ஏனாம் ரீஜென்சி தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் முதல்வர், தொழிலாளர் துறை அமைச்சரிடம் மனு

Submitting Memorandum to Labour Minister Rajavel / தொழிலாளர் துறை அமைச்சர் ராஜவேலுவிடம் மனுஆந்திர மாநில இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், ஆந்திர உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பொஜ்ஜா தாரகம், இந்திய ஜனநாயக தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜெய் பீமாராவ், ஏனம் ரீஜென்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளர் சத்தியநாராயணன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 13.06.2012 அன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தொழிலாளர் துறை அமைச்சர் ராஜவேலு ஆகியோரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில் “ஏனாமில் உள்ள ரீஜென்சி தொழிற்சாலை கடந்த 31.1.2012 அன்று முதல் சட்டவிரோதமாக கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது. ரீஜென்சி தொழிலாளர்கள் தங்களின் சட்டபூர்வமான கோரிக்கைக்காக போராடி வருகின்றனர். கடந்த 27.1.2012 அன்று எதிர்பாராத விதமாக தொழிற்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் தொழிற்சங்கத் தலைவர் முரளி மோகன், தொழிற்சாலை மேலாளர் சந்திரசேகரன் இறந்துப் போனார்கள். இதில் சந்திரசேகரன் வெளியாட்களால் கொல்லப்பட்டார் என்று ரீஜென்சி தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரீஜென்சி தொழிற்சாலை கதவடைப்பு செய்யப்பட்டது என்பது சட்ட விரோதமானது, தொழிற் தகராறு சட்டத்திற்கு எதிரானது. கலவரத்தில் ரீஜென்சி தொழிற்சாலை முற்றிலுமாக சேதமடையவில்லை. ஒரு சில வாகனங்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன. தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் எதுவும் சேதமடையவில்லை. தொழிலாளர் துறை அதிகாரிகள் இதுவரையில் தொழிற்சாலையை பார்வையிட்டு சேத மதிப்பீடு செய்யவில்லை.

மேற்சொன்ன சம்பவங்கள் நடந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் முரளி மோகன், சந்திரசேகரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து போலீசார் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. ஒரு சாட்சியிடம்கூட விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், தொழிலாளர்கள் எவரையும் இந்த வழக்கில் சேர்க்க சாத்தியமில்லை. எனவே, தொழிற்சாலையை திறப்பது ஒன்றும் சிரமமில்லை. தற்போது தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களை நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. இதுகுறித்து தொழிலாளர் துறை மற்றும் காவல்துறையிடம் முறையிட்டும் எவ்வித பயனுமில்லை. இத்தொழிற்சாலையை நம்பி 3000 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பதும், தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதும் அரசியல் சட்டப்படி அரசின் கடமையாகும்.

எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு கதவடைப்பு சட்டவிரோதம் என அறிவித்து, தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நலனைப் பாதுகாக்க வேண்டும்.”

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். முதல்வர் மனுவை உரிய நடவடிக்கைக்காக தொழிலாளர் துறை ஆணையருக்கு அனுப்பி வைத்தார். தொழிலாளர் துறை அமைச்சர் நீண்ட நேரம் பொஜ்ஜா தாரகம் அவர்கள் எடுத்துக் கூறியதைக் கேட்டார். மேலும், ஏற்கனவே அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன் ஆகியோர் அரசுக்கு அளித்துள்ள உண்மை அறியும் குழுவின் அறிக்கையை பரிசீலித்து, தொழிற்சாலையை திறக்கவும், தொழிலாளர்களுக்கு சப்பளம் வழங்கவும் உரிய எடுக்க முதல்வருக்கு ஒரு குறிப்பு அனுப்பியுள்ளதாகவும், அதுகுறித்து முதல்வரிடம் பேசி நல்ல முடிவு செய்வதாகவும் உறுதியளித்தார்.

புகைப்படத்தில் இடமிருந்து: ஜெய் பீமாராவ், பொஜ்ஜா தாரகம், ராமேஷ்வர், சத்தியநாராயணன், கோ.சுகுமாரன் மற்றும் மனுவை பெற்றுக் கொள்ளும் தொழிலாளர் துறை அமைச்சர் ராஜவேலு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*