காலாப்பட்டு சிறையில் சிறைவாசி மரணம்: சிறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.09.2021) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணைச் சிறைவாசி இறந்ததற்குச் சிறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்பதால் அனைவர் மீதும் உரிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

காரைக்காலில் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் (வயது 42) சென்ற ஆகஸ்ட் மாதம் 14 அன்று காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சென்ற 03.09.2021 அன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின் அங்கு அவர் இறந்து போனதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் காவல் மரணம் என வழக்குப் பதிவு செய்து, தற்போது நீதித்துறை நடுவர் யுவராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்தவரின் உடற்கூறாய்வு ஜிப்மர் மருத்துவர் குழுவால் மேற்கொள்ளப்பட்டு விடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜெயமூர்த்தி என்பவர் பாகூர் போலீசாராலும், சிறைத்துறையினராலும் அடித்து துன்புறுத்தப்பட்டதால் இறந்துபோனார். அவ்வழக்கில் அப்போது சிறைத்துறைக் கண்காணிப்பாளாராக இருந்த பாஸ்கரன், சிறை மருத்துவ அதிகாரி டாக்டர் வெங்கட ரமண நாயக் உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக உள்ளனர். அப்போது இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சிறை மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறைக்கு மருத்துவர் நியமிக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தால் காலாப்பட்டு சிறை நிலைமைகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை நடுநிலை அறிவுரையாளராக (Amicus Curiae) நியமிக்கப்பட்டார். அவர் விசாரித்து உயர்நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் காலாப்பட்டு மத்திய சிறைக்கு 24 மணி நேரமும் இருக்கக் கூடிய மருத்துவர் நியமிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார். ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவரை நியமிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அசோக்குமார் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுவதற்குக் காலாப்பட்டு சிறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே முழுக் காரணம் என்பதோடு, சிறைத்துறை உயரதிகாரிகளும் முழுப் பொறுப்பாவார்கள். அதோடு புதுச்சேரி அரசுக்கும் இதில் முழுப் பொறுப்பு உண்டு.

தற்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக உள்ள ரவிதீப் சிங் சகார் உள்ளாட்சித் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இதனால், அவரால் சிறைத்துறையை முறையாக நிர்வகிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு சிறை மருத்துவரைக்கூட நியமிக்கவில்லை. இதனால், ஒரு சிறைவாசியின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

இறந்துபோன அசோக்குமார் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி உள்ளார். அவருக்கு மச்சகாந்தி என்ற மனைவியும், கவுசிக் குமார் (வயது 6), வர்ணபிரியா (வயது 3) என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். சிறுமி வர்ணபிரியாவிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

எனவே, சிறைவாசி இறந்ததற்குக் காரணமான சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சகார் உள்ளிட்ட காலாப்பட்டு சிறை அதிகாரிகள் அனைவரையும் உடனே பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவரின் மனைவிக்குத் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும். இரு பிள்ளைகளின் படிப்புச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.

இது நீதிமன்றக் காவலில் (Judicial custody) நடந்த மரணம் என்பதால் அசோகுமார் மாரடைப்பு வந்துதான் இறந்தாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என்ற அம்சங்கள் குறித்தும் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி விரைந்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*