மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 23.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :
16.02.1998-ல் கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் கோதண்டம் போலீஸ்காரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கையும், அவரது அண்ணன் வேணுகோபால் போலீஸ்காரர்களால் சித்தரவதைச் செய்யப்பட்ட வழக்கையும் எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1989-ல் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி புதுவை அரசை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வற்புறுத்துகிறது.
கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் நடந்துள்ள லாக்-அப் படுகொலை தொடர்பாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு போலீஸ்காரர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்த வழக்கில் தொடர்புள்ள மேலும் ஒரு போலீஸ்காரர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கோதண்டம் காவல்நிலையத்தில் போலீஸ்காரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கு போதுமான முகாந்திரங்கள் இருப்பதால் இந்த வழக்கை இ.பி.கோ. 302-வது பிரிவின் கீழ் மாற்றி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீஸ்காரர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென புதுவை அரசை வற்புறுத்துகிறோம்.
கொலை செய்யப்பட்ட கோதண்டம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பது அவரை அடித்துக் கொலை செய்த போலீஸ்காரர்கள் அனைவருக்கும் தெரிந்துள்ளது. ஆகவே இந்த வழக்கை எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் பதிவு செய்ய வேண்டுமென புதுவை அரசை வற்புறுத்துகிறோம்.
புதுவை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழான சிறப்பு நீதிமன்றமாக அறிவித்திருப்பதாக 1993-ல் புதுவை அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் பலமுறை கோரிக்கை எழுப்பியும், பல்வேறு போராட்டங்களை தலித் அமைப்புகள் நடத்தியும்கூட இதுவரை எந்தவொரு வழக்கையும் இந்த சட்டத்தின்கீழ் புதுவை அரசு பதிவு செய்ய மறுத்து வருகிறது. இந்த சட்ட விரோதமான போக்கைக் கைவிட்டு உடனடியாக கிருமாம்பாக்கம் லாக்-அப் கொலை வழக்கை இச்சட்டத்தில் பதிவு செய்யும்படி வற்புறுத்துகிறோம்.
எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கான விதிகள் 1995-ன் 20-வது பிரிவு கொலையுண்டவர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்றும், இதில் பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் ஒன்றரை லட்ச ரூபாயும், கீழ் நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்ட பின் மீதமுள்ள ஐம்பதாயிரம் ரூபாயும் அரசாங்கத்தால் அளிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, கொலை செய்யப்பட்ட கோதண்டம் குடும்பத்தினருக்கு உடனடியாக ஒன்றரை லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை புதுவை அரசு அளிக்க வேண்டும். அத்துடன் கோதண்டத்தின் அண்ணன் வேணுகோபாலும் போலீஸ்காரர்களால் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கும் இதே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டுமெனவும், அவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்மெனவும் புதுவை அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
Leave a Reply