மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 11.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :-
ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கு விசாரணை இன்று புதுவை, இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் துவங்கியது.
கடந்த 29.12.1993 அன்று புதுவை கண்டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்த வாழைக்காய் வியாபாரி சந்திரசேகரனை ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் போலீஸ்காரர்கள் அடித்துக்கொலை செய்து விட்டதாக புகார் கூறப்பட்டது. ஆனால் குடிபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இறந்தவரின் உறவினர்கள் மற்றும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குரலெழுப்பியதன் பேரில் இரண்டாவது பிரேத பரிசோதனை ஜிப்மர் மருத்துவமனையில் நடத்தப்பட்டது. அதில் சந்திரசேகர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.
புதுவை அரசு அப்போதிருந்த உதவி கலெக்டர் பி.பி.ராகவன் தலைமையில் நியமித்த விசாரணைக் குழுவும் கொலையை உறுதி செய்தது. இதில் நீதிகேட்டு தலையிட்ட பி.யு.சிஎல் அமைப்பின் வேண்டுகோளின் பேரில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக தேசிய மனித உரிமைக் கமிஷன் ஒரு விசாரணைக் குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி திரு.குருராஜன் தலைமையில் அமைத்தது. அவரும் விசாரணை மேற்கொண்டார். அவரது அறிவுறுத்தலின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் கோபாலச்சந்தர் உட்பட பத்து போலீசாரும் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முதல் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட டாக்டர் சீனிவாசனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். வழக்கை விசாரித்த சி.ஐ.டி. போலீசார் மேற்கண்ட அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கில் கண்ணுற்ற சாட்சியான சிறுவன் குமார் குற்றவாளிகளின் தூண்டுதலின் பேரில் கடத்தப்பட்டு தப்பி வந்தான். சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இவ்வழக்கு விசாரணை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
இன்று அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். குற்றமிழைத்த போலீசார் தரப்பில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் வராததால் வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்திப்போடப்பட்டது.
கண்ணுற்ற சாட்சியான குமார் குற்றவாளிகளுக்கு வேண்டிய சிலர் தன்னை மிரட்டுவதாகவும், தனக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டுமென்றும் இன்று நீதிபதி திரு.ஈ.வி.குமார் அவர்களிடம் முறையிட்டு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகார் குறித்து உடனடியாக விசாரித்து தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டுமென ஒதியஞ்சாலை காவல்நிலைய அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Leave a Reply