புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (1): அ.மார்க்ஸ்

புதிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) சில குறிப்புகள் (1)

கோவிட் 19 தாக்குதல் உச்சத்தில் இருக்கும்போதே என்னென்ன வில்லங்கமான திட்டங்களை எல்லாம் செயலாக்க முடியுமோ அத்தனையையும் செய்து கொண்டுள்ளது மோடி அரசு. நாடாளுமன்றம், மாநிலங்கள் அவை முதலானவற்றை யெல்லாம் ஒரு சுமையாக நினைக்கும் மோடி அரசு அவை மூடிக் கிடக்கும்போதே எல்லாவற்றையும் முடித்துவிடத் துடிக்கிறது. அந்த வரிசையில் இப்போது இராமர் கோவில் அடிக்கல் நாட்டுக்கு இணையாக கல்விக் கொள்கை அரங்கேற்றம் நடைபெறுகிறது.

2016 இல் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் குழு அறிக்கை சுருக்கமாக கல்வித்துறையில் அவர்களின் திட்டங்களை முன்வைத்தது. 2017-இல் நியமிக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை சுப்பிரமணியம் குழு தொட்டுக் காட்டிய திசையில் மிக விரிவாகத் தங்களின் நோக்கத்தை நகல் அறிக்கையாக முன் வைத்தது. சுப்பிரமணியம் குழு முன்வைத்த நமது விமர்சனம் எல்லாம் இம்மியும் அதில் கணக்கில் கொள்ளப்படவில்லை. இப்போது அதன் மீது இரண்டாண்டுகளாக நாம் என்னென்னவெல்லாம் சொன்னோமோ எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு இறுதி அறிக்கை முன்வைக்கப்பட்டு விட்டது.

எந்த அளவுக்கு இவர்கள் வஞ்சகமானவர்கள் என்றால் கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் இந்தி திணிக்கப்பட்டதைத் தமிழகம் முழுவதும் ஒரே குரலில் எதிர்த்தோம். மோடி அரசு பின்வாங்கி அந்த வரிகள் திருத்தப்பட்டன. இன்று இறுதி அறிக்கையில் எதை அவர்கள் நீக்கியதாகப் பம்மாத்து பண்ணினார்களோ அது நசுக்கி நசுக்கி மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. மூன்று மொழி கட்டாயம் என்றால் எப்படியும் மக்கள் மூன்றாவது மொழியாக இந்தியைத்தான் தேர்வு செய்வார்கள் என்பது அவர்கள் திட்டம்.

அப்புறம் classical languages எனும் பெயரில் சமஸ்கிருதம், பாலி, பிராக்ருதம் என்றால் மக்கள் பாலியையும், பிராக்ருதத்தையுமா தேர்வு செய்யப் போகிறார்கள் என்கிற நம்பிக்கையில் சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கும் அதுவும் இன்று இந்த இறுதி அறிக்கையில் வழி செய்யப்பட்டு விட்டது.

5+3+3+4 திட்டமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதுவும் அவர்கள் முனபு என்ன சொன்னார்களோ அதே வடிவத்தில் இடம் பெறுகிறது.

3, 5, 8. 10, 12 வகுப்பில் Board Exam என்பதையும் கடுமையாக எதிர்த்தோம். மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்குப் பொதுத் தேர்வு வைப்பது என்பதை எல்லாம் நாம் கடுமையாக விமர்சித்தோம். அதுவும் எந்தப் பெரிய மாற்றமும் இல்லாமல் அப்படியே இப்போது நம்முன்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதுபோல இதென்ன தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களைப் பிரித்து சிறப்புக் கல்வி மண்டலங்கள் (Special Education Zone) என்றோம். அதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வடிவில் அதுவும் அப்படியே உள்ளது.

நமது நாடு சாதி, தீண்டாமையினால் பாதிக்கப் பட்டுள்ள நாடு. கல்விக் கொள்கை அறிக்கை என்பது அது குறித்து விரிவாகப் பேச வேண்டும் என்றோம். SC எனும் குறிப்பு இந்த அறிக்கையில் ஒரே ஒரு இடத்தில்தான் என் கண்ணில் பட்டது. கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பற்றி இந்த அறிக்கை இப்போதும் மூச்சுக்கூட விடவில்லை. மாணவர்கள் சேர்க்கையில் மட்டுமல்ல, ஆசிரியர் தேர்வு, பணியாளர்கள் தேர்வு எதிலும் இட ஒதுக்கீடு குறித்துப் பேச்சில்லை. பழங்குடிகள் கல்வி குறித்த “ஆஷ்ரமசாலா” என ஒரே ஒரு இடத்தில் ஒரு குறிப்பு கண்ணில் பட்டது.

இளம் வயதிலேயே தொழிற்கல்வி (vocationalisation) என்பதாகவெல்லாம் மாணவர்களைப் பிரித்து ஒருசாராரை வெறும் தொழில் பயிற்றுனர்களாக ஆக்குவது என்பதெல்லாம் இன்னொரு வகையிலான குலக் கல்வித் திட்டமாக ஆகும் வாய்ப்புள்ளதைச் சுட்டிக்காட்டி நாம் அதைக் கண்டித்தோம். அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. இந்த இறுதி அறிக்கையிலும் அது தொடர்கிறது.

GDP யில் 6% கல்விக்கு ஒதுக்கப்படும் என்கிறார்கள். ஏற்கனவே இருந்த 4.14% உம் இப்போது இவர்கள் ஆட்சியில் 3.2% ஆகச் சுருங்கியுள்ளது.

12 இலட்சம் ஆசிரியப் பணிகள் இன்று பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. அடிப்படை வசதிகள் இல்லாத அரசுப் பள்ளிகளை நாம் அறிவோம். இந்த லட்சணத்தில்

School Quality Assessment & Accreditation Framework (SQAAP),
Common National Professional Standards for Teachers (NPST)
National Council fot Teacher Education Performance Assessment Review and Analysis of Knowledge for Holistic Development (PARAKH)

என ஏற்கனவே இருக்கும் கல்விசார்ந்த திட்டங்கள் அமைப்புகள் என்பவற்றோடு இன்று இப்படி இன்னும் பல முன்மொழியப் படுகின்றன.

வெறும் 10% பள்ளிகளில்தான் மாணவர்கள் கணினிகளைப் பயன்படுத்த இயலும் என்பதுதான் பல மாநிலங்களில் இன்றைய நிலைமை. மொத்ததில் 4% பள்ளிகளில்தான் ‘நெட்’ தொடர்பு உண்டு. இப்படியான சூழலில் ஏகப்பட்ட அமைப்புகளையும் நிறுவனக்களையும் உருவாக்கி அவை அனைத்தையும் சங்கிகளைக் கொண்டு நிரப்புவது என்பதன் நோக்கம் என்ன?

குறுகிய மத, தேசிய உணர்வுகளை ஊட்டி வளர்ப்பதைத் தவிர வேறென்ன இவற்றின் ஊடாக நக்கப் போகிறது?

(தொடரும்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.