புதுச்சேரி ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கைது: உண்மை அறியும் குழு அறிக்கை

புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் 01.05.2012 அன்று மதியம் 12 மணிக்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை:

சென்ற ஏப்ரல் 24 இரவு வில்லியனூர் அருகிலுள்ள உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலு த/பெ ஆறுமுகம் என்கிற இளைஞனை ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் சென்ற காவலர்கள் குழு ஒன்று துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது. இதற்கு இரண்டு நாட்கள் முன்னர் சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகளான வாணரப்பேட்டை வினோத், முதலியார்பேட்டை பீட்டர், நித்தியானந்தம் ஆகியோர் கரிக்கலாம்பாக்கம் – பெருங்கலூர் சாலையில் வந்து கொண்டிருந்த அவ்வூரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரை நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிக் கொன்றுள்ளனர். ஜெகதீசனுடன் வந்து கொண்டிருந்த அவரது நண்பர் துரைசாமி குண்டு வீச்சில் காயமடைந்தார்.

இதில் மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவெனில் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளியான ஜெகதீசனுக்கும் கொன்ற கும்பலுக்கும் பகை ஏதுமில்லை, இந்த ரவுடிக் கும்பலுக்கும் இவர்களுடனிருந்து பிரிந்த தேவதாஸ் என்பவரின் கும்பலுக்கும் பகை இருந்துள்ளது. தொடர்ந்து இவர்களுக்குள் மோதல்கள் நடந்துள்ளன. தேவதாசைக் கொல்லச் சென்றவர்கள் தவறுதலாக தேவதாஸ் என நினைத்து இரு குழந்தைகளுக்குத் தந்தையான அப்பாவி ஜெகதீசனைக் கொன்றுள்ளனர்.

வழக்கை காவல் கண்காணிப்பாளர் பைரவசாமி மேற்பார்வையில் ஆய்வாளர் பாஸ்கரன் விசாரித்து வந்தார். காவல் துறையின் கூற்றுப்படி வினோத், பீட்டர் முதலானோர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்து சக்திவேல் பற்றி அறிந்து அவரைத் தேடி வந்தனர். 24 இரவு அவரைத் தேடிச்சென்று உறுவையாறு ஆற்று கல்வெர்ட் அருகில் முட்புதர் ஒன்றில் அவரைக் கண்டனர். கைது செய்ய முனைந்தபோது சக்திவேல் வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர் மீது வீசியதில் அவர்கள் சென்ற பொலேரோ ஜீப் மற்றும் உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், ஃபெலிக்ஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இரண்டாவது குண்டை சக்திவேல் வீச முற்படுகையில் பாஸ்கரன் சுட்டதில் சக்திவேல் படுகாயமடைந்து பிடிபட்டார்.

சக்திவேலுக்குக் கால்களில் மூன்று குண்டுகள் பாய்ந்துள்ளன. முழங்கால்கள் உடைந்து மருத்துவமனையில் உள்ளார்.
போலீசாரின் இந்தக் கதைக்கும் பத்திரிக்கைகளில் வந்த ஒரு செய்திக்குமுள்ள ஒரு முரண்பாடு எங்களின் கவனத்திற்கு வந்தது. வினோத், பீட்டர் ஆகியோரோடு சக்திவேலையும் சம்பவம் நடப்பதற்கு முன்பே போலீஸ் கைது செய்து வைத்துள்ளதாகவும் நித்தியானந்தம் என்பவரை மட்டுமே தேடி வந்ததாகவும் தினத்தந்தி இதழில் செய்தி வந்துள்ளது. கைது செய்து வைத்துள்ள ஒருவரை ‘என்கவுன்டர்’ செய்யப்போவதாகப் புதுச்சேரி நகரத்தில் 23ந் தேதி மாலையே பேச்சுக்கள் இருந்தன. இந்நிலையில் இப்படியான ஒரு துப்பாக்கிச்சூடு குறித்துப் பல அய்யங்கள் எங்களுக்கு ஏற்பட்டன. கொள்ளையர், ரவுடிகள் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரித்துத் தண்டனை வழங்காமல் துப்பாக்கியால் சுட்டுச் சாகசங்கள் புரிவதும் வீரப்பரிசுகள் பெறுவதும் ஒரு கலாச்சாரமாகவே ஆகிப் போன இன்றைய சூழலில் இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தோம்.

1. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை

2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி

3. பி.வி. ரமேஷ், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்

4. மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், திருவாரூர்

5. இரா. பாபு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, கடலூர்

6. சு. காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

இக்குழு நேற்று முழுவதும் புதுச்சேரி, வில்லியனூர், உறுவையாறு கரிக்கலாம்பாக்கம் முதலான பகுதிகளுக்குச் சென்று சக்திவேலின் தாயார் வசந்தா (50), சித்தப்பா கிருஷ்ணன், அண்ணன் சத்தியன், கரிக்கலாம்பாக்கம் பெருங்கலூரைச் சேர்ந்த கொல்லப்பட்ட ஜெகதீசனின் மனைவி பேபி அவரது குழந்தைகள் மர்றும் உறவினர்கள் ஆகியோரைச் சந்தித்தது. பின்னர் காவல் கண்காணிப்பாளர் பைரவசாமி, குண்டு வீச்சில் காயம்பட்டதாகச் சொல்லப்படும் உதவி ஆய்வாளர் ஃபெலிக்ஸ் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசியது. குண்டு வீச்சும் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றதாகச் சொல்லப்படும் சம்பவ இடத்தையும் சென்று பார்வையிட்டது. துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் பாஸ்கரனுடன் தொலைபேசியில் அய்யங்களைக் கேட்டுக் கொண்டது.

எமது பார்வைகளும் அய்யங்களும்

1. இரு ரவுடிக் குழுக்கள் இப்பகுதியில் உலவி வந்துள்ளன. இவர்களுக்குள் கடந்த இரு வாரங்களாகவே சண்டைகள் நடந்து வந்துள்ளன. கொலை நடப்பதற்கு இரு நாட்கள் முன்னதாக தேவதாஸ் கும்பல் சக்திவேலைக் கத்தியால் கீறியுள்ளது. சக்திவேல் உள்ளிட்ட கும்பல் தேவதாசைக் கொல்லத் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அதில் அப்பாவிக் கூலித் தொழிலாளி ஜெகதீசன் கொல்லப்பட்டது உண்மை. இதைச் சக்திவேல் குடும்பமே ஒத்துக் கொள்கிறது.

2. சக்திவேல் ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கில் சிக்கித் தண்டனை அனுபவித்தவர். மேலும் இரு வழக்குகளும் அவர் மீது உள்ளன. வெடிகுண்டு செய்கிற அளவுக்குத் தேர்ந்த இரு குழுக்கள் இப்பகுதியில் உலவி வருவதை போலீசார் இதுவரை கண்டுகொள்ளாதது வருந்தத்தக்கது.

3. நாங்கள் விசாரித்த வகையில் ஜெகதீசன் கொலை செய்யப்பட்ட அடுத்தடுத்த நாளில் போலீசுக்கு ஆதரவான ஒரு வழக்குரைஞர் மூலமாக சக்திவேல் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். சக்திவேலுவின் தாய், சகோதரர், சித்தப்பா முதலியோர் இதை உறுதி செய்கின்றனர்.

4. சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்திற்குச் சென்று நாங்கள் நுணுக்கமாகத் தேடிப் பார்த்தோம். குண்டு வெடிப்பு முதலானவற்றிற்கு எந்த ஆதாரமும் அங்கில்லை. பகுதி மக்களும் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடுச் சத்தங்கள் ஏதும் கேட்கவில்லை என்கின்றனர்.

5. குண்டு வெடிப்பில் ‘சேதம்’ அடைந்ததாகச் சொல்லப்படும் போலீஸ் வாகனத்தைப் பார்த்தோம். அதில் எந்தப் பாதிப்பும் இல்லை. குண்டு வீச்சால் ‘படுகாயம்’ அடைந்ததாகச் சொல்லப்படும் ஆய்வாளர்கள் ஃபெலிக்ஸ் ,மற்றும் முத்துக்குமார் இருவரும் இன்று வேலைக்குத் திரும்பிப் பணியில் உள்ளனர். ஃபெலிக்சுடன் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவரது உடம்பில் குண்டுக் காயம் பட்டதற்கான தடயம் ஏதுமில்லை. கார் பம்பரில் குண்டு பட்டுத் தெறித்தது என்கின்றனர். பிறகு உள்ளே இருந்த அதிகாரிகள் படுகாயமடைந்தனர் என்கின்றனர். இவை முரணாக உள்ளன.

6. முதல் குண்டு வீசி அது வெடித்துக் காயமேற்படுத்தியபின் இரண்டாவது குண்டை வீச முற்பட்டபோதுதான் துப்பாக்கியால் சுட்டோம் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். அப்படியானால் அந்த இரண்டாவது குண்டைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்து பாதுகாக்கப்படுகிறதா எனக் கேட்டவுடன் அதுவரைக்கும் விரிவாகப் பேசிக் கொண்டிருந்த ஆய்வாளர் பாஸ்கரன் இதையெல்லாம் நான் உங்களிடத்தில் சொல்லத் தேவையில்லை எனக் கூறி முடித்துக் கொண்டார். கண்காணிப்பாளர் பைரவசாமியாலும் இதைச் சரியாக விளக்க முடியவில்லை. சம்பவம் குறித்து அவரிடம் கேட்டபோது அப்படித்தான் பாஸ்கரன் சொல்லுகிறார் என்றே கூறினார்.

7. வெடிகுண்டுகள் செய்வதில் கை தேர்ந்தவராகச் சொல்லப்படுகிற சக்திவேலுவின் வீடு இதுவரை சோதனை செய்யப்படாதது வியப்பாக உள்ளது.

எமது கோரிக்கைகள்

1. இப்பகுதியில் நீண்ட நாட்களாகச் செயல்பட்டு வந்த ரவுடிக் கும்பல்களைக் கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படாததே இன்றைய சம்பவங்களுக்குக் காரணம். இரண்டு கும்பல்களைச் சேர்ந்த இதரர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குக் காவல்துறை முன்னுரிமை அளிக்க வேண்டும்.

2. ஆள்மாறாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளி ஜெகதீசன் குடும்பத்திற்கு அரசு இதுவரை எந்த உதவியும் செய்யாதது வருந்தத்தக்கது. ஆறாவது வகுப்புவரை படித்த அவரது மனைவி பேபி, மூன்றரை வயதுப் பெண்குழந்தை சரண்யா, பிறந்து 10 நாட்களே ஆன இன்னொரு ஆண் குழந்தை ஆகியோர் இன்று அனாதைகள் ஆகியுள்ளனர். பேபிக்கு அவரது தகுதிக்கேற்ற ஒரு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் அக்குடும்பத்திர்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும் மாநில அரசை வற்புறுத்துகிறோம்.

3. குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாகப் போலீஸ் சொல்லுகிற கதையில் பல அம்சங்கள் நம்பத் தகுந்ததாக இல்லை. சரணடந்த சக்திவேலைக் கொண்டு சென்று சுட்டுள்ளனர் என்றே நாங்கள் கருதுகிறோம். இது தொடர்பான விசாரணையைப் புதுச்சேரி போலீசிடம் ஒப்படைத்தால் உண்மைகள் வெளிவராது என்பதால் இவ்விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பங்குபெற்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

இறுதியாக

எங்கள் குழு நேற்று உறுவையாறு சென்று விசாரித்துக் கொண்டிருந்தபோது கணுவாப்பேட்டை ரமேஷ் என்பவர் தலைமையில் வந்த ஒரு கும்பல் எங்களை வழிமறித்து முற்றுகையிட்டுத் தாக்க முயற்சித்தது. ஜெகதீசன் கொலை செய்யப்பட்டதைச் சரி எனச் சொல்வதற்காக நாங்கள் வந்திருப்பதாகக் கரிக்கலாம்பாக்கம் பெருங்கலூர் பகுதி மக்களிடம் பொய்கூறி அவார்களை உணர்ச்சிவயப்படச் செய்து ஒரு டாடா ஏஸ் வேனில் ஏற்றி வந்து கலாட்டா செய்தனர், நாங்கள் சென்றிருந்த டாடா சுமோ காரின் (டி.என்.31, ஏசி 0154) முன்பக்கக் கண்ணாடியை (wind screen) உடைத்து நொறுக்கினர். பாதுகாப்புக் கோரி நாங்கள் அப்பகுதி ஆய்வாளர் பாஸ்கரனையும் எஸ்.எஸ்.பி ஸ்ரீகாந்த் ஆகியோரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் செல்பேசியை எடுக்கவேயில்லை. எல்லாம் முடிந்த பின்பே ஆய்வாளர் ஃபெலிக்ஸ் அவ்விடத்திற்கு வந்தார்.

எங்கள் பயணம் வெளிப்படையானது. முன்னதாக நாங்கள் அறிவித்தே இப்பகுதிக்குச் சென்றோம். காவல் துறையினர் முன்னதாகச் சென்று எங்களுக்கு எதிராக இப்படியான ஒரு வன்முறையைச் செய்யத் தூண்டியதாக எங்களுக்குச் செய்திகள் கிடைத்துள்ளன.

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்குக் கருத்து வேறுபாடு கிடையாது. யாராக இருந்தபோதும் பிடித்துச் சட்டப்படி விசாரிக்க வேண்டும். போலீசே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தண்டனை அளிப்பதை நீதியில் அக்கறை உள்ள யாரும் ஏற்க முடியாது. அப்படியாயின் பின் நீதிமன்றங்கள் எதற்கு? சரணடைந்த ஒருவரைச் சுட்டு நிரந்தர முடமாக்குவதை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். இது தொடர்பான உண்மைகளைக் கண்டறிய முயல்கிறோம்.

நமது நாடு ஐ.நா அவையின் Human Rights Defenders தொடர்பான அறிக்கையில் கையெழுத்துட்டுள்ள நாடு. இதன்படி மனித உரிமை காப்பாளர்களாகிய எங்களைப் போன்றோருக்கு அரசு பாதுகாப்பு அளிக்கவும், தேவையான விவரங்களைத் தரவும், எங்களின் விவர சேகரிப்பிற்கு உதவி செய்யவும், இது தொடர்பான எங்களின் பிரச்சாரங்களைத் தடை செய்யாமலிருக்கவும் வேண்டும்.
தவிரவும் சென்ற ஆண்டு இறுதியில் இது போன்ற ஒரு மனித உரிமைச் செயல்பாட்டுக்கு எதிராகத் தடை முயற்சி ஒன்றைத் தமிழகக் காவல்துறை மேற்கொண்டபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அம்முயற்சியைக் கண்டித்து முறியடித்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம் (Writ petition MD No: 12208 of 2011 and MP (MD) Nos 1 & 2 of 2011 Dated 21-10-2011). இத் தீர்ப்பை வழங்கிய நீதியரசர். இராமசுப்பிரமணியம் அவர்கள் இது போன்ற மனித உரிமை அமைப்புகள் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக் கொணர்வதில் ஆற்றியுள்ள பங்கைக் குறிப்பிட்டதோடு, இது போன்ற மனித உரிமைச் செயற்பாடுகளை ஒரு “மூன்றாவது விசாரணை முகமை ”Third investigation agency) எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் உண்மையறியும் குழுவை அமைத்து அறிக்கை வெளியிட்டவர் மகாத்மா காந்தி அடிகள். ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் தொடர்பாக அவர் தலைமையில் சென்று அளித்த உண்மை அறியும் குழு அறிக்கை உலகப் புகழ் பெற்றது.

ஆனால் தமிழக மற்றும் புதுவைக் காவல்துறையினர் மனித உரிமை முயற்சிகளை முறியடிக்க இது போன்ற சதிகளிலும் சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது மிகவும் வருந்தத்தக்கது. நேற்று நடந்த சம்பவம் குறித்து புகார் ஒன்றைக் காவல்துறையிடம் அளித்துள்ளோம். இது குறித்து முறையாக விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து நேரடிக் கவனம் செலுத்துமாறு முதல்வர் ரங்கசாமி அவர்களைக் கோருகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*