பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலைப் பட்டப் படிப்புத் தொடக்கம்: முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றியும், பாராட்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.09.2023) விடுத்துள்ள அறிக்கை:

பாரதியார் பல்கலைக்கூடத்தில் இந்தாண்டு முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்கப்படுவதாக அறிவித்துள்ள முதலமைச்சர், கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்குவதாகக் கூறி முன்னாள் பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் நிதி கையாண்டதில் முறைகேட்டில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால், முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்க முடியாமல் போனது.

இதனிடையே, பி.வி.போஸ் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இசைத்துறைப் பேராசிரியர் எல்.அன்னபூர்ணா பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடனத்துறைத் தலைவர் லூர்து சாந்திபாபு முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்குவது உள்ளிட்ட புதுவைப் பல்கலைக்கழக விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு அதிகாரியாக (Nodal officer) நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்கப்படுவதாக மாண்புமிகு முதலமைச்சர் நேற்றைய தினம் அறிவித்துள்ளார். அதாவது எம்.எப்.ஏ., நுண்கலை, எம்.பி.ஏ., இசை, எம்.பி.ஏ., நடனம் ஆகிய துறைகளில் தலா 20 மாணவர்கள் சேர்ந்துப் படிக்கும் வகையில் முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், நுண்கலைத்துறை இளங்கலைப் படிப்பில் மாணவர் சேர்க்கை 30-லிருந்து 40ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குப் புதுவைப் பல்கலைக்கழகம் இணைப்பு (Affiliation) வழங்கியுள்ளது.

மாணவர்களின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய மாண்புமிகு முதலமைச்சர் ந.ரங்கசாமி, மாண்புமிகு கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, செயலர் அ.நெடுஞ்செழியன் ஐ.ஏ.எஸ்., இயக்குநர் மற்றும் பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலர் வி.கலியபெருமாள், பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் எல்.அன்னபூர்ணா, நடனத்துறைத் தலைவர் லூர்து சாந்திபாபு உள்ளிட்டோருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*