சாத்தான்குளம் இரட்டைக் கொலை: கொலை வழக்குப் போடாதது ஏன்? : தியாகு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருவரும் வணிகர்கள். கொரோனா முடக்க ஆணையை மீறிக் கூடுதல் நேரம் கடை திறந்து வைத்திருந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்.

கொரோனாத் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் – ஊரடங்கு என்று தொடங்கி முழு முடக்கம் ஆட்சி செய்யத் தொடங்கியது முதலே காவல்துறையின் காட்டாட்சி தொடங்கி விட்டது. நடந்தோ இருசக்கர ஊர்தியிலோ வருவோரை மறித்து எதுவும் கேட்காமல் தடியாலடிக்கும் காணொலிகள் ஏராளமாக வந்தன. கோயில், மசூதி போன்ற வழிபாட்டுத் தலங்களைக் கூட விட்டுவைக்காமல் தடித்தாண்டவம் ஆடியது காக்கி. இப்படிச் செய்வது சட்டப்புறம்பானது, ஊரடங்கு நெறிகளை மீறினால் வழக்குப் பதிவு செய்யலாம், தளைப்படுத்தவும் கூட செய்யலாம், அடிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள் வெளிப்படையாகக் கண்டிக்கப்பட்டனர். இருசக்கர ஊர்தியில் வந்த ஒருவரை சீருடை அணியாத காவலர் ஒருவர் தடியால் விளசுகிறார், அவர் தான் மருத்துவர் என்று சொன்னவுடன் இதை முன்பே சொல்லக் கூடாதா என்று அந்தக் காவலர் கேட்கிறார். அவர் மருத்துவர் இல்லையென்றால் தொடர்ந்து அடிக்கலாமா? அப்படி அடிப்பதற்கு அதிகாரமளித்தது யார்? எந்தச் சட்டப்படி?

ஓரிடத்தில் காவல்துறையின் அதிகாரத்தையும் முதலமைச்சரின் அதிகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிய துடுக்குத்தனமான இளைஞர் ஒருவரைக் காவல்நிலையத்தில் வைத்து அடிஅடியென்று அடித்து அவர் அலறுகிற காட்சியைப் படமெடுத்து வெளியிட்டு மகிழ்ந்தது காவல்துறை. இப்படிச் செய்த காவல் அதிகாரிகளின் சட்டப்புறம்பான நடவடிக்கை குறித்துப் பெயரளவுக்குக் கூட அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாவற்றையும் நீதித்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது. அப்போதே இது போன்ற காக்கிக் காலித்தனத்தைக் கண்டித்திருந்தால் சாத்தான்குளம் இரட்டைக் கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

தந்தை – மகன் இருவரையும் சட்டப் புறம்பாகக் கடத்திச் சென்று அடித்து நொறுக்கிக் கொலை செய்திருக்கிறது காவல்துறை. நீதிகேட்டு பொதுமக்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்திய பிறகுதான் குற்றம்புரிந்த இரு காவல் அதிகாரிகளை மேலதிகாரி மெதுவாக இடைநீக்கம் செய்துள்ளார்.

நடந்தது என்ன? கடந்த சூன் 19ஆம் நாள் கடை மூடுவது தொடர்பாக ஜெயராஜிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ். இதற்காக மறுநாள் ஜெயராஜைக் கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறை.

எவரை எதற்காகத் தளைப்படுத்தினாலும் அதற்கான காரணத்தை அவருக்குத் தெரிவிக்க வேண்டும், அவருக்கு நெருக்கமானவரிடம் தளைக் குறிப்பு (arrest memo) எழுதித் தர வேண்டும். இது உச்சநீதிமன்ற ஆணை. ஆனால் இப்படி எந்த நடைமுறையையும் கடைப்பிடிக்காமல் ஜெயராஜை இழுத்துச் சென்றது காவல் துறை. இதனையொட்டி, ஜெயராஜை சந்திக்க அவர் மகன் பென்னிக்ஸ் காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு 60 வயதான ஜெயராஜை பென்னிக்சின் கண் முன்னேயே உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரும் மற்ற காவலர்களும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனை பென்னிக்ஸ் தட்டிக் கேட்டுள்ளார்.

அவர்களது கோட்டைக்குள் நுழைந்து அவர்களது அதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்கினால் எப்படிப் பொறுப்பார்கள்? வெறிகொண்டு பென்னிக்சைப் பாய்ந்து குதறி விட்டார்கள். பல மணி நேரம் கட்டி வைத்து விளாசியதோடு, அவரது ஆசனவாயிலும் லத்தியால் குத்தி, இரத்தம் சொட்டச் சொட்ட அடித்தார்கள்.

பிறகு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்து, அதனடிப்படையில் இருவரையும் ’அரெஸ்ட்’ காண்பித்து முதல் தகவல் அறிக்கை மற்றுமுள்ள ஆவணமெல்லாம் ‘ரெடி’ செய்து ‘ரிமாண்டு’க்கு அனுப்பினார்கள். சட்டங்காக்கும் சாத்தான்(குளம்) நீதிமன்ற நடுவர் கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டு நேராக அவ்விருவரையும் சிறையிலடைக்க அனுப்பி வைத்தார். 21ஆம் நாள் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் நீதிமன்றத்திற்கு அருகில் திருவைகுண்டம், திருச்செந்தூர் கிளைச் சிறைச்சாலைகளும் பேரூரணி மாவட்டச் சிறைச்சாலையும் இருந்த போதிலும் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறையில் அவர்கள் இருவரையும் கொண்டுபோய் அடைத்தார்கள். காரணம் என்னவோ? சிறையதிகாரிகள் அவர்களுக்கிருந்த காயங்கள் பற்றிக் கேட்கவும் இல்லை, அவர்களை உடனே மருத்துவமனைக்கு அனுப்பவும் இல்லை.

சிறையில் பென்னிக்சை நண்பர்கள் சந்தித்த போது காவல்துறை லத்தியால் குத்தியதைத் தொடர்ந்து ஆசனவாயில் தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 22 இரவு 7:30 மணியளவில் நெஞ்சு வலியால் பென்னிக்ஸ் மயங்கி விழுந்தார் என்று கூறி அவரைக் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் பென்னிக்ஸ் ஏற்கெனவே இறந்து விட்டதாகச் சொல்லி விட்டனர். அதே சமயத்தில் பென்னிக்சின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரும் அதே நாளில் சில மணிநேர இடைவெளியில் இறந்து போனார். இந்நிலையில் தந்தை மகன் கொல்லப்பட்டதைக் கண்டித்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பொதுமக்கள் கிளர்ச்சி செய்தனர். வணிகர் சங்கமும் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமுதாயச் சங்கங்களும் வழக்கறிஞர்களும் திரண்டு குரல் கொடுத்தனர்.

இருவரின் சாவுக்கும் காரணமான காவல் அதிகாரிகளைக் கொலை வழக்கில் தளைப்படுத்திச் சிறையிலடைக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. நாடெங்கும் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா முடக்கத்தை மீறி மக்கள் பெருந்திரளாகத் தெருவில் இறங்கி விட்டனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

இத்தனைக்குப் பிறகு காவல் அதிகார பீடம் கொலைகாரக் காவலதிகாரிகள் இருவரையும் ஆய்தக் காவல் பிரிவுக்கு மாற்றியது. அடித்துக் களைத்த விலங்குகள் அங்கு போய் ஓய்வாக இருக்கலாம் அல்லவா? மக்கள் போராட்டம் ஓயவில்லை என்ற நிலையில் அந்த இரு கொலைகாரர்களையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார் எஸ்.பி அருண் பாலகோபாலன்.

”நாங்கள் கடையை மூடச் சொன்னோம், அப்பனும் மகனும் தரையில் படுத்து உருண்டார்கள், காய்ங்களுக்கு அதுவே காரணம்” என்று கொலைகாரக் காவல் அதிகாரிகள் தந்துள்ள அங்கப்பிரதட்சண விளக்கம் காக்கி உடையில் பொங்கி வழியும் கொழுப்பின் அடையாளம்!

ஜெயராஜும் பென்னிக்சும் அந்த இரு காவல் அதிகாரிகளையும் தற்காப்பின் பொருட்டுக் கொலை செய்திருந்தால் இதே ஊர்மாற்றம் அல்லது பணியிடை நீக்கம்தான் தண்டனையா? காவல்துறையினர் பொதுமக்களைக் கொலை செய்தாலும் பொதுமக்கள் காவல்துறையினரைக் கொலை செய்தாலும் இரண்டும் கொலைக் குற்றம் என்பதுதானே சட்டம்? இரண்டுக்கும் தண்டனை ஒன்றுதானே?

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சிறைக்கனுப்பிய குற்றவியல் நீதியர் அவர்களிடம் காயங்கள் குறித்துக் கேட்டறிந்து சிறைக்கனுப்பாமல் மருத்துமனைக்கு அனுப்பியிருக்க முடியும். என்ன குற்றச்சாட்டு என்ற செய்தி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்று வினவவும் இல்லை. காவல்துறையினர் நீட்டிய இடத்தில் ஒப்பமிட கறுப்புக் குப்பாயத்தில் ஒரு நீதிதேவன் தேவையா?

இந்த இரட்டைக் கொலையில் காவல்துறைக்கு நீதித்துறையும் சிறைத்துறையும் உடந்தையாக இருந்துள்ளன என்பது தெளிவாகிறது. ஊரடங்கை மீறி மக்கள் திரண்டு வந்து போராடியதால் மட்டுமே இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.

உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தானாகவே (suo motu) இந்த வழக்கை ஆய்விற்கெடுத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது. ஆனால் அரசுக்கும் காவல்துறைக்கும் அறிவுறுத்தல், மென்மையாகக் கண்டனம் தெரிவித்தல், எதிர்காலத்தில் பார்த்து நடக்கச் சொல்லுதல் என்பதைத் தாண்டி உயர்நீதிமன்ற நீதியரால் வேறொன்றும் செய்ய இயலாது என்றால், குறிப்பாக இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளைத் தளைப்படுத்திச் சிறையிலடைத்துக் கொலை வழக்குப் போட ஆணையிட முடியாது என்றால் அவர்கள் தீயணைப்பு வேலை செய்யாமல் வாளாவிருப்பதே நன்று.

மே 25ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மின்னியபோலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தவரை முழங்காலால் கழுத்து நெரித்துக் கொன்ற டெரெக் சொவின் என்ற வெள்ளைக் காவலரும் அவருக்குத் துணையாக இருந்த மூன்று காவலர்களும் சிறையிலடைக்கப்பட்டு அவர்கள் மீது வேண்டுமென்றே கொலை (intentional murder) செய்த குற்றம்சாட்டி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஜார்ஜ் பிளாய்டுக்காக அமெரிக்க தேசம் கொதித்தது போல் ஜெயராஜ், பெனிக்சுக்காக நம் தமிழ்த் தேசம் கொதிக்க வேண்டும். டெரெக் சொவினை அவர் மனைவியே தள்ளி வைத்தது போல் கொலைகாரக் காவல் அதிகாரிகளை அவர்களின் சொந்தங்களே தள்ளி வைக்க வேண்டும்.

அடுக்கடுக்கான பல நிகழ்வுகளையும் பார்க்கும் போது தமிழகக் காவல்துறையே சீருடை அணிந்த குற்றவாளிக் கூட்டமாக மாறி விட்டதோ? என்ற கேள்வி எழுகிறது. ”அமைப்பாக்கப்பட்ட குற்றவாளிக் கும்பல்” (organized gang of criminals) என்று தோழர் ஏஎம்கே சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கும்பல் குற்றங்களைத் தடுக்கும் என்று எதிர்பார்ப்பது போல் ஏமாளித்தனம் வேறில்லை. அவர்கள் குற்றம் செய்யாமல் இருந்தாலே போதும், நாடு நன்றாக இருக்கும்.

அப்படியானால், என்ன செய்யலாம்? ஜார்ஜ் பிளாய்டு கொலைக்குப் பின் மின்னசோட்டா அரசு ஆழக் கருதிப் பார்த்து தன் காவல்துறையையே கலைத்துவிட்டது போல் தமிழ்நாட்டிலும் காவல்துறையை அறவே கலைத்து விடுவது நல்லது. இப்படிச் செய்தால் தமிழகம் ஒப்பளவில் இன்னும் நல்ல அமைதிப் பூங்காவாகவே விளங்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.