சட்டத்துறை அதிகாரி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: தலைமைச் செயலரிடம் மனு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.05.2023) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி சட்டத்துறை அதிகாரி உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தலைமைச் செயலரிடம் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி சட்டத்துறையில் சட்ட அதிகாரியாக (Law Officer) இருப்பவர் ஜான்சி. இவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை வாங்கிக் குவித்து வருகிறார். குறிப்பாக ரயில் நிலையம் எதிப்பக்கம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் வாங்கி ஓட்டல் கட்டியுள்ளார்.

அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி ஒரு அரசு ஊழியர் தன் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ வாங்கும் சொத்துக்கள் குறித்து அவர் பணி செய்யும் துறையின் உயரதிகாரிகளுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும் அல்லது அனுமதி பெற வேண்டும். ஆனால், மேற்சொன்ன சட்டத்துறை அதிகாரி மேற்சொன்ன சொத்து வாங்கியது குறித்து தகவல் தெரிவிக்கவுமில்லை, அனுமதியும் பெறவில்லை. இது அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறிய செயலாகும்.

இதுகுறித்து கடந்த 07.07.2022 அன்று தலைமைச் செயலர், சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவுக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்பி இருந்தோம். மேலும், மேற்சொன்ன ஓட்டல் இருக்கும் இடத்தின் பத்திரத்தையும் இணைத்து அனுப்பி இருந்தோம். ஆனால், இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேற்சொன்ன புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், சட்டத்துறை அதிகாரி தாக்கல் செய்துள்ள சொத்துக்களின் பட்டியலையும், பத்திரங்களையும் கேட்டிருந்தோம். ஆனால், பொது தகவல் அதிகாரி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்புச் செயலர் தகவல் அளிக்கவில்லை. மேலும், லஞ்ச ஒழிப்புத் துறைச் செயலருக்கு மேல்முறையீடு செய்தும் தகவல் அளிக்கவில்லை. தற்போது மத்திய தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

மேற்சொன்ன சட்டத்துறை அதிகாரி பணபலமும், அரசியல் செல்வாக்கும் உடையவர். இவர் ஆட்சியில் உயர் பொறுப்பில் இருக்கும் பலருக்கும் மிகவும் நெருக்கமானவர். எனவே, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இவர் மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருகின்றனர்.

எனவே, தலைமைச் செயலர் இதில் தலையிட்டு மேற்சொன்ன சட்டத்துறை அதிகாரி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.மேலும், இதுகுறித்து மத்திய உள்துறைச் செயலர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்டோருக்கும் மனு அனுப்பி உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*