Archive for the ‘ஊடக அறிக்கைகள்’

கண்ணகி முருகேசன் கொலை வழக்கின் சாட்சிகள் மிரட்டப்படுவதால் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு ஆகியோர் இன்று (04.09.2017) கடலூரில் வெளியிட்ட அறிக்கை:

கடலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் கண்ணகி முருகேசன் கொலை வழக்கின் சாட்சிகளை மிரட்டுவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

கடந்த 2003ம் ஆண்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த முருகேசன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் இருவரும் ஊரைவிட்டுச் சென்று வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ளனர்.

சாதிக் கடந்த இத்திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் கண்டுப்பிடித்து கொண்டு வந்து, புதுக்கூரைப்பேட்டை முந்திரிதோப்பில் இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிடுகின்றனர். பின்னர் இருவரின் உடல்களையும் எரித்துவிடுகின்றனர்.

2004ம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. புலன்விசாரணை செய்து கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது.

தற்போது இவ்வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரையில் 8 சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் 2 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக ஆகிவிட்டனர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பு அரசு வழக்கறிஞர் சாட்சிகளைக் குற்றவாளிகள் மிரட்டுவதாகவும், அதற்கான செல்போன் உரையாடல் அடங்கிய குறுந்தகடு ஒன்றையும் ஆதாரமாக அளித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கண்ணகி முருகேசன் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியான புதுக்கூரைப்பேட்டை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த மாதம் 31ம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டு இறந்துப் போனார். அவரது மனைவி குற்றவாளிகள் சாட்சியம் அளிக்கக் கூடாது என்று மிரட்டியதால்தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்து விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளிகள் சமூக ரீதியாக செல்வாக்கு உடையவர்கள் என்பதோடு, பணம் பலம் படைத்தவர்கள் ஆவர். குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள சாட்சிகளை மிரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளிகள் வெளியே இருந்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படுவதோடு முறையாக நடைபெறாது. சாட்சிகள் சுதந்திரமாக சாட்சியம் அளிக்க முன்வர மாட்டார்கள். தற்போது சாட்சிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, இவ்வழக்கில் உள்ள குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிந்து, வழக்கு விசாரணை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (24.08.2017) விடுத்துள்ள அறிக்கை:

தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி, சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் சபரிநாதன் (வயது 27) என்பவரை கடந்த 22ம் தேதியன்று காலை 10 மணியளவில் விசாரணைக்கு என்று கூறி முத்தியால்பேட்டை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரை இரவு 10 மணி வரையில் காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக அடித்து உதைத்துச் சித்தரவதை செய்துள்ளனர்.

பின்னர், போலீசார் அவரது தந்தையை அழைத்து இரண்டு வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவரை ஒப்படைத்துள்ளனர். அப்போது அவரின் முகம், கை, கால், முதுகு என உடல் முழுவதும் லத்தியால் அடித்த காயத் தழும்புகள் இருந்துள்ளன. உடனே, அவரை அவரது நண்பர்கள் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர் வீடு திரும்பிய சபரிநாதன் அன்றைய தினமே இரவு 2 மணியளவில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டு இறந்துப் போயுள்ளார். காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பியவுடன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். சபரிநாதன் தற்கொலை செய்துக் கொண்டதற்கு முத்தியால்பேட்டை போலீசார் செய்த சித்தரவதையே காரணம் ஆகும்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார் அவசரம் அவசரமாக போஸ்ட்மார்டம் முடித்து உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். தற்கொலை செய்துக் கொண்டவரின் தந்தை தன் மகன் சாவுக்குக் காரணமான முத்தியால்பேட்டை போலீசார் மீது நடவடிக்கைக் கேட்டு அளித்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, புதுச்சேரி அரசும், காவல்துறையும் உடனடியாக தற்கொலைக்குத் தூண்டியதாக முத்தியால்பேட்டை போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

இறந்துப் போன சபரிநாதன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2015 சட்டப் பிரிவின்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அச்சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இச்சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக பூபாலன் சேர்ப்பு: நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.08.2017) விடுத்துள்ள அறிக்கை:

வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ள கொத்தபுரிநத்தம் பூபாலனை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி காவல்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருபுவனையைச் சேர்ந்த வேலழகன் கடந்த 19.04.2017 அன்று வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான உதயகுமாரை காப்பாற்ற முயற்சித்த காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து உதயகுமார் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இவ்வழக்கை சி,ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இக்கொலையில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத கொத்தபுரிநத்தம் பூபாலனை போலீசார் வழக்கில் சேர்த்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வேறு ஒரு பூபாலனை கைது செய்வதற்குப் பதிலாக தவறாக இவரைக் கைது செய்துள்ளனர்.

இக்கொலை வழக்கில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத கொத்தபுரிநத்தம் பூபாலனை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்தது போல் திருபுவனை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சென்ற 14.06.2017 அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பப்பட்டது.

இப்புகாரை பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் புகாரினை அனுப்பி வைத்து அதன் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்திடவும், அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புகார்தாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் புதுச்சேரி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சியினருடன் டில்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2017) விடுத்துள்ள அறிக்கை:

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களுடன் டில்லி சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் நீட் தேர்வினால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதால் மாநில கல்வி வாரியத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் போதியளவில் தேர்ச்சிப் பெறவில்லை. பின்தங்கிய நிலையில் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நிலைமையோ இன்னும் மோசமாக உள்ளது. இதனால், புதுச்சேரியின் ஒட்டுமொத்த மாணவர்களின் மருத்துவக் கனவு முற்றிலும் தகர்ந்துப் போயுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவைப் பல்வேறு போராட்டங்களைத் தனித்தனியே நடத்தியுள்ளன. தமிழக முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற தீவிர முயற்சி செய்து வருகிறார்.

எனவே, முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களுடன் டில்லி சென்று பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து புதுச்சேரி அரசின் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத மருத்துவ இடங்கள் பெறுவதிலும் புதுச்சேரி அரசுத் தோல்வி அடைந்துள்ளது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வழக்கமாக அளிக்கும் குறைந்தப்பட்ச இடங்களைக்கூட இம்முறை அளிக்காததால் 137 மருத்துவ இடங்கள் அரசுக்குக் கிடைக்கவில்லை.

புதுச்சேரி அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற அவசர சட்டம் ஒன்றை இயற்றி, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மேலும், அரசுக்கு 50 சதவீத இடங்கள் அளிக்காத தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி அரசியல் பிரச்சனைகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கும் அதே வேளையில், மக்கள் பிரச்சனைகளில் குறிப்பாக மாணவர்களின் நலன் காக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

 

கல்லூரிகளில் தமிழ்ப் பாட வகுப்புகளைக் குறைத்து புதுவைப் பல்கலைக்கழகம் உத்தரவு: பழையே முறையே தொடர வலியுறுத்தல்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2017) விடுத்துள்ள அறிக்கை:

கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களின் வகுப்பைப் பாதியாக குறைத்து கொண்டு வந்துள்ள சி.பி.சி.எஸ். முறையை புதுவைப் பல்கலைக்கழகம் மாற்றிப் பழைய நிலையே தொடர ஆவன செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

பல்கலைக்கழக மானிய குழுவின் (UGC) வழிகாட்டுதலின்படி புதுவைப் பல்கலைக்கழகம் அதன் இணைப்புக் கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். என்ற புதிய முறையை (Choice Based Credit System) 2017-2018 கல்வியாண்டு முதல் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. அதில் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில மொழிப் பாட வகுப்புகள் வாரத்திற்கு 6 ஆக இருந்ததை 3 ஆக குறைத்துள்ளது.

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் சென்ற கல்வியாண்டில் இந்த சி.பி.சி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இக்கல்லூரியில் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களின் வகுப்புகள் குறைக்கப்படாமல் பழைய நிலையே தொடர்கிறது.

தமிழகத்தில் சி.பி.சி.எஸ். முறை செயல்பாட்டில் உள்ள போதும் சென்னைப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களின் வகுப்புகள் குறைக்கப்படவில்லை.

மொழிப் பாடங்களின் வகுப்புகள் குறைக்கப்படுவதால் தற்போது பணிபுரியும் கல்லூரி ஆசிரியர்கள் பாதிப் பேர் வேலை இழக்கும் ஆபத்தும் உள்ளது. மேலும், தற்போது தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்புப் பறிபோய் அவர்களின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகும்.

இதனால் தமிழ் மொழிப் பாடம் சரிவர கற்க முடியாமல் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதால் தொன்மையான தமிழ் மொழியின் வளங்கள் குறித்து மாணவர்கள் முழுமையாக கற்க முடியாமல் போகும். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.

எனவே, புதுவைப் பல்கலைக்கழகம் உடனடியாக இந்த சி.பி.சி.எஸ். முறையில் மாற்றம் கொண்டு வந்து தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களின் வகுப்புகள் ஏற்கனவே உள்ளது போல் வாரத்திற்கு 6 மணி நேரமாக நீடிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்கலைக்கழக மானிய குழுத் தலைவர், புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், முதலமைச்சர், உயர்கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்ப உள்ளோம்.

தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வெண்டும்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.05.2017) விடுத்துள்ள அறிக்கை:

தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான வேலழகன் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கை விசாரித்த திருபுவனை போலீசார் ஆரம்பம் முதலே குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளியான உதயகுமாரை காப்பாற்ற முயற்சித்த காரணத்திற்காக காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இக்கொலை வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த திருபுவனை காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உடனடியாக இவர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

இக்கொலை வழக்கில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. ஆனால், இதுவரையில் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இக்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கைப் புதுச்சேரி போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. பாகூரில் சுவேதன் என்பவரை கொலை செய்து அவரது தலையை வெட்டி எடுத்துச் சென்று கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் உருட்டி விடப்பட்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் நாராயாணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுப் பதவியேற்று இதுவரையில் 26 கொலைகள் நடந்துள்ளன. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 12 கொலைகள் நடந்துள்ளன. இதில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் தலித்துகள்.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீரழிவுக் குறித்து மத்திய உள்துறை தலையிட்டு விசாரணை செய்து சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலர், துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு விரிவான அறிக்கை அனுப்ப உள்ளோம்.

தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களை மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்க கட்டாயப்படுத்துவது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2017) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்களை மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபடுத்துவது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

பொறியியல் கல்லூரிகளில் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகள், படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு போன்றவற்றைக் கணக்கில் கொண்டே மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். ஆனால், தற்போது ஒவ்வொரு ஆண்டும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், பல தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் இந்தக் கல்வியாண்டில் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அணுகி முதலாண்டு சேர்க்க வேண்டுமென வாய்வழியாக உத்தரவிட்டுள்ளது.

இது சட்ட விரோதமானது என்பதோடு பேராசிரியர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாகும். மேலும், ஏற்கனவே பேராசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் கல்வி சார்ந்த பணிகளோடு நிர்வாகப் பணிகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பேராசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்கப்படுவதில்லை. இதைக் கேட்டால் பணி நீக்கம் செய்வது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தங்களுக்கென சங்கங்கள் வைத்துள்ளதால் ஓரளவுக்கு தங்கள் உரிமைகளைப் பெற முடிகிறது. ஆனால், பேராசிரியர்கள் சங்கம் வைத்துக் கொள்ள முடியாததால் மிகுந்த சிரமத்திற்கிடையே பணிப் பாதுகாப்பின்றிப் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, புதுச்சேரி அரசு இதுகுறித்து உயர்கல்வித்துறைச் செயலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பேராசிரியர்களை மாணவர் சேர்கைக்கு ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட கட்டாயப்படுத்தும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.04.2017) விடுத்துள்ள அறிக்கை:

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான உத்தரவினை உடனே பிறப்பிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசு கடந்த 2009 ஆகஸ்ட் 4 அன்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டம் 2010 ஏப்ரல் 1 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தின் அடிப்படையில் விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால், புதுச்சேரி அரசு உடனே விதிகளை உருவாக்கவில்லை.

சென்னை உயர்நீதிமன்றம் 2010 ஆகஸ்ட் 1ல் மூன்று மாதத்திற்குள் விதிகளை உருவாக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டது. இதன் பின்னர் புதுச்சேரி அரசு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகளை உருவாக்கி வெளியிட்டது.

சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது நேர்காணல், நுழைத்தேர்வு நடத்தக் கூடாது, வகுப்பறையில் மாணவர்களுக்குத் தண்டனைக் கூடாது, பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல், பள்ளி மேலாண்மைக் குழு அமைத்தல் போன்றவற்றுக்கு இச்சட்டத்தின்படி உரிய சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் இவற்றைப் பின்பற்றுவது இல்லை.

புதுச்சேரி அரசு தனியார் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அரசாணையை வெளியிடாமல் காலந்தாழ்த்தி வருகிறது. இதனால், கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கியமான இந்த அம்சம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.

தமிழகத்தில் இச்சட்டப்படி வரும் 2017 – 2018 கல்வியாண்டிற்கு மொத்தமுள்ள 9000 சிறுபான்மை அல்லாத தனியார் சுயநீதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 1 லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தைப் பின்பற்றிப் புதுச்சேரி அரசும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான உத்தரவினை வரும் கல்வியாண்டிலேயே பிறப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 பேர் இறந்தது குறித்து 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

No Comments →

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 9ம் தேதியன்று சிறுநீரக துறையில் நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்பு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்ட போது மின்சாரம் தடைப்பட்டது. அப்போது டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்ற கதிர்காமத்தைச் சேர்ந்த சுசிலா (75), வீமன் நகரைச் சேர்ந்த அம்சா (58), காந்தி திருநள்ளூரைச் சேர்ந்த கணேசன் (55) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.

அப்போது பணியில் இருந்த மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்ததோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா. 5 லட்சம் இழப்பீடு வழங்கி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்திரவிட்டார்.
இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு 11.03.2017 அன்று புகார் அனுப்பப்பட்டது.

அப்புகாரில் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது மட்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது போதாது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வழங்கயுள்ள இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே, உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இச்சம்பவத்தின் முழுப் பின்னணிக் குறித்து ஆய்வு செய்ய பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தோம்.

இப்புகாரைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் சென்ற 29.03.2017 அன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரை புதுச்சேரியிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததோடு, இப்புகார் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்துப் புகார்தாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

No Comments →

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.03.2017) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது மின்சாரம் தடைப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மதியம் சிறுநீரக துறையில் நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்பு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது திடீரென மின்சாரம் தடைப்பட்டது. அதற்கான மாற்று ஏற்பாடாக செய்யப்பட்டுள்ள மின்சாதனமும் செயல்படவில்லை. இதனால் டயாலிசிஸ் கருவிகள் இயங்கவில்லை.
இதன் காரணமாக அப்போது டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த கதிர்காமத்தைச் சேர்ந்த சுசிலா (75), வீமன் நகரைச் சேர்ந்த அம்சா (58), கணேசன் (55) ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்ட நேற்றைய தினத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

அப்போது பணியில் இருந்த மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்துள்ளதோடு, இறந்துப் போனவர்களின் குடும்பத்திற்குத் தலா. 5 லட்சம் இழப்பீடு வழங்கி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்திரவிட்டுள்ளார். புதுச்சேரி அரசு நடத்தும் ஒரே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக்கூட முறையாக நிர்வகிக்க அரசு தவறியுள்ளது. நோயாளிகள் மூவர் இறந்த சம்பவத்திற்குப் அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மீது மட்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது போதாது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இச்சம்பவம் குறித்து உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வழங்கயுள்ள இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே, உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு உடனே வழங்க வேண்டும்.

புதுச்சேரி அரசு இச்சம்பவத்தின் முழுப் பின்னணிக் குறித்து ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், புதுச்சேரி ஆளுநர், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதார துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு விரிவான மனு அளிக்க உள்ளோம்.