கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் – கர்நாடகம் – மங்களூர்: உண்மை அறியும் குழு அறிக்கை

மங்களூர், 11 அக்டோபர் 2008

மங்களூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கிறிஸ்துவ நிறுவனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஆய்வு செய்வதற்காக ஒரிசா, ஆந்திரமாநிலம், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 17 மனித உரிமைப் போராளிகள் சென்ற அக்டோபர் 10, 11 தேதிகளில் மங்களூருக்குச் சென்று பார்வையிட்டோம்.

குழு உறுப்பினர்கள்: டாக்டர் பி. ராமுலு, கே. பாலகோபால், எஸ்.எம். பாஷா, வி.எஸ். கிருஷ்ணா, ஏ. சந்திரசேகர், வி. வஸந்தலக்ஷ்மி (மனித உரிமைகள் அமைப்பு – HRF, ஆந்திரம்), ஆர். ராம்குமார், எம். ஸ்ரீநிவாசலு (ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு – OPDR, ஆந்திரம்), ஆனந்த டெல்டும்டே (ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு – CPDR, மும்பை), பேரா.அ. மார்க்ஸ் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் – PUHR, தமிழ்நாடு), கே. கேசவன் (சிவில் உரிமைகள் பாதுகாப்பு மையம் – CPCL தமிழ்நாடு), கோ. சுகுமாரன் (மக்கள் உரிமைகள் கூட்டமைப்பு – FPR, புதுச்சேரி), ஜி.கே. ராமசாமி (மக்கள் ஜனநாயக அமைப்பு – PDF, கர்நாடகம்), பி.பி டி’சா, சுரேஷ்பட் (மக்கள் சிவில் உரிமைக் கழகம் – PUCL, கர்நாடகம்), தேபரஞ்சன் சாரங்கி (சமூக ஆர்வலர், ஒரிசா), முகமது சபி, அப்துல் ரசாக், அயாஸ் அலி (ஜனரஞ்சக இந்திய முன்னணி- PFI, மங்களூர்).

இக்குழு மிலாகிரசிலுள்ள ‘அடோரேஷன் சென்டர்’, பெரமனூரில் உள்ள ‘புனித செவத்தியர் ஆலயம்’, கொடிகாலிலுள்ள ‘சி.எஸ்.ஐ ஆலயம்’, குலசேகரத்திலுள்ள புனித சிலுவை ஆலயம், வாமஞ்சூரிலுள்ள ‘தொழிலாளி புனித சூசையப்பர் ஆலயம்’ ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட்டது. இந்த ஒவ்வொரு இடத்திலும செப்டம்பர் 14, 15 தேதி நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நிகழ்வுகளை அறிந்தவர்கள் பலரையும் சந்தித்தது. மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜியையும் சந்தித்துப் பேசியது.

பஜ்ரங்தளம், ஸ்ரீராமசேனை முதலான அமைப்புகள் ஒருபுறம், தட்சிண கன்னட மாவட்ட கண்காணிப்பாளரால் தலைமை தாங்கப்பட்ட காவல்துறை இன்னொருபுறம் என இவ்விரு தரப்பினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையாக இத் தாக்குதலை நாங்கள் கருதுகிறோம். கிறிஸ்துவர்கள் மத்தியில் வருத்தமும் வேதனையும் ஏற்படுத்திய பஜ்ரங்தளத்தின் திட்டமிட்ட தாக்குதலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட காவல்துறை அச் சமூகத்தின் மீதும் அதன் புனித நிறுவனங்களின் மீதும் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. காவல்துறை மேற்கொண்ட இத்தாக்குதலில் பஜ்ரங்தளம் நேரடியாகப் பங்கேற்றுள்ளது. கிறிஸ்துவத் தரப்பிலிருந்து எந்தவிதமான தூண்டுதலுமின்றி கடந்த செப் 14 அன்று பஜ்ரங்தள் ஆட்கள் மிலாகிரசில் உள்ள ‘அடோரேஷன் சென்டரையும்’ கொடிக்காலிலுள்ள ‘சி.எஸ்.ஐ ஆலயத்தை’யும் தாக்கியுள்ளனர். இவ்விரு தாக்குதல்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில், காலை சுமார் 10.15 மணிக்கு நிகழ்ந்துள்ளது. கொடிக்காலில் பூசை (தொழுகை) மாலை 3 மணிக்கு என்பதால் அப்போது அங்கு யாருமில்லை. முகமூடி அணிந்த சுமார் 30 அல்லது 35 பேர் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி ஆலயத்தை நிர்தூளி செய்துள்ளனர். இரும்புக் குழாய்கள், கிரிக்கெட் மட்டைகள் மற்றும் தடிகளைப் பயன்படுத்தி எதிர்ப்பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். ‘பஜ்ரங்தள் கி ஜே’, ‘பாரத் மாதா கி ஜே!’ என்று முழக்கங்களை அவர்கள் முழங்கியுள்ளனர். அருகிலுள்ள ‘சர்ச்’ உறுப்பினர்கள் ஓடி வருமுன் தாக்கியவர்கள் ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும், புகாரும் வந்திராதபோதிலும் அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் அங்கு போலீஸ் வந்துள்ளது. எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் இடிபாடுகளைத் துடைத்து அள்ளி எடுத்துச் சென்றுள்ளனர். சாட்சியங்களை இல்லாமல் செய்வதற்காகவே இப்படி செய்துள்ளனர் என்பது தெளிவு.

அதேநேரத்தில் மிலாகிராசில் பஜ்ரங்தள முழக்கங்களை இட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய சுமார் 15 பேர் ‘அடோரேஷன் சென்டருக்குள்’ நுழைந்து தடிகளால் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். சிலுவையில் தொங்கும் இயேசுவின் ‘பிளாஸ்டர்’ சிலை ஒன்றையும்கூட அவர்கள் உடைத்து அவமதித்துள்ளனர். ‘திவ்ய நற்கருணை’ எனப்படும் கிறிஸ்துவர்களின் ஆகப் புனிதமான ‘யூகரிஸ்ட்’ புனிதச் சிலுவையையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கன்னியர்கள் ஜெபித்துக் கொண்டிருந்த துறவு மடத்திற்குள் (Cloistered Chapel) அது தெறித்து விழுந்துள்ளது. தொழுவதற்கு வந்திருந்த ஆண்ட்ரூ மற்றும் அவர் மனைவி ஐரின் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளனர். அசிங்கமாகத் திட்டிக்கொண்டே தாக்கியவர்கள் ஒடிவிட்டனர். புகார் செய்தபின் அங்குவந்த காவல்துறையினர் தாக்குதல்களைப் புலனாய்வு செய்வதைக் காட்டிலும் கன்னியரைக் குறுக்குவிசாரணை செய்வதிலேயே ஆர்வம் காட்டியுள்ளனர். “இந்த மையத்திற்கு லைசன்ஸ் வைத்திருக்கிறீர்களா?”, “நீங்களெல்லாம் இந்த தேசத்தவர்களா இல்லை சர்வதேச சமூகத்தினரா?” என்றெல்லாம் (கிண்டலாக) கேட்டுள்ளனர். ஊடகத் துறையினர் யாரேனும் வந்தால் புகைப்படமோ, வீடியோ படமோ எடுக்க அனுமதிக்கக்கூடாது என அவர்களில் ஒருவர் எச்சரிக்கையும் செய்துள்ளார்.

தஷிணா கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில் அதே நேரத்தில் நடைபெற்ற 17 தாக்குதல்களில் இவை இரண்டு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எல்லா இடங்களிலும் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி, ‘பஜ்ரங்தள், பாரத்மாதா மற்றும் ஸ்ரீராம் கி ஜெய்’ என முழக்கங்கள் இட்டுக்கொண்டு வந்த ஆட்கள்தான் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தகைய தாக்குதல்களால் மனம் உடைந்த கிறிஸ்தவ சமூகம் மங்களூர் உட்பட பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் தர்ணா முதலிய வடிவங்களில் தமது எதிர்ப்பைக் காட்டியதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. கிறிஸ்தவ நிறுவனத்தின் மீது பஜ்ரங்தளத்தினர் தாக்கியபோது அவர்களுடன் இணைந்தோ அல்லது அசட்டையாகவோ இருந்த காவல்துறையினர் இப்போது சுறுசுறுப்படைந்தனர். தடை ஆணையை அறிவித்தனர். மிலாகிரசில் எதிர்ப்புத் தெரிவிக்க திரண்டிருந்த கிறிஸ்துவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீசித் துரத்தித் தாக்கியது மேலும் பிரச்சினைகளுக்கு காரணமானது. ‘அடோரேஷன் சென்டர்’ சுற்றுச் சுவருக்குள் ஓடிய மக்கள் அங்கிருந்து போலீஸ் மீது கல்லெறிந்தனர். கற்களோடு பாட்டில்களையும் எறிந்து திரும்பத் தாக்கிய போலீஸ் ‘அடோரேஷன் சென்டரில்’ மேலும் சேதங்களை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்களால் பெரிதும் மனம் உடைந்திருந்த கிறிஸ்தவ மக்கள் 15ஆம் தேதி பல்வேறு ஆலயங்களிலும் திரண்டனர். இதுகுறித்து ஆலோசிக்கவும் மேற்கொண்டு எதிர்ப்பு வடிவங்களைத் திட்டமிடுவதற்காகவும் அவர்கள்  கூடியிருக்கலாம். தடை உத்தரவு பொது இடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அவர்கள் இவ்வாறு கூடியிருந்தது எந்த விதத்திலும் சட்டவிரோதமானதல்ல. ஆனால் இந்த ஆலயங்கள் எல்லாவற்றையும், குறிப்பாத பெரமனூர் புனித செவத்தியர் ஆலயம், குலசேகரத்திலுள்ள புனிதச் சிலுவை ஆலயம், வாமஞ்சூரிலுள்ள தொழிலாளி புனித சூசையப்பர் ஆலயம் ஆகியவற்றை பெரும் திரளாக காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு கிறிஸ்தவர்கள் எல்லோரையும் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர். இது மேலும் பிரச்சினையை அதிகமாக்கியது. பஜ்ரங்தளம் மற்றும் ஸ்ரீராமசேனை ஆட்களும் காவல்துறையினர் மத்தியில் இருந்தனர். அவர்களும் கிறிஸ்தவர்களை வம்புக்கிழுத்தனர். கிறிஸ்தவர்கள் கல்லெறிந்தனர் என்று சொல்லி, அதையே காரணம் காட்டி ஆலய சுற்றுச் சுவருக்குள் அதிரடியாக இம்மூன்று ஆலயங்களிலும் நுழைந்த போலீஸார் லத்தியால் மிருகத்தனமாக தாக்கத் தொடங்கினர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் எறிந்தனர். மூன்று இடங்களிலும் ஆலயத்திற்குள் நின்றிருந்த மக்கள் தாக்கப்பட்டனர். குலசேகரத்தில் பள்ளிக்குள் நின்றிருந்த மக்களும் தாக்கப்பட்டனர். குலசேகரத்திலிருந்த மூத்த சகோதரிகள் டெனிஸியா (71) மற்றும் செல்மா (61) உள்ளிட்ட பெரும்பாலோர் கடும் காயங்களுக்கு உள்ளாயினர். சுற்றுச் சுவருக்கு வெளியே போலீசும், பஜ்ரங்கிகளும்; உள்ளேயோ கொடுமையான தடியடிப் பிரயோகம் – கிறிஸ்தவர்கள் அடைந்த அச்சத்திற்கு அளவில்லை.

முற்றிலும் அநீதியான இத் தாக்குதலை காவல்துறை கண்காணிப்பாளர் என். சுரேஷ்குமாரே தலைமை ஏற்று நடத்தியுள்ளதை நமக்குக் கிடைத்துள்ள விரிவான புகைப்பட மற்றும் வீடியோப் பதிவுகள் காட்டுகின்றன. இந்த மூன்று இடங்களிலும் ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கொஞ்சம் பேரையேனும் விடுதலை செய்வதற்கு சமுதாயத் தலைவர்கள் நிரம்ப மன்றாட வேண்டியிருந்திருக்கிறது. புனித செவத்தியர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களைத் தரையில் அமர வைத்து, ‘இப்ப ஜெபம் பண்ணுங்கடா’ என்று சவால் விட்டுள்ளனர். கலவரம் விளைவித்தது, கொலை மிரட்டல் செய்தது, காயங்கள் விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தத்தில் 170 பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் மங்களூரிலும் இன்னும் இதர மாவட்டங்களிலும் சுமார் 80 ஆலயங்களை வேண்டுமென்றே தாக்கிய பஜ்ரங்தளம் மற்றும் ஸ்ரீராமசேனை உறுப்பினர்களில் 60 பேர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். பஜ்ரங்தள அமைப்பின் மாவட்டத் தலைவர் மகேந்திர குமார் செப்டம்பர் 14 அன்று மிலாகிரஸ் தாக்குதலுக்கு பகிரங்கமாக உரிமை கோரியதோடு மேலும் தாக்குதல்கள் பற்றி அறிவித்தும்கூட அடுத்த 20ஆம் தேதிவரை கைதுசெய்யப்படவில்லை. அதுவும்கூட மத்திய அரசும், பிற மத்திய நிறுவனங்களும் மாநில அரசுக்கு கடுமையான அழுத்தம் அளிக்கப்பட்ட பின்பே நடந்துள்ளது.

சட்ட ஒழுங்கு அதிகாரிகளைப் போலன்றி பஜ்ரங்தளத்தின் உறுப்பினர்கள் போல செயல்பட்ட காவல்துறை பஜ்ரங்கிகளுக்குக் கலவரம் விளைவிக்க முழு ‘லைசன்ஸ்’ அளித்திருந்ததையே மேற்கண்ட நிகழ்வுகளும், அதற்கான (அரசின்) எதிர்வினைகளும் காட்டுகின்றன. மாநில அரசின் கருணைப் பார்வை இருந்ததால் காவல்துறை இப்படி நடந்து கொள்ள எந்தத் தயக்கத்தையும் காட்டவில்லை.

இதே பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இஸ்லிம் கைதுகளின் விஷயத்தைக் காவல்துறை மேற்கொண்ட அணுகல்முறை இதற்கு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தம்பிகள் பிடிபட்டுள்ள இந்திய முஜாஹிதின் தலைவர்கள் சிலரின் வாக்குமூலங்கள் பற்றி மும்பை போலீஸார் தெரிவித்த சிலமணி நேரங்களிலேயே இந்தக் கைதுகளை கர்நாடக காவல்துறை செய்துமுடித்துள்ளது. உள்ளல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கஞ்சேரியைச் சேர்ந்த ஒரு வீட்டிலிருந்த தந்தையும் மகனுமான முகமது அலி, ஜாவத் அலி; மங்களூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பாண்டேஸ்வரியைச் சேர்ந்த நவுஷத்; முல்கி காவல் சரகத்திற்குட்பட்ட ஹலவங்காடியைச் சேர்ந்த அஹமது பாஷா ஆகியோர் அக்டோபர் 3-ஆம் தேதி முன்னிரவில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றவாளிகளா அப்பாவிகளா என்பது குறித்து எதையும் நாங்கள் சொல்ல விரும்பவில்லை. ஆனால் சட்டவிதிகளுக்கும் உச்ச நீதிமன்ற நெறிமுறைகளுக்கும் எதிராகக் காவல்துறையினர் நடந்துகொண்டுள்ளதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கைது செய்தவர்கள் தாம் யார் என அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை; கைதுக் குறிப்பு எதையும் வழங்கவில்லை; உறவினர்களுக்குத் தெரிவிக்கவில்லை, எங்கே கொண்டுசெல்லப்படுகிறார்கள்  என்பதையும் கூறவில்லை. இவை யாவும் வெற்றுச் சடங்குகளல்ல. குற்ற விசாரணை என்கிற பெயரில் தேவையில்லாத துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்கு ஏற்ப வெளிப்படையாக நடைமுறைகள் இருக்க வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டக் கூறுகள் இவை. பயங்கரவாதம் என வகைப்படுத்தக்கூடிய குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்துறை கூறுகிறது. ஆனால் இவ்விரு மாவட்டங்களிலும் கிறிஸ்துவ சமூகத்தை இதே அளவிற்கு பயங்கரவாதத் தன்மையுடன் அச்சுறுத்தியுள்ள பஜ்ரங்கிகளைக் கைதுசெய்யும் விஷயத்தில் காவல்துறை இத்தகைய அவசரத்தைக் காட்டாதது வியப்பு. மதம் மற்றும் அரசியல் அடையாளத்தைப் பொறுத்து பயங்கரவாதம் குறித்து இருவேறு அணுகுமுறைகளை அரசு கையாள்வது அப்பட்டமான போலித்தனமின்றி வேறல்ல, குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தமட்டில் அது பயங்கரவாதக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முஸ்லீம்களாகவும் மாவோயிஸ்டுகளாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தும். ஆனால் அதேநேரத்தில் குஜராத். ம.பி, ஒரிஸா, கர்நாடகம் என நாடெங்கிலும் பஜ்ரங்கிகள் மற்றும் சங்கப் பரிவாரத்தினர் பயங்கரவாதத்தை நிகழ்த்தும்போது அவர்களைக் காப்பாற்றும்.

எமது அமைப்பு ஒரிசாவிலுள்ள கந்தமால் மாவட்டத்திற்கும் சென்று வந்துள்ளது என்பதையும் விரைவில் கர்நாடகம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் அதிகாரத்திலுள்ள பா.ஜ.கவினரின் ஆதரவுடன் கிறிஸ்துவ சமூகத்திற்கு எதிராக சங்கப் பரிவார அமைப்புகளும் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளோம் என்பதையும் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

கட்டாய மதமாற்றம் என்ற குற்றச்சாட்டைப் பொருத்தமட்டில் காவல்துறை ஐ.ஜியே அப்படியான புகார்கள் எதுவுமில்லை எனக் கூறினார். இந்துக் கடவுளர் குறித்த அவதூறு நூலொன்றையும் கிறிஸ்தவர்கள் வெளியிட்டுள்ளார்கள் என பஜ்ரங்கிகள் அதிகமாகப் பேசுவது குறித்து கேட்டபோது யார் அதை வெளியிட்டது என்பது குறித்து இன்னும் புலனாய்வு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அவற்றை விற்பதையோ, விநியோகித்ததையோ பார்த்ததாக யாரும் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டவில்லை. எப்படி இருந்த போதும் இத்தகைய அத்துமீறல்கள் எதுவும் ஆலயங்களின் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்திவிட முடியாது.

நிர்வாகத்தின் முன் கீழ்கண்ட கோரிக்கைகளை வைக்கிறோம்.

1. கிறிஸ்துவ நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் விரைவாகவும் நியாயமாகவும் புலன் விசாரிக்கப்பட வேண்டும். மாநிலக் காவல்துறை பக்கச் சார்புடன் விளங்குவதால் மத்திய புலனாய்வுத் துறையிடம் (CBI) இது கையளிக்கப்பட வேண்டும்.

2. பெரமனூர், குலசேகரம் மற்றும் வாமஞ்சூர் ஆலயங்களின் மீதான தாக்குதல்கள் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் குறிப்பிட்ட ஆய்வாளர்கள் மீதான ‘கிரிமினில்’ குற்றங்களாகவும் பதிவுசெய்யப்பட்டு, அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

3. சேதமாக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு மாநில அரசு முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

4. கிறிஸ்தவ மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். சச்சார் குழு பரிந்துரையின்படி இத்தகைய பகுதிகளில் காவல்துறையில் போதிய அளவு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

5. கைதுகளின்போது சட்டத்தையும், உச்சநீதிமன்ற நெறிமுறைகளையும் காவல்துறை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும்.

6. கட்டாய மதமாற்றம் குறித்த எந்தப் புகாரும் உரிய அதிகாரிகளிடம் மட்டுமே செய்யப்பட வேண்டுமென்பதை அனைத்து தரப்பினருக்கும் மாநில அரசு தெளிவாக்க வேண்டும். இதைக் காரணம் காட்டி தொழுகைத் தலங்களைத் தாக்குவதற்கு யாரும் அனுமதிக்கப்படக் கூடாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*