சிறைகளில் மனித உயிர்கள் பலியாகி புள்ளி விவரங்களாக கிடப்பது தடுக்கப்படுவது எந்நாளோ? – கோ.சுகுமாரன்

2009ம் ஆண்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் மரணமடைந்த சரவணன் என்பவருக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை சென்ற டிசம்பர் 18 அன்று இறந்துப் போன சரவணனின் மனைவி ஆரியமாலாவிற்கு ரூ. இரண்டரை லட்சம், அவரது தாயார் நீலவேணிக்கு ரூ.50 ஆயிரம் என அத்தொகைக்கான காசோலைகளை சிறைத்துறை அதிகாரி வழங்கியுள்ளார். காலங்கடந்து வழங்கப்பட்ட நிவாரணமாக இருந்தாலும், வினோத் (15), வித்யா (12), விக்னேஷ் (8) ஆகிய மூன்று குழந்தைகளோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஆரியமாலாவிற்கு இந்நிவாரணத் தொகைப் பெரும் ஆறுதலானது. இன்னமும் இதற்குப் பொறுப்பான காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தனிக்கதை.

திண்டிவனத்தைச் சேர்ந்த பழங்குடி குறவர் வகுப்பைச் சேர்ந்த சரவணன் புதுச்சேரியில் தங்கியிருந்துக் கொத்தனார் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவர் மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றுமில்லை. இவர் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பார் என்று கருதி 24.06.2009 அன்று காலையில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸ் காவலில் அவரைக் கடும் சித்தரவைதைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும், அவர் மீது ஒதிஞ்சாலை மற்றும் காலாப்பட்டு காவல்நிலையங்களில் சந்தேக வழக்குகள் போட்டு அன்றைய தினம் மாலையே நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கடும் சித்தரவதைக்கு ஆளான சரவணனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சிறைத்துறை அதிகாரிகள் கவனித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்காமல் சிறைக்குள் அனுமதித்ததால், மறுநாள் 25.06.2009 அன்று சரவணன் சிறைக்குள் இறந்துப் போகிறார்.

தகவலறிந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது அவரது காது, மூக்கு ஆகியவற்றில் ரத்தம் கசிந்திருந்துள்ளது. தலையில் காயம்பட்டு ரத்தம் வழிந்திருந்துள்ளது. மேலும், இரண்டு கால்களிலும் அடிப்பட்டு கட்டுப் போடப்பட்டிருந்துள்ளது. இடது பல்லும் உடைந்திருந்துள்ளது.

சரவணன் போலீசாரின் சித்தரவதையால்தான் இறந்தார் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை. குறவர்கள்  என்றாலே திருடர்கள் என்ற போலீசாரின் பார்வை ஒரு அப்பாவி இளைஞனின் உயிரைப் பறித்ததுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஆரியமாலா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பிய புகாரின் அடிப்படையிலேயே மேற்சொன்ன இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் காலங்கடந்து வழங்கிய நிவாரணம் என்றாலும், இது நன்றியோடு வரவேற்கப்பட்ட வேண்டிய ஒன்று.

இந்நிலையில், அகில இந்திய அளவில் சிறைக்குள் நிகழ்ந்த சாவுகள் குறித்து சில தகவல்கள் கிடைத்தன. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள தகவல்களின்படி 2008-2009ம் ஆண்டில் 1527 பேர் இந்திய சிறைகளில் இறந்துப் போயுள்ளனர். இதில் 60 பேர் பெண்கள்.

மாநில வாரியாக பார்த்தால் உத்தரபிரதேசத்தில் 287, பிகாரில் 133, ஆந்திராவில் 131, மகாராஷ்டிராவில் 124, மேற்கு வங்கத்தில் 98, மத்தியபிரதேசத்தில் 86, குஜராத்தில் 74, பஞ்சாப் 70, கர்நாடகாவில் 72, தமிழ்நாடு 69 ஆகும். மேகாலயா, நாகாலந்து தலா 3, கோவா, புதுச்சேரி தலா 2, அருணாசல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் தலா 1 என சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த சிறை மரணங்களில் 90 சதவீதம் இயற்கையானவை. மற்றவை தற்கொலைகள், சிறைவாசிகளால் கொலை, வெளியாட்களால் கொலை, தீ விபத்திலும், சிறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மரணம் என பல்வேறு காரணங்களால் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்திய அளவில் பல்வேறு சிறைகளில் 2007-2008ல் மட்டும் மொத்தம் 1787 பேர் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் 1735, பெண்கள் 52 பேர். 2006-2007ல் மட்டும் மொத்தம் 1477 பேர் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் 1443, பெண்கள் 34 பேர். இவை சிறைவாசிகளுக்குப் போதிய பாதுகாப்பற்ற நிலை இருப்பதைப் பறைசாற்றுகின்றன.

2009ல் இந்தியாவில் உள்ள 1200 சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தேசிய குற்றப் பதிவேடு அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 1276 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 304 பேர் மட்டுமே அடைத்து வைக்க முடிகிற அளவுக்கு இடமுள்ளது. ஆனால், மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 396 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அதாவது இருக்க வேண்டிய அளவை விட 99 ஆயிரத்து 92 கைதிகள் கூடுதலாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தேசிய குற்றப் பதிவேடு அலுவலக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தகவல்கள் சரவணன் இறந்துப் போன 2009 ஆண்டிற்கான புள்ளி விவரங்கள். இனி 2012 ஆண்டிற்கான விவரங்களைக் காண்போம்.

2012ல் தேசிய குற்றப் பதிவேடு அலுவலக தகவல்கள்படி இந்தியாவில் மொத்தம் 1571 சிறை மரணங்கள் நடத்துள்ளன. இதில் 1516 ஆண்கள், 55 பெண்கள். இதில் ஆண்களில் இயற்கை மரணம் 1345 பேர். தற்கொலை 87, மரண தண்டனை நிறைவேற்றம் 1, சிறைவாசிகளாலேயே கொலை 4, தீ விபத்து 10, கவனக்குறைவு மற்றும் அத்துமீறல் 2, பிற 22 ஆகும். பெண்களில் இயற்கை மரணம் 47, தற்கொலைகள் 5, வெளியாட்களால் கொலை 3 ஆகும். இதில் இயற்கை மரணம் கூடுதலாக இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. அதாவது ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுவதில் தேவையற்ற காலதாமதம், ஆயுள் கைதிகள் 60 வயதைத் தண்டியவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரை செயல்படுத்தப்படாமை, போதிய மருத்துவ வசதி இல்லாமைப் போன்றவைதான் இதற்குக் காரணம்.

இதில் இயற்கை மரணம் என்பதில் எத்தனை தற்கொலைகள், கொலைகள் மறைந்துள்ளன என்பது குறித்து விசாரித்தால் தான் தெரியும். பல மரணங்கள் இயற்கையானதாகவே பதிப்பட்டு வருகின்றன.

சிறைகளில் போதிய மருத்துவ வசதி இல்லாமைக்கு அண்மைக் கால எடுத்துக்காட்டாக தென்தமிழன் படும் துயரத்தைக் கூறலாம். 1987ல் அரியலூர் மருதையாற்றில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று திருச்சி சிறையில் உள்ளார். இவரை முன்விடுதலை செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் விடுதலை செய்யப்படவில்லை. நீதிபதி கே.சந்துரு வழங்கிய இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இன்று அவர் மனநிலை முழுதும் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் சுயநினைவின்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசு அவரை விடுதலை செய்ய வேண்டுமென பலரும் குரல் கொடுத்த பின்னரும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகளை அடைத்து வைப்பதும் பெரும் பிரச்சனையாகவே உள்ளது. 2012 ஆண்டுக் கணக்குப்படி இந்திய சிறைகளில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 169 பேர் மட்டுமே அடைத்து வைக்குமளவுக்கு இடவசதி உள்ளது. ஆனால், 3 லட்சத்து 85 ஆயிரத்து 135 சிறைவாசிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் கவலைப்படவில்லை.

கைதிகளின் உரிமைகள் பற்றி சுனில் பத்ரா வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது வி.ஆர்.கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல், பல்வேறு தீர்ப்புகள் வந்தாலும் சிறைச்சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. சிறைச் சீர்திருத்தம் குறித்து ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்களின் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சிறைவாசிகளின் உரிமைகள் பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

சிறைகளில் பணிபுரியும் காவலர்கள் பல்வேறு இன்னல்களுடனேயே பணியாற்றி வருவது கவலையை அதிகப்படுத்துகிறது. இதுகுறித்து மத்திய அரசும், மாநில அரசுகளும் போதிய கவனம் செலுத்த வேண்டும். .

வானுயர்ந்து நிற்கும் மதிற் சுவருக்குள் நடக்கும் எவையும் நம் கண்ணில் படாமல் போகலாம். ஆனால், அங்கே தினம் தினம் மனிதர்கள் வதைப் பட்டுக் கொண்டும், மரணத்தை எதிர்நோக்கியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் கவனிக்கப்படாமல் போவதன் காரணம் குற்றவாளிகள் பற்றிய நமது சமூகத்தின் மதிப்பீடே. அந்த மதிப்பீடு மாறாமல் சிறைகள் மேம்படப் போவதில்லை.

சிறைவாசிகள் குறித்து பேரறிஞர் அண்ணா “இளைஞனாக உள்ளே சென்று, வயோதிகனான பிறகே, சிறையினின்றும் வெளியே வந்தவர்கள் எத்தனை பேர்! திடகாத்திரராகச் சிறை சென்று, கண்மங்கி, கைகால் இளைத்து நடை தளர்ந்து, நரையுடன் வெளிவந்தவர்கள் எத்தனை பேர்! குடும்பத்திலே ஒரு மணிவிளக்காக இருந்துவிட்டுச் சிறையினின்று வெளிவந்தபோது குடும்பத்தவரிலே ஒருவருமில்லையே என்ற கதறும் நிலை பெற்றவர் எவ்வளவு?, பூங்காவை விட்டுப் போய்ச் சிறையிலே வாடி, வெளியே வந்து பாலைவனத்தைக் கண்டு பரிதவித்தவர் எவ்வளவு! சீமானாக இருந்து சிறை சென்று, வெளிவந்தபோது, செப்புக் காசுமின்றி, சென்று தங்க இடமுமின்றி, நாடோடியானவர்கள் எவ்வளவு! கருகிப் போன தங்கம்! கசங்கிய மலர்கள்! வறண்டு போன வயல்கள்! சரிந்த சபா மண்டபங்கள்! மண்மேடான மாளிகைகள்! நரம்பொடிந்த வீணை! நதியற்ற நகரம்! எனத்தக்க நிலை பெற்ற நற்குண நாகங்கள் நம் வணக்கத்துக்கு உரியரன்றோ! வாழ்க அவர் நாமம்!” என்று கூறியுள்ளதைக் இங்குக் குறிப்பிடுவது பொருத்தம்.

சிறைகளில் மனித உயிர்கள் பலியாகி புள்ளி விவரங்களாக கிடப்பது தடுக்கப்படுவது எந்நாளோ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*