புதுச்சேரியில் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம்: உண்மை அறியும் குழு அமைப்பு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 24.04.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அருகே உறுவையாறு பகுதியில் சக்திவேல் என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் குறித்து ஆராய்ந்து உண்மை நிலையை வெளிப்படுத்த மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சக்திவேல் என்பவரை கடந்த 24ந் தேதியன்று உறுவையாறு சவுக்குத் தோப்பில் புதுச்சேரி போலீசார் துப்பாகியால் சுட்டுப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் அளிக்கும் விளக்கம் போதுமானதாக இல்லை என்பதோடு, பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிந்து வெளிப்படுத்த மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் உண்மை அறியும் குழு ஒன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு வரும் 30ந்தேதி திங்களன்று சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் விசாரணை மேற்கொள்ளும். மேலும், காயம்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சக்திவேல் மற்றும் காயம்பட்ட போலீசார், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் என அனைவரையும் நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்.

உண்மை அறியும் குழுவின் அறிக்கை உரிய நடவடிக்கைக்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு முறையே அனுப்பி வைக்கப்படும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*