ஏற இயலாமற் போயிற்று. அந்தக் குழுவில்அவரது தந்தை அரிகிருஷ்ணனும், மைத்துனன் சிவகுமாரும் இருந்துள்ளனர். போதை தெளிந்த பாலச்சந்திரன் அந்தக் குழுவில் இருந்த சிவக்குமாரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் நகரி புதூரில் ஆந்திரக் காவலர்களால் இறக்கி அழைத்துச் செல்லப்படுவது தெரிந்தது. பின் அவர் ஊருக்குத் திரும்பினார். பாலச்சந்திரனின் சகோதரன் பிரபாகரன் இவற்றைவிரிவாக எங்களிடம் விளக்கினார்.

ரேணிகுண்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து நகரி புதூரில் நிறுத்தப்பட்டு ஆந்திர போலீசாரால் அக்குழுவில் இருந்த எட்டு பேர்களில் ஏழு பேர்கள் இறக்கப்பட்டனர். அவர்களை இறக்கியபோது யாரோ ஒரு பெண்ணருகில் அமர்ந்து சென்று கொண்டிருந்த சேகரை அப்பெண்ணின் கணவர் என நினைத்துக் கொண்டு விட்டு விட்டு மற்ற ஏழு பேர்களை மட்டும் ஆந்திரக் காவலர்கள் அழைத்துச் சென்றனர். சேகர் அடுத்தநிறுத்தத்தில் இறங்கி திருத்தணி செல்லும் பேருந்தைப் பிடித்துத் தப்பித்து வந்துள்ளார்.

இப்படி வெவ்வேறு பேருந்துகளில் வந்துள்ள பலரும் அன்று, அதாவது திங்கள் மாலை வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பன்னீர்செல்வமும் இப்போது தப்பியுள்ள இளங்கோவும் ஒரு ஆட்டோவில் வந்தபோது பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கொண்டு சென்று வைத்திருந்த இடத்திலிருந்து மங்கலான வெளிச்சத்தில் தப்பி ஓடி வந்துள்ளார் இளங்கோ.

ஆந்திரகாவல்துறையின் என்கவுன்டர் கதையைப் பொய்யாக்கும் வலுமிக்க சாட்சியமாக இன்று சேகர், பாலச்சந்திரன், இளங்கோ ஆகியோர் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த ‘பீப்பிள்ஸ் வாட்ச்’அமைப்பு இம்மூவரையும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன் நிறுத்தி நடந்த உண்மைகள் குறித்த வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளது. இளங்கோ முதலானோர் சொல்வதிலிருந்து அன்று இவ்வாறு ஆந்திரக் காவல்துறையால் கடத்திச் செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20ஐத் தாண்டும் எனத் தெரிகிறது. மற்றவர்களின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது.

இதற்கிடையில் ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகம் தொடுத்த வழக்கொன்றின் ஊடாக இன்று ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புச் சிறப்புப் படையினர் மீது ஆட்களைக் கடத்தியது, கொன்றது ஆகிய குற்றங்களைச் சுமத்தி இரு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.

மகேந்திரன், கல்லுக்காடு சசிகுமார் ஆகியோர் தவிர பிற அனைவரது வீடுகளுக்கும் எங்கள் குழுவினர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி வாக்குமூலங்களையே அளித்தனர். தற்போது கொல்லப்பட்டவர்கள் யாரும் மரம் வெட்டப் போகவில்லை என உறுதிபடக் கூறினர். இதுவரை அவர்கள் மரம் வெட்டும் வேலைக்குச் சென்றதே இல்லை எனவும் உறவினர்களும் மற்றவர்களும் கூறுகின்றனர். பெயின்ட் அடிப்பது, கட்டிடவேலையில் கலவை போடுவது, காப்பிக் கொட்டை பறிப்பது, மேஸ்திரி வேலை செய்வது  முதலான வேலைகளுக்காகத்தான் அடிக்கடி இப்படிப் பல நாட்கள் வெளியூர் செல்வார்கள் எனச் சொன்னார்கள். வேட்டகிரிபாளையம் சசிகுமார், முருகன் ஆகியோரது வீடுகளில் அவர்கள் பெயின்டிங் செய்யப் பயன்படுத்தும் கருவிகள், வண்ணக்கறை படிந்த சட்டைகள் ஆகியவற்றையும் காட்டினர். மரம் வெட்டப் போவதில்லை எனில் பின் எதற்காக அன்று திருப்பதிப் பக்கம் சென்றனர் என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை. கொலை நடந்த அடுத்தடுத்த நாட்களில் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டிகளில் இவர்களில் சிலர் மரம் வெட்டப் போனதாகச் சொல்லியுள்ளதையும் நாம் மறந்துவிட இயலாது.

செம்மரம் வெட்டிக் கடத்தல்காரர்களுக்கு உதவுவது குற்றம் என்பதால் அதற்காகப் போனவர்களைச் சுட்டது சரிதானே என நாம் நினைத்து விடுவோமோ என அந்த அப்பாவி மக்கள் அச்சப்படுவது விளங்கியது. அதோடு அவர்கள் எல்லோரும் முழு நேரமாக மரம் வெட்டுவதையே தொழிலாகக் கொண்டவர்களும் அல்ல. கடும் வறுமை, கடன் தொல்லை, வட்டி கட்ட இயலாமை, மழை இல்லாமை, பஞ்சம் ஆகியவற்றால் அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாத தருணங்களில், கிடைக்கும் எந்த வேலையையும் செய்யத் தயாராக உள்ளவர்களாக அவர்கள் உள்ளனர். எவ்வளவு உயிர் ஆபத்து உள்ள வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற நிலையில் உள்ளனர். பலர் கேரளா, கர்நாடகம் முதலான மாநிலங்களில் குறைந்த ஊதியத்திற்குப் பல மாதங்கள் அங்கேயே தங்கி வேலை செய்கின்றனர். தவிரவும் இவர்களை அழைத்துச் செல்லும் ஏஜன்டுகள் வெட்டப் போகும் மரங்கள் அரசு அனுமதியுடன் வெட்டப்படுகின்றன என்றோ, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துச் சரி கட்டியாகிவிட்டதால், பிரச்சினை  ஏதும் இருக்காது என்றோ பொய் சொல்லியும் அழைத்துச் செல்லுகின்றனர். ஒரு சிலர் மரம் வெட்டுவதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை எண்ணியும் இந்த ஆபத்தான வேலைகளுக்குச் செல்லுகின்றனர்.

இவர்களில் ஆசிரியர் பயிற்சி முடித்த பழனி, அஞ்சல் வழிக் கல்வியில் பட்டம் பயிலும் மகேந்திரன் தவிர மற்றவர்கள் அதிகம் படிக்காதவர்கள். பழங்குடி மலையாளிகளில் பலர் படிக்காதவர்கள். ஒரு சிலருக்கு செல்போன்களைக் கூடப் பயன்படுத்தத் தெரியாது என அவர்களின் உறவினர்கள் கூறினர். கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் 40 வயதுக்குக் குறைந்தவர்கள். இன்று கணவரை இழந்துள்ள பெண்கள் பலரும் 30 வயதுக்கும் குறைந்த இளம் வயதினர். சிலர் 2வவயதுக்கும் குறைந்தவர்கள். இவர்கள் எல்லோரும் ஒரே குரலில் சொன்ன இன்னொரு விடயம் கொல்லப்பட்டு ஒப்புவிக்கப்பட்ட தம் உறவினர்களின் உடல்கள் யாவும் கடுமையாகச் சிதைக்கப்பட்டும் தீக்காயங்களுடனும் இருந்தது என்பதுதான்.

மலைவாழ் பழங்குடியினரைப் பொறுத்தமட்டில் அவர்கள் முழுவதும் மழையை நம்பியே வாழ்கின்றனர். யாரிடமும் போதுமான அளவு நிலம் இல்லை. பலரும் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலங்களையே கொண்டுள்ளனர். சில புளியமரங்கள், பலா மரங்கள். ஆங்காங்கு கண்ணில் படுகின்றன, மழைநீரைத் தேக்கி வைக்க சிறு அணைகளோ, குளம் குட்டைகளோ இல்லை. மழை வந்தால்தான் சாகுபடி. விளையும் பொருட்களை அங்கேயே கொள்முதல் செய்ய அரசு எந்த வழியையும் செய்யவில்லை. மலைக்குச் செல்ல சாலை வசதிகள் போதிய அளவில் இல்லை. சித்தேரி மலையில் அடிவாரத்திலிருந்து (வாச்சாத்தி) மேலே செல்ல முறையான சாலையே இல்லை. நாங்கள் சென்ற ஸ்கார்பியோ வண்டி ஒரிடத்தில் சேற்றில் சிக்கிக் கொண்டது.

சித்தேரிமலையில் பழங்குடியினருக்குப் பொதுச் சுடுகாடு கூடக் கிடையாது, தற்போது கொல்லப்பட்ட எட்டு பேர்களும் அவரவரின் சொந்த நிலங்களிலேயே எரிக்கப்பட்டுள்ளனர்.

பழங்குடியினர் நலத் துறையின் கீழ் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் உரிய எண்ணிக்கையில்ஆசிரியர்கள் இல்லை. நம்மியம்பாடி மேலக்குசானூரில் உள்ள ஒரு உண்டு உறைவிடப்பள்ளியில் 60 மாணவர்கள் உள்ளனர். ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரு வாட்ச் மேன், ஒரு சமையற்காரர் மட்டுமே உள்ளனர். தலைமை ஆசிரியர்தான் வார்டன் வேலையையும் செய்ய வேண்டும். சித்தேரி மலையில் அரசநத்தத்திற்கு அருகில் உள்ள ஒரு பள்ளியில் 172 மாணவர்கள் உள்ளனர். அது ஒரு நடுநிலைப் பள்ளி. இரண்டே ஆசிரியர்கள்தான் உள்ளனர்.

போதிய மருத்துவமனைகளும் கிடையாது. இருக்கும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. 99 சதப் பிரசவங்கள் இன்னும் வீடுகளிலேயே நடக்கின்றன. பிரசவம் முடிந்த பிறகு மருத்துவமனையில் கொண்டு வந்து பதிந்து அழைத்துச் செல்கின்றனர். முத்துலட்சுமி ரெட்டி பெயரில் வழங்கப்படும் 12,000 ரூபாய் உதவித் தொகையைப் பெறுவதற்காகவே இப்படிச் செய்கின்றனர். குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி போதிய சத்துணவு கிடைப்பதில்லை. குழந்தை இறப்பு வீதம் இங்கு அதிகம் என்கிறார் இப்பகுதியில் UNICEF ஆய்வாளராகப் பணி செய்யும் டாக்டர் வித்யாசாகர். நம்மியம் பாடியில் வயதானவர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. எல்லோரும், குறிப்பாகப் பெண்கள் சோகை பிடித்தவர்களாகவும் இளைத்தும் காணப்பட்டனர். டாக்டர் பினாயக் சென் குறிப்பிடுவதுபோல எல்லாப் பழங்குடி மக்களையும் போலவே  இப்பகுதிப் பழங்குடி மக்களுக்கும் உயரத்திற்கேற்ற நிறையும் பருமனும் இல்லை. போதிய சத்துணவு இல்லாமையே இதன் காரணம்.

வன உரிமைச்சட்டம் 2006 என்பது வனத்தை நம்பி வாழ்பவர்களுக்குப் பல உரிமைகளைத் தருகிறது. தமிழக அரசு அப்படி ஒரு சட்டம் இருப்பதைக் கண்டு கொள்வதே இல்லை. பிற மாநிலங்களில் சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1.5 மில்லியன் மலைவாழ் மக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளன என்கிறார் வனச் சட்டம் 2006-ஐ உருவாக்கிய குழுவில் இருந்த பிஜோய்.  தமிழகத்தில் அச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்பதோடு, திட்ட ஒதுக்கீடுகளில் பழங்குடிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியும் கூடப்பிற துறைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வன உரிமைச் சட்டம் பயன்பாட்டில் இல்லாததன் விளைவாக இன்று வனத்துறை அதிகாரிகள் இம்மக்களைத் தொல்லை செய்வதற்கும் வழியாகிவிடுகிறது.

இதழாளர் ஒருவர், “சரி பஞ்சத்தின் விளைவாக உங்களின் கடைசி மாட்டையும், இருந்த பனை மரங்களையும் விற்று விட்டீர்கள். இந்தப் பணம் தீர்ந்தவுடன் என்ன செய்வீர்கள்?” எனக்கேட்டபோது இப்பகுதிப் பழங்குடி ஒருவர், “காப்பாதுறவன் வருவான்” எனச்சொல்வது சில நாட்களுக்கு முன் ஒரு இதழில் வெளியாகி இருந்தது. ஆமாம், செம்மரக்கடத்தல் மாஃபியாக்களின் ஆள் பிடிக்கும் ஏஜன்டுகளாகச் செயல்பட்டுத் தங்களைக் கடுமையானதும் ஆபத்தானதுமான பணிகளில் ஈடுபடுத்துவோர் இப்படிக் காப்பாற்ற வந்தவர்களாகத் தோற்றமளிக்கும் காட்சிப் பிழை ஒன்று இங்கே நிகழ்கிறது. இது இந்தஅரசப் புறக்கணிப்புகளின் விளைவுதான் என்பதை மறந்து விடக் கூடாது.

இவர்களின் கடும்உழைப்பின் மூலமும், இவர்களின் உயிர்களைப் பணயம் வைத்தும்  கோடி கோடியாய்க் கொள்ளை அடிக்கும் மாஃபியாக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பல மட்டங்களில் செம்மரக் கடத்தல் தொழில் செயல்படுகிறது. ஒரு மட்டத்திற்கும் இன்னொன்றிற்கும் இடையில் உள்ள தொடர்பு அவ்வளவு துல்லியமானதல்ல. யாருக்காக இந்த வேலையைச் செய்கிறோம் என்பது கீழே உள்ளவர்களுக்குத் தெரியாது. தொடர்புக் கண்ணியைத் தொடர்ந்து கொண்டே வந்தால் அது எங்கோ ஒரு புள்ளியில் அறுந்து போகும்.

தங்கள் கிராமத்திற்குள்ளேயே யாரோ ஒருவருக்குச் சேதி வரும்.  நடந்து முடிந்த கொடுமையில்பழனி அல்லது மகேந்திரன் சொல்லித்தான் சித்தேரி மலையிலிருந்து ஜமுனாமருதூருக்கு வந்துப் பின் கண்ணமங்கலம் சென்று பேருந்து ஏறியதாக இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்தப் பழனி, மகேந்திரன் இருவருமே இன்று கொல்லப்பட்டுள்ளனர். புதூர் வெங்கடேசன் என இன்னொரு ஏஜன்ட் மூலம்தான் இந்த இருவருக்கும் அல்லது இவர்களில் யாரோ ஒருவருக்கும் மேலிருந்து செய்தி வந்துள்ளது.

இவர்களை அழைத்துச் செல்லும் வழியும் அவ்வப்போதுதான் தீர்மானிக்கப்படுகிறது. இதில் பஸ் கண்டக்டர்கள், டிரைவர்களும் கூடச் சில நேரங்களில் கையாட்களாக உள்ளனர். குறிப்பிட்டஇடத்திலிருந்து இவர்கள் வன ஓரங்களுக்குக் கொண்டு வரப்பட்டு அங்குள்ள உள்ளூர் அடித்தள மக்களின் (பெரும்பாலும் தலித்கள்) வீடுகளில் தங்க வைக்கப்படுகின்றனர். பின் அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றியோ, இல்லை வாகனம் செல்ல இயலாத இடங்களில் நீண்ட நடைப்பயணம் மூலமாகவோ ஒரு ‘பைலட்’ அவர்களை செம்மரக் காடுகளுக்குக் கொண்டு செல்கிறான். அங்கே இவர்களுக்குக் கொஞ்சம் உணவும் கருவிகளும் வழங்கப்படுகின்றன. வெட்டிய மரங்களைத் துண்டுகளாக்கி சுமார் 25 கிலோ எடையை தலையில் சுமந்து நீண்ட தூரம் நடந்துவந்து  சேர்ப்பித்து அவர்கள் அகல வேண்டும். அதற்குப் பின் கடத்தல் கண்ணி அவர்களைப் பொறுத்தமட்டில் அறுந்து விடுகிறது. ஊதியத்தைக் கூட அவர்கள் ஊருக்குத் திரும்பி வந்து தங்களை அனுப்பிய ஏஜன்டிடம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பல நேரங்களில் பேசிய தொகையைக் கொடுப்பதில்லை.

இந்த மரங்கள் பின்னர் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியே கொண்டு செல்வது இன்னொரு மட்டத்தில் நடைபெறும் வேலை. பத்துடன் மரத்தை வெளியே கொண்டு செல்ல வேண்டுமானால் அவை எட்டு லாரிகளில் ஏற்றப்படும். இன்னொரு இரண்டு லாரிகளில் ஒரு டன் மரம் ஏற்றப்பட்டு அவை மட்டும் வழியில் சோதனையில் “பிடிபடும்”.  காவல்துறை, வனத்துறை உரிய அமைச்சு எல்லாவற்றிற்கும் இதற்கான காணிக்கைகள் செலுத்தப்படும். பழங்கள் என்றோ, காய்கறிகள் என்றோ இன்வாய்ஸ்களும் பிற ஆவணங்களும் பெறப்படும்.

இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட மரங்களை வெளி நாட்டுக் கடத்தல்காரர்களுடன் பேரம் பேசி அனுப்புவது இன்னொரு மட்டத்தில் நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக இருந்து மாஃபியா கும்பல் பணத்தை விசிறி அடித்து வேலை முடித்து லாபத்தை அள்ளும்.

ஒரு இயற்கை வளப் பாதுகாப்புச்செயல்பாடு சமூக அரசியல் பிரச்சினையாக மாறிய கதை

திருப்பதி மற்றும் கடப்பா மாவட்டங்களை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ள இந்த செஞ்சந்தன மரங்கள் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. நெல்லூர், கர்நூல் மாவட்டங்களிலும் இவை சிறிதளவு உண்டு. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம் எனவும் இது கூறப்படுகிறது. 2009ல் கிலோ 100 ரூபாயாக இருந்த இம்மரம் இன்று கிலோ 2000 ரூபாய். வாசனையற்ற இச்சந்தன மரம் சீனா, ஜப்பான், பர்மா முதலான பவுத்த நாடுகளில் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்காகவும், மருந்துக்காகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் பெரிதும் விரும்பப்படுகிறது. இதனுடைய அசாத்தியமான சிவப்பு வண்ணம் இதன் சிறப்பு. இந்த மரத்தை ‘அழியும் உயிரிகளில்’ (endangered species) ஒன்றாக “இயற்கைப் பாதுகாப்பிற்கானபன்னாட்டு ஒன்றியம்” (IUCN) 2000த்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்புத்தான் மாஃபியாக்களின் கவனத்தை இந்தப் பக்கம் திருப்பியது. இம்மரத்தைக் கடத்தி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிட்டால் நூறு மடங்குவரை லாபம் கிடைக்கும். அழியும் உயிரி என்பது இந்த வணிகத்தில் கடும் கட்டுப்பாடுகளை உருவாக்குகிறது. கட்டுப்பாடுகள் மிகும்போது அவற்றை மீறுவதால் விளையும் பயன்களும் அதிகமாகின்றன; ஆபத்துக்களும் அதிகமாகின்றன. பயன்களை இந்த வணிகத்தில் மேல் அடுக்கில் உள்ள  மாஃபியாக்களும், ஆபத்துகளைக் கீழடுக்கில் உள்ள மரம் வெட்டிகளும் எதிர் கொள்கின்றனர்.

மிகப் பெரிய அளவில் இன்று ஆந்திர மாநில அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியாக இந்த மாஃபியாக்கள் உள்ளனர். இன்று மொரீஷியசில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள கொல்லம் காங்கி ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முக்கிய புள்ளிகளில் ஒருவன். முந்தைய முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கிரண் குமார் ரெட்டியின் சகோதரன் கிஷோர் குமார் ரெட்டி இன்னொரு செம்மரக் கடத்தல் மாஃபியா தலைவன்.

சந்திரபாபு நாயுடு கட்சியிலும் செம்மர மாஃபியாக்கள் இருந்த போதிலும் கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்கள் தெலுங்கு தேசம் கட்சியின் பலவீனமான பகுதிகளாகவே உள்ளன. சென்ற தேர்தலிலும் கூட இக்கட்சி இவ்விரு மாவட்டங்களிலும் பெரிதாக வெற்றி பெறவில்லை. சென்ற ஆண்டு, சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற கையோடு, பதவி ஏற்பதற்கு முன்னதாகவே உயர்காவல்துறை அதிகாரிகளைக் கூட்டி அடுத்த பத்து நாட்களுக்குள் செம்மரக் கடத்தலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என ஆணையிட்டார். காவல்துறையிலுள்ள காங்கிரஸ் ஆதரவாளர்களையும் சேஷாசலம் காட்டுப் பகுதியிலிருந்து இடமாற்றம் செய்ய ஆணையிட்டார்.

நவம்பர் 2014 ல் “ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் படை(APRSASTF)” உருவாக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் சென்ற பிப்ரவரியில் இதன் தலைவராக டி.ஐ.ஜி எம்.காந்தாராவ் நியமிக்கப்பட்டார். இன்று இருபது தமிழர்களைக் கொன்றது இவரது தலைமையில் இயங்கிய படைதான்.

நாயுடு எதிர்பார்த்தது நடந்தது. காங்கிரஸ் ஆதரவு செம்மரக் கடத்தல் மாஃபியாக்கள் அவர் பக்கம் பணிவு காட்டத் தொடங்கினர்.

தமிழக எல்லையோர மாவட்டமான வேலூரிலும் கூட செம்மர மாஃபியாக்களின் செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது. வேலூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் கரகாட்டக்காரரான மோகனாம்பாளிடமிருந்து 4.4 கோடி ரூ பணமும் 72 பவுன் நகைகளும்  கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம். இவை செம்மரக்கடத்தல் மூலமாகச் சம்பாதித்தவைதான். ஆந்திராவிலும் தமிழகத்திலும் இந்த அம்மைக்கு 30 வீடுகள் உண்டு. சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்காட்டில் கைப்பற்றப் பட்ட 32 லட்ச ரூபாய்களுங் கூட செம்மரக் கடத்தலின் ஊடாகக் கிடைத்ததுதான் எனச் சொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

சென்ற ஆண்டு மத்தியில் ஆந்திரக் காவல்துறை ஏழு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இவர்கள் அனைவரும் அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த வன்னிய இனத்தவர்கள்.

சிறப்புப் படை அமைத்து வேட்டையாடுவது ஆந்திர மாநிலத்தின் உள் அரசியலானாலும் கொல்லப்படுபவர்கள் எல்லோரும் செம்மரக் கடத்தற் கண்ணியில் கீழ் மட்டத்தில் உள்ள தமிழக மரம் வெட்டிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது, வெட்டும் திறன் நுணுக்கமாக வாய்க்கப்பட்டுள்ளவர்கள் என்கிற வகையில் அதிக அளவில் தமிழர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற போதிலும் கொல்லுவது என முடிவெடுக்கும்போது பல்வேறு நிலைகளில் அவர்களுடன் இருந்து பணி செய்யும் உள்ளூர் மக்கள் கவனமாக விலக்கப்பட்டுத் தமிழர்களே பொறுக்கி எடுத்துக் கொல்லப்படுகின்றனர். உள்ளூர் அடித்தள மக்களைக் கொன்றால் பெரிய அளவில் அரசியல் எதிர்ப்புகள் வரும்; தமிழர்களைக் கொன்றால் அப்படியான பிரச்சினை இருக்காது என்பதால்தான் இப்படி ஆகிறது எனச் சென்ற ஆண்டு ஏழு தமிழர்கள் கொல்லப்பட்டபோது இதை ஆய்வு செய்த ஒரு உண்மைஅறியும் குழு (NCDNTHR and HRF) குறிப்பிட்டது நினைவிற்குரியது.

கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் வாடும் தமிழர்கள்

நாங்கள் சென்றிருந்த மூன்று பகுதிகளிலும் அடிக்கடி இவ்வாறு மரம் வெட்டப் போகிறவர்கள் கொல்லப்பட்டு உடல்கள் கொண்டு வரப்படுகிறதா எனக் கேட்டபோது எல்லோரும் இல்லை என மறுத்தனர். யாரும் காணாமல் போயுள்ளார்களா எனக் கேட்டபோது சித்தேரி மலையில் அப்படி ஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளார் எனச் சொல்லப்பட்டது.

சென்ற டிசம்பர் 2013ல் ஸ்ரீதர் ராவ், டேவிட் கருணாகர் என்கிற ஆந்திர வனத்துறை அதிகாரிகள் இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஸ்ரீதர் ராவ் மிக்க நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர். இதற்குப் பிரதியாகவே சில தமிழர்கள் 2014 மத்தியில் கொல்லப்பட்டனர் என்றொரு பேச்சுண்டு. ஆனால் மிகவும் நேர்மையாக நடந்த இந்த அதிகாரிகள் சரிப்பட்டு வரவில்லை என்பதால் அதிகாரத்தில் உள்ளவர்களே இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்றொரு கருத்தும் உண்டு.

இது தவிர இந்த அதிகாரிகள் கொல்லப்பட்டதற்காக ஏராளமான தமிழர்கள் இன்று கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் வாடுகின்றனர். அரசநத்தம், கலசப்பாடி முதலான ஊர்களில் மட்டும் சி.முருகேசன், ஆ.காமராஜ், த.சத்தியராஜ், ரா.தர்மன், கோ.வெங்கடாசலம், ரா.மகேந்திரன், ரா.சிவலிங்கம், அ.கோவிந்தசாமி, கு. ஆண்டி ஆகியோர் இன்று ஆந்திரச் சிறைகளில் உள்ளனர். இதில் முதல் அறுவர் பிணை விடுதலை இன்றி ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில்உள்ளனர்.

வெங்கடாசலத்தின் (35) மனைவி மகேஸ்வரி (30), தருமன் மனைவி அலமேலு மற்றும் லட்சுமி, ராதிகா ஆகிய பெண்களிடம் நாங்கள் பேசினோம். எல்லோருமே தங்கள் கணவர் குடும்பத்தோடோ தனியாகவோ திருப்பதிக்கு சாமிகும்பிடப் போனபோது அவர்கள் தமிழில் பேசியதைக் கவனித்து அங்குள்ள ஆந்திர போலீஸ் அவர்களைக் கைது செய்து கொண்டு சென்றது என்றனர்.

அலமேலுவின் கணவர் மனைவி, குழந்தைகள், சகோதரன் உட்படத் திருப்பதி சென்று வணங்கிவிட்டுக் கீழ்த் திருப்பதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். தன் கணவரும் கொழுந்தனும் சாலையைக் கடந்து தேநீர் அருந்தச் சென்ற போது யாரோ மூவர் வந்து அவர்களிடம் ஏதோ கேட்டுள்ளனர். தமிழில் பதில் சொன்னவுடன் அவரை இழுத்துச் சென்றுள்ளனர்.

வழக்குரைஞர்களை வைத்து அணுகிய போதுதான் அவர் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முதலில் கடப்பா சிறையிலும் இன்று பாலூர் சிறையிலும் அவர் அடைக்கப்பட்டுள்ளார். மேல்குப்சானூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரும் தான் எவ்வாறு குடும்பத்தோடு திருப்பதி சென்றபோது இதே வடிவில் கைது செய்யப்பட்டார் என்பதையும், பின் ஏதேதோ சொல்லித் தப்பித்து வந்ததையும் விளக்கினார்.

வன அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக 430 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் எனவும், இவர்களில் 30 பேர்கள் முதலிலும், பின்னர் 70 பேர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் எனவும் மகேஸ்வரி கூறினார். பிணையில் விடுதலையான இந்த 100 பேரும் ஆந்திரர்களாம். சிறையிலுள்ள 330 பேர்களும் தமிழர்களாம். கடப்பாவில் உள்ள சலபதி என்பவர்தான் இவர்களின் வழக்குரைஞர். அவரைக் கேட்டால், “தமிழர்களுக்குப் பிணையில் விடுதலை தரமாட்டாங்க. விட்டால் ஓடிப் போயிடுவாங்க” எனச் சொல்கிறாராம். இதுவரை ஒவ்வொருவரும் 22,000 ரூ அந்த வழக்குரைஞருக்கு ஃபீஸ் கொடுத்துள்ளனராம். போக்குவரத்துச் செலவே இது வரை ஒவ்வொருவருக்கும் 35,000 ரூ ஆகியுள்ளதாம்.

பிள்ளைகளை வைத்துக் கொண்டு தாம் எவ்வாறு எந்த வருமானமும் இல்லாமல் துன்பப்படுகிறோம் என இந்தப் பெண்கள் புலம்பினர். சிறையில் இருக்கும் அவர்களின் கணவர்கள், “இனிமே நாங்க விடுதலை ஆகிறது கஷ்டம், எப்படியாவது பொழச்சுக்குங்க” எனச் சொல்கிறார்களாம். பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்கின்றனர் என்றார் அலமேலு.

என்ன கணக்கில் 430 பேர் கைது செய்யப்பட்டார்கள் எனச் சொல்கிறீர்கள் எனக் கேட்டபோது அவர்களுக்கு விளக்கத் தெரியவில்லை.

ஆந்திர மாநிலடி.ஜி.பி ஜே.வி.ராமுடு இது பற்றிக் கூறுவது:

“2014ல் கடும் நடவடிக்கைகள் தொடங்கியபின் இதுவரை 831 வழக்குகள் தொடுக்கப்பட்டு 5239 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 715 வாகனங்களும், 15,520 மரத்துண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜனவரி 2014 தொடங்கி இன்று வரை கைது செய்யப்பட்டவர்களில் ஆந்திரமா நிலத்தைச் சேர்ந்தவர்கள் 2202 பேர். பிற மாநிலத்தவர் 3033 பேர். இவர்களில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். 31 கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் ஆந்திரத்தவர்; 10 தமிழர்கள்; கர்நாடக மாநிலத்தவர் 3, பிற மாநிலத்தவர் இருவர். 45 செம்மரக் கடத்தல்காரர்கள்  தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” – (டெக்கான்கிரானிகல், ஏப்ரல் 15).

ஆக ஆந்திர டி.ஜி.பி சொல்வதிலிருந்து கடந்த 14 மாதங்களில் மட்டும் சுமார் 2000 க்கும்மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் உள்ள பழங்குடி மற்றும் அடித்தளச் சாதியினர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளில் பயணிக்கும்போதும் கைது செய்யப்பட்டவர்கள். கேட்ட கேள்விக்கு அவர்கள் தமிழில் பதில்சொல்வது ஒன்றே போதும் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு.

இந்த முறை 20 பேர்கள் கொல்லப்பட்டுள்ள அதே நேரத்தில், 61 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்ஆந்திர போலீஸ் கூறியுள்ளது. ஆனால் 150 பேர்களுக்கும் மேல் அன்று  ஆந்திரக் காவலர்களால் பிடித்துச் செல்லப்பட்டதாகத் தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர். மீதமுள்ள 100 பேர்களின் கதி என்னவெனத் தெரியவில்லை.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. அ.தி.மு.க தலா 2 லட்சமும், தி.மு.க ஒரு இலட்சமும், தே.தி.மு.க 50,000மும், ஜி.கே.வாசன் காங்கிரஸ் 25,000மும் வழங்கியுள்ளன. பா.ம.க கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளுக்குப் பட்ட மேற்படிப்பு வரைக்கும், அதற்கு மேலும் முழுமையாகக் கல்விச் செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது. நாங்கள் அங்கு சென்றபோது அங்கு வந்திருந்த பா.ஜ.கவினரிடம் ஏதாவது உதவி செய்தீர்களா எனக் கேட்டதற்கு, “பணமாகக் கொடுத்தால் செலவு செய்து விடுவார்கள். நாங்கள் தொலை நோக்கில் பயன் அளிக்குமாறு எதையாவது செய்ய உள்ளோம்” என்றனர்.

சந்திரபாபு அரசு சென்ற அக்டோபரில் செம்மரங்களை டன் ஒன்று 27 லட்ச ரூபாய் என ஏலத்தில் விற்றுள்ளது. வரும் மேயில் அடுத்த ஏலம் ஒன்று நடக்கப் போவதாகத் தெரிகிறது. அழியும் உயிரினங்கள் பட்டியலிலிருந்து செம்மரங்களை நீக்க வேண்டும் என அவர் மத்திய அரசுக்குக் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

செய்ய வேண்டியவை: 

1. மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களின் விளைவாக இன்று செம்மரக் கடத்தல் தடுப்புப் படை மீது இரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் ஒரே ஒரு அதிகாரியின் பெயர் மட்டுமே அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் கூட அவர் தலைமையில் சென்ற யாரோ சில காவலர்கள் என்றுதான் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ஆந்திர அரசு முறையாக விசாரித்து நீதி வழங்கும் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே இது தொடர்பான புலனாய்வை ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் (monitoring) கீழ் நடத்தப்பட வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்புப்படையின் தலைவர் டி.ஐ.ஜி எம்.காந்தாராவ் உட்பட கொலைச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளும் காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

2. கொல்லப்பட்ட20 பேர்களின் குடும்பங்களுக்கும் ஆந்திர மாநில அரசு தலா 30 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

3. கொலை நடந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாமல் இப்போது போடப்பட்டுள்ள 144 தடை, கண்டால் சுடும் உத்தரவு முதலியன உடனடியாக நீக்கப்பட வேண்டும். கொல்லப்பட்ட அன்று இந்த 20 பேர்களைத் தவிர வேறு யாரும் கொல்லப்பட்டார்களா, சுற்றி வளைக்கப்பட்ட மற்றவர்களின் கதி என்னாயிற்று என்பவற்றை நேரில் கண்டறிய மனித உரிமை அமைப்புகள் அனுமதிக்கப்பட வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமும் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

3. செம்மரக் கடத்தல் மாஃபியா குறித்தும், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு குறித்தும் ஆராய ஆந்திரம் மற்றும் தமிழகம் அல்லாத மாநிலம் ஒன்றைச் சேர்ந்த பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்.

4. செம்மரக்கடத்தல் தொடர்பாகச் சிறையில் உள்ளவர்கள் அனைவர் குறித்த விவரங்களையும் உடனடியாக ஆந்திர மாநில அரசு வெளியிட வேண்டும். இது இணையத் தளங்களில் யாரும் பார்க்கத்தக்க வடிவில் வெளியிடப்பட வேண்டும்.

5. செம்மரக்கடத்தல் மற்றும் இரு வன அதிகாரிகளின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பெரும்பாலும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றிலேயே கைது செய்து கொண்டு சென்று பொய் வழக்குப் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் சென்ற பகுதிகள் மட்டுமின்றி திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், வேலூர் முதலான மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து பலரும் கைது செய்யப்பட்டு இன்று ஆந்திரச் சிறைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் பழங்குடி மற்றும் வன்னியர், ஒட்டர் முதலான அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு தம் மக்கள் இவ்வாறு துன்பப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் இவர்களின் விடுதலைக்காக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 2013 டிசம்பர் 13 அன்று கொல்லப்பட்ட இரு ஆந்திர வனத்துறை அதிகாரிகள் ஶ்ரீதர் மற்றும் டேவிட் ஆகியோரின் கொலை குறித்து ஒரு விசாரணை ஆணையம்  அமைக்க வேண்டும். தமிழகத் தொழிலாளிகளைப் போலவே கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அடித்தளத் தொழிலாளிகள் பலரும் கூட இன்று கைது செய்யப்பட்டுச் சிறைகளில் உள்ளதாக ஆந்திர டி.ஜி.பி சொல்கிறார். அவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். மேல் மட்டங்களில் உள்ள செம்மரக் கடத்தல் மாஃபியாக்களைக் கைது செய்து தண்டனை வழங்குவதற்கு ஆந்திர அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

6. சுமார் 1.4 கோடி செம்மரங்கள் சேஷாசலம் மற்றும் நல்லமல்லா வனப் பகுதிகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை முழுமையாக எண்ணப்பட்டு (enumeration) அறிவிக்கப்பட வேண்டும். கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றி ஆந்திர அரசு வசம் உள்ள 10,000 டன் செம்மரங்களையும் ஏலம் விட்டுக் கிடைக்கும் தொகையைக் கொண்டு இவ்வனத்தைச் சார்ந்து வாழும் மக்களுக்கு நலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். 2014 மேயில் சந்திரபாபு நாயுடு அரசு செம்மரங்களை டன் ஒன்று ரூ27 லட்சம் என ஏலத்தில் விற்றபோது ஹரித்துவாரில் உள்ள பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி யோக பீடம்’ மட்டும் 270 கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை ஏலம் எடுத்துள்ளது. பன்னாட்டுச் சந்தையில் இம்மரங்களின் மதிப்பு டன் ஒன்று ஒரு கோடி ரூபாய் வரை உள்ள நிலையில் இவற்றை அவ்வமைப்பு வெளியில் விற்று ஏராளமான லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. இது தடுக்கப்படுவதோடு, இதுவரை மருந்து தயாரிப்புகளுக்கென ராம்தேவின் அமைப்பு எவ்வாறு செம்மரங்களைப் பெற்று வந்தது என்பது குறித்தும் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்.

7. கடத்தல்காரர்களால் வெட்டப்பட்டு அழிக்கப்பட்ட செம்மரங்களை ஈடுகட்டப் புதிய கன்றுகளை நடுதல், உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத இந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்க தாவரவியலாளர்கள் மற்றும் இது தொடர்பான வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8. தமிழக அரசு இதுவரை வனச் சட்டத்தை (Forest Act 2006) அமுல்படுத்தாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளால் உருவாகியுள்ள தடைகளை நீக்கி, பிற மாநிலங்களைப் போல அது இங்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள பழங்குடிகளின் வீதம் சுமார் ஒரு சதம் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் குடும்பம் ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட வேண்டும். வனத் துறை அதிகாரிகளுக்குப் பழங்குடி மக்கள் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள் (sensitisation programmes) மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

9. பழங்குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் 20 மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற வீதத்தில் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் முறையாக ஆசிரியர்கள் வந்து பாடங்கள் நடத்துகிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் வழங்கப்படும் உணவு படுமோசமாக உள்ளது. போதிய காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றுடன் இது மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோல பழங்குடிப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் முறையாக மருத்துவ மனைகளுக்கு வந்து பணி மேற்கொள்கிறார்களா என்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். கிராம உதவிச் செவிலியர்கள் கருத்தரித்துள்ள பெண்களைப் பிள்ளைப் பேறுக்கு முன்னும் பின்னும் முறையாகக் கவனித்து ஊட்டச்சத்து, மருந்துகள் முதலியவற்றை வினியோகிக்க வேண்டும். இந்தப்பணி முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

10. அடிவாரங்களிலிருந்து மலைக்குச் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சாலைகள் இல்லாத இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். தமது விளை பொருட்களைக் கீழே கொண்டு சென்று விற்பதற்குரிய வகையில் சுமைகளுடன் பயணம் செய்யத்தக்க போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும். இனிப்புச் சத்து குறைந்த, நார்ச்சத்து அதிகமாக உள்ள திணை வகைகளின் சாகுபடியை அரசு ஊக்குவிப்பதோடு உற்பத்தியாகும் திணை வகைகளைக் கொள்முதல் செய்வதற்கான மையங்களை (procurement centres) மலைகளில் அமைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களும் (agro based industries) இப்பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும். மழை நீரைத் தேக்கும் வகையில் மலைப்பகுதிகளில் குளம் குட்டைகளை உருவாக்க வேண்டும்.

11. மலை அடிவாரங்களில் வசிக்கும் வன்னியர், போயர் போன்ற அடித்தள மக்களின் நிலையும் பழங்குடி மக்களைப் போன்றே உள்ளன. இன்று கொல்லப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஆந்திரச் சிறைகளில் அடைபட்டுக் கிடப்பவர்களிலும் இவர்கள் அதிக அளவில் உள்ளர். இவர்கள் மத்தியிலும் மேற்குறித்த நலத் திட்டங்களை மேற்கொள்ளுதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மலையிலும் அடிவாரங்களிலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலியவற்றை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

12. ஆந்திரமாநில அரசின் இந்த வன்செயல்களை ஆந்திர மாநிலத்தில் இயங்கும் APCLC, HRF, NCDNTHR மற்றும் PUDR முதலிய மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு வழக்குகளும் தொடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவ்வமைப்புகளை இக்காரணங்களுக்காக மனதாரப் பாராட்டுகிறோம். எம் மக்கள் ஒவ்வொரு முறையும் ஆந்திரம் வந்திருந்து வழக்கை நடத்துவதிலும், சிறையில் உள்ளவர்களைச் சந்திப்பதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வது, அவர்களுக்குரிய சட்ட மற்றும் பிற உதவிகளைச் செய்வது ஆகியவற்றுக்கென வழக்குரைஞர்களுடன் கூடிய குழு ஒன்றை அமைத்து உதவி செய்ய வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் இயங்கும் மனித உரிமை அமைப்புகளை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

13. பேருந்துகளிலிருந்து இறக்கி அழைத்துச் சென்று சுட்டுக் கொல்வது, தமிழ் பேசினாலே கைது செய்து கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டுச் சிறையில் அடைப்பது என்கிற நிலையில் தமிழக அரசு, “முறையான விசாரணை வேண்டும்” என ஆந்திர அரசை “வேண்டிக் கொண்டதோடு”  நிறுத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முறையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு என்கவுன்டர் கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், அப்பாவிகளுக்கு உரிய இழப்பீடுகள் கிடைப்பதற்கும், சிறைகளிலுள்ளவர்களை விடுதலை செய்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை இக்குழு வற்புறுத்துகிறது.

14. கொல்லப்பட்ட20 பேர்களின் மனைவியருக்கும் தமிழக அரசு அவர்களின் தகுதிக்கேற்ற அரசுப் பணிகளைவழங்க வேண்டு, குழந்தைகளில் கல்விச் செலவையும் ஏற்க வேண்டும். அவர்களில் சிலரின் விவரங்கள்:

Name of Victim                Name of  Wife.                Age.          No of Children                          Age

Murugan.                             Thanjaiammal.                                      2

Sasikumar.                          Muniammal.                                         2.                                     4 and 2 yrs

Munusamy.                         Thanjaiammal.                                    2                                      3 and 2 yrs

Perumal.                              Selvi.                                                     3

Govindasvamy                    Muthammal.                                     4                                      13, 10, 5 and 4 yrs

Rajendaran.                         Nadia.                             20    ( 2 months Pregnant)

Venkatesan.                        Kanakarani                     20   ( married 6 months back)

Velayutham                         Padma.                          20.                  1                                   1 year 6 month

புதுச்சேரியில் தனியே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைக்க வேண்டும்: முதலமைச்சரிடம் மனு!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.09.2014) புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கு அளித்துள்ள மனு:

புதுச்சேரியில் கடந்த 18.08.2011 அன்று சட்டமன்றத்தில் ஆளுநர் இக்பால் சிங் அவர்கள் தனது உரையில் ‘சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காக தனியே ஒரு துறையை அமைத்திட எமது அரசு உத்தேசித்துள்ளது’ என அறிவித்துள்ளார். ஆனால், இதுவரையில் அறிவித்தபடி சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனியே அமைக்கப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 1954ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனியே உருவாக்கப்பட்டது. அதற்கென தனியே ஒரு அமைச்சர் மற்றும் அரசுச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உள்ளடக்கிய தனித்துறை செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் தனியே நிதி ஒதுக்கப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், புதுச்சேரி அரசைப் பொருத்தவரையில் சமூக நலத்துறையின் கீழ் ஒரு பிரிவாகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சமூக நலத்துறையின் கீழுள்ள பல துறைகளில் இதுவும் ஒன்றாக செயல்பட்டு வருவதால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போதிய திட்டங்கள் வடிவமைத்து செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.

எனவே, தங்கள் தலைமையிலான அரசு ஏற்கனவே சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் அறிவித்தபடி புதுச்சேரியில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை தனியே உருவாக்க செயல் திட்டத்தினை வரும் பட்ஜெட்டில் அறிவித்து செயல்படுத்த வேண்டுகிறோம். புதுச்சேரியில் பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் கருதி இதனை செய்வீர்கள் என நம்புகிறோம்.

காரைக்காலில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண்ணிற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்!

No Comments →

புதுச்சேரி முதல்வர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கு இன்று (11.01.2014) மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள மனு விவரம்:

மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகிய நாங்கள் சென்ற 30.12.2013 அன்று காரைக்கால் சென்று அங்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுச் சம்பவம் பற்றி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விசாரித்ததின் அடிப்படையில் இம்மனுவைத் தங்களின் மேலான கவனத்திற்கும் உரிய நடவடிக்கைக்கும் சமர்பிக்கின்றோம்.

காரைக்காலில் சென்ற டிசம்பர் 24 அன்று இரவு தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கூட்டாக பாலியல் வன்புணர்வுச் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இச்சம்பவம் நடந்து குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து வைத்துக் கொண்டு காரைக்கால் நகர காவல்நிலைய அதிகாரிகள் சில அரசியல் கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக குற்றவாளிகளை விடுவிக்க பல லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன் காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்தோம். இத்தகவலின் அடிப்படையில் அவர் விரைந்துச் செயல்பட்டு காவல்நியைத்திற்கு நேரடியாக சென்று குற்றவாளிகள் 15 பேரைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். உடனடியாக வழக்கு புலன் விசராணையை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார். அரசியல் அழுத்ததிற்கு அடிபணியாமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்த மோனிகா பரத்வாஜ் அவர்களை மனதார பாராட்டுகிறோம்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் மறைத்த காரணத்திற்காக காரைக்கால் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடாஜலபதி, தலைமைக் காவலர் சபாபதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை மூடி மறைத்து பேரம் பேசியதில் அக்காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் அவர்களுக்கு முக்கிய பங்குள்ளது என்பது எங்களது விசாரணையில் தெரிய வருகிறது. மேலும், இதுபோன்ற வன்புணர்வு வழக்குகளை விசாரிக்க வேண்டிய பொறுப்பு காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே, ஆய்வாளர் ராஜசேகர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இக்கொடிய சம்பவத்தை மூடி மறைத்தது என்பது சட்டப்படி குற்றமாகும். தற்போது வழக்கு விசாரணை மெற்கொண்டு வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றத்தை மறைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் கோணத்தில் விசாரணை செய்வதாக தெரியவில்லை. எனவே, காரைக்கால் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் வெங்கடாஜலபதி, தலைமைக் காவலர் சபாபதி ஆகியோர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 24 அன்று இரவு காரைக்கால் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நேரத்தில் இரண்டு முறை ஒரு பெண்ணைக் கடத்தி முதலில் இருவர், பின்னர் ஏழு பேர் பாலியல் வன்புணர்வுச் செய்துள்ளனர் என்பது போலீஸ் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதையும், போலீசார் பணியில் அலட்சியமாக இருந்ததையும் காட்டுகிறது. பாதுகாப்பு நிறைந்த நேரத்திலேயே ஒரு பெண்ணிற்கு கொடுமை இழைக்கப்பட்டுள்ளது என்பதால் இச்சம்பவத்திற்கு அரசாங்கம் பொறுப்பு என்பது தெளிவாகிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற பாலியல் வன்புணர்வு வழக்குகளில் உச்சநீதிமன்றம் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளதைக் இங்குக் குறிப்பிடுகிறோம்.

டில்லி பாலியல் வன்கொடுமை வழக்குப் போல் புதுச்சேரி அரசும் ஒரு தனி நீதிமன்றம் அமைத்து வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். குற்ற வழக்குகளை நடத்தி அனுபவம் மிக்க சீனியர் வழக்கறிஞர் ஒருவரை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமனம் செய்து புலன் விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்குத் துணைப் புரியவும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றத்தில் ஈடுபட்ட முக்கியமானவர்கள் இரு பெரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த அரசியல் கட்சிகள் பின்புலத்தில் இருந்து இச்சம்பவம் நடந்த உடனேயே வழக்குப் பதிவுச் செய்யாமல் இருக்க காவல்நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால், குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சாட்சிகளைக் களைக்கவும், சான்று ஆவணங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளதால் புலன் விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளைச் சிறைக்குள்ளேயே வைத்து வழக்கு விசாரணையை முடித்து தண்டனைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பவம் நடந்த அன்று குற்றவாளிகள் அனைவரும் பிடிக்கப்பட்டு நகர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது தெளிவாக தெரிகிறது. அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரோடு இருந்த மற்றொரு பெண்ணும் எந்த காவல்நிலைய போலீசாரால் பிடிக்கப்பட்டு, எந்த காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும். அவர்கள் மீதும் குற்றத்தை மூடி மறைத்த குற்றத்திற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

டில்லி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் குறித்து விசாரித்த உச்சநீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழாமல் தடுக்க புதுச்சேரி அரசு ஆவன செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்குக் கடந்த ஓராண்டிற்கும் மேலாக தலைவர் நியமிக்கப்படாததால் ஆணையம் செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது. மாநில மகளிர் ஆணையத்திற்குத் தலைவர் நியமனம் செய்து ஆணையம் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாங்கள் இம்மனுவைப் பரிசீலித்து, கோரிக்கைகளை நிறைவேற்றி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்.