பழங்குடி இருளர்களுக்கு வீடு கட்ட அரசு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு!

கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட 26 பழங்குடி இருளர் குடும்பங்கள் விழுப்புரம் மாவட்டம், வீரணாமூர் பெரிய ஏரிக்கு அருகில் 2009-இல் குடியமர்த்தப்பட்டனர். இந்த இடம் நீர்ப்பிடிப்பு இடம் என்பதால், அதே கிராமத்தில் தலா 2 ½ செண்ட் வீதம் இலவசமாக மனைப் பட்டாக்கள் 2016-இல் அரசு வழங்கியது. பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 21 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, மேற்படி வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் மற்றும் கவசம் அமைப்பின் உதவியோடு வீடுகள் கூடுதல் நிதி உதவியுடன் சிறப்பாக கட்டப்பட்டு வருகிறது. வீடுகள் கட்டப்படும் இடத்தில் இருளர் குடியிருப்பின் பொதுப் பயன்பாடு, மேலும் சில இருளர் குடும்பங்களுக்குக் குடியிருப்புகள் வழங்குவதற்காக அரசால் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தினை அதே வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் தேவராஜ் (வயது சுமார் 50) என்பவர் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து, டிராக்டர் வைத்து உழுது 12.07.2020 அன்று மல்லாட்டை பயிர் விதைத்துள்ளார்.

இதுதொடர்பாக, மேற்படி தேவராஜ் மீது நடவடிக்கை எடுத்து, பழங்குடியினருக்கான இடத்தை மீட்டுக் கொடுக்கும்படி செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரிப்பதாகச் சொன்ன காவல் உதவி ஆய்வாளர் வரவில்லை. ஆனால், வீரணாமூர் கிராம நிர்வாக அலுவலர் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் கிளைத் தலைவரைத் தொலைபேசியில் அழைத்து, ‘’என்னிடம் புகார் சொல்லாமல், ஏன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தீர்கள்” என்று கண்டித்துள்ளார்.

14.07.2020 அன்று காவல் உதவி ஆய்வாளர் விசாரணைக்கென்று காவல் நிலையத்திற்கு அழைத்ததின் பேரில் கோபி, சின்னசாமி, கணேசன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும், வீடுகளின் பயனாளிகளும் காவல் நிலையத்திற்குச் சென்றனர். ‘’உங்களுக்கு தேவராஜ் வழிவிடுவார்…. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாமே…’’ என்று உதவி ஆய்வாளர் கட்டப் பஞ்சாயத்துப் பேசியுள்ளார்.

மேலும் 04.07.2020 அன்று குடியிருப்பிற்குச் சென்ற அருட்தந்தை அ.ரபேல்ராஜ் அவர்களின் நான்கு சக்கர வாகனத்தையும், பேராசிரியர் பிரபா. கல்விமணி அவர்களின் இருசக்கர வாகனத்தையும் பணியிடத்திற்குப் போகவிடாமல் மேற்படி தேவராஜ் தடுத்துள்ளார்.

புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை கட்டப் பஞ்சாய்த்து பேசுகின்றனர்.

இடத்தினை மீட்டுத் தரக்கோரியும், ஆக்கிரமிப்பு செய்த தேவராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் விரைவில் செஞ்சியில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

அனைவரும் வந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம். தனிமனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


இவண்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.