ஏனம் ரீஜன்சி தொழிற்சாலைக் கதவடைப்பும், காவல்துறை அத்துமீறல்களும்: கள ஆய்வு அறிக்கை

புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் 09.04.2012 அன்று காலை 11.30 மணியளவில் மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கை:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரங்கமான ஏனத்திலுள்ள ரீஜன்சி செராமிக்ஸ் எனும் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் தொழிலாளர் போராட்டத்தின் உச்சகட்டமாகச் சென்ற ஜனவரி 27 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தின்போது கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் மச்ச சோமேசுவர முரளிமோகன் போலீசரால் அடித்துக் கொல்லப்பட்டார். அதைக் கண்டு கொதித்தெழுந்த அவரது ஆதரவாளர்கள் தொடுத்த தாக்குதலில் தொழிற்சாலையின் சொத்துக்கள் சேதமானதோடு, அந்நிறுவனத்தின் மேலாளர் கே.சி.சந்திரசேகரன் என்பவரும் கொல்லப்பட்டார். அதை ஒட்டிப் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். தொழிற்சாலை நிர்வாகம் தன்னிச்சையாக லாக் அவுட் அறிவித்ததன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக 3000 தொழிலாளிகள் இன்று வேலையின்றி வீதியில் நிற்கின்றனர். மேலாளர் கொலை மற்றும் கலவரம் தொடர்பாக சுமார் 41 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டினியில் வாடும் தொழிலாளர் குடும்பங்கள் ஆலையை திறக்கச் சொல்லியும், முரளி மோகனின் கொலைக்கு நியாயம் கோரியும் போராடும் செய்தி தொடர்ந்து நாளிதழ்களில் வந்தவண்ணம் உள்ளன.

தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் உரிமைகளிலும் சமூக அமைதியிலும் அக்கறை உள்ளவர்கள் என்கிற வகையில் கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் சென்ற ஏப்ரல் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஹைதராபாத், காக்கிநாடா, ஏனம், டி.கோத்தபள்ளி ஆகிய பகுதிகளுக்குச் சென்று தொடர்புடைய பலரையும் சந்தித்தோம். கோத்தபள்ளியில் வசிக்கும் முரளி மோகனின் மனைவி, தாயார், ஊர் மக்களில் சிலர், ஹைதராபாத்தில் தொழில் புரியும் மூத்த வழக்கறிஞர் பொஜ்ஜா தாரகம், தொழிற்சங்கத் தலைவர் சீனிவாச ராவ், ஏனத்தின் நிர்வாக அதிகாரி ஏ.வி.சுப்பிரமணியன், ஏனம் காவல் துறைக் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ், தற்போதைய ஏனம் காவல் நிலையப் பொறுப்பாளர் பால், ஏனம் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் எஸ்.பிரபாகரன், ஏனம் சிறப்புத் துணைச் சிறையில் உள்ள சத்திய நாராயணா உள்ளிட்ட சில கைதிகள், துப்பாக்கிச் சூட்டில் குண்டடிப்பட்ட ரீஜன்சி ஊழியர் கெட்டம் ஜார்ஜ் விக்டர் பாபு, என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகபு சுப்பாராவ். அ.தி.மு.க தலைவர் சாய்குமார் மற்றும் பல தொழிலாளிகள் ஆகியோரிடம் விரிவாக உரையாடினோம். மூடிக் கிடக்கும் ரீஜன்சி தொழிற்சாலைக்குள் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் அதை வெளிப்புறமாகச் சுற்றிப் பார்த்ததோடு அதன் பயன்பாட்டு மேலாளர் (utility manager) ராஜேந்திர பிரசாத்திடம் தொலைபேசியில் உரையாடினோம். தொழிலாளர்களுக்கு ஆதரவாக காக்கிநாடாவில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டதோடு அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் நாகேஸ்வர ராவ், மாவட்டச் செயலாளரும் சம்பவ தினத்தில் களத்தில் இருந்தவருமான சேஷு பாப்ஜி, ரீஜன்சி தொழிற்சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் வில்சன் ஆகியோருடனும் பேசினோம்.
முரளிமோகனின் பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது இறப்பு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, ரீஜன்சி மேலாளர் காமேஸ்வர வஜ்ஜலு கலவரம் தொடர்பாக அளித்த புகார் மனு, அதன் அடிப்படையில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை, சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோ காட்சிகள் ஆகியவற்றையும் சேகரித்து விரிவாக ஆய்வு செய்தோம்.

பின்னணி:

1. புதுச்சேரி மாநிலத் தலைநகரிலிருந்து சுமார் 1000 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மிகச் சிறிய நிர்வாகப் பகுதி ஏனம். சுமார் 30 ச.கி.மீ பரப்பும், 33,000 மக்கள் தொகையும் உள்ள இச்சிறு பகுதியில் உள்ள 3 பெரிய தொழில் நிறுவனங்களில் முதன்மையானது ரீஜன்சி செராமிக்ஸ். இந்தத் துறையில் ஆசியாவிலேயே பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றான இது மிகவும் லாபகரமாகச் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம். பல துணை நிறுவனங்களையும் உள்ளடக்கியது இது. புதுவை அரசின் பல மானியங்களையும் உதவிகளையும் பெற்று வரும் இந்நிறுவனத்தில் சுமார் 3000 ஊழியர்கள் பல மட்டங்களில் வேலை செய்கிறார்கள். ஆனால் இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரே (970) நிரந்தர ஊழியர்கள். பிறர் ஒப்பந்தத் தொழிலாளிகள். சுமார் 12 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள்கூடப் பெறுகிற அதிகபட்ச மாத ஊதியம் 5000 ரூபாய்க்கும் குறைவே. போனஸ், முறையான ஊதிய உயர்வு எதுவும் கிடையாது. எட்டு மணி நேர வேலை, வேலைத் தளத்தில் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள், ஓவர் டைம் பணி ஊதியம் எதுவும் கிடையாது. சென்ற இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை எந்தச் சங்கமும் உள்ளே இயங்க அனுமதிக்கப்பட்டதுமில்லை.

2. மொத்த ஊழியர்களில் பெரும் பகுதியினர் சுற்று வட்டாரத்திலுள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 60 சத ஊழியர்கள் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஏனம் பகுதியில் மிகவும் செல்வாக்குள்ள அரசியல்வாதியான மல்லாடி கிருஷ்ணா ராவுடன் மிகவும் நெருக்கமான உறவை இந்நிறுவனம் பேணி வருவதை இந்து போன்ற நாளிதழ்களே சுட்டிக் காட்டியுள்ளன (ஜனவரி 29, 2012). முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ்காரராக இருந்தபோதிலும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களுடனும் நெருக்கமாக இன்றும் உறவைப் பேணி வருபவர்.

4. ஏனத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள டி.கோத்தபள்ளி (ஆந்திர மாநிலம்) கிராமத்தைச் சேர்ந்த முரளி மோகன் சென்ற மூன்றாண்டுகளுக்கு முன் முதன் முதலாக ரீஜன்சி தொழிற்சாலைக்குள் தொழிற்சங்கம் ஒன்றை நிறுவினார். முரளி ஒரு தலித் என்பதும் அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக 1994 வாக்கில் சங்கம் ஒன்றை அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை நிர்வாகம் வெற்றிகரமாக முறியடித்ததைப்போல இம்முறை செய்ய இயலவில்லை. நிரந்தரத் தொழிலாளிகளில் சுமார் 700 பேர்கள்வரை முரளியின் “ரீஜன்சி செராமிக்ஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் யூனியனில்” உறுப்பினர்கள் ஆயினர். சங்கத்தை முறைப்படிப் பதிவு செய்வதிலும் அவர்கள் வெற்றி பெற்றதைக் கண்டு ஆத்திரமுற்ற நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகிப் பதிவை ரத்து செய்தது. வழக்காடி இந்த நீதிமன்றத் தடையையும் வெற்றிகரமாகச் சங்கம் கடந்தது. சென்ற மே தினத்தை மிகவும் கோலாகலமாக அவர்கள் கொண்டாடியதைக் கண்டு ஆத்திரமுற்ற நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியது. சுமார் 50 பேர்களை வேலை நீக்கம் செய்தது, சுமார் 12 பேர்களை காரைக்காலுக்கு இடமாற்றம் செய்தது. வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களில் சங்க நிறுவனர் முரளி மோகனும் ஒருவர். இந்த நடவடிக்கைகளை எதிர்த்தும், போனஸ், ஊதிய உயர்வு முதலான நீண்ட நாள் கோரிக்கைகளை முன் வைத்தும் சங்கம் போராட்டத்தைத் தொடங்கியது. வேலை நிறுத்தம், பேச்சுவார்த்தைகள், சங்க உறுப்பினர்கள் அனைவரும் பல்வேறு கொடிய நிபந்தனைகளுடன் கூடிய உறுதிமொழி அடங்கலில் கையெழுத்திட்டால்தான் வேலைக்கு அனுமதிக்க முடியும் என நிர்வாகம் பிடிவாதம் பிடித்தல் என்பதாகப் பிரச்சினைகள் தொடர்ந்தன.

5. இங்கொன்றைச் சொல்வது முக்கியம். ஆந்திர மாநிலத்தின் அமலாபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பியும் தனது தூரத்து உறவினருமான ஜி.வி.ஹர்ஷ குமாரை தனது சங்கத்தின் கவுரவத் தாலைவராக அறிவித்திருந்தார் முரளி. ஹர்ஷ குமார் காங்கிரஸ் கட்சிக்குள் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு எதிரானவர். அவ்வகையில் மல்லாடிக்கு எதிரணியில் இருப்பவர். எனவே மல்லாடிக்கு வேண்டிய ரீஜன்சி நிர்வாகத்திற்கு எதிரான சங்கத்தின் கவுரவத் தலைவர் பொறுப்பை அவர் விருப்புடன் ஏற்றுக் கொண்டார். தொழிலாளிக:ள் பெரும்பாலோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தலித்கள் என்பதும், இவர்களின் ஆதரவு ஏனத்தைச் சேர்ந்த மல்லாடிக்குத் தேவைப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. போராட்டத்தின் ஊடாகப் பல கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க வேண்டியதாயிற்று. 5000 ரூ போனஸ், ஏப்ரல் 2012 முதல் ஊதிய உயர்வு ஆகியவற்றையும் கூட ஏற்றுக் கொண்ட நிர்வாகம் முரளி மோகனின் வேலை நீக்கத்தை மட்டும் ரத்து செய்யத் தயாராக இல்லை. இந்த அம்சத்தில் விட்டுக் கொடுக்க சங்கமும் தயாராக இல்லை. எனவே வேலை நிறுத்தம் தொடர்ந்தது ஒப்பந்த ஊழியர்களை வைத்து ஆலையை இயக்க நிர்வாகம் முயன்றது. சென்ற ஜனவரி 27 அன்று அதிகாலையில் வேலைக்குச் செல்ல இருந்த ஒப்பந்தத் தொழிலாளிகளிடம் பேசித் தடுப்பதற்காகச் சென்ற முரளியையும் அவரது தோழர்களையும் தடியடிப் பிரயோகம் செய்து கைது செய்தது புதுச்சேரி காவல்துறை. முரளியைக் குறி வைத்துத் தாக்கிய அவர்கள், போலீஸ் வாகனத்துக்குள்ளேயே அவரைக் கிடத்தி லத்தியால் நெற்றி மற்றும் இடப்புற மார்பில் குத்தினர். இதன் விளைவாகக் காவல் நிலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட கொஞ்ச நேரத்தில் முரளி இறந்தார். தொடர்ந்த நிகழ்வுகள் எல்லோரும் அறிந்ததே.

எமது பார்வைகள்:

1. முரளியின் மரணம் மிகவும் தெளிவான ஒரு காவல் நிலையச் சாவு (a clear case of custodial death). காவல் நிலயத்திற்கு அவர் கொண்டு வரப்பட்டதையும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்னதையும் காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையே ஏற்றுக் கொள்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையும் இதை ஏற்றுக் கொள்கிறது. எனவே இது அய்யத்திற்கு இடமற்ற ஒரு தெளிவான காவல் நிலையச் சாவு. திருத்தப்பட்ட குற்ற நடைமுறைச் சட்டத்தின் 176 (1) (ஏ) பிரிவின்படி இதை ஒரு நீதித்துறை நடுவரே விசாரிக்க வேண்டும். ஆனால் சட்டத்திற்கு மாறாக விசாரணைப் பொறுப்பு காக்கிநாடா ஆர்.டி.ஓவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான ஒரு விதி மீறல்.

2. தன் கணவர் காவல் நிலயத்தில் இறந்து போனது குறித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உடனடியாக முரளியின் மனைவி புகார் அளித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை முரளியின் உடலில் குறிப்பாக நெற்றியிலும், இருதயத்திற்கு நேர் மேலாக இடது மார்பிலும் புறக் காயங்கள் இருந்ததை சுட்டிக் காட்டியபின், காவல் நிலையச் சித்திரவதையாலேயே தன் கணவரின் மரணம் நிகழ்ந்ததெனக் குற்றஞ்சாட்டி முரளியின் மனைவி மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார். ஆலை நிர்வாகத்தின் புகாரை ஏற்று 41 பேர்களைக் கைது செய்துள்ள புதுச்சேரி அரசு இதுவரை முரளியின் மனைவி அளித்துள்ள இப்புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி பல அய்யங்களுக்கும் காரணமாகிறது.

3. முரளியின் மரணத்தில் முக்கிய பங்காற்றியுள்ள மூன்று காவல்துறை அதிகாரிகள் வருமாறு: ஏனம் வட்ட காவல் ஆய்வாளர் பெரியசாமி, ஏனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பி.வீரபத்ரசாமி, ஐ.ஆர்.படாலியன் உதவி ஆய்வாளர் செந்தமிழ்ச் செல்வன். இவர்கள் மூவரும் ஆலை நிர்வாகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதைப் பலரும் எங்களிடம் கூறினர். குறிப்பாக வட்ட ஆய்வாளர் பெரியசாமி நிர்வாகத்திற்கும் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கும் மிக நெருக்கமாக இருந்துள்ளார். நிர்வாகத்தின் வாகனங்களைப் பயன்படுத்துவது உட்பட அவர் மீது பல புகார்கள் சொல்லப்படுகின்றன. இது குறித்து காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் நாங்கள் கேட்டபோது அத்தகைய புகார்கள் வந்துள்ளதாகவும் அவை விசாரிக்கப்படும் எனவும் அவர் கூறினார். முரளி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ஆலை நிர்வாகம் தனக்கு எடுபிடியாக இருந்த காவல்துறையினரை வைத்துத் திட்டமிட்டு மேற்கொண்ட கொலையாகவே இதைக் கருதவேண்டியுள்ளது. வேலைக்குச் செல்லமுயன்றவர்களிடம் அமைதியான முறையில் பேசிக் கொண்டிருந்தவர்களைக் கைது செய்து இப்படிக் கொடூரமாய்த் தாக்கியதை வேறு எப்படியும் புரிந்து கொள்ள இயலவில்லை. மேலாளர் சந்திரசேகர் கொலை உட்படப் பின்னர் நடந்த அனைத்துச் சம்பவங்களுக்கும் காவல்துறையின் இந்த அத்துமீறலே காரணமாகியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

4. பின்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் எந்தவித முன்னெச்சரிக்கைகளும் செய்யாமல் நடத்தப்பட்டுள்ளது. முறையான சட்ட ஒப்புதல் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

5. பின்னர் நடைபெற்ற கலவரத்தில் ஆலைச் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை, மேலாளர் கொலை செய்யப்பட்டது அனைத்தும் கண்முன் முரளி கொலை செய்யப்பட்டதைக் கண்ட உணர்வெழுச்சியின் விளைவே. இதில் சதி அம்சம் (conspiracy aspect) ஏதும் கிடையாது. இதில் தொழிலாளிகளின் பங்கைக்காட்டிலும் பிற ஊர்ப் பொதுமக்களின் பங்கே அதிகமாயுள்ளதை முதல் தகவல் அறிக்கைகளும், இது தொடர்பான புகார்களும் உறுதி செய்கின்றன. தற்போது கைது செய்யப்பட்டவர்களிலும் தொழிலாளர்களைக் காட்டிலும் பிறரே அதிகம். தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பலரும், குறிப்பாக முதல் ஐவரும் மல்லாடி கிருஷ்ணா ராவிற்கு அரசியல் ரீதியாக எதிரானவர்கள். அ.தி.மு.க தலைவர் சாய்குமார், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சுப்பாராவ் முதலானோர் இவ்வகையினரே. தவிரவும் சென்ற 11.11.11 அன்று நடைபெற்ற ஒரு காவல் நிலையச் சாவில் சாட்சிகளாக உள்ளவர்களும் இன்று குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6. கலவரம் தொடர்பாக எங்கள் பார்வைக்கு வந்த சி.டிக்களில் ஒன்று மல்லாடி கிருஷ்ணாராவ் தயாரித்தது. தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பெற்ற ஒளிப் பதிவுகளை வெட்டி ஒட்டித் தயாரித்தது இது. ஏனம் என்பது ஒரு மிகச் சிறிய ஊர், காவல் நிலையம், அரசு நிர்வாக அலுவலகம், தொழிற்சாலை, மருத்துவமனை எல்லாம் மிக அருகருகே உள்ளன. இப்படியான ஒரு பிரச்சினை நடக்கும்போது ஊர்மக்கள் கூடுவது தவிர்க்க இயலாது. அப்படியாக வந்தவர்கள், சமாதானத்திற்கு முயன்றவர்கள், முரளியின் கொலையால் ஆத்திரப்பட்டுப் பேசியவர்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஆகியோரில் தனது அரசியல் எதிரிகளை மட்டும் சிவப்பு வண்ணத்தில் வட்டமிட்டு, அம்புக் குறியிட்டு அந்தச் சி.டியைத் தயாரித்துள்ளார் கிருஷ்ணாராவ். போலீசுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அந்த சி.டி.யின் அடிப்படையிலேயே இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமிக்கு கிருஷ்ணாராவ் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு ஏற்கத்தக்க பிரச்சினை (valid dispute) இருந்துள்ளது. பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் அன்று நடந்த வருத்தத்திற்குரிய சம்பவங்களைக் காரணம் காட்டி நிர்வாகம் தன்மூப்பாக லாக் அவுட் அறிவித்துள்ளது சட்ட விரோதமானது. நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கே வர மறுக்கிறது என்றும் எந்தச் சமரசத்திற்கும் அது தயாரில்லை எனவும் ஏனம் தொழிலாளர் துறை அலுவலகப் பொறுப்பாளர் பிரபாகரன் எம்மிடம் கூறினார். அன்று நடந்த வருந்தத்தக்க நிகழ்வுகளில் தொழிலாளிகளுக்குப் பெரிய பங்கும் இல்லாதபோது நிர்வாகம் இத்தனை வன்மத்துடன் செயல்படுவதையும் சட்ட விரோதமாக லாக் அவுட் அறிவித்திருப்பதையும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

8. தொழிற்சாலையைத் திறக்க முடியாது என்பதற்கு நிர்வாகம் சொல்லும் காரணம் அன்றைய கலவரத்தில் தொழிற்சாலை எந்திரங்கள் நாசமாகிவிட்டன என்பது. இது குறித்து இரு கருத்துக்கள் நிலவுகின்றன. அன்று நடந்த கலவரத்தில் எந்திரங்கள் எதுவும் சேதமாக்கப்படவில்லை. ட்ரக்குகள், லாரிகள், ஊழியர்களின் இரு சக்கர வானங்கள், உற்பத்தி செய்யப்பட்ட செராமிக் ஓடுகள் முதலானவற்றை ‘பாகிங்’ செய்வதற்காக இருந்த பொருட்களும் மட்டுமே சேதமாக்கவும், அழிக்கவும் பட்டன என்பது ஒரு கருத்து. பெரும்பாலன தொழிலாளர்களும் மூத்த வழக்குரைஞர் பொஜ்ஜா தாரகம் போன்றோரும் இப்படித்தான் கூறுகின்றனர். ஆனால் நிர்வாகமோ ‘கன்ட்ரோல் பானல்’ உள்ளிட்ட முக்கிய எந்திரங்கள் பழுதாகியுள்ளதால் தொழிற்சாலையை இயக்க முடியாது எனச் சொல்கிறது. நாங்கள் சந்தித்த அரசுப் பிரதிநிதிகளான ஏனம் நிர்வாக அலுவலர், காவல்துறைக் கண்காணிப்பாளர், தொழிலாளர் துறைப் பொறுப்பாளர் ஆகிய மூவருமே நிர்வாகத்தின் கருத்தையே பிரதிபலித்தனர். இவர்கள் முழுமையாக சேதங்களை ஆய்வு செய்யவில்லை என்பதோடு, அப்படியான முடிவுகளை எடுக்கத் தேவையான துறைசார் தகுதியும் அவர்களுக்குக் கிடையாது. எனினும் அதற்குரிய நிபுணர் குழு ஒன்றின் மூலம் மதிப்பிடுவதற்கு உரிய முயற்சிகள் எதையும் செய்யாது தொழிற்சாலை நிர்வாகத்தின் கருத்தை இவர்களும் அப்படியே பிரதிபலிப்பது லாக் அவுட் தொடர்வதற்குக் காரணமாக உள்ளது. 3000 குடும்பங்கள் இன்று பட்டினி கிடக்க நேர்ந்துள்ளது என்கிற கவலை அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை.

9. தொழிற்சாலைக்கு நேர்ந்த இழப்பீடு குறித்து நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்லி வருகிறது. ஜனவரி 29 அன்று கலவரம் குறித்து தொழிற்சாலை மேலாளர் கொடுத்துள்ள புகாரில் 600 முதல் 700 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டதாகச் சொல்லியுள்ளார். அதற்கு முந்தைய நாள் வெளிவந்த இந்து நாளிதழில் ஆலை உரிமையாளர் ஜி.என் நாயுடு மொத்த இழப்பு 150 கோடி எனப் பேட்டி அளித்துள்ளார். சென்ற ஏப்ரல் 3 அன்று நாங்கள் மேலாளர் ராஜேந்திர பிரசாத் என்பவரிடம் பேசியபோது அவர் மொத்த இழப்பு 250 கோடிகள் என்றார். ஆனால் நாங்கள் விசாரித்த வரையில் இழப்பீடு அதிக பட்சம் 10 கோடிகளைத் தாண்டாது. சேத மதிப்பை அதிகமாகச் சொல்லி அரசு மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் நிர்வாகம் கூடுதல் தொகையைப் பெற முயற்சிப்பதாகத் தெரிகிறது.

10. நாங்கள் சந்தித்த மக்கள் கூறிய வேறு இரு புகார்கள்: தொழிற்சாலை நிர்வாகம் நடத்துகிற பள்ளிகளில் பயிலும் தொழிலாளரின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இரு தவணைகளில் 12,000 ரூ கட்ட வேண்டுமென சம்பவத்திற்குப் பிறகு வற்புறுத்தப்படுகின்றனர். கைது செய்யப்பட்ட 41 பேரில் 20 பேர்களுக்குப் பிணையில் விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதுச்சேரியில் தங்கி தினமும் கையொப்பமிட வேண்டும் என்பது நிபந்தனை. இதனால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் ஒருபுறமிருக்க, ஓர்லையன்பேட்டை காவல் நிலயத்தில் இவர்கள் கையொப்பமிட வரும்போது நிலையத்திலுள்ளோர் ஒவ்வொரு முறையும் 100 ரூ கொடுக்க வேண்டுமென நிர்ப்பந்திப்பதாகச் சிலர் கூறினர்.

எமது கோரிக்கைகள்:

இரண்டு அம்சங்கள் இதில் கவனத்திற்குரியன. ஜனவரி 27 சம்பவங்கள் தொடர்பாக முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று. இதிலேற்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகளும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடியின் தலையீடும் விரிவாக மேலே சொல்லப்பட்டுள்ளன. இரண்டாவது அம்சம் மூடிக் கிடக்கும் தொழிற்சாலையை உடனடியாகத் திறப்பது. 3000 குடும்பங்களின் பட்டினியைத் தீர்ப்பது.

புதுச்சேரி அரசு இந்த இரு அம்சங்களிலும் காட்டியுள்ள மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத் தலைமையகத்திற்கும் ஏனத்திற்குமுள்ள புவியியல் இடைவெளியும் இதில் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. இதன் விளைவாக இன்று அம்மக்கள் நீதி கோரி ஆந்திர மாநில அரசிடம் முறையிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சென்ற இரண்டாம் தேதியன்று அத்தகைய போராட்டமொன்று காக்கிநாடாவில் நடைபெற்றது. ஆலையைத் திறக்க வேண்டும், அதுவரை மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் அக்குடும்பங்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகள். புதுச்சேரி மாநில நிர்வாகத்தின் செயலின்மையின் விளைவு இது. இத்தகைய நிலை தொடர்வது புதுச்சேரி மாநில ஒற்றுமைக்கு உகந்ததல்ல.

புதுச்சேரி அரசு உடனடியாகக் கிழ்க்கண்ட அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

1. ஜனவரி 27 சம்பவங்கள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட அரசு முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் கொடுத்த அழுத்தத்தின் விளைவு இது. தாமதமின்றி இவ்விசாரணை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதோடு அதுவரை பழிவாங்கும் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும். முரளியின் காவல் நிலைய மரணம், மேலாளர் சந்திரசேகரின் கொலை, தொழிற்சாலைக் கலவரம், துப்பாக்கிச் சூடு ஆகிய நான்கு நிகழ்வுகளும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுதல் அவசியம். சம்பவத்திலும் அதற்குப் பிந்தைய நடவடிக்கைகளிலும் மல்லாடியின் பங்கும் விசாரிக்கப்பட வேண்டும்.

2. காவல்நிலையச் சாவு ஏன் அதற்குரிய சட்டப்படி நீதித்துறை நடுவரால் விசாரிக்கப்படவில்லை என்பதற்கும் இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கும் மாநில அரசு விளக்கமளிக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் பெரியசாமி, வீரபத்ரசாமி, செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனைவரையும் பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவர்களுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்திற்குமான தொடர்பும் விசாரிக்கப்பட வேண்டும்.

3. தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் காவல் நிலையத்தில் இறந்துள்ளார். போலீஸ் சுட்டதில் 9 தொழிலாளிகள் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை அரசு அவர்களுக்கு இழப்பீடுகள் எதையும் வழங்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முரளியின் குடும்பத்திற்கு 25 லட்சமும், குண்டடிப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் 5 லட்சமும் அளிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகளும் கோரியுள்ளன. இந்த நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். முரளியின் மனைவிக்கு அரசு வேலை அளிக்கப்பட வேண்டும்.

4. ஓரளவு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்தி வந்தவர் என எல்லோராலும் போற்றப்படும் ஜவஹர் ஐ.ஏ.எஸ் ஏன் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டார் எனப் புரியவில்லை. தகுதியான நிர்வாகி ஒருவரை அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக ரீஜன்சி தொழிற்சாலையை உடனடியாகத் திறக்க ஆவன செய்ய வேண்டும். நிர்வாகம் அறிவித்துள்ள லாக் அவுட்டைச் சட்ட விரோதம் என அரசு அறிவிக்கத் தயங்கக் கூடாது. அருகிலுள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர் குழு ஒன்றை அரசு நியமித்து, தொழிற்சாலை உடனடியாக இயங்க முடியாத அளவிற்கு இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன என்பது உண்மையா என்பதையும் மொத்த சேதங்களின் அளவையும் மதிப்பிட்டு ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்கச் செய்ய வேண்டும். கூடவே முதலமைச்சர் தலைமையில் முத்தரப்புப் பேச்சு வார்த்தை ஒன்றுக்கு அரசு ஏற்பாடு சேய்ய வேண்டும். தொழிற்சாலையைத் திறக்க இயலாது எனவும், பேச்சு வார்த்தைகளுக்கு ஒத்துழைக்க முடியாது எனவும் நிர்வாகம் கூறும் பட்சத்தில் அரசே தொழிற்சாலையை எடுத்து நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*